சனி, 25 ஏப்ரல், 2020

பேசுதல்

வகையறிந்து தமிழ் பேசுவோம்!
(What’s up-ல் வந்தது)
—————-
நம் எண்ணங்களைப் பிறருக்கு எடுத்துரைக்க உதவும் தொடர்புக் கருவியே பேசும் கலை. அத்தகைய பேசுதலைக் குறிக்க நம் தமிழில் உள்ள பெயர்கள் பல்வகையாகும். ஒவ்வொரு சூழலுக்கும் இணையாக நுண்ணிய வேறுபாடுகளோடு தமிழில் சொற்கள் வழங்கப்பட்டுள்ளன.

1. பேசுதல்* என்பது சொல்லும் தகவலின் பொருள் கெடாமல் ஒரு மொழியிற் ஒழுங்கச் சொல்லுதல் என பொருள்படும்.

2. அறைதல்* என்பதோ ஓங்கிப் பேசுதல் அல்லது உரக்க வன்மையாகச் சொல்லுதல்.

3. இயம்புதல்* என்பது இனிமையாகச் சொல்லுதல் அல்லது இசைக்கருவி இயக்கிச் சொல்லுதல்.

4. இசைத்தல்* என்பது கோவையாகச் சொல்லுதல்.

5. உரைத்தல்* என்பது ஒன்றை விளக்கிச் சொல்லுதல்.

6. கூறுதல்* என்பது கருத்துக்களைக் கூறுபடுத்தி அல்லது பாகுபடுத்திச் சொல்லுதல்.

7. சாற்றுதல்* என்பது பலரறிய ஓர் தகவலை அறிவித்தல்.

8. நவிலுதல்* என்பதோ நாவினால் பலகால் ஒன்றை ஒலித்துப் பயிலுதல்.

9. நுதலுதல்* என்பது ஒன்றைச் சொல்லித் தொடங்குதல்.

10. நுவலுதல்* என்பதோ ஒரு நூலின் பொருளடக்கத்தை எடுத்துரைத்தல் ஆகும்.

11. பகர்தல்* என்பது பண்டங்களின் விலை கூறுதல்.

12. பறைதல்* என்பதோ ஒன்றை உரக்கத் தெரிவித்தல்.

13. பன்னுதல்* என்பது பணியின் நிமித்தமாகய் விவரித்துச் சொல்லுதல்.

14. புகலுதல்* என்பதோ விரும்பிச் சொல்லுதல்.

15. புலம்புதல்* என்பது தனிமையில் தனக்குத் தானே சொல்லுதல்.

 16. மாறுதல்* என்பது திருப்பிச் சொல்லுதல் அல்லது  மறுமொழி கூறுதல்.

17. மொழிதல்*  என்பது சொற்களை நன்றாய்த் திருத்தமாய்ச் சொல்லுதல்.

18. பொழிதல்* என்பது இனிமையாகப் பேசுதல்.

19. இயம்புதல்* என்பது அழுத்தமாகப் பேசுதல்.

20. அருளுதல்* என்பது தவத்தில் சிறந்தோர் பேசுதல்.

21. அசைத்தல்* என்பது அசை பிரித்துச் சொல்லுதல்.

22. உளறுதல்* என்பது அச்சத்தினால் ஒன்றிற்கு இன்னொன்றைச் சொல்லுதல்.

23. என்னுதல்* என்பது ஒரு செய்தியைச் சொல்லுதல்.

24. ஓதுதல்* என்பது ஒருவரின் காதில் மெல்லச் சொல்லுதல்.

25. கரைதல்* என்பது அழுது அல்லது அழைத்துச் சொல்லுதல்.

26. கழறுதல்* என்பது கடிந்து சொல்லுதல்.

27. கிளத்தல்* என்பது ஒன்றைத் தெளிவாய்க் குறிப்பிட்டுச் சொல்லுதல்.

28. குயிற்றுதல்* என்பது குயிற்குரலிற் சொல்லுதல்.

29. குழறுதல்* என்பது நாத்தடுமாறிச் சொல்லுதல்.

30. கொஞ்சுதல்* என்பது செல்லப் பிள்ளைபோற் சொல்லுதல்.

31. செப்புதல்* என்பது வினாவிற்கு விடை சொல்லுதல்.

32. நொடித்தல்* என்பது கதை சொல்லுதல்.

33. பலுக்குதல்* என்பது உச்சரித்தல்.

34. பிதற்றுதல்* என்பது பித்தனைப் போலப் பேசுதல்.

35. மிழற்றுதல்* என்பது கிளிக்குரலிற் சொல்லுதல்.

36. வலித்தல்* என்பது வற்புறுத்திச் சொல்லுதல்.

37. விள்ளுதல்* என்பது  வெளிவிட்டுச் சொல்லுதல்.

38. விளம்புதல்* என்பது பலருக்கு அறிவித்தல்.

39. நொடுத்தல்* என்பது விலை கூறுதல்.

இங்கணம் சுமார் 39 வகையான சொற்கள் தமிழில் பேசுதலைக் குறிப்பதற்காகத் திகழ்கின்றன. இவற்றை நாள்தோறும்  வாழ்வியலில் பயன்படுத்துவோம். நம்  தமிழ்மொழி ஆற்றலை மேலும் மேம்படுத்துவோம்.

கற்போம்! கற்பிப்போம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக