சனி, 25 ஏப்ரல், 2020

தமிழ்த்தாய் வாழ்த்தின் அரசியல்

தமிழ்த்தாய் வாழ்த்தின் அரசியல் ; உங்களுக்குத் தெரியுமா?

(இணையத்தில் பிடித்தது . எழுதியவர் யார் என்று தெரியவில்லை )

அருள்திரு இராபர்ட் கார்டுவெல்

தமிழ் என்னும் மொழி சமஸ்கிருதம் என்னும் மொழியில் இருந்து தனித்து இயங்க இயலாது. அது சமஸ்கிருத ஆதிக்கத்திற்கு உட்பட்ட மொழியே என்ற சிந்தனை தமிழ்ப்பண்டிதர்களிடையே இலக்கணவாதிகளிடையே வலிமை பெற்றிருந்த பதினேழாம் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிக்காலம்.

ஆட்சிப்பணிக்காகவும், மதம்பரப்புவதற்காகவும் வந்த ஐரோப்பியர்களுக்குத் தங்கள் இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சார்ந்ததாகக் கருதப்பட்ட சமஸ்கிருதத்தைக் கொண்டாடவும் அதில் ஆய்வுகள் மேற்கொள்ளவுமான காரணங்கள் அதிகம் இருந்தன. சமஸ்கிருதத்திலிருந்து கிளைத்த மொழிகளே பிற இந்திய மொழிகள் என்கிற  பார்வை, சமஸ்கிருதப் பண்டிதர்கள் வழியாகவும் இந்திய மொழிகளை ஆராய்ந்த அயல்நாட்டினர் வழியாகவும் ஐரோப்பாவெங்கும் பரவி இருந்தது.

தென்னிந்தியாவில், ஆட்சிப் பணிகளின் நிமித்தம் இங்கிலாந்தில்  இருந்து வந்த பிரான்சிஸ் வைட் எல்லீஸ், சமஸ்கிருதம் சாராதத் தனக்கெனத் தனி இயல்புகள் கொண்ட மொழியாகத் தமிழ் விளங்குவதை முதலில் அவதானித்தார். அதைப் பற்றிக் குறிப்பிட்டார். தனித்தொரு ஆய்வாக அதை எழுதும் முன் இறந்து போனார்.

பின் வந்த இராபர்ட் கார்டுவெல், தனக்கெனத் தனிப் பாரம்பரியம் உடைய, சமஸ்கிருதத்தில் இருந்து வேறுபட்ட,  தொன்மையான மொழிக்குடும்பம் இந்தியாவில் இருப்பதை இனங்கண்டார். அது வடபகுதியில் உள்ள போலன் கணவாயில் இருந்து வங்காளம் வழியாக தென்னிந்தியா வரை  தொடர்ச்சியான நிலப்பரப்பில் ஆங்காங்கே சமஸ்கிருதத்தின் சாயல் இல்லாமல் வழங்கப்பட்டு வந்ததைக் கண்டறிந்தார். அம்மொழிகளைத் தொகுத்து ஆய்ந்து, அம்மொழிக்குடும்பத்தில் தமிழின் பங்கு முதன்மையானது என்பதைக் கண்டறிந்து உலகிற்கு அறிவித்தார்.

இப்படியாக

அதுவரை, தமிழ் மொழி இலக்கண ஆளுமைகளான,

தமிழ்ச்சொல்லுக்கெல்லாம் வடமொழியே தாய் என்று முடிவு கட்டிய வீரசோழிய உரையாசிரியன் பெருந்தேவனும்,

தமிழ் வடசொல்லிற்கு உட்படாது, ஆனால் வடசொல் எல்லா நாடுகளுக்கும் பொதுவானது எனத் தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு உரை எழுதிய சேனாவரையனும்,

சமஸ்கிருத நூல்களைப் படித்தாலன்றித் தமிழைப் புரிந்து கொள்ள முடியாது என்று சொன்ன சிவஞான முனிவரும்,

எல்லாவற்றிற்கும் மேலாய்,

ஐந்தெழுத்தால் ஒருபாடையும் உண்டென்று

அறையவும் நாணுவர் அறிவுடையோரே!”

என, சமஸ்கிருதத்தில் இல்லாத ஐந்து எழுத்துகளை மட்டும் கொண்டுள்ள தமிழை ஒரு மொழி என்று சொல்வதற்கு அறிவுடையோர் வெட்கப் படவேண்டும் என்று சொல்லித் தமிழுக்கு வடமொழிச்சாயம் பூச முனைந்த இலக்கணக் கொத்தின் ஆசிரியர் சுவாமிநாத தேசிகரும் கண்டிருந்த கனவுக் கோட்டைகளைக் கார்டுவெல்லின் ஆராய்ச்சி தகர்த்தெறிந்தது.

ஒரு மொழியை அழிக்க என்ன செய்ய வேண்டும் ?

அது இழிவானவர் உடையது என்று சொல்லி, உயர்வானவர்களின் மொழி என்று  இன்னொரு மொழியை முன் வைக்க வேண்டும்.

எல்லா இடத்திலிருந்தும் இந்தக் கருத்தேற்றத்தை வலியுறுத்தித் தன் மொழி குறித்தத் தாழ்வுணர்ச்சியை அம்மொழி பேசுவோர்  நெஞ்சில் இருந்து நீங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தமிழ் இழிசினர் மொழி எனத் திட்டமிட்டு உருவாக்கப்பட்டக் கற்பிதங்கள் கார்டுவெல்லின் ஆய்வினால் உடைந்து போனது ஒருபுறம் என்றால் அன்று சமஸ்கிருதம் செய்ததை இன்று ஆங்கிலம் செய்கிறது.

கார்டுவெல் கூறிய மற்றுமொரு கருத்து, தொல்திராவிடத்தின் பெரும்பாலான சொற்களைத் தன்னகத்தே கொண்டு சமஸ்கிருதச் சார்பற்று இயங்கக் கூடிய மொழியாகத் திராவிடக் குடும்பத்தில் இருக்கும் மொழி தமிழென்பது.

எனவே அதிலிருந்து கிளைத்த மொழிகளாகக் கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு, ஆகிய மொழிகள் கொள்ளப்படுகின்றன.

சமஸ்கிருதம் பாணினீய இலக்கணப் பள்ளியின் திட்டமிடலால் மக்கள் வழக்கில் இருந்து தன்னை முற்றிலும் துண்டித்துக் கொண்டது.

பாணினியின் நோக்கம், வேதங்களின் உச்சரிப்பின் தூய்மையைப் பேணுவதாய் இருந்தது.

மக்கள் வழக்கில் இருக்கும் மொழி எதுவானாலும், அதன் ஓசையில் மாறுபாடுகள் காலந்தோறும் ஏற்பட்டே தீரும்.

ஓசை மாறுபடாமல் அப்படியே வைத்திருக்க வேண்டுமானால், அதை மக்களின் பேச்சு வழக்கில் இருந்து விலக்கி வைக்க வேண்டும்.

எனவே இலக்கிய வழக்காக மட்டுமே இருந்த சமஸ்கிருதம்,  உலக வழக்கிலிருந்து தன்னைத் தானே விடுவித்துக் கொண்டது.

மக்கள் வழக்கிற்கேற்பச் சில சில வேறுபாடுகளுடன் இருந்த தனித்தனி வட்டார வழக்கு மொழிகள், காலப்போக்கில் தனித்த அடையாளம் பெற்றுக் கன்னடமாய், தெலுங்காய், மலையாளமாய் உருவாகிக் கிளை மொழிகளாகப் பிரிந்த பின்னரும் தனது அடையாளத்தை இழக்காமல் தமிழ் இன்றும் வைத்திருக்கிறது. தமிழில் சில மாற்றங்கள், சிதைவுகள் இருக்கலாம். காலம் கடந்து வாழும் மொழி எல்லாவற்றிற்குமான இயல்பு அது.

ஆனால் அதன் உயிரோட்டம் இன்றும் இருக்கிறது.

தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பேராசிரியர் சுந்தரம்பிள்ளையின் மனோன்மணீயம் என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டு 1970 ஆண்டு, தமிழக அரசால் தமிழ்த்தாய் வாழ்த்தாக அங்கீகரிக்கப்பட்டது.பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள்.

அதன் முழுவடிவம்,

"நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்

தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்

எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்

கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்

உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்

ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்

சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே! ”

வண்ணமிட்டுக் காட்டப்பட்ட பகுதி இன்று நாம் வழங்கும் தமிழ்த்தாய் வாழ்த்தில் இன்று இல்லை. அது சுந்தரம் பிள்ளை எழுதிய பாடலில் இருக்கிறது.

அதன் பொருள்,

உலகும் உயிரும் அழிந்தாலும் எல்லையிலாப் பரம்பொருள் எப்போதும் தன்னிலையில் மாறாமல் இருப்பது  போல், கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு, எனும் மொழிகள் உன் வயிற்றில் ( உதரம் ) பிறந்து தனியாகிப் போனாலும், வடமொழிபோல் ( ஆரியம் ) உலக வழக்கில் இருந்து அழிந்து ஒழிந்து போய்ச் சிதைவுபடாமல் இருக்கின்ற உனது இளமையை வியந்து வாழ்த்துகிறேன்.

உங்களில் பலரும் இந்த நீக்கப்பட்ட வரிகளை அறிந்திருக்கக் கூடும்.

நான் முதன் முறையாக இதைப் படித்த போது திகைத்துப் போனேன்.

இது தவறான கருத்தா..? இவ்வரிகளை நீக்க வேண்டும் என்று பரிந்துரைத்தவர்கள் யார்..? என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை.

ஆனால் ஒன்று இப்படிச் சில வரிகளை நடுவில் நீக்கி இருந்தால் அதைத்  தொடர்புள்ளிகள் (...................) இட்டுக் காட்டி இருக்கலாமே..?

இங்குச் சில வரிகள் விடுபட்டிருக்கின்றன என்றாவது படிப்பவர்களுக்குத் தெரியுமே..?

ஏன் செய்யவில்லை?

இதைப் பதியும்  போது, பாகிஸ்தானில் இருக்கும்  சிந்து என்னும் பகுதி நம் நாட்டு தேசிய கீதத்தில் ஒரு சொல்லாக இடம் பெற்றிருந்ததை நீக்க வேண்டும் எனச் சில ஆண்டுகளுக்குமுன் உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல்  செய்யப்பட்டதும் அதை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்ததும் ஏனோ நினைவிற்கு வருகின்றன.

- படித்தது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக