ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

கொள்ளைநோய்

                                                        கொள்ளைநோய்


தமிழறிஞர், பேரா.திரு. செ.இரா. செல்வகுமார் அவர்களின் முகநூல் பதிவு.

Dushy Gnanapragasam கேட்ட ஒரு கேள்விக்கு என் விடையாக  இன்னோர் இழையில் எழுதியது.

கொள்ளை என்னும் சொல் "அதிகமாக மிகுதியாக, பெருவாரியாக"த் திருடுவது  அல்லது அடித்துச்செல்வது போன்றவற்றைக் குறிக்கும்.
தமிழ்ச்சொல் "கொள்" என்பதே மிகுதி என்பதைக் குறிக்கும். கொள்ளெனல் என்பதற்குத் தமிழ்ப்பேரகராதி தரும்  பொருளைப் பாருங்கள்:
----------------------------------
"2. Expr. signifying abundance, plenty; மிகுதிக்குறிப்பு. கொள்ளென்று கிளர்ந்தெழுந்த பெருஞ் செல்வம் (திவ். திருவாய். 4, 9, 4).
----------------------------------------

இன்னொரு பயன்பாட்டையும் பாருங்கள்:
_______
கொள்ள koḷḷa , < id. adv. 1. More, further on; இன்னும். கொள்ளக்கொடு. (J.) 2. As much as required, in abundance; நிரம்ப. உணவு கொள்ளக் கிடைத்தது
--------------------

எனவே நிறைய, மிகுதியாக என்னும் பொருள் வலுத்து வரும் சொல். கொள்ளையடித்தான் என்றால் நிறைய மிகுதியாகத் திருடினான் களவாடினான் என்று பொருள்.

கொள்ளை போயிற்று என்றால் மிகுதியான பொருள் களவு போதல். விரைவாக மிகுதியாகப் போவதைக் கொள்ளை போதல் என்பார்கள். "ஏன் கொள்ளையா போகுது ஏன் இப்படிப்பறக்கறே" என்று சொல்வார்கள். அதாவது கொள்ளை போகும்பொழுது விரைவாக அதிகமாகப் பொருள் பறிபோவதால், விரைந்து இயங்கவேண்டும் என்பது குறிப்பு.

கொள்ளைநோய் என்பது பெருவாரியான மக்கள் இறக்கக் காரணமாக இருக்கும் ஒரு நோய். பொதுவாக இதனை epidemic என்பதற்கு ஈடாகப் பயன்படுத்துகின்றோம். உலக அளவில் இப்படியான கொள்ளைநோய் குறுகிய காலத்தில் பரவித் தாக்கினால் அதனை  உலகளாவிய கொள்ளை நோய் என்னும் நோக்கில் உலகக்கொள்ளைநோய், உலகத்தொற்றி என்றெல்லாம் சொல்லலாம்.

கொள்ளை என்பதற்குத் தமிழ்ப்பேரகராதி கீழ்க்காணுமாறு சொல்வதைப் பாருங்கள்:
---------------------
3. Crowd, throng; கூட்டம். கொள்ளையிற் பலர் கூறலும் (கந்தபு. விண்குடி. 14). 4. Plague, pestilence, epidemic; பெருவாரிநோய்.
--------------------------

கூட்டம் என்ற பொருள் உள்ளைதையும் பாருங்கள்.

கொள்ளைநோய் என்பதற்குச் சூறைநோய் என்றும் சொல்லலாம். சூறை என்றாலும் பெரிய அளவிலான, விரைந்து செயற்படும் ஒன்று என்னும் பொருள் உண்டு.
சூறைக் காற்று என்பது போல சூறைநோய் என்றும் சொல்லபடுவதுண்டு.  கொள்ளையடித்தலைச் சூறையாடுதல் என்றும் சொல்வார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக