ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

என்ன பயன் என எண்ணிப் பார்க்கிலேன்!

தமிழ்த்தேசத் தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஐயா 87ஆம் பிறந்தநாள்!   (10-3-20)

அவரின் அருந்தவ உள்ள உணர்வுகள் வென்றிட
உழைத்திடுவோம்!...
~~~~~~~~~


"எழுதி எழுதிச்
            செல்கின் றேன்நான்!         
   என்ன பயன்என
            எண்ணிப் பார்க்கிலேன்!
உழுது விதைத்தவை
            ஒருநாள் விளையுமோ?
   ஊமை விதைகளாய்ச்
            சாவியாய் ஒழியுமோ!

புழுதியுள் மறையுமோ?
           பூக்களாய் மலருமோ?
   அழுகியும் உலுத்தும்
           அமுங்கிப் போகுமோ?
பழுதென் றுரைத்துஅவை
           பழித்திடப் படுமோ?
   பயன்ப டாதுஎன
           விலக்கிடப் படுமோ?
தொழுது போற்றுமோர்
           காலம் தோன்றுமோ?
   துயரச் சுமைக்கொரு
           தூண்என நிற்குமோ?

பசித்த அறிவினால்
           புசித்திடு வார்களோ?
   பரபரப் புணர்வொடு 
           கொறித்திடு வார்களோ?
விசித்து விசித்துநான்
           அழுத அழுகையும்
   விடிய விடியநான்
           வடித்த கண்ணீரும்,
மக்கள் இனத்தின்
           கடைசி மாந்தனின்
   ஒக்க அழுகையொ(டு)   
           ஒன்றாய்இணையுமோ?
   ஒழுகுகண் ணீரொடு
           ஓடிக் கலக்குமோ?

  எழுதி   எழுதிச்  செல்கின் றேன்நான் !
  என்ன பயன்என எண்ணிப் பார்க்கிலேன்!
===========================
              -- பாவலரேறு பெருஞ்சித்திரனார்




==================================================================



உடல் தரும்
பிணிகளைத் தடைகளைப்
பொருட்டென எண்ணிடேன்!
என்னேர் உயிரினை
இழப்பினும் தயங்கிடேன்;
ஏற்றுள்ள கொள்கையே பெரிதென்(று) இயங்குவேன்!
அன்னை மொழி, இனம்,
நாட்டினை எதிரிகள்
ஆள்வதை மீட்டிடும் வரை,
விழி உறங்கிடேன்!

இம்மா நிலந் தனில்
எண்ணிலா ஏழைகள்
ஏற்றத் தாழ்வுகள்
எங்கணும் இருக்கையில்
சும்மா இருந்திட
மனம் வர வில்லையே!
எம்மா நிலத்தையும்
இனத்தையும் மொழியையும்
எத்தனை முயற்சிகள்
செய்தே ஆயினும்
வெம்மாப் பெரும்படை
நடத்தியே ஆயினும்
விடுதலை செய்வதே
உலகில்,என் வேலையாம்!

பாவலரேறு பெருஞ்சித்திரனார்
1994 - இல் எழுதியது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக