சனி, 6 நவம்பர், 2021

தமிழகம் ஊரும் பேரும் -1

 ரா.பி. சேதுப்பிள்ளை எழுதிய "தமிழகம் ஊரும் பேரும்" நூலிலிருந்து.


பகுதி -1 

மலையில் சிறியது குன்று. அதனினும் சிறியது பாறை, அறை, கல் எனப் பெயர்படும்.


நெற்குணம், நெடுங்குணம், பூங்குணம் ஆகிய ஊர்களின் உண்மையான பெயர்கள் நெற்குன்றம், நெடுங்குன்றம், பூங்குன்றம் என்பது ஆகும்.

அதுபோலவே குன்றூர் என்ற பெயரே மருவி குன்னூர் ஆயிற்று.

குன்றத்தூர் >குன்னத்தூர்
குன்றக்குடி > குன்னக்குடி





திருவெள்ளறை: வெள்ளை நிறப் பாறை எனப் பொருள்.


திண்டுக்கல் = அவ்வூரின் மேல் பக்கத்தில் உள்ள பாறையின் பெயரே ஊருக்கு அமைந்ததாகத் தெரிகிறது.

நாமக்கல் = இதன் பழைய பெயர் ஆரைக்கல். ஆரை என்றால் கோட்டை மதில்.

குறிஞ்சி நில மக்களாகிய குறவர் வாழ்ந்த இடம் குறிச்சி எனப்பட்டது.
பின்னர் மற்ற குலத்தவர் வாழந்த இடங்களும் குறிச்சி எனப்பட்டது.

ஆர்க்காடு = அத்தி மரங்கள் நிறைந்த பகுதி.
ஆர் = அத்தி மரம்

ஆர்ப்பாக்கம் என்ற ஊரும் அத்தி மரத்தையே குறிக்கிறது.


திருவாரூர் = சோழ நாட்டின் பழைய தலைநகரம் ஆரூர் ஆகும். அது பாடல் பெற்ற பின்பு திருவாரூர் ஆயிற்று.


ஆரியங்காவு = செங்கோட்டைக்கு அருகில் உள்ள ஊர். ஐயனாரை மலையாள நாட்டார் ஐயப்பன் என்றழைப்பர். ஐயனாரின் வேறொரு பெயர் ஆரியன் என்பதாகும்.


கா = சோலை
கா>காவு

மேற்கு மலைத்தொடரில் நெடுஞ்சோலையில் ஐயப்பன் கோயில் கொண்டமையால், அவ்வூர் ஆரியங்காவு எனப்பட்டது.

தண்டலை = சோலை

தண்டலை > தண்டரை ஆனது.

குழித்தலையின் பழைய பெயர் குழித்தண்டலை ஆகும்.

அதுபோலவே பூந்தண்டலம், பழந்தண்டலம், பெருந்தண்டலம் முதலிய ஊர்கள் சோலை சூழ்ந்த ஊர்களாக இருந்திருத்தல் வேண்டும்.

சுரம் = காடு

திருச்சுரம் > திரிசூலம் ஆனது.

திருவிடைச்சுரம் > திருவடிச்சூலம் ஆனது.

கரவீரம் = பொன்னிறப் பூக்களைத் தருகின்ற ஒரு வகை மரம். இதற்கு பொன்னலரி என்றும் பெயர் உண்டு.


திருப்பைஞ்சீலி = மைஞ்சீலி என்பது பசுமையான வாழையைக் குறிக்கும். அவ்வகையான வாழைகள் நிறைந்த ஊர் பைஞ்சீலி எனப்பட்டது.


திருப்பாதிரிப் புலியூர் = பாதிரி மரங்கள் நிறைந்த புலியூர்


எருக்கத்தம் புலியூர் =எருங்கஞ் செடிகள் செறிவாக உள்ள புலியூர்.
(அத்தம் = காடு)


முல்லை நில ஊர் பாடி, பட்டி என்பது நாம் அறிந்ததே.

வேலப்பாடி = வேல மரங்கள் நிறைந்த காட்டில் உள்ள ஊர். இதன் அருகில் உள்ள ஊர் வேலூர்.


மந்தை = ஆடு மாடுகள் கூட்டமாக இருக்குமிடம்.

மாடு மேய்ப்பதைத் தொழிலாகக் கொண்ட தோடர்கள் வாழுமிடம் மந்து எனப்பட்டது.

ஒற்றைக்கல் மந்து என்ற ஊரே இன்றைய ஊட்டி.

ஐயாறு = காவிரி முதலிய ஐந்து ஆறுகள் பாயும் நிலத்தில் அமைந்த நகரம் (வடமொழியில் பஞ்சநதம்)

கயம் = ஆழமான நீர்நிலை

கயத்தாறு = ஊற்றிலிருந்து புறப்படுகின்ற ஆறு, அந்த ஆற்றங்கரையில் உள்ள ஊர்.


(தென்னாட்டு ஆறுகள் மலைகளில் பிறக்கும். அவ்வாறு பிறவாமல் சமவெளியாம் முல்லை நிலத்தில் தன்னூற்றாகப் பொங்கி எழுந்து, கயமாகப் பெருகிச் சிறு ஆறாக ஒடும் சிறப்பினைக் கண்டு, அதற்கு கயத்தாறு என்று முன்னோர் பெயரிட்டனர். இந்நாளில் அந்த ஆறு கோதண்டராம நதி என்று அழைக்கப்பட்டாலும், அவ்வாற்றின் கரையிலுள்ள ஊரின் பெயர் மாறாமல் உள்ளது).



பத்தமடை = பத்தல் மடை

(மதகுகள் (மடைகள்) வழியாக தண்ணீர் வயலில் சென்று பாயும் பகுதியானதால் பத்தல்மடை, மேலமடை, பாலாமடை போன்ற ஊர்கள் எழுந்தன)

திரையனேரி > தென்னேரி

திரையன் என்ற மன்னனால் வெட்டப்பட்ட ஏரி


பெரிய ஏரி= பேரேரி >பேரி

சீவலப்பேரி = இதன் உண்மையான பெயர் சீவல்லப் பேரேரி.

ஶ்ரீ வல்லபன் என்ற பாண்டியன் உருவாக்கிய ஏரி அமைந்த ஊர் சீவலப்பேரி ஆகும்.


அம்பாசமுத்திரத்தின் பழைய பெயர் இளங்கோக்குடி என்பது. அவ்வூரின் அருகே எழுந்த குளம் அம்பாள் சமுத்திரம் ஆகும். மன்னர்கள் உருவாக்கிய பெரிய ஏரிகள் கடல், சமுத்திரம், வாரிதி என்ற பெயர்களில் அழைக்கப்பட்டன.

சிற்றேரிக்கு ஏந்தல், தாங்கல் ஆகிய பெயர்கள் உண்டு.


ஆவியும் வாவியும் குளத்தின் வேறு பெயர்களே. இப்பெயர்களில் அமைந்த ஊர்கள் கல்லாவி, நீராவி, கோடல்வாவி ஆகியன.


மடு = ஆழமான நீர்நிலை.

கல் மடு, முதலை மடு, ஆனை மடு, செம்மடு போன்ற ஊர்கள் இதற்கு எடுத்துக்காட்டாகும்.


இலஞ்சி = ஏரி


பொன்னிலஞ்சி (தென்காசிக்கு அருகில் உள்ளது)

பொய்கை = இயற்கையில் அமைந்த நீர் நிலை

ஊருணி = உண்பதற்குரிய நீரைக் கொண்ட குளம்.

பேரூரணி, மயிலூரணி, புரசூரணி போன்ற ஊர்கள் இவ்வாறு எழுந்துள்ளன.

செறு = குளம்

சித்தூர் நாட்டில் ராயலு செறுவு என்ற ஊர் உள்ளது. அது கிருஷ்ண தேவராயர் வெட்டிய ஏரி ஆகும்.

மேலும் ஊற்று, கேணி, கிணறு போன்ற நீர்நிலைகளின் பெயரிலும் தமிழ்நாட்டில் பல ஊர்கள் உள்ளன.




மின்னெழுத்தில் வடித்தது.

பெஞ்சமின் பிராங்கிளின். பி

11 துலை 2021
(28-10-2021)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக