சனி, 25 ஏப்ரல், 2020

ஆங்கிலமும்-பிரான்சியமும்

தமிழறிஞர், பேராசிரியர் திரு.செ.இரா.செல்வக்குமார் அவர்களின் பதிவை இங்கே பகிர்கிறேன்.

தனிப்பெயர்கள் (proper nouns) பற்றிய சில
கருத்துகள்.

ஆங்கிலமும்-பிரான்சியமும்
--------------------------------------------
ஆங்கில மொழியானது பிரான்சிய மொழிக்கு மிகவும்
கடன்பட்ட ஒன்று.  400 ஆண்டுகள் ஆங்கிலேயர்களின்
அரசர்களின் தாய் மொழிகூட ஆங்கிலமல்லாது பிரான்சியமாக இருந்தது. இங்கிலாந்தில் உயர்மொழியாய் பிரான்சியமே இருந்தது.
ஆங்கிலம் கீழ்மட்ட உழைப்பாளர்களின் மொழியாய் இருந்தது.
ஆனால் இன்று நிலைமை அப்படியில்லை.

இன்றைய ஆங்கிலத்தில் ஏறத்தாழ 29% பிரான்சியம்
29% இலத்தீன் (பிரான்சியம் ஓர் இலத்தீன மொழி).

ஆக ஆங்கிலத்தில் 58% பிரான்சியமும் இலத்தீனும்.

பிரான்சியத்தின் மொழிப்பெயர்
--------------------------------------------------
பிரான்சிய மொழியைப் பிரான்சியர்கள் le français
என்றழைத்தார்கள் என்பதை ஆங்கிலேயர் மிகமிக
நன்றாகவே அறிவார்கள். அவர்களின் மொழியை
ஆங்கிலேயர் ஆங்கிலத்திலும் Français என்றோ Fransay என்றோ அழைத்திருக்க முடியும். ஆனால் le français என்னும் மொழியை
French என்று அவர்கள் அழைத்தார்கள்.  அது அவர்களின் மொழி
வழக்கமாக இருந்திருக்கும். அது அவர்கள் உரிமையும்கூட.ஆனால்

"proper noun" ஐ மாற்றலாகாது என்னும் குரல் என்னாயிற்று?

அது ஒருபுறம் இருக்க,
ஆங்கிலேயர் French என்கின்றார்கள் என்பதற்காகத்
 தமிழில் நாமும் பிரெஞ்ச், ஃபிரெஞ்ச் என்று சொல்ல வேண்டுமா?

இத்தாலியர்கள் Lingua francese என்கின்றார்கள்.

தமிழில் பிரான்சே என்று சொல்லலாம், ஆனால் பிரான்சியம்
என்று முறையாக தமிழ்மரபுக்கு ஏற்ப வழங்குகின்றோம்.
“பிரெஞ்ச்”  என்று வல்லின ஒற்றில் முடியுமாறு எழுதலாகாது
என்பது தமிழின் அடிப்படையான இலக்கண விதி.

எசுப்பானியம் (español )
-----------------------
ஆங்கிலேயர்களுக்கு  español (ஆங்கிலத்தில் Spanish) மொழியின்
பெயர் மிகமிக நன்றாகத் தெரியும்.
ஏன்Espanyol என்று சொல்லாமல்
முதல்  e என்னும் எழுத்தொலியை விட்டுவிட்டும்
பின்னே -ish எனச் சேர்த்தும்  Spanish என்றார்கள்?

"proper noun" ஐ மாற்றலாகாது என்னும் குரல் என்னாயிற்று?

பிறமொழிப்பெயர்கள்
-----------------------------------
ஆங்கிலேயர்கள் Finnish, Danish, Swedish
என்றெல்லாம்  -ish என்னும் பின்னொட்டு இட்டு அழைக்கும்
வழக்கத்தைச் சில மொழிகளுக்கு ஆள்கின்றார்கள்.

இருக்கட்டும்.

ஆனால் தமிழர்கள் ஏன் சற்றும் சிந்திக்காமல் அவர்களைப்
பின்பற்றி “ஃபிரெஞ்ச், ஸ்பானிஷ், டேனிஷ், சுவீடிஷ்”
என்கின்றார்கள்?  இவை தமிழின் இலக்கண விதிகளைப்
பல நிலைகளில் மீறுகின்றனவே!
தமிழில் முறையாக எசுப்பானியம்
(எசுப்பொன்யால் என்பதைச் சற்றே மாற்றி எசுப்பானியம்),
தென்மார்க்கியம் (அல்லது தேனீசியம்), சுவீடியம்,
போலந்தியம், பின்லாந்தியம்  என்பதுபோல வழங்கலாம்.

“ஐயையோ புரியாது” என்பது அறியாமையாலும்
(ஓழுக்கம் பேணவேண்டும் முறைமை பேணவேண்டும் என்னும் அறியாமையும் உலக வழக்குகளை அறியாமையும்)
கொஞ்சமும் சிந்திக்காமல் ஆங்கிலத்தின் மொழிப்
பின்னொட்டுகளைச் சிந்திக்காமல் பின்பற்றுவதாலும்,
தமிழை, தமிழ் முறைமைகளை,  மதியாமையாலும் தன் பதிப்புணராமையாலும்  என்பதால் எனத் துணியலாம்.

கிசுவாகிலி மொழி
-------------------------------
Swahili என்றொரு மொழி ஆப்பிரிக்காவில் பேசப்படுகின்றது.
இது பாண்டு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழி.
உண்மையில் இம்மொழியின் பெயர் Kiswahili.  ஆனால்
ஆங்கிலேயர் முதல் மூன்றெழுத்துகளை வெட்டிவிட்டார்கள்.

"proper noun" ஐ மாற்றலாகாது என்னும் குரல் என்னாயிற்று?

தமிழில்   "proper noun" என்னும் ஒரு கருத்துருவே கிடையாது.
-----------------------------------------------------------------------------------------

தமிழிலோ "proper noun" என்னும் ஒரு கருத்துருவே கிடையாது.
இது ஆங்கில இலக்கண விதிகளைத் தமிழ்மீது திணித்தல் ஆகும்.
ஆங்கில விதிமுறைகளை, அதுவும் சரிவர உணராமல்
தமிழ் மீது திணிக்கின்றார்கள். போலியாக நாகரிகம்
பேசுகின்றார்கள்!

"proper noun"  என்னும் கருத்து ஐரோப்பிய மொழிகளில்
-----------------------------------------------------------------------------------

இந்த "proper noun"  என்னும் கருத்தே ஐரோப்பிய மொழிகளிலேயே
மிகவும் மாறுபட இயங்குகின்றது என்பதையும் அறிந்துகொள்ள
வேண்டும்.  மொழிக்கு மொழி இலக்கணம் மாறுபடும்.
ஆங்கிலத்திலே மாதத்தின் பெயர்களை எழுதும்பொழுது
முதலெழுத்து தலைப்பெழுத்தாக (பெரிய எழுத்தாக) இருக்கவேண்டும். January, February December என்பதுபோல.
இவற்றை january, december என்றெல்லாம் சிறிய எழுத்துடன்
தொடங்கி எழுதினால் பிழை. அவற்றைத் திருத்துவார்கள்.

ஆனால் பிரான்சிய மொழியில்
இப்படி யன்று.  janvier, février, mars, avril, mai, juin, juillet,
août, septembre, octobre, novembre, décembre என்றுதான் எழுதுவார்கள்.
முதல் எழுத்தைப் பெரிய எழுத்தாக எழுதினால் பிழை. பொருள்
வேறுபடும்.

இதே போலத்தான், கிழமையின் பெயர்களையும் ஆங்கிலத்திலே
Friday, Sunday என்றெல்லாம் முதல் எழுத்தைப் பெரிய எழுத்தாகஎழுதவேண்டும். பிரான்சியத்தில் அப்படி இல்லை.
lundi, mardi, mercredi, jeudi, vendredi, samedi, dimanche.
என்றெழுதுவார்கள்.

இடாய்ச்சில் (செருமன்) மேசை நாற்காலி போன்ற
எல்லாப் பெயர்ச்சொற்களிலும் முதலெழுத்தைப்
பெரிய எழுத்தாக எழுதவேண்டும்.  Tisch, Stuhl, Baum
(table, chair, tree).

எசுப்பானிய மொழியிலும் மாதங்களின் பெயர்களும்
கிழமைகளின் பெயர்களும் சிறிய எழுத்தில்தான்
தொடங்குகின்றன.

இடாய்ச்சில் (செருமன்) மேசை நாற்காலி போன்ற
எல்லாப் பெயர்ச்சொற்களிலும் முதலெழுத்தைப்
பெரிய எழுத்தாக எழுதவேண்டும்.  Tisch, Stuhl, Baum
(table, chair, tree).

எசுப்பானிய மொழியிலும் மாதங்களின் பெயர்களும்
கிழமைகளின் பெயர்களும் சிறிய எழுத்தில்தான்
தொடங்குகின்றன.

இலத்தீன எழுத்துகளிலேயே எழுதும் பல
ஐரோப்பிய மொழிகள் London என்னும்
பெருநகரத்தின் பெயரை எப்படி
எழுதுகின்றார்கள் என்று பாருங்கள்:
"Londres in Catalan, Filipino, French, Galician, Portuguese, and Spanish;
Londino (Λονδίνο) in Greek; Londen in Dutch;
Londra in Italian, Maltese, Romanian, Sardinian and Turkish;
Londër in Albanian;
Londýn in Czech and Slovak;
Londyn in Polish;
Lundúnir in Icelandic;
Lontoo in Finnish." (உதவி விக்கிப்பீடியா)

ஏன் இலத்தீன எழுத்துகளில்தானே எழுதுகின்றார்கள்,
London என எழுதலாம்தானே!! ஏன் அப்படி
எழுதவில்லை?   ஒவ்வொரு மொழிக்கும்
ஒவ்வொரு முறைமை இருக்கும், ஊர்ப்பெயர்களின்
பின்னொட்டு முறை இருக்கும். இவற்றை மதித்தல்
வேண்டும்.  தமிழில் இலண்டன் என்றெழுதுவது வேண்டும்.
"லண்டன்" என்றெழுதுவது தவறு - தமிழிலக்கணத்தின்படி.

இதேபோல  Deutschland  என்று தன்னாட்டை அழைக்கும் நாட்டை
ஆங்கிலேயர் Germany என்கின்றார்கள். இதனைப் பிரான்சியர்
 Allemagne  என்கின்றார்கள்,  சுவீடிய மொழியில்  Tyskland  என்கின்றார்கள்.
பின்லாந்தியத்த்ல்  Saksa  என்கின்றார்கள். இப்படியாக
30-40 நாடுகளில் ஒவ்வொரு நாட்டினரும் ஒவ்வொரு விதமாக
அழைக்கின்றனர். நாம் தமிழில் இடாய்ச்சுலாந்து அவர்களின்
மொழியை ஒட்டி ஆனால் டகரத்தில் தொடங்கலாகாது என்பதால்
இ எனச் சேர்த்து ஒலிக்கின்றோம். ஆங்கிலேயரைப் பின்பற்ற
வேண்டுமென்றாலும் செருமனி என்று சொல்லலாம்.
அந்நாட்டின் மொழியில் ஜ என்னும் ஒலியே கிடையாது
அவர்களின் நாட்டை ஜெர்மனி என்பது  அறவே தேவையற்றது.
இடாய்ச்சு மொழி அறிந்த தமிழர்களே தங்களின்
சாய்வு காரணமாகவோ பிற காரணங்களுக்காகவோ
ஜெர்மனி என்கின்றார்கள். இடாய்ச்சுலாந்து எனச்சொல்லி
அந்நாட்டினர் சிலர் மகிழ்வதைக் கண்டிருக்கின்றேன்.
இடாய்ச்சுலாந்தின் பெயரைப் பல்வேறு நாட்டினர் அழைக்கும்
பெயர்களைக் இணைப்பில்  காணலாம்.

இதுபோல நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான
மொழிக்கு மொழி மாறுபடும் இடங்களைச் சுட்டிக்காட்ட
முடியும்.

சுருக்கமாக சொன்னால்:

1) தமிழில் மெய்யெழுத்தில் தொடங்கி எழுதலாகாது
2) தமிழில் வல்லின மெய்யெழுத்தில் ஒரு சொல் முடியலாகாது.
3) மேலுள்ளவற்றை உள்ளடக்கிய இலக்கணம்: தமிழில் முதலெழுத்து, கடைசி எழுத்து, இடையே வரும் எழுத்துக்கூட்டல்கள் ஆகியவற்றை அறிந்து பயன்படுத்தவேண்டும்
4) தமிழெழுத்துகளில் எழுதுதல் வேண்டும்,  இவை 247 ஏ.
5) கூடிய மட்டிலும் தமிழிலக்கண விதிகளைப் பின்பற்றுதல் வேண்டும்
(இவை அறிவார்ந்தவை, நுணுக்கம்  மிக்கவை என்பது போற்றி
அறிய வேண்டுவது).
6) தனி மாந்தப் பெயர்களையும், ஊர்ப்பெயர்களையும்
வணிகப் பெயர்களையும் சிறப்புப்பெயர்களையும்
தமிழின் இலக்கண விதிகளுக்கு உட்பட
எழுதுதல் வேண்டும். தேவை எனக் கருதினால் மொழிபெயர்த்தும்
எழுதலாம், ஆனால் இது கூடிய மட்டிலும் தவிர்க்கவேண்டியது.
அப்படிப் பெயர்த்தால் தமிழில் குற்றமென்று கொள்ளத்தேவையில்லை.
அதற்காக எல்லா வணிகப்பெயர்களையுமோ
பிற பெயர்களையுமோ மொழிபெயர்க்கக் கிளம்பிவிடலாலாது.
7)  உலகளாவிய அலகுகள் (கிலோமீட்டர், நானோமீட்டர், ஆம்பியர்),
தனிமங்களின் பெயர்கள் முதலான பல வகையான
சொற்களை மொழிபெயர்க்காமல், ஏற்புடைய முறைமைபேணி
தமிழின் இயல்புக்கு ஏற்ப வழங்கல் வேண்டும்.
8) 79 கிரந்த எழுத்துகளையும், 26 முதல் 52 வரையிலான இலத்தீனஎழுத்துகளையும் விலக்கி எழுதுதலே நல்ல முறை.
சிறப்பு நூல்களிலும் கணிதம் போன்ற துறைசார்ந்த நூல்களிலும்
இவற்றுக்கு வேண்டியவாறு விலக்குகள் கொள்ளலாம், ஆனால்
கலைச்சொற்களில் இவற்றைக் கலக்காமல் உருவாக்குவது
முக்கியம்.

நன்றி.

செல்வா
மார்ச்சு 21, 2019
வாட்டர்லூ, கனடா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக