தமிழ் சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின் ஆராய்ச்சி நிறுவனத்தில் ப.அருளி (அவர்கள்) ஆற்றிய மொழியியல் உரைகள் என்னும் நூலிலிருந்து எடுத்தது.
கன்னம்
குல்>கல்>கன்>கன்+அம்>கன்னம்
கன்னம்= 1. துளை, 2. செவித்துளை, 3. காது, 4. திருடர் சுவரில் இடும் துளை, 5. திருட்டு, 6. சுவரைத் துளைக்கப் பயன்பெறும் கருவி (கன்னக்கோல்), 7. கதுப்பு, 8. காதை அடுத்துள்ள குழிவிழும் பள்ளம், 9. பொற்கொல்லரின் சிறிய துலைத்தட்டு, 10. நோய் தணிப்பதற்கு பண்ணிக்கொடுக்கும் வழிபாட்டுப் படிமம், 11. கிண்ணம், 12. நாழிகை வட்டில், 13. செப்புக்கலம் செய்தொழில், 14. கேள்வி, 15. யானைச்செவி
குல் - துளைத்தல் கருத்து மூல வேர்
குல்+து>குற்று>குத்து
குல்>கல் (உகர அகர திரிபு)
கல்>கல்லு= தோண்டு, துளையிடு
"கல்லுறத் தியற்றிய வல்லுவர் படு"
(அகம்:79:1-3)
கல்லுறுத்தல்>கல்லுதல்=தோண்டுதல்
ஒ.நோ: தொய்>தொய்யில்>தொயில்>தொழில் = தோண்டும் வினை, நிலத்தை உழும்வினை, உழுது பயிர்செய்கை
கல்லு>(Latin) Colo=to till (துளையிடு)
(L) Colere = to till, to cultivate
(Eng) colony= Colonia
Colonus= farmer
Colere= to cultivate
(L) Colo = to cultivate
கல்>கல்லு= தோண்டு
கல்+அம்>கலம்= துளைக்கும் கருவி, ஆய்தம், படைக்கருவி, குத்துக்கருவி
கலம்= உழுபடை (சூடா)
கலம்>கலம்+பு>கலம்பு>கலப்பு+ஐ> கலப்பை= உழுகருவி
கலம்>கலன்
கலன்>கலன்+ஐ>கலனை=கலப்பை (திவா)
1. மீமிகப் பழங்காலத்தே, மூங்கில் குழாய்கள், சுரைக் குடுக்கைகள், கொட்டான் காய்ச்சில்கள் (சிரட்டை) போன்ற பெருமுயற்சியின்றி கிடைத்து பயனாகிய இயற்கை பொருள்களே, முதல் வகைக் கலங்கள் ஆகும்.
2. பின்னர் கூரிய கற்களால் மரத்துண்டை குத்திக் கல்லிக் குடைந்து உருவாக்கிய மரப்பொருள்கள், அடுத்த வகைக் கவங்கள் ஆகும்.
3. அதன் பின்னர், களிமண்ணைக் குழைந்து உருட்டித் தட்டிக் குழிப்படுத்திச் சுட்ட மண்பொருள்கள் கலங்கள் ஆயின.
4. இறுதியிலேயே, மாழைப் பொருட்கள், கலங்களாக உருவாக்கப்பெறும் தொடர்ச்சி தொடர்ந்தது.
கல்>கல்+அம்>கலம் = மண்குடம், மண்சட்டி (பிற மண்கலங்களுக்கும் பொருந்தும்)
"சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமட்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று" (660)
"கலம்சுடு புகையின் தோன்றும் நாட"
(அகம்:களிற்:308:7)
கலம் = ஏனம்
"பெறுங்களம் தொகுத்த உழவர் போல
இரந்தோர் வறுங்கலம் மல்க வீசி"
(அகம்:களிற்:30:8-9)
(வறுங்கலம்= வறிய கலன்கள்)
கலம்+பை> கலப்பை = யாழ் முதலிய இயக் கருவிகளையும், தட்டுமுட்டுப் பொருள்களையும் இட்டு வைக்கும் பை
கலம் = ஓர் முகத்தலளவைப் பெயர்
3 தூணி = 1 கலம்
காண்க : தொல். எழுத்: 5:26, தொல். சொல்: 2:19 & அகம் :16:9
கலம்= அணிகலம்>அணிகலன்
"பொங்கலம் சுமந்த பூண்தாங்கு இளமுலை (அகம்: 16:9)
கலம் = மரக்கலம், தோணி, படகு, கப்பல்
நீர்மேல் கடவிச் செலுத்துவதற்கு ஏற்ப, கல்லப்பெற்ற பருமரத்துண்டு, கல்+அம்>கலம் என்றாகியது.
(மரத்துண்டுகளை ஒன்றாய்க் கட்டி உருவாக்கும் படகு, கட்டுமரம்.)
துள் என்னும் துளைத்தற் கருத்து வேரினின்று, உருவானது தோணி என்ற சொல்
துள்>தொள்>தோள்>தோண்
தோண்+து>தோண்டு =தொளை செய்,
தோண்டு+இ>தோண்டி= உட்புறக் களி மண்ணைத் தோண்டியெடுத்து உருவாக்கப் பெற்ற மண்கலம்
தோண்+இ> தோணி= தோண்டப் பெற்ற பருமரத் துண்டு
1-1 கடன்மண்டு தோணியிற் படைமுகம் போழ (புறம்:299:3)
1-2 கடல்பாடு அவிந்து தோணி நீங்கி (அகம்:50:1)
இத்தமிழ்ச்சொல்லே, பாலி, பிராகிருதம், சங்கதம், இந்தி, பெங்காலி, மராத்தி போன்ற பல மொழிகளிலும் பயிலப் பெற்றுள்ளது.
கலம் = மரக்கலம், தோணி, படகு, கப்பல்
கலம் > (தெலுங்) கலேமு
கலம் >(சங்க) கல
கலம்> (கிரேக்) galia
> (லத்தீ) galea
> (பழைய பிரஞ்) galie
>(Mid Eng) galie
>(ஆங்கி) galley
> (ஆங்கி) galleon = ship of war
>galliot or goliot = Dutch cargo
boat
கலம் என்ற சொல் பிற தமிழிய மொழிகளில் பயிலப்பட்டுள்ளதை காண்போம்.
(மலையா, கோண்டி) கலம் = பானை , ஏனம்
(கோத்திக்) கல = பெரிய பானை
(துளு) கர = மண்பாண்டம்
கலம் என்பது தொன்னையாகிய இலைக்கிண்ணத்திற்கும், பனையோலையில் செய்யப்பெறும் கிண்ணக்குடவுக்கும் ஆகிவரும்.
"உண்ட நன்கலம் பெய்து நுடக்கவும்" (புறம்:384:21)
உரை: உணவுண்ட நல்ல கலங்களில் உண்ணமாட்டதொழிந்த மிக்கவற்றை, அக்கலத்திடையே வைத்து மடித்தெறியவும்.
(இங்கு கலம் என்பது இலைக் கலத்திற்கு ஆகி வந்தது)
(கோண்டி) கல = இலைக்கிண்ணம்
(கூய்) கலி = இலைக்கிண்ணம்
(மால்டோ) கால = இலைக்கிண்ணம்
கலம் (தமிழ்) = கல்லை= தையல் இலைக்கலம்
(கல்>கல்+(ல்)+ஐ> கல்லை)
கல்லை குத்துதல்= (நாட்டுப்புற வழக்கு) இலைக்கலம் தைத்தல்
சருகிலை யிணைத்த கல்லை (பெரியபு. கண்ணப்ப:118)
கலம்>கலயம் = வாயகன்ற மட்கலம், பானை
கலயம்>கலசம்
(ஒ.நோ: கிழியல்>கிழிசல், குயவன்>குசவன்)
சில வடபால் மொழிகளில் கலசம் என்ற சொல்லின் திரிபுகள்.
சங்கதம் : kalasa
பிராகி : kalasiya
பாலி: kalasa
நேபாளி: kalas
அசாமி: kalah
வங்க: kalsi
ஒரியா: kalasi
சிங்கள: kalaya, kalaha, kalasa
கல்>கன்>கன்+அம்>கன்னம் = செப்புக்குடம் செய்தொழில்
கன்= கலஞ்செய் தொழில்
கன்+அன>கன்னன்>கன்னான்= செப்புக்கலம் செய்பவன்
கன்+அர்>கன்னர்>கன்னார் = செப்புக்கலஞ் செய்வோர்
" மின்னும் பின்னும் பன்னும் கன்னும்
அந்நாற் சொல்லும் தொழிற் பெயரில்" (தொல். எழுத்:345)
கன்னம் = துளை, குழி
" வேற்றுமை யாயின் ஏனை எகினொடு
தோற்ற மொக்கும் கன்னக் கிளவி"
(தொல்: 346)
கன்>கன்+இ>கனி= மாழை
(ஏதாவது மாழைத்தாது எடுக்க மண்ணைத் தோண்ட வேண்டும். தோண்டியெடுக்கப்படுவதாகிய மாழை, தோண்டுதற் கருத்து அடிப்படையிலேயே 'கனி' எனவும் பெற்றது. ஒ.நோ: கனிவளம்)
கன்+அம்>கன்னம் = திருடத் துளைத்த சுவர்த்துளை, துளைப்புக் கருவி, திருட்டு
கன்+அகம்>கன்னகம்= அகழுங் கருவி
"கன்னகம் இன்றியும் கவைக்கோல் இன்றியும்" (சிலம்பு: 16:142)
இச்சொல் மலையாளம், கன்னடம் மொழிகளில் கன்னம் என்ற சொல்லிலேயை பயன்படுகிறது. தெலுங்கில் 'கன்னமு'.
சங்கதத்தில் khan, khana, khani , khanitra என்றவாறு பயன்படுகிறது.
மேலை மொழிகளில்:
Old German: ginom
Mod German: gahne
Anglo Saxon : cina, cinan
Latin : cuniculus, canalis
கன்னம் = பொற்கொல்லரின் சிறிய துலைத்தட்டு, குழிந்த தட்டு
"பொன்செய் கன்னம் பொலிய வெள்ளி
துண்கோல் அறைகுறத் துதிர்வன செய்ய" (அகம்: 317:8-9)
கன்னம்= நோய் தணிப்பதற்கு பண்ணிக் கொடுக்கும் (வழிபாட்டுப்) படிவம்
1-1: கழங்கு மெய்ப்படுத்து, கன்னம் தூக்கி. (ஐங்: 242:2)
1-2: பொன்நகர் வரைப்பில் கன்னம் தூக்கி (ஐங்:247:2)
கன்னம்= குழியுள்ள கலம், கிண்ணம், நாழிகை வட்டில்
(பிங்:1252)
கன்னம் = நீர்க்குடுவை, கரகம்
கரகம்= நீர்க்குடுவை, நீர்க்கலம், சிறிய வாயுடைய குடக்கலம் (கமண்டலம்)
கரு>கார்= (கருமை, முகில், மழை) நீர்
கார்+அகம்>காரகம்>கரகம்= நீர்க்கலம்
"நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க்கு உரிய"
(தொல்.மரபியல்:1570)
செலவு மேற்கொள்ளும் போது கரகத்தை உரியில் கட்டி தொங்கவிட்டு செல்வது அக்கால முனிவர்களின் வழக்கம்.
1-1: உரித் தாழ்ந்த கரகமும் (பாலைக்கவி: 9:2)
1-2: உரித்தாழ் கரகம் (சிலம்பு: 30:64;90)
அக்கரகத்தில் எப்போதும் நீர் இருந்து கொண்டேயிருக்கும்படி வைத்திருந்தனர் என்பதை " நீர் அறவு அறியாக் கரகத்து" என வரும் புறநானூற்று வரியில் (1:12) காணலாம்.
பிறமொழிகளில் பயிலப்பட்டுள்ள கரகம் என்னும் தமிழ்ச்சொல்:
Sanskrit: karaka
Prakrit : karaya
Bihari: karai
Nepali: karua
Marathi: karha
Arabic: garrafa
Spanish: garrafa
Italy: caraffa
French: carafe
English: carafe = glass bottle for water or wine in a table in bed room.
கன்னல்= நீர்க்கலம், நாழிகை வட்டில்
1-1: நின் குறுநீர்க் கன்னல் இனைத்து என்றிசைப்ப" (முல்லை:57-58)
1-2: குறுநீர்க் கன்னல் எண்ணுநர் (அகம்: களிற்: 43:6)
கன்னல்= நீர்க்கலம்
> Germanic: Canne
> Late Latin: Canna
>Old Norse: Kanna
> Old High German: Channe
>Old English: Canne
> English: Can = vessel for liquid
கன்னல் = உள்தொளையுள்ளதாகிய நாணல், பிரம்பு, கரும்பு.
(Greek) Kanna =Reed
(Latin) Kanna > (Old French) Cane>
(Italy) Canale> (Latin) Canalis>(English) Canal= Duct in plant or animal body for food, air etc. artificial water course for inland navigation or irrigation.
>(Italy) Cannon = great tube
>(French) Canon
>(English) Canon
>Canyon, Canon= Deep gorge frequently with stream.
>Cane= Beat with cane
(தமிழ்) கன்னல்>(மலையாளம்) கன்னல், கன்னை>(இந்தி) கன்னா>(உருது) கன்னா
கன்னல்= சர்க்கரை, கரும்பு, கரகம், நாழிகைவட்டில் (சூடா.நிக)
"நாழிகை நாழிகை வட்டிலும் கட்டியும்
காகமும் கரும்பும் கன்னலென்றாகும்"
(பிங்:3337)
கன்+(ன்)+அம்>கன்னம்= துளை, செவித்துளை, காது, காதை அடுத்துள்ள குழிவிழும் பள்ளம், கதுப்பு
கன்னம் = காது
ஒ.நோ: கன்னக்கண்டு= ஒரு வகைக் காதணி
கன்னப்பூ= ஒரு வகைக் காதணி
கன்ன மதம்= (யானை) காதில் வடியும் நீர்
"கன்னமே அள்ளுக் கேள்வி காதின்பேர் செவியுமாமே" (சூடாமணி நிகண்டு: 2:94)
" காது கேள்வி யுள்ளே சுருதி
கன்னம் செவியே சோத்திரமாகும்"
(பிங்:1052)
கன்னன் = காதில் குண்டலம் பூண்டவன்
காது, செவி போன்ற சொற்கள் எழுந்து பரவி நிலைத்ததால், கன்னம் என்ற சொல்லாட்சி தேய்வுற்றது.
கன்னம் =காது
(Sanskrit) Karnah
கன்னம் என்ற சொல் வழக்கிழக்கபின், தமிழில் காது, செவி போன்ற சொற்கள் பயன்பட்டது. இது பிற மொழிகளிலும் பயிலப்படுகிறது.
மலையாளம்/தெலுங்கு: செவி
இருள: காது
கொரவம்: செவி
கன்னடம்: கிவி
குடுகு: கெமி
துளு: கெபி
தோட: கெவ்
கோண்டி: கவ்வி
கன்னம் = கதுப்பு
கன்னம்>(Greek) genus = Jaw
geneion = chin
(English) Genial = of the chin
ஆகவே, இக்கன்னம் என்னும் காதைக் குறிக்கும் செந்தமிழ்ச்சொல், இந்நாட்டு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்டவற்றில் ஒலிக்ப்பெறுவதை, அங்கங்கும் சென்றால் நம் கன்னத்தாலேயே (காதாலேயே) கேட்கலாம்.
மின்னெழுத்தில் வடித்தது,
பெஞ்சமின் பிராங்கிளின். பி
09 மீனம் 2051
[०௯/०௩/௨०௫௧]
(22-03-2020)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக