ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

மொழிக்கடன்

                                                 மொழிக்கடன்


(தென்மொழி இதழ் சுவடி 52 ஓலை 1 இலிருந்து)

முனைவர். இரா.கு. ஆல்துரை (9444503414) அவர்களின் கட்டுரை.


ஒரு சொல்லை இன்ன மொழி என்று அறிதற்கு அதன் பகுதிப் பொருளையும் அதனின்று திரிந்த பல்வேறு சொற்களையும் பார்க்க வேண்டும். அவை எந்த மொழியிலுள்ளனவோ அந்த மொழிக்கே அது உரியதாம். வினைச் சொல்லாயின் புடைபெயர்ச்சி (conjugation) வேண்டும். பெயர்ச் சொல்லாயின் பெயரிலக்கணம் (declension) வேண்டும்.  கல் என்னும் வினை கற்றான், கற்றாள், கற்றார், கற்றது, கற்றன, கற்க, கற்ற, கற்பித்தான், கற்கப்பட்டது, கற்றிலன், கலை எனப் பல வடிவங்களிலும் புடைபெயர வேண்டும். வடமொழியிலோ அது கலா (கலை) எனத் தொழிலாகு பெயராய் மட்டும் நிற்கும். (பாவாணர் 1931:378).

     ஒரு சொல்லை ஒரு மொழிக்குரிய தென்று அறிதற்கு அதன் பகுதி (stem)  அல்லது மூலம் (root)  எம்மொழியிலுள்ளது என்று அறிதல் வேண்டும். ஒரு சொல்லின் பகுதி அல்லது மூலம் பல மொழியிலிருப்பின் எம்மொழியில், பகுதி இயற்கையானதென்றும், பொருள் சிறந்ததென்றும் அறிதல் வேண்டும். பல மொழியிலும், பகுதி வடிவிலும் பொருளிலும் ஒத்திருப்பின் , எம்மொழியில் அதன் திரிசொற்களுளவென்றும் அவையும் பல மொழிகளிலிருப்பின் எதில் அவை பல என்றும் காண்டல் வேண்டும். (பாவாணர் :1935:254)

சமற்கிருதம் தமிழிலிருந்து கடன் கொண்டது தேவை கருதியே. தன்னை வளர்ந்துக் கொள்ளவே. ஆனால் தமிழ் சமற்கிருதத்திலிருந்து கடன் பெற்றவை பெரும்பாலும் பெருமை கருதியே. தமிழில் வழங்கும் சமற்கிருதச் சொற்களில் பெரும்பான்மைச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் உண்டு.

ஒரு மொழி பெறும் கடன் சொல்லிலும் இரு வகையுண்டு. தன் மொழியில் இல்லாத பொருளுக்கும் கருத்துக்குமான சொற்களைப் பெறுதல் ஒரு வகை. மற்றொன்று ஏற்கெனவே தன் மொழியில் இருக்கும் ஒரு சொல்லுக்கு ஒரு பொருள் பல சொல்லாக அமையும் வகையில் கடன் பெறுவது இரண்டாம் வகை. பல இடங்களில் இந்த இரண்டாம் வகையினவாகச் சொற்கள் அமையப் பெற்றபின் சொந்த மொழிச் சொற்களை வழக்கிழக்க விடுவது பெருமளவில்  நடக்கிறது.

எ-டு: அகவை(வயது), அகநாழிகை(கர்ப்பக்கிருகம்), அணிகம்(வாகனம்), அறம்(தருமம்),ஆடவன்(புருஷன்), ஆடை(வஸ்திரம்),இசை(சங்கீதம்), இரப்போன்(பிச்சைக்காரன்), இயம் (வாத்தியம்), இயவன் (வாத்தியக்காரன்),இழப்பு(நஷ்டம்), இளவேனில்(வசந்தம்), உறாவரை அல்லது முற்றூட்டு (சர்வமானியம்), ஊட்டகர், ஊட்டுநர்(போஷகர்), ஊட்டுப்புரை(அன்னசத்திரம்), ஊதியம் (இலாபம்), ஐயம், இரப்பு (பிச்சை), ஐயம் அல்லது அயிர்ப்பு (சந்தேகம்), ஒப்புரவு (உபகாரம்), ஓமாலிகை (வாசனைச் சரக்கு), ஓரை (இராசி, லக்கினம்), கண்ணெச்சில் (கண் திருஷ்டி), கரிசு (பாவம்), கருவூலம் (பொக்கிஷச்சாலை), கழுவாய்(பிராயச்சித்தம்), கூலம் (தானியம்), கூற்றுவன் (யமன்), கேள்வி(விசாரணை), கோள்,விண்மீன் (கிரகம்), சலக்கரணை (சௌகரியம்), சார்ச்சி வழக்கு( உபசார வழக்கு), சால்வு (திருப்தி), சாறு (ரசம்)

(பாவாணர் 1992:78-81)

சமற்கிருதத்திலிருந்து தமிழில் கடன் கொள்ளப்பட்டதாகக் கருதப்பட்டு வந்த சொற்களை தற்பவம், தற்சமம் என்று இரு வகைப்படுத்தி விளக்குகின்றனர்.

தமிழ்ச் சிறப்பெழுத்தாலும் பொதுவும் சிறப்புமாகிய  இருவகை எழுத்தாலும் சமற்கிருதத்தில் சிதைந்து வரும் தமிழ்ச் சொற்கள் தற்பவம் எனப்படும்.
எ-டு: உண்ணம்உஷ்ண, கலுழம்கலிஷ, பவளம்ப்ரவள, படிப்ரதி, சடம் ஜட, குட்டம்குஷ்ட

தமிழுக்கும் சமற்கிருதத்திற்கும் பொதுவான எழுத்துக்களைக் கொண்டு அமையும் சொற்களைத் தற்சமம் என்று சொல்வர்.
எ-டு: மீனம்மீன, நீர்நீர, நீலம்~நீல.


மின்னெழுத்தில் வடித்தது,
பெஞ்சமின் பிராங்ளின். பி
04 கும்பம் 2051
(16-02-2020)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக