சனி, 25 ஏப்ரல், 2020

தமிழ் வாழ என்ன வழி

                                   தமிழ் வாழ என்ன வழி ?
                             (பாவலரேறு  பெருஞ்சித்திரனார்)
                                                      ~~~~~~~~
பட்டிமன்றம்  வைப்பதிலும்
           தமிழ்வா ழாது
      பாட்டரங்கம் கேட்பதிலும்
           தமிழ்வா ழாது
எட்டிநின்றே இலக்கியத்தில்
           இரண்டோர் பாட்டை
      எடுத்துரைத்துச் சுவைபடவே
           முழக்கி னாலும்,
தட்டி,சுவர்,  தொடர்வண்டி,
            உந்து வண்டி
      தம்மிலெல்லாம் “தமிழ் தமிழ்’என்(று)
            எழுதி வைத்தே
முட்டிநின்று தலையுடைத்து
             முழங்கி னாலும்
      மூடர்களே  தமிழ்வாழப்
             போவ தில்லை !

செந்தமிழ்செய்  அறிஞர்களைப்
             புரத்தல் வேண்டும்
      செப்பமொடு  தூயதமிழ்
             வழங்கல் வேண்டும்
முந்தைவர லா(று)அ றிந்து
             தெளிதல் வேண்டும்
      முக்கழக உண்மையினைத்
              தேர்தல் வேண்டும்

வந்தவர்செய் தீங்குகளால்
            தமிழர்க்(கு) உற்ற
       வரலாற்று வீழ்ச்சிகளை
             எடுத்துக் கூறி
நொந்தவுளம் செழித்ததுபோல்
             புதிய வையம்
       நோக்கிநடை யிடல்வேண்டும் !     
              தமிழும் வாழும் !

தண்டமிழில் பிறமொழியைக்
              கலந்து பேசும்
        தரங்குறைந்த தமிழ்வழக்கை
              நீக்கல் வேண்டும் !
தொண்டரெலாம் தெருக்களிலே
              கடைகள் தோறும்
        தொங்குகின்ற பலகைகளை
              மாற்றச் சொல்லிக்
கண்டுநிகர் தமிழ்ப்பெயர்ப்பால்
              புதுக்கல் வேண்டும் !
         கற்கின்ற சுவடிகளில்
              செய்தித் தாளில்
விண்டுரைக்கா அறிவியலில்
              கலையில் எல்லாம்
         விதைத்திடுதல் வேண்டும் தமிழ்
              வாழும் அன்றே !
           =^=^=^=^=^=^=^=^=^=^

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக