கத்தோலிக்கமும் தமிழும்
அண்மையில் சென்னையில் நடைபெற்ற ஒரு கத்தோலிக்க குடும்பத்தினரின் திருமணவிழாவிற்கு செல்ல நேர்ந்தது. மணமகன் குடும்பத்தாரும், மணமகள் குடும்பத்தாரும் தமிழர்கள். திருமணத்திற்கான அழைப்பை ஏற்று, நுங்கம்பாக்கம் தூய தெரசா கத்தோலிக்க கோயிலில் நடைபெற்ற திருமண திருப்பலியிலிக்கு வந்திருந்தவர்கள் (கத்தோலிக்க மதத்தவர்களும், பிற மதத்தினரும்) அனைவரும் தமிழர்களே. ஆனால் திருமண திருப்பலியானது ஆங்கில மொழியில் நடைபெற்றது. அதிலும் சில வழிபாட்டு முறைகள் இலத்தீன் மொழியில் அமைத்திருந்தனர். வந்திருந்தவர்களில் ஆகப்பெரும்பான்மையோர் வழிபாட்டில் ஈடுபட இயலாமல், வெறும் பார்வையாளராகவே அமர்ந்திருந்தனர். (மணமக்களின் உடையிலும் தமிழ்ப் பண்பாடு என்பது சிறிதும் இல்லை என்பது தனிச் செய்தி).
விழாவில் கலந்து கொண்டோர் அனைவருமே தமிழர்களாக இருக்கும்போது, ஏன் தேவையே இல்லாமல் ஆங்கிலத்தில் திருமண சடங்குகள் நடைபெற வேண்டும்?
ஆங்கிலத்தில் நடத்துவது, தாங்கள் இங்கிலாந்து அரச வழி மரபினர் என்று பிறருக்கு பறைசாற்றவா? தாய்மொழியை வழிபாட்டு மொழியாக ஏற்க மறுக்கும் இம்மாதிரியான பெற்றோரை நினைத்து வேதனைப்படுகிறேன்.
ஒரு காலத்தில் கிறிஸ்தவ மதத்தில் வழிபாடு என்பது இலத்தீன் மொழியிலேயே இருந்தது. விவிலியமும் இலத்தீன் மொழியிலேயே இருந்தது. இங்கிலாந்தில் வாழ்ந்த கிறிஸ்தவ மக்கள், விவிலியத்தை ஆங்கில மொழியில் மொழிபெயர்க்க விரும்பினர். ஆனால் ஆங்கில மொழியானது ஒரு சொல் வளம் இல்லாத மொழி என்று கூறி, அம்மக்களின் கோரிக்கையை மறுத்தது வாட்டிகன். (குறித்துக்கொள்ளுங்கள்- சொல் வளம் இல்லாத ஆங்கில மொழி).
அதன் பின்னர் பல போராட்டங்களுக்குப் பின்னர்தான் தாய்மொழி வழிபாடு ஆங்கிலேயர்களுக்கு கிட்டியது. ஏன் நமது தமிழ்நாட்டிற்கே வருவோம். கத்தோலிக்க மதத்தவர்கள் 1960 களில் தமிழில் வழிபாட்டை தொடங்கினர். ஆனால் பிற கிறிஸ்தவ மதத்தினர், அதற்கு முன்னரே தமிழில் விவிலியம், வழிபாடு போன்றவற்றை ஏற்றுக் கொண்டுவிட்டனர். இப்படி நாம் அனைவருமே, தாய் மொழியில் வழிபாட்டை ஏற்றுக் கொண்ட பிறகுதான், மக்களின் மனதுள் இறையியல் கருத்துக்கள் ஆழமாக ஊடுருவியது என்பதே உண்மை.
தாய்மொழியில் வழிபடும் போதுதான், நமது மனம், வழிபாட்டு கருத்தோடு ஒன்றுபடும். அதைவிடுத்து, அரைகுறையாக தெரிந்த மொழியில், வழிபாட்டை நடத்தினால், மனம் எங்கே இறைவனோடு ஒன்றிக்கும். கோயிலில் அங்கும் இங்கும் வேடிக்கை பார்க்கவே தோன்றும்.
தமிழ் ஒரு இனிமையான மொழி, தொன்மையான மொழி. அதன் சொல் வளம் அளப்பரியது. அம்மொழியை தாய்மொழியாக கொண்டவன், தமிழை விடுத்து, ஆங்கில மொழியில் வழிபாட்டை விரும்புகிறான் என்றால் அதனைவிட, மடமை வேறொன்று இருக்குமா?
ஆங்கில வழிபாட்டை ஏற்கும் தமிழரை நினைத்தால் ,
" இனிய உளவாக இன்னாது கூறல் கனியிருப்ப காய் கவர்ந்தற்று "
என்ற குறள்தான் நினைவில் வருகிறது.
அந்த திருமணத்திற்கு பின் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியிலும் அறிவிப்புகள் ஆங்கிலத்திலேயே இருந்தது. யாருக்காக அந்த அறிவிப்புகளை செய்கிறார்கள் என்பது புரியவில்லை.
இது ஏதோ ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் நடக்கும் ஆங்கிலமயமாக்கம் அல்ல. பல கிறிஸ்தவர்களும் வேகமாக ஆங்கில அடையாளத்தை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதே உண்மை. இதன் மற்றொரு உண்மை கிறிஸ்தவர்கள் தமிழை விட்டு விலகிச் செல்கிறார்கள் என்பதே.
பொதுவிலேயே கிறிஸ்தவ மக்களிடம் தாய்மொழிப் பற்று குறைந்து காணப்படுவது மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்றாகும். வீரமாமுனிவர், போப், கால்டுவெல் போன்ற வெளிநாட்டு துறவிகள் தமிழை அறிந்து, அதன் மீது பெரும் பற்று கொண்டனர். ஏன் தமிழர்களான மாயூரம் வேதநாயகம், ஆபிரகாம் பண்டிதர், பாவாணர், தஞ்சை வேதநாயகம், கிறிஸ்தவ கம்பன் கிருஷ்ணபிள்ளை என்று எவ்வளவோ கிறிஸ்தவர்கள் தமிழை வளர்க்க பாடுபட்டுள்ளனரே. தமிழ் வழியாகத்தானே கிறிஸ்தவம் வளர்ந்தது. ஆனால் இன்றோ கிறிஸ்தவர்கள் தமிழையும், தமிழ்ப்பண்பாட்டையும் சிறிதுசிறிதாக ஒழித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதே உண்மை.
முன்பெல்லாம் விவிலியமானது அதிக அளவில், தமிழோடு சமஸ்கிருத சொற்களை கொண்ட மணிப்பவள நடையிலேயே இருந்தது. பின்னர் கத்தோலிக்க மதத்தவரின் விவிலியமானது சமஸ்கிருத சொற்கள் நீக்கப்பட்ட, தூய தமிழில் எழுதப்பட்ட விவிலியமாக மாற்றப்பட்டுள்ளது. வழிபாடு, செபம் போன்றவைகளும் தூய தமிழுக்கு மாற்றப்பட்டுவிட்டன. ஆனால் மக்கள்தான் மாறவில்லை.
ஒரே பகுதியில் வாழும், ஒரே அளவிலான கல்வித்தகுதி, வசதி வாய்ப்பு, ஏன் ஒரே சாதியைச் சேர்ந்த இரு குடும்பங்களை எடுத்துக் கொள்வோம். ஒரு குடும்பம் இந்து மதத்திவராகவும் மற்றொரு குடும்பம் கிறிஸ்தவ மதத்தவராகவும் இருக்கிறார்கள் என்று கொள்வோம். இந்து குடும்பம் ஓரளவில் சமஸ்கிருத சார்புடையதாக இருந்தாலும், தமிழையும் தமிழ்ப்பண்பாட்டையும் விட்டொழிக்காதவர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் அருகில் வாழும் கிறிஸ்தவ மதத்தவரோ அதிக அளவில் ஆங்கில சார்பினராகவும், தமிழ்ப்பண்பாட்டை குறைந்த அளவில் கொண்டவராகவும் இருப்பதை காணலாம்.
அவர்கள் தமிழைப் புறக்கணித்து ஆங்கிலதை ஏற்றுக்கொண்டே இருப்பது, தமிழ் மொழிக்கும், தமிழர் அடையாளத்திற்கும் பெரிய தீங்கினை செய்யப்போகும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
கிறிஸ்தவர்கள், இப்படித்தான் தமிழையும், தமிழ்ப் பண்பாடு, தமிழர் அறிவு போன்றவற்றை விட்டுவிட்டு ஆங்கிலத்தை நோக்கி நகர்ந்து சென்று கொண்டே இருக்கிறார்கள் என்றால், தமிழ்நாட்டில் கிறிஸ்தவ மதம் வளராமல் இருப்பதே தமிழுக்கு நல்லது என்பதை வருத்தத்தோடு பதிவு செய்கிறேன்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக