சனி, 25 ஏப்ரல், 2020

உசாவல்

தமிழறிவோம்:

சொல்லாய்வு அறிஞர் ப. அருளியாரின் வேரும் விரிவும் 2 என்ற நூலிலிருந்து எடுத்தவை:

                                                    உசாவல்

உய் = வளைவு கருத்துவேர்
உய்உய்ல்உல்( கிளை வேர்)
உல்+ஐ=உலை

உலைதல்=அலைதல், திரிதல்

"உலைந்த ஒக்கர் பாடுநர் செலினே"
(அகநானூறு349:5)
"உலை காற்கு உலைவன போல"
(கலித்தொகை 83:12)

உலைஒலைஅலை= அசை
உய்+அல்= உயல்
உயலுதல்=அலைதல்,அசைதல்

"உயலுங் கோதை ஊரல் அம் தித்தி"
(பதிற்றுப்பத்து 52:17)

உயல்~உழல்
உழலுதல்=1. அலைதல்

காண்க:
"பேதுற்று அலந்தனென் உழல்வென் கொல்" (அகம் 45:14)
"ஆட்பார்த்து உழலும் அருளில் கூற்று" (நாலடியார் 20)

                2. சுழலுதல் (கம்ப 3,3,38)
                3. சற்றித்திரிதல் (நளவெ 22)
உழல்+து=உழற்று=சுழற்று(திருமந்726)
உழற்றுதல்=அலையச்செய்தல் (கம்ப 2,10,114)

உழற்று=சுழற்சி (திருப்புகழ் 1052)

உய்+அவு=உயவு

உயவுதல்=1. ஒன்றைசூழ்ந்து
                                              ஆராய்தல்
      2. ஒன்றைப் பற்றி சூழத்தெரிந்து 
                  கொள்ள விளக்கம் கேட்டல்
"கையறு நெஞ்சிற்கு உயவுத் துணையாக" (ஐங்குறுநூறு 477)
"வயவுறு நெஞ்சத்து உயவுத் துணையாக" (அகநானூறு 338:11)

உயவு~உயாவு
(ஒ.நோ: உரசுஉராசு, உலவுஉலாவு)

உயாவுதல்=1. அறிவதற்கென விளக்கம் கேட்டல்
""அன்னவை கண்டு உயாவுதலும் "
                                         (கம்ப 6,23,28)
                  2. ஆராய்தல்
உயவு~உயா
(ஒ.நோ: நிலவுநிலா, இரவுஇரா,பலவுபலா,உலவுஉலா)
உயா~உசா
(ஒ.நோ: உயர்ந்தஉசந்த, தேயம்தேசம்)
உசா=ஒன்றைப்பற்றி சூழந்து ஆராயும்
                                               ஆராய்ச்சி
"வாயில் உசாவே தம்முள் உரிய"  (தொல்:பொருள் 500)
"சூழ்ச்சி உசாவே" (பிங்கலம் 1819)

{வேடிக்கையான ஒரு செய்தி: சூழ்ந்து அமர்ந்து நன்கு சிந்திப்பதாகிய ஆராய்ச்சி, சூழ்ச்சி எனப்பட்டது.
"போற்றார்ப் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும்" (புறநானூறு 2:7)
சூழ்ந்து கலந்து ஆராய்வதற்கு என அமைந்த அமைச்சர், சூழவல்லோர்.
(திருவிளை.புரா: பரி.நரி:41)

சூழ்ச்சி~சூட்சி
"சூட்சியின் கிழவரை நோக்கிச் சொல்லினான்"(கம்ப. உயுத்த.மந்தி11)}

உசா+அடி=உசாவடி =ஆராயும் இடம்
(அடி=இடம். {அரசடி,ஆலடி})

"சாதிவரி-இனவரி-வெட்டிவரி மற்றும் உசாவடியிற் கட்டும் வரிகளும்"
 (தென்னிந்திய கல்வெட்டு 17,532)
உசா+துணை=உசாத்துணை = ஒன்றைப்பற்றி கலந்து ஆராய்வதற்கேற்ற நெருங்கிய
                 துணைவன்.
"ஞானத்தின் மிக்க உசாத்துணை"
   (அறநெறிச்சாரம் 106)
"உசாத்துணை யில்லாத நடுவியாமத்தும்" (கலித் 139.14 நச்)

உசாவுதல்=1. ஒன்றைப்பற்றி அறியக்கேட்டல்
"ஒரு சிறை நெஞ்சோடு உசாவுங்காலை" (தொல்.பொருள் 201)
"சிலவே நம்மோடு உசாவும்
                  அன்றில்" (கலித் 137.4)
      2. கலந்து உரையாடுதல்
"உற்ற வருத்தம் உசா அத்தன் கேளிரை காணக் கெடும்" (நாலடி 201)
"யானும் உசாவுதற்கு ஒரு துணையுமில்லாத் தமியோனாய் இரா நின்றேன்" (சீவக 310. நச்சர்)

உசாவு= ஆய்வு
உசாவல்= ஆராய்ச்சி

[பாவாணர் விசாரணை என்னும் சமற்கிருத சொல்லுக்கு உசாவல் என்ற தமிழ்ச்சொல்லையே சுட்டினார். விசாரணை என்ற சமற்கிருத சொல்லுக்கு ஆராய்ச்சி என்றே பொருள்]

(இலங்கையில் உள்ள நயன்மன்றத்தை (court) 'உசாவிய' என்றே வழங்குகின்றனர்)

சிலர் 'உசாவல்' என்ற சொல்லுக்கு சிந்தித்தல் என்ற பொருள் இருப்பதைப்  பார்த்து, இச்சொல்லிருந்துதான் 'சவால்'  என்ற பாரசீகச்சொல் உருவானதாக  கருதுகின்றனர். அது தவறு.

பாரசீக மொழியில் சுஆல் (sual) என்ற சொல் 1.வேண்டிக்கேட்டல், 2.இரந்து வேண்டுதல், 3.வேண்டுகோளிடுதல், 4.தேவைக்கென கேட்டல், 5.பணிந்து தாழ்ந்து கேட்டல், 6.கேள்வி ஆகிய பொருள்களில் விரிவெய்திய பழஞ்சொல் ஆகும். கேள்விகேட்கும் ஒருவருக்கு suwali என்றே பெயர்.

இச்சொல்லே உருது மொழியில்(soial) சோஅல் என்று திரிந்தது. பேச்சு வழக்கிலேயே சோஅல் என்பது சவால் என்று திரிந்தது. இதன் பொருள் 1.எழுவினா (issue) 2. எழுஞ்சிக்கல் அல்லது சிக்கலெழுச்சி (problem) 3.கேள்வி என்பதாகும்.

சுருங்கக்கூறின்,
சுஆல்சோஅல்சவால் . இதுதான் சவாலின் வரலாறு. இதற்கும் 'உசாவல்' என்ற தமிழ்ச்சொல்லிற்கும் தொடர்பில்லை என்பதை உணர்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக