புதன், 17 அக்டோபர், 2012

விடுகதை

        முன்னொரு காலத்தில்  நல்லூர் என்ற  நாட்டை இனியன் என்ற ஒரு அறிவாளி மன்னன் ஆண்டு வந்தான். ஒரு சமயம் அவன் எதிரி நாட்டு மன்னனால் போரில் தோற்கடிக்கப்பட்டு  சிறைபிடிக்கப்பட்டான். இனியனது அறிவு கூர்மையை கேள்விபட்ட எதிரி நாட்டு  மன்னன், சிறைக்கு சென்று இனியனை  அழைத்து மன்னா உன்னை  பற்றி கேள்விபட்டேன். அறிவாளியான நீ தப்பிசெல்ல ஒரு வாய்ப்பு  தருகிறேன்.

       நீ இருக்கும்  சிறையில் இரு வாயில்கள் உள்ளன. ஒரு வாயில் வாழ்வின் வாயில். அதன் வழி சென்றால் கண்டிப்பாக தப்பிக்கலாம். மற்றொரு வாயில் மரணத்தின் வாயில். அதில் சென்றால் மரணம் நிச்சயம். ஒவ்வொரு வாயிலிலும் ஒரு காவலாளி நிற்கிறார். ஒருவர் உண்மையை மட்டும் பேசுபவர் மற்றொருவர் பொய் மட்டும் பேசுபவர்.

         நீ ஒரே ஒரு காவலாளியிடம் ஒரே ஒரு கேள்வி கேட்டு வாழ்வின் வாயிலை  அறிந்துகொள் என்று கூறினான். இனியனுக்கு எந்த காவலாளி உண்மை பேசுபவர் என்று தெரியாது. பல மணி நேரம் சிந்தித்து ஒரு கேள்வியை தயார்செய்தான். அந்த கேள்வியை ஒரு காவலாளியிடம் கேட்டு வாழ்வின் வழியை அறிந்து கொண்டு அதன் வழி தப்பித்து சென்றான். (இந்த கேள்வியை எந்த காவலாளியிடம் கேட்டாலும் வாழ்வின் வாயிலை அறிந்து கொள்ளலாம்)

   அப்படியானால் அந்த கேள்வி என்ன?

 

வியாழன், 5 ஜூலை, 2012

பழைய சென்னை

பழைய சென்னையை கண்டுகளியுங்கள். வாகன  நெரிசலால் நாம் படும் பாட்டை  நினைக்கும்  போது இந்த படங்கள் நமக்கு அழகாக தெரிகிறது. ஒரு ஏக்கத்தோடே இதை பார்க்கிறோம்..































































































மின்சார கம்பியை தரையில் பதிக்கிறோம் என்று ரோடை உடைத்தார்கள். போக்குவரத்து நெரிசலை பொறுத்துக்கொண்டோம். பாதாளசாக்கடை போடுவதாக சொல்லி பள்ளம் நோண்டினார்கள்.  நடப்பதற்கே சிரமமாயிற்று. பொறுத்துக்கொண்டோம். டெலிபோன் கேபிளை பதிக்க, பாலம் கட்ட, குடிநீர் பைப் போட என்று ஒவ்வொரு விஷயத்திற்காகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  இன்றைய சிரமம் நாளைய நன்மைக்கே என்று நமக்கு நாம் சமாதானம் கூறிக்கொண்டோம். ஆனால் இது ஒரு தொடர்கதையாக வந்துகொண்டே இருப்பதுதான் பெரிய தலை வலி. எவ்வளவுதான் பாலம் கட்டினாலும் நெரிசல் கூடவே செய்கிறது. டெலிபோன் கேபிள் போடும் போது, இது நமது நன்மைக்கு என்று சிரமத்தை பொறுத்தோம். ஆனால் தொழில்நுட்பம் மாறியதால் இப்பொழுது எவரும் லேன்ட்லைனை  பயன்படுத்துவது  இல்லை. மொபைலுக்கு மாறிவிட்டோம். அப்படி என்றால் கேபிள் போடும் போது இது நமது நன்மைக்கே என்று சமாதானம் கூறியது வீண்தானே.

இப்படியெல்லாம் ஒரு ஊரையே குத்தி குதறுவதற்கு பதில் வேலைவாய்ப்பை எல்லா மண்டலங்களிலும் ஏற்படுத்தினால் சென்னையின் மக்கள்தொகை குறையும்.   போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம். இந்த ஊரின் அழகையும் நீர்  ஆதாரங்களையும் பாதுகாக்கலாம்.  காற்று மாசுபடுவதையும் குறைக்கலாம். முக்கியமாக தமிழ்நாடு முழுவதுமே போக்குவரத்தை குறைக்க முடியும். பெரும்பாலான மக்கள் அவர்களின் ஊருக்கு அருகில் வேலை செய்யும் நிலை வரும் பொது இது சாத்தியமே. இதனால் விபத்துகளும் குறையும்.

சென்னையை தவிர கோவை, திருச்சி, நெல்லை, தஞ்சை போன்ற ஊர்களில் தொழில்களை பெருக்குவதுதான் சென்னையை நிம்மதியான ஊராக வைக்க தேவையான வழி. ஆனால் இந்த வழியினால் ரியல் எஸ்டேட் செய்யும் அரசியல்வாதிகளுக்கு லாபம் கிடைக்காது. அதனால் பழைய சென்னையை பார்க்க நினைப்பது  கனவாகவே .இருக்கும் என்றே மனம் அடித்து சொல்கிறது.










புதன், 4 ஜூலை, 2012

இயற்கையை பாதுகாப்போம்

                   இந்த உலகம் நமக்கு மட்டும் சொந்தமல்ல . மாறாக நமக்கு பின்  வரும் தலைமுறைக்கும் சொந்தமானது . எப்படி  நம்  முன்னோர்கள் இயற்கை  அன்னையை பாதுகாத்து நம்  கையில் ஒப்படைத்தனரோ, அதுபோல்  நாமும்  நம்  வாழிடத்தை  பாதுகாத்து நமது அடுத்த தலைமுறைக்கு வழங்க வேண்டும். ஆனால் தமிழர்களாகிய  நாம் இது  குறித்த  சிந்தனை  ஏதுமின்றி வாழ்ந்து  வருகிறோம் . நமது அண்டை மாநிலமான கேரளாவை பார்த்தாவது நாம் திருந்த  வேண்டும் . அங்குள்ள ஒவ்வொரு கிராமத்திலும்  நீர்நிலைகளை பாசிபடியாமல் வைத்துள்ளனர். அங்கு ஆற்றிலிருந்து மணல் அள்ள முடியாது . மலை பாறைகளை உடைக்க முடியாது.. ஆனால்  நாம் இங்கிருந்து மணலையும் பாறைகளையும் கடத்தி கேரளாவுக்கு கொடுக்கிறோம். இதன் விளைவுகள் இப்பொழுதே தெரிய ஆரம்பித்துவிட்டது. நம் பருவநிலைகள் மாறி மழையை இழக்கிறோம். நிலத்தடிநீர் பாதாளத்திற்கு செல்ல ஆரம்பித்துவிட்டது. பணப்பயிர்களை வளர்க்கிறோம் என்று வயல்வெளிகளை அழிக்கிறோம். மரக்காடுகள் எல்லாம் கான்கிரீட் காடுகளாக மாறி வருகிறது. பசிக்கிறது என்றால் பணத்தை சாப்பிடமுடியாது, அரிசியைத்தான் தின்ன வேண்டும்.

                 நமது நாடு கார்பொரேட் முதலாளிகளின் சொர்க்க பூமியாக ஆகிவிட்டது. அவர்களுக்கு சாதகமாக நமது அரசும் சட்டங்களை இயற்றுகிறது. கார்பொரேட் முதலாளிகளின் கொள்ளைகளை .சட்டபூர்வமாக்கிவருகிறது. அவர்கள்தான் ஊடகங்களையும், அரசியல்வாதிகளையும், விஞ்ஞானிகளையும் வழிநடத்துகிறார்கள். இயற்கையாக கிடைக்கும் சூரியமின்சாரம் சாத்தியமில்லையாம் அனால் அணு மின்சாரம் சாத்தியமாம். ஊடகங்கள் இப்படித்தான் எழுதுகின்றன. இவர்கள் யாவருக்கும் மக்களை பற்றிய கவலை இல்லை. முதலாளிகளிடமும் அரசிடமும் அரசியல்வாதிகளிடமும் இருந்து பணம் வாங்கிகொண்டு நடத்தும் பத்திரிகைகளைவிட  இணைய பத்திரிகைகளை நம்பலாம். குறிப்பாக வினவு, கீற்று, சிறகு, பூவுலகின் நண்பர்கள் போன்ற தளங்கள் வெகுஜன ஊடகங்கள் சொல்லாத பல உண்மைகளை நமக்கு தருகின்றன.
                       மக்கள் எது நடந்தால் நமக்கென்ன என்று வாழாமல் சமூக விஷயங்களில் அக்கறை காட்டும் போது பல சமூக தீமைகளை ஒழிக்க முடியும். எந்த சமூகம் விழிப்புணர்வையும் போராடும் உணர்வையும் ஒற்றுமையையும் ஒருங்கே கொண்டுள்ளதோ அந்த சமூகம் விரைவில் முன்னேறும் என்பதில் வியப்பில்லை.

- வாய்மை

பி..கு:: என் வாழ்நாளில் நான் எழுதும் முதல் பதிவு இது. மனதில் நினைத்ததை எழுதியுள்ளேன். கோர்வையாக வார்தைகள் வராததற்கு .மன்னிக்கவும்.