சனி, 25 ஏப்ரல், 2020

அது என்ன பிராமி ?

                                             அது என்ன பிராமி ?

(நன்றி: நடன காசிநாதன், தமிழர் கண்ணோட்டம் மாத இதழ், நவம்பர் 2019)

நடுவணரசு கல்வெட்டுத்துறையில் சமற்கிருதப் பகுதியில் உயர்கல்வெட்டாய்வாளராகப் பணிபுரிந்த முனைவர் சங்கரநாராயணன் சமற்கிருத மொழியில் சிறந்த அறிஞர். அப்பெரியார் ‘பிராமி’ எழுத்துப் பற்றிக் கூறும் கருத்து இங்கு நோக்கத்தக்கது.

‘பதஞ்சலி’ என்னும் சமற்கிருத எழுத்தாளர் ‘பிராமி’ எனும் சொல்லை ஒரு ‘மருத்துவ மூலிகை’ என்று கூறியிருக்கிறார். அமரகோசம் எனும் நூல் ‘பிராமி’ என்பதை ‘வாக்குத்தெய்வம்’ என்றும் ‘மருத்துவ மூலிகை’ என்றும் பேசுகிறது. இதிகாச நூல்களிலும் மற்றும் புராணங்களிலும் ‘பிராமி’ எனும் சொல் பலமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அவை அது ஒரு எழுத்து என்ற முறையில் ஆளப்படவில்லை. ‘நாரதமிருதி’ எனும் நூல் எழுத்தைப் பிரமன் தோற்றுவித்தார் என்று கூறுகிறதேயொழிய எழுத்தின் பெயரைக் குறிப்பிடவில்லை.

ஆனால் இந்துக்களின் எண்ணத்தில் இந்த உலகமே பிரம்மாவால் தோற்றுவிக்கப்பட்டது என்று கருதப் பெறுகிறது. ‘பிராமி’ எனும் சொல் எழுத்தைக் குறிப்பதாகச் சமண, பவுத்த இலக்கியங்களில் தவிர வேறு எந்த இலக்கியங்களிலும் குறிக்கப்பெறவில்லை.

பிறதோரிடத்தில் “இந்தியத் தத்துவ ஞானிகள், பேச்சைத்தான் தெய்வமாகப் போற்றினார்கள் எழுத்தை அல்ல” என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

ஆதலால், அசோகரது கல்வெட்டுகள் ‘பிராமி’ எழுத்தில் எழுதப்பட்டுள்ளன என்று கருதுவதே தவறானதாகும். அம்மன்னரது கல்வெட்டுகள் ‘தர்மலிபியில்’ எழுதப் பெற்றிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

அசோகரது பெரும்பாலான கல்வெட்டுகள் எழுதப் பெற்றிருக்கும் எழுத்துக்குப் ‘பிராமி’ என்ற பெயரைச் சூட்டியவர் பியூலர் என்ற வெளிநாட்டவரே ஆவார். அவர் இவ்வாறு இந்தப் பெயரைத் தந்திருப்பது ஐயத்திற்கு அப்பாற்பட்டதன்று என்றும் மேலும் அசோகர் கல்வெட்டு எழுத்துக்களுக்குப் ‘பிராமி’ என்ற பெயர் தந்திருப்பது வசதிக்காகவே தவிர அதுதான் உண்மை என்றல்ல என்றும் டி.பி. வர்மா எனும் வடநாட்டு அறிஞர் தெரிவித்திருக்கிறார்.

அசோகரது கல்வெட்டுகளே ‘பிராமி’ எனும் எழுத்தில் எழுதப்பெறவில்லை என்றிருக்கையில் தமிழ்நாட்டுப் பண்டைக் கல்வெட்டுகள் ‘தமிழ் பிராமி’யில் எழுதப்பெற்றிருக்கின்றன என்று கூறுவது எங்ஙனம் பொருந்தும்? ‘பிராமி’ என்பது பேச்சுக்குரிய தெய்வமே தவிர எழுத்துக்குரிய தெய்வமில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக