ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

புதல்வன்

தமிழ் சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின் ஆராய்ச்சி நிறுவனத்தில் ப.அருளி (அவர்கள்) ஆற்றிய மொழியியல் உரைகள் என்னும் நூலிலிருந்து எடுத்தது


                                                                   புதல்வன்

புல்>புல்+து>புற்று>புத்து>புது>புதல்>புதல்வு>புதல்வு+அன்>புதல்வன்


சொற்பொருள்கள்:

     புதல்வன் = மகன், மாணாக்கன்

"புல்" என்னும் மூலவேர், "உள்ளிருந்து வெளிப்பட்டுத் தோன்றுகை" என்னும் கருத்துச் செறிவை அடக்கிய அரிய ஒரு கருவொலியாகும்.

புல்>புல
புல்>புல்+அர்>புலர் = வெளிப்படு, மேலெழு, தோன்று, வளர்ந்தெழு

புலர்+தல்>புலர்தல்= தோன்றுதல், வெளிப்படல், விடிதல், கதிரவன் எழுகை

புல்>புல்+அம்>புலம்
புலம்+படு>புலப்படு= வெளிப்படு, தோன்று, கண்முன் தோன்று, மனத்துள் தோன்று

புல்+அப்பு>புலப்பு+அம்>புலப்பம்= புலப்பாடு  (யாழ். அக)

புலப்படு>புலப்பாடு= தெரிகை

"புலபுல" = (விரைந்து தொடர்ந்து வெளிப்படுதற் குறிப்பு)
புல்>புல்+அர்>புலர்+இ>புலரி= கதிரவன் எழும் விடியற்காலம்

"புலரிவிடியல் புள்ளோர்த்துக் கழிமின்" (மலைபடு:448)

(நச்.உரை: ஞாயிற்றின் கதிர் விரிந்த விடியற் பொழுதிலே போவீர்)

அலர்தலும் புலர்தலும் ஒரு பொருண்மையனவே!
"புலரி விடியல்" (புறம்:385:2)
"புலர்ந்து விரிவிடியல் எய்த விரும்பி"  (மதுரை.664)

(புல்>)புலர் என்பது உயர்தல் கருத்தின் வழி, முதிர்தல் முற்றுதல் கருத்துக்களையும் தழுவிப் பலவாறு வளர்ந்துள்ளது.

"புலர்பதம் கொண்டன ஏனற் குரலே"   (நற்: 259:10)
(புலர்பதம் = முற்றிய பதம் கொண்டன,  - தினைக்கதிர்கள்.......)

புல்+து>புற்று

ஒ.நோ: முல்+து>முற்று
நெல்+து> நெற்று
கல்+தல்>கற்றல்
கல்+தாழை>கற்றாழை

புல்+து>புற்று. (மேல் எழுச்சி)

புற்று என்பதற்கும் அளை, வளை போன்றவற்றிற்கும் பெருத்த வேறுபாடு உண்டு.
அளையும், வளையும் துளைக்கப்பட்ட மண்குழிகள். பொந்துக்கள். புற்று என்பது வளையுள்ளதேனும் அதன் மேல் தோன்றி எழுந்து நிற்பதாகிய தோற்றமே, அச்சொல் தோற்றத்திற்கு முற்படைக் கருத்தாகும். புற்றின்கண் உள்ள வளை, " புற்றளை" என்னும் அடையொட்டுப் பெயரால் சுட்டப்பெறுவதே, அதற்குரிய சான்றாகும்.

"நாகம் கிடந்த .... புற்றளை"    (மணிமேக: 20:99)

புற்றிலுள்ள கரையான் திரள், "புற்றாஞ்சோறு" என்னப்பெற்றது. (சோறு போன்று இருப்பதால், சோறென்னும் ஈற்றடை பெற்றது).

புற்றாஞ் சோறாகிய கரையான் திரள், அவற்றின் மென்மையும் தசைப்பும் நோக்கிக் "குறும்பி" என்னப்பெற்றது.

"பாம்புறை புற்றின் குரும்பி"   (பெரும்பாண்: 277)

புற்று+அம்>புற்றம் = பெரிய புற்று
"நெடும் செம் புற்றம் ஈயல் பகர"    (ஐங்குறு:497)

புற்றைக் குறித்த "நெடும்" என்னும் சிறப்படைமொழி, அதன் மேலெழுச்சித் தோற்றத்தைப் புலப்படுத்தவதாகும்.

புற்று என்பதற்கு "தலை" என்றதாக பொருளுள்ளதாக அகராதி நிகண்டு குறிக்கும்.

புற்று>புத்து

தமிழ் ஒலியியலில், திரிபு பாங்கு நிலையில், நெற்றி, நெத்தியாகும். நாற்றம் நாத்தமாகும்.

முல்= எழுகை, வளர்கை, மேன்மை (ஒரு கருத்து மூலம்)

முல்>முன்>+மை>முன்மை = மேன்மை
முன்நாள்= பண்டைநாள், மேல்நாள்

முல்>முள்>முளை = தோன்று, எழு, முளைத்த திணை வகை (வித்தினின்று வெளிப்படுவது)

முல்>முள்>முளி = முற்றுதல், காய்தல், உலர்தல்.
"முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்" (குறுந்:167:1)
முளிதயிர் = முற்றிய தயிர்
முளிபுல் = காய்ந்த புல்
முல்+து>முற்று= முதிர்
முற்றுக்குலை  (நற்:174:1)
(முற்றின குலை)
"முல்லையொடு தகை முற்றின"  (குறந்:188:2)

முற்றின= முதிர்ந்தன

முற்று>முத்து = முற்றிய விதை, சிப்பியில் முதிர்ந்து முத்தாகிய மணி

முத்து என்பது முதிர்வடையின் வழி பெற்றபெயர் என்பது, மதுரைக்காஞ்சியில் வரும்,
"சீருடை விழுச்சிறப்பின் விளைந்து
முதிர்ந்த விழுமுத்தின் இலங்குவளை" (134:136)

புறநானூற்றில் வரும் "முதிர்வுஆர் இப்பி முத்தம்"  (53:1) போன்றவற்றாலும் வேறுபிற தெளிந்த சான்றுகளாலும் வெள்ளிடை மலையென விளக்கமாகவுள்ளது.

"காழ்" என்ற சொல்லால், அது குறிக்கப்பெறுகின்ற பொருள் தெளிவில், -முத்து என்பது முற்றியதன், முதிர்ந்ததன்வழி, பெற்ற பெயரே என்பதை திறக்க உணரலாகும்.

"காழ்விரி வகையாரம் மீவரும் இளமுலை"     (பாலைக்கலி: 3:9)

"பசுங்காழ்க் கோவை"   (அகம்:385:12)

(காழ்த்ததாகலின் முத்து, "காழ்" என்னப் பெற்றது)

முற்றிய நெற்று மணிகளும் முத்து என்றே அழைக்கப்பெற்றன. ஆமணக்கு விதை, "ஆமணக்கு முத்து" என வழங்குதல் கருதுதற்குரியது.

"காழ்" என்பது, - நெற்றுமணியையும், விதையையும் குறிக்கும்.

ஒ.நோ: "காமத்துக் காழில் கனி"     (குறள்:1191:2)

முற்று>முத்து>முது

ஒ.நோ: வித்து>விது........விது>+ஐ>விதை
பொத்து>பொது

முது= முற்றிய
(ஒ.நோ:" முட்புற முதுகனி" = முள்புறத்தையுடைய முற்றிய பலாக்கனி)

முது+இர்>முதிர் = முற்று
முற்று>முத்து>முது என்றாற்போல,
புற்று>புத்து>புது என்றாகியது

புது= தோன்று, முளை, மேலெழு, வளர்
(புது>புதிய) "புதிய" என்னும் சொல், மிகப் பண்டைக் காலத்தே, "தோன்றிய" என்னும் பொருளையே தந்திருத்தல் வேண்டும். தோன்றிய ஒன்று புதுமையாய் இருக்குமாதலின்,
தோன்றுதற் கருத்தில் புதுமைக் கருத்து விளர்ந்துள்ளது.

புதுக் கலம் (ஐங். 301:1) (அகம் 394:9)
புதுக் கவின் (அகம்:299:12) புதுப்பூ  (புறம்:20:18) புதுநெல் (புறம்:61:5)  புதுப்பெயல் (நெடுநல்:2)
புதுப்புள் (புறம்:20:18)  புதுப்புனல் (அகம்:256:8) போன்ற பேராளமான ஆட்சிகள், கழக இலக்கியங்களில் சிறக்க நிறைந்து கிடக்கின்றன.

புது>புது+ஐ>புதுமை= புதியநிலை, புதிய தன்மை

"முதுமை இளமை சிறத்தல் இழித்தல்
புதுமை பழமை ஆக்கம் என்றா...."
(தொல்.சொல்:2:17:5-6)

தமிழிய மொழிகளில், புது, புதிய, புதுமை போலும் சொற்களின் திரிபுகளும் வழக்காறுகளும்:

Malayalam : Putu = new, fresh
                       Putthan = a fresh
Kota: Pud = new
Toda : Pud = new
Kodaga: Pudume: wonder
                 Puttiri = rice harvest festival
Tulu : pudu- Bari - New paddu

புது>புது+அவு>புதவு =அருகு, அருகம்புல்

"புல்லாரைக் காஞ்சிப் புனல்பொரு புதவின்"   (மலைபடு:449)
(நச்.உரை: புனல்பொரு புதவின்= நீர்வந்து பொருகின்ற அருகுகளையும்....)

புதவு+அம்>புதவம் = அறுகம்புல்
"பொய்கைக் கொழுங்கால் புதவமொடு"  (பட்டினப்:243)

"புதவுஒரு விகற்பப் புல்லாகும்மே" 
(பிங்கலம்: 3001)
புது>புது+அல்>புதல் =அரும்பு, (தோன்றிய ) முகை

"குருகும் இருவிசும்பு இவரும்; புதலும்
வரிவண்டு ஊத வாய்நெகிழ்த் தனவே"      (குறுந்:260:1-2)

உரை: "நாரைகளும் பெரிய வானத்தின்கண்ணே உயர்ந்தேறிப் பறவா நின்றன! அரும்புகளும் வரிகளையுடைய வண்டுகள் ஊதாநிற்ப மலரா நின்றன...."

நிலத்தின்கண் பசுமையாகத் தோன்றி வளர்ந்த, புல் பூடுகளின் செறிவுத்தொகுதி "புதல்" என்ற சொல்லால் குறிக்கப்பெற்றது. புல் பூடுகளின் தொகுத்த தோற்றத்தைப் "பைம்புதல்" என்றவாறு அடையோடு வழங்கி நிற்கின்ற இலக்கியக் காட்சிகள் தமிழில் மிகுதி!

1) சேண்நாறு பிடவமொடு பைம்புதல் எருக்கி.   (முல்லை:25)
2) பகுவாய் ஞமலியொடு, பைம்புதல் எருக்கி (பெரும்பாண்: 112)
3) கார்தலை மணந்த பைம்புதல்  (அகம்:133:5)
4) பைம்புதல் நளிசினைக் குருகிருந் தன்ன.    (அகம்:178:8)

இலக்கியத்தில் "பைம்புதல்" எனவரும் இடங்களுக்குப், "பசிய சிறிய தூறு"  என்றவாறு நச்சினார்க்கினியர் பொருள் குறிப்பார். செறிவுக் கருத்துடைய "துறு" என்னும் முதனிலையின் திரிபே, "தூறு" என்பதாகும்.

"புதல்" என்பது செறிந்த தோன்றி நிற்கும் செடி-கொடிகளின் புல்பூடுகளின் தொகுதிக்குரிய பொதுப் பெயராகப் பண்டையிலேயே வளர்ந்து வழங்கப்பெற்றுள்ளமையை,

"பெருங்கை எண்கு இனம் குரும்பி தேரும்
புற்றுடை சுவர புதல் இவர் பொதியில்"    (307:10-11)

என்றவாறு வரும் அகநானூற்று வரிகளினூடே காணலாகும்.

"பாசிலை பொதுளிய புதல்தொறும்"
(அகம்: 217:6)

"விசும்பணி மீனிற் பசும்புதல் அணிய"
(அகம்:235:9-10)

போலும் இலக்கியவரிகளும் அச்செடி கொடித் தொகுதியின் பசிய காட்சிகளையே காட்டி நிற்கின்றன.

புகையெனப் புதல் சூழ்ந்து (31:19),  வண்டார்க்கும் புதலொடும் (32:9), புதுநீர புதல் ஒற்ற (72:5) - போன்றன அழகிய கலித்தொகை வரிகளாகும்.

"புதல் மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த்தற்று" (274) எனவரும் குறள் வரியுள் பயிலப் பெறும் "புதல்" என்னும் சொல்லுக்குச், "சிறுசெடி" என்று பொருள் சுட்டுவார், உரையாசிரியர் காளிங்கர்.

நிலத்தினின்று தோன்றிய செடி, கொடி, புல், பூண்டு முதலியவற்றைத் தனிப்படவும் தொகப்படவும் சுட்டுவதற்கெனவும், தோன்றிய முகையைக் (அரும்பை) குறிப்பிடுவதற்கும், செடிகொடிகளின் தூற்றைச் சுட்டவும் பயிலப்பெற்றவாறு இப் "புதல்" என்னும் சொல் கழக இலக்கியங்களில் அறுபது இடங்களுக்கும் மேலாக புதலிட்டு நிற்கின்றது!

புதல் என்பது இப்போதும் "புதர்" என்றவாறு திரிபுடன் ஒலிக்கப்பெற்றுப் பயில்வழக்கில் பரவலாக உள்ளது.

லகர ரகரத் திரிபு:
குடல்>குடர்
பந்தல்>பந்தர்
சாம்பல்>சாம்பர்


வடபால் மொழிகள் சிலவற்றில் இப் "புதல்" என்னும் சொல்லின் திரிபுகளாவன:

புதல்>(sanskrit): Buta = bush, plant
Sindhi: Buti = bush, flower
Lahnda: Buta= bush
Punjabi: Buta= bush
Old Awadhi: Buti = root of a plant
Assamese: Buta= bush
                      Buta= flower
Marathi: But, Buta, Buti= Busy
Hindi: Bota: log

"புதர்" என்ற சொல்லின் பதிவுகளான,

Europian Gypsy: Buro= throv busy
Sindhi: Buro = bush
Parachi (Iranian group): Buta: plant

  ஆடையின் மீது அழகுக்கெனப் பொருத்திக் குத்திக்கொண்ட பூவைக் குறிப்பதற்கு, அசாமியரும், வங்காளியரும், ஒரியரும் "Buta " என்ற சொல்லை வழங்குகின்றனர்.

ஆங்கில மொழியில் பல்வேறு மொழி வாய்க்கால்களின் வழிப் பாய்ந்து பயிலப்பெறும் இப் "புதல்" (புது) என்னும் சொல்லின் மாற்றுருவங்களைக் கீழ்கண்டவாறு அறியலாம்.

>Bud = rudiment od shoot, foliage or flower not full open
  (M.E. of unknown origin. Pg:128 C.O.D)
(மூலம் தெரியவில்லை என்று  குறித்திருப்பதை நோக்குக)

>Butt =push with head
  (M.E. f. AF. Buter OF. Botter. f. GMC.  Button = sprout)
>Button = knob or bouten f. Room. Bottone {Bottare f. Gmc. button = முளை}

"Bud" என்னும் ஆங்கிலச் சொல்லாட்சிக்கு, மொழியியல் அறிஞர், குரவர்- Walter Skeat" வரைந்துள்ள குறிப்பு மிகவும் கருதற்கு உரியது.

Bud = to sprout
 The word does not appear earlier in M.E. But, may have been an English word. The corresponding A.S. form is budda or budde.
Dutch: Bot = a bud, eye, shoot
            Botten: to bud, sprout out
Old French: Boton = a button, a bud
Swedish Dialect: Bodda opp= to become leafy (as trees or bushes)

"புதல்" என்னும் சொல்லுக்குரிய பொருள்கள் புல், பூண்டு ,களைகள் என்பனவே. புல், புதர் அடர்ந்த நிலமும் , "Botane" என்ற சொல்லாலேயே வழங்கப்பெறுகின்றது.

Greek: Botane : Herb, Weeds, pasture
      Botanephoros: Herb bearing (புல் 
            பூண்டு காப்புச் செய்தல்)
       புதல்+பொறை> Botanephoros
        Botanikos: -of jeeva

பிரஞ்சு மொழியில்:
>Botanique:- herbal of or belonging to herbs or skill in herbs

ஆங்கிலத்தில்:
>Botany:- The science that treats of plants
>Botanical:- belonging to herbs

புதல்>(GK) phuton:- plant.  phuto(n)> phyte
(English) Epiphyte: -Plant growing on usu. not fed by another

புது>+அல்>புதல்= அரும்பு, முளை, வெளிப்படு, வெளித்தோன்று, பிற
புதல்+வு> புதல்வு = தோற்றம், பிறப்பு, வெளிவருகை
புதல்வு+அன்>புதல்வன்= தோன்றல், தோன்றிய மகன், ஆண்பிள்ளை, பிறந்தோன்

தமிழ் மொழிக்குக் கிடைத்துள்ள முதல் இலக்கண இலக்கியமாகிய தொல்காப்பியத்துள்ளேயே பரவலாகப் பயிலப் பெற்றுள்ள சொல். பிறத்தல் கருத்தில், வெளித்தோன்றுதல் கருத்தில் தோன்றிய அரிய மரபுச்சொல்.

1) "இன் நகைப் புதல்வனைத் தழீஇ இழை அணிந்து"     (தொல்.கற்:9-9)

2) "மாய்பெருஞ் சிறப்பின் புதல்வற் பயந்த
தாய்தப வரூஉம் தலைப்பெயல் நிலையும்"     (தொல்.பொருள்:72:32)

3) "புதல்வற் பயந்த புனிறுநீர் பொழுதின்"   (தொல்.கற்:4:5:27)

4) "தாயர் கண்ணிய நல்அணிப் புதல்வனை"  (தொல்.கற்:4:6)

5) "இன்இழை புதல்வனை வாயில்கொண்டு புகினும்"   (தொல்.கற்: 4:31:3)


(மகு>மகம். மகு>மகன்)  "மகன்" என்னும் சொல் பெருமைக் கருத்து அடிப்படையிலும் , (பிள்>பிள்ளை)
"பிள்ளை" என்னும் சொல் தாயினின்று பிரிந்து வந்தது என்ற கருத்து அடிப்படையிலும், (மைந்து>மைந்தன்) மைந்தன் என்னும் சொல் வலிமைக் கருத்து அடிப்படையிலும், (புது>புதல்>புதல்வு>புதல்வன்) "புதல்வன்" என்னும் சொல் பிறப்பு (தோற்றம்/வெளிப்படு) என்றவாறான கருத்து அடிப்படையிலும் முறையே தோனீறியவையாகும்.

மக்கள் என்பது பொதுப் படையாகப்- பிறந்த பிள்ளைகளைத் தொகுதியாகச் சுட்டும் சொல். மகார் என்பதும் அதே பொருண்மையுடையதே.

"புது" என்னும் சொல்லுக்குத் , - தோன்றுதல், பிறத்தல் என்பனவே முதற்கண் தோன்றிச் செழிப்புற்று விளங்கிய பொருள்கள்.

வண்டுபடு  புதுமலர். (புறம்:105:3), நெய்தலம் புதுமலர் (அகம்:100:17), கால்உறக் கழன்ற கன்கமழ் புதுமலர் (அகம்: 153:17), பைங்கொடி முல்லை மென்பதப் புதுவீ (அகம்:74:5),   படுசினைப் புதுப்பூ (அகம்:288:3), புதுமுகை (மலை:146),  என்றவாறு முகை, மலர், பூ, வீ ஆகிய நிலைத்திணைச் சினைப் பெயர்ச் சொற்களுக்கு முன்னாக முந்துருத்தி நிற்கும் "புது" என்னும் சொல்லுக்குத், - தோன்றுதல், வெளிப்படல் கருத்தே முற்பாட்டு நிலை உடையதாகும்.

பதுப்பிறை (புறம்:378:6) என்பதுவும், பிறந்து தோன்றி வளர்ந்து பிறங்கும் பிறையைக் குறித்ததேயாகும்.

பிற தமிழிய மொழிகளில்,

Tulu: put= to grow
      Puttuni= to be born
 Kodagu: putt= to be born
 Telugu: puttu= to be born
               Puttu= birth
   Kannada: puttisu = to cause to be
                 born, to be produced
   Naiki: putt= to be born

பிறப்புக் (தோன்றுதல்) கருத்து அடிப்படையை உடைய "புது"  என்னும் தூய தமிழ்ச்சொல்லினின்று தோன்றிய "புதல்வன்" , சில வடபால் மொழிகளில் வளர்ப்பு மகனாக ஊர்ந்து வரும் நிலைக்குச் சான்றுகள்:

Prakrit:. Putta = son
Pali: putta= son
Punjabi: putt= son
Bhojpuri: put= son
Hindi: put:son
Sanskrit: putra: son
Persian: putur=son
Arabic: Putreme>Putriem= my son
Gujarat: Putra=son
Latin: Putus= boy
English: Putto= figure of child

புதல்வன் = மாணாக்கன்
"எண்ணில் பத்தி திகழ் புதல்வர்க்கு"
(திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம்:35:1)

புதல்வன்= குடிமகன்
"நின் புதல்வரைத் தழீஇ" 
(பெருங்கதை. இலாவாண:1:33)



மின்னெழுத்தில் வடித்தது,
பெஞ்சமின் பிராங்கிளின். பி
06 மேழம் 2051
[०௬/०௪/௨०௫௧]
(19-04-2020)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக