சனி, 25 ஏப்ரல், 2020

அளவுமுறைகள்


                                           அளவுமுறைகள்

கணக்குப் பார்த்தல் என்பது நமது அன்றாட வாழ்வில் தவிர்க்க இயலாத ஒன்றாக இருக்கிறது என்பதை யோசித்துப் பார்க்கும் போது தான் உணரமுடிகிறது. கணக்கு என்கிற போதே எண்கள் தான் முக்கியமாகிறது. இப்போது உலகம் முழுவதும் புழக்கத்தில் இருக்கிற 1 2 3 என்ற எண் வடிவங்கள் நமது முன்னோர்களின் கொடையே என்பது புரிய வருகிற போது கொஞ்சம் கூடுதல் பெருமையாக தான் இருக்கிறது.

அளவுகள் என்பதன் பயன்படுத்தலில் தான் கணக்கு பார்த்தல் நிறைவடைகிறது. நமது முன்னோர்களின் மரபுவழி கணக்கிடலில் அளவுமுறைகள் ஏழுவகைப்படும். எண்ணல்,நிறுத்தல், முகத்தல், பெய்தல், நீட்டல், தெரித்தல், சார்த்தல் என்பனவே அவை.

ஒன்று, இரண்டு, மூன்று என எண்ணி பொருட்களை அளவிடுதல் எண்ணல் அளவு. எல்லா அளவுகளுக்கும் இது அடிப்படையாகும்.
பொருளை நிறுத்து எடை அறிவது நிறுத்தல் அளவு. வணிகப்பொருட்கள நிறுக்க பேரளவுகளும், தங்கம், வெள்ளியை நிறுக்க சிற்றளவுகளும் உண்டு.

நெய், பால், எண்ணெய் போன்ற திரவங்களை அளத்தல் முகத்தல் அளவு. படி உழக்கு போன்ற அளவுக் கலன்களின் மேற்பகுதி சமமாக இருக்கும்படி அளப்பர். கூம்ப கூம்ப அளக்க இயலாது.

தானியம் போன்ற கூல வகைகளை அளவு கலத்தில் பெய்து வாய் மீது கூம்ப கூம்ப அளப்பர். இது பெய்தல் அளவாகும்.

நீட்டல் அளவு என்பது இரண்டு புள்ளிகளுக்கு இடையில் உள்ள தூரம் அல்லது நீளத்தை அளப்பது. சேலை வேட்டி போன்ற அறுவை பொருட்களின் நீளத்தை அளந்து முழம் என்பது போன்றவற்றால் குறிப்பபர்.

கால நேரத்தை தெறித்தல் முறையில் அளப்பர். நாள், மாதம், ஆண்டு, நேரம் அனைத்தும் இதில் அடங்கும்.

நிறம், ஒலி, உரு போன்றவற்றை கூறி 'இப்படி' 'இதைப் போல' என்று ஒப்பிட்டு அளப்பது சார்த்தல் அளவாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக