சனி, 25 ஏப்ரல், 2020

தமிழ்த்தேசியம்

(தமிழ்த்தேசியப் பேரியக்கம் கொள்கை விளக்க அறிக்கையிலிருந்து)

"இந்திய அடிமைத்தளையிலிருந்து விடுபடுவதே தமிழ்த்தேசிய இனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு முதல் தேவையாகும்!

தமிழ்த்தேசிய இனம் தனக்கான இறையாண்மையுள்ள தமிழ்த்தேசக் குடியரசை நிறுவிக்கொள்ள வேண்டும். இந்திய ஏகாதிபத்தியத்தின் அடிமைத் தளையை அறுத்து இறையாண்மையுள்ள தமிழ்த்தேசக் குடியரசைக் நிறுவிக்கொள்ளும் போராட்டம் தமிழ்த்தேசியப் புரட்சி மட்டுமல்ல, அதுவே இன்றைய கட்டத்தின் சனநாயக புரட்சியாகவும் நடைபெறும்!

மொழி ஒடுக்குமுறை, வரலாற்று வழி அமைந்த தாயகத்திற்கு ஆபத்து, வருணசாதி ஆதிக்கம் மற்றும் தீண்டாமை இழிவு, வர்க்கச் சுரண்டல், உலகமயச் சூறை, சூழலியல் பேரழிவு, பெண் ஒடுக்குமுறை முதலிய அனைத்துக்கும் நிலைக்களமாக, ஆரியப் புனைவாக இந்தியத் தேசியமே உள்ளது. இந்தப் புனைவு தேசியத்தின் கொடும் கையாக இந்திய ஏகாதிபத்திய அரசு செயல்புரிகிறது. பல்வேறு அடக்குமுறைச் சட்டங்களின் துணைகொண்டுதான் இந்த ஆதிக்க வல்லரசு தொடர முடிகிறது.

எனவே தமிழ்நாட்டு மக்கள் தங்களை அழுத்துகிற எந்தவகை ஒடுக்குமுறையிலிருந்து விடுபட வேண்டுமானாலும், அதற்கு இந்திய தேசியத்திலிருந்து முரண்பட்டு மோத வேண்டியது கட்டாயம் ஆகும்!

இந்திய ஆதிக்கப் புனைவு தேசியத்திலிருந்து விடுபடுவதற்குரிய ஒரே வழி தமிழ்த்தேசியப் புரட்சிதான்; இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு படைப்பதுதான். அதனால்தான் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துவகை விடுதலைச் சிந்தனைகளும், முற்போக்கு நீரோட்டங்களும் தமிழ்த்தேசியம் என்ற விடுதலை நீரோட்டத்தில் இணைய வேண்டியது கட்டாயமாகும்!

ஏனெனில், அனைத்துவகை ஒடுக்குமுறையிலிருந்தும் விடுதலை பெறுவதற்கு முன்தேவையாக இருப்பது இறையாண்மையுள்ள தமிழ்த்தேசக்குடியரசு நிறுவிக்கொள்வது ஆகும். அவ்வாறு விடுதலைப் பெற்ற தமிழ்த்தேசக் குடியரசு நிறுவிக் கொள்ளாமல், இந்தியக் கட்டமைப்புக்குள் இருந்துக் கொண்டு செய்யப்படும் எந்த முற்போக்கு முயற்சியும் அரைகுறையாகவே முடிந்து போகும்.

ஏனெனில், ஒரு தேசிய இனமே ஒட்டுமொத்தமாக அடிமைப்பட்டிருக்கிறது. அந்த அடிமைத் தளையை அறுக்காமல் வர்க்க விடுதலை, சாதி விடுதலை, பாலின விடுதலை என்ற உட்கூறு விடுதலைகள் தனித்து நிறைவேறா. தனக்கான தேசத்தைப் படைத்துக் கொள்ளாத ஒரு தேசிய இனம், வர்க்க விடுதலையோ பிற விடுதலையோ பெற முடியாது!".


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக