புதன், 29 ஏப்ரல், 2020

தமிழர் இழந்த நிலம்-1

                                              தமிழர் இழந்த நிலம்-1

(இக்கட்டுரையை எழுதியது:

ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்)

இது ஓய்வுக் காலம் என்பதால் பல சுவராசியமான வரலாறுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்...

சுற்றுலாத் தலங்களாக இன்று அறியப்படும் பல்வேறு இடங்களுக்கு பின்னால் பல கொடூரமான கதைகள் இருப்பது எவருக்கும் தெரிவதில்லை.

அவற்றைக் குறித்த பல புரிதல்களை தமது தோழர்களுக்கு உருவாக்குவதற்காகவே இந்தத் தொடர்...

அந்த வரிசையில்
எனக்கு எப்போதுமே பிடித்த மூணாறில் இருந்து கதைகளை ஆரம்பிப்போம்...

மூணாறு-துயரின் உச்சம்...

கடல் மட்டத்திலிருந்து 4700 அடி உயரத்தில் அமைந்திருக்கும் மூணாறு இன்றைக்கு ஒரு சர்வதேச சுற்றுலா தலம். இந்த சுற்றுலா தலத்திற்கு தமிழகத்திலிருந்து பிரதானமாக இரண்டு சாலைகள் இருக்கிறது.

ஒன்று தேனி மாவட்டத்திலுள்ள போடியில் இருந்து போடிமெட்டு, பூப்பாறை, ஆனையிறங்கல், லாக்காடு, தேவிகுளம் வழியாக மூணாறு செல்லும் சாலை.

இந்தச் சாலை ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். தனுஷ்கோடியில் இருந்து ராமேஸ்வரம் இராமநாதபுரம்  பரமக்குடி மதுரை தேனி போடி போடிமெட்டு தேவிகுளம் மூணாறு அடிமாலி வழியாக கொச்சி செல்லும் சாலை ஆகும். எண்- 49.

இன்னொன்று திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் இருந்து இந்திராகாந்தி தேசிய வனவிலங்கு சரணாலயத்தின் வழியாக... சின்னாறு, மறையூர், சட்டமூணாறு, வாகுவாரை தலையாறு, பெரிய பாறை வழியாக மூணாறு செல்லும் சாலை...

இரண்டுமே ஆபத்தான சாலைகள் என்றாலும் உடுமலைப்பேட்டையிலிருந்து மூணாறு செல்லும் சாலையில் பகல் நேரத்தில் கூட நாம் யானைகளையும் காட்டுமாடுகளையும் காண முடியும்.

ஆனால் போடிமெட்டிலிருந்து மூணாறு செல்லும் வரை, இரண்டு இடங்களில் மட்டுமே யானைகளை காண்பதற்கு வாய்ப்பு இருக்கிறது ஒன்று ஆனையிரங்கல், இரண்டாவது தேவிகுளத்திற்கு முன்பாக ஒரு இடம்.

போடியில் இருந்து போடி மெட்டு சாலை போடுவதற்கு முன்பாக...

தமிழர்களுடைய பயணம், போடியில் இருந்து முந்தல், குரங்கணி சென்று அங்கிருந்து கால்நடையாக டாப் ஸ்டேஷன் செல்வது.

டாப் ஸ்டேஷன் சென்று அங்கிருந்து எல்லப்பட்டி, மாட்டுப்பட்டி கிராம்ஸ்லேண்ட் வழியாக மூணாறை அடைவது.1870 காலகட்டங்களில் தமிழகத்திலிருந்து தேயிலைத் தோட்டத் தொழிலுக்காக பிரிட்டிஷ்காரர்களால் தமிழர்கள் அழைத்துச் செல்லப்பட்ட பாதை இதுதான்.

குரங்கணியிலிருந்து டாப் ஸ்டேஷன் வரை வளைந்து நெளிந்து கிட்டத்தட்ட 18 கிலோ மீட்டர்கள் செல்ல வேண்டும்... அங்கிருந்து 38 கிலோமீட்டர்கள் சென்றால் மூணாறை அடையலாம்.

இந்தப் பாதை வழி நெடுக யானைக் காடுகள்தான்.ஆனால் நீண்ட காலமாக மூணாறு மலையகங்களில் இன்றளவும் வாழும் அப்பாவித் தமிழர்கள், இந்தப்பாதையைத் தான் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இந்த டாப் ஸ்டேஷனில் இருந்து மேற்கு நோக்கி சென்றால் 38 வது கிமீ ல் மூணாறும், வடக்கு நோக்கி சென்றால் 10 கிமீ ல் கோவிலூர், வட்டவடை, கொட்டக்கம்பூர் உள்ளிட்ட 22 மலை கிராமங்கள் வருகிறது.

அதிர்ஷ்டவசமாக இந்த 22 மலை கிராமங்களில் வாழும் தமிழர்களும், தேயிலைத் தோட்டத் தொழிலாளிகள் அல்ல, மாறாக பிரிட்டிஷ்காரர்கள் காலத்திலேயே சொந்தமாக பட்டா பெற்று, பட்டா நிலத்தில் விவசாயம் செய்பவர்கள்.

இந்த வழியாக இரண்டு இணைப்புச் சாலைகள் இருக்கிறது.

தமிழ் விவசாயிகள் நிறைந்த
கொட்டக்கம்பூரிலிருந்து 28 கிலோ மீட்டர்கள் நடந்தால், பேரிஜம் ஏரியை அடைந்து அங்கிருந்து கொடைக்கானலுக்கு சென்றுவிட முடியும்...

இந்தச் சாலைக்கு பெயர் -எஸ்கேப் ரோடு-.

கோவிலூரிலிருந்து ஒரு மலை ஏறி இறங்கினால், உடுமலைப்பேட்டை மூணாறு சாலையில் இருக்கக்கூடிய மறையூருக்கு சென்று விட முடியும்...காந்தலூர்  வழியாக.

இது குறித்து பின்னர் விரிவாக பார்ப்போம்.

இதுபோக குமுளியிலிருந்து உடுமஞ்சோலை, நெடுங்கண்டம், சாந்தம்பாறை வழியாக மூணாறுக்கு வரும் பாதை,,, போடி மூணாறு சாலையில் இருக்கும் பூப்பாறையில் வந்து சேர்கிறது.

இன்னொரு பாதை கொச்சியில் இருந்து கோதமங்கலம், அடிமாலி வழியாக மூணாறுக்கு வருகிறது.
சர்வதேச சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் சாலை இதுதான்.

இப்படியாக இன்று சாலை மார்க்கமாக மூணாறை எளிதாக நம்மால் அடைந்துவிட முடியும். ஆனால் இன்றைக்கு நிலைமை அப்படியில்லை.மனிதர்கள் என்றால் கால்நடையாக செல்ல வேண்டும். பொருள்கள் என்றால் கழுதையில் ஏற்றி சென்றிருக்கிறார்கள்.மாட்டு வண்டியிலும்  பொருள்கள் நீண்ட காலமாக போடியில் இருந்து மூணாறுக்கு ஏற்றிச் செல்லப்பட்டு இருக்கிறது.

இப்போது குமுளியில் இருந்து உடுமஞ்சோலை,நெடுங்கண்டம் வழியாக பூப்பாறை வரை வந்து சேரும் சாலை 1968 வரை இல்லை.

திருவனந்தபுரத்தில் இருந்து கிளம்பும் ஒரு மலையாளி, பீர்மேடு, குமுளி வழியாக கம்பம் போடி வந்து, போடி மெட்டு வழியாகவே செல்ல முடியும்.பிறகு என்ன யோக்கியதையில் தேவிகுளத்தையும் பீர்மேட்டையும் மலையாளிகள் சொந்தம் கொண்டாடினார்கள் என்பது இன்றளவும் எனக்கு வியப்பளிக்கக்கூடிய செய்தியாகும்.

ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட கடந்த இந்த தேவிகுளமும், பீர்மேடும் நம் கையை விட்டு போனதினால், இன்றைக்கு கிட்டத்தட்ட 11.7 விழுக்காடு வரி வருவாயை தமிழகம் இழந்திருக்கிறது.

கூடுதலாக 7 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் அடிமையாக்கப்பட்டிருக்கிறார்கள். வாழ்வாதாரமே கேள்விக்குறியாக இருக்கும் மூணாறு தமிழர்களின் கதையை தொடர்ந்து பார்ப்போம்...


ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக