தமிழ்நாடு நாள் எதுவாக இருக்கலாம் என்று ஒரு புதிய சிக்கலைத் திராவிட இயக்கங்கள் தற்போது உருவாக்கிவிட்டன.
பல ஆண்டுகளாக நவம்பர் 1 றினையே தமிழ்நாடு நாளாகப் பல தமிழ் உணர்வார்கள் கொண்டாடி வருகின்றனர்.
அன்று குமரி மாவட்டத்திற்கு விடுமுறையும் உண்டு. எல்லைப் போர் ஈகியர்களுக்கு அன்று பல தமிழ் அமைப்புகள் நினைவேந்தல் நடத்தி வருகின்றன.
நமது அண்டைய மாநிலங்களான கேரளம், கர்நாடகம், ஆந்திரம் போன்றவை அந்த நாளில், தமது நாட்டின் விடுதலை நாளைப் போன்று சிறப்பாகக் கொண்டாடி வரும் போது, தமிழ்நாட்டில் மட்டுமே, அந்நாள் குமரி மாவட்டம் தாய்த்தமிழ்நாட்டோடு இணைந்த ஒரு நாள் என்ற அளவிலேயே தமிழ்நாட்டரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை மாநிலம் தழுவிய கொண்டாட்டமாகச் செய்ய மா.பொ.சி காலந்தொட்டே பல முறை கோரிக்கை விடுத்தும், ஆரிய ஆட்சியும் (காங்கிரசு) திராவிட ஆட்சியும் (அதிமுக, திமுக) இந்த கோரிக்கையை புறந்தள்ளியே வந்தது.
பின்னர் 2019 ஆம் ஆண்டில்தான் அன்றைய அதிமுக அரசு, நவம்பர் 1 னை தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என்று அறிவித்தார். ஆனால் இதனை இன்றைய திமுக அரசு மாற்றிவிட்டது.
இந்த நாட்டிற்கு, தமிழ்நாடு என்று, திமுகவின் தலைவர் அண்ணாத்துரை அவர்களால் பெயரிடப்பட்ட நாளையே தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவோம் என்று அறிவித்துவிட்டது.
இதற்குக் காரணமே, திமுகவிற்குப் பின்புலமாக இருக்கும் திராவிட இயக்கங்கள்தான். தமிழ்நாட்டின் நிலத்தை தெலுங்கர்களும் மலையாளிகளும் கவர்ந்து செல்ல ஏதுவாக அரசியல் செய்தது, அன்றைய திராவிடர் கழகம். இதில் பேராயக்கட்சிக்கும் திராவிடர் கழகத்திற்கும் வேறுபாடு இல்லை. ஆந்திரா ஆந்திரருக்கே என்ற முழக்கம் ஆந்திரம் முழுவதும் பரவியபோது, திராவிட நாடு திராவிடருக்கே என்று மாயமான் வேட்டையை நடத்திக் கொண்டிருந்து தி.க. ஐக்கிய கேரளம் என்று மலையாளிகள் ஒன்றிணைந்து, தேவிகுளத்தையும், பீர்மேட்டையும் கேட்ட போது, அது சரியான கோரிக்கையே என்றது திராவிடர் கழகம். அங்கு தமிழர்கள்தானே பெரும்பான்மை மக்கள் என்று கேட்டபோது, அந்த தமிழர்கள் கூலி வேலைக்குச் சென்றவர்கள் என்று கூறினார் ஈ.வே.ரா.
"தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிக்க வேண்டும் என்பது, தமிழரசு, தமிழர் ஆட்சி, தமிழ் மாகாணம் என்று பேசப்படுவன எல்லாம், நம்முடைய சக்தியைக் குலைப்பதற்காகவும், குறைப்பதற்காகவும் செய்யப்படுகின்ற காரியங்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும்." (விடுதலை 11.1.47)
"மொழி வழி மாகாணங்கள் பிரிவதிலுள்ள கேட்டையும் விபரீதத்தையும் முன்னரே பல தடவை எடுத்துக் காட்டியுள்ளோம். மீண்டும் கூறுகிறோம். மொழி வாரி மாகாணக் கிளர்ச்சியில் தமிழர்கள் கலந்து கொள்ள வேண்டாம்." (விடுதலை 21.1.47) என்றெல்லாம் எழுதினார் ஈ.வெ.ரா.
அவரின் இந்தக் கருத்துக்கு திராவிடர் கழகத்திற்குள்ளே கடும் எதிர்ப்பு தோன்றியது. தனது கட்சியினரின் மாற்றுக் கருத்துகளை ஏற்றுக் கொள்ள மறுத்த பெரியார் அவர்கள் மொழி வழி மாகாண உருவாக்கத்திற்காக அமைக்கப் பட்ட தார் ஆணையத்திடமும் சாட்சியம் சொல்லாமல் அதனை புறக்கணிப்பும் செய்தார்.
வடக்கெல்லைப் போராட்டத்தை ம.பொ.சி. முன்னெடுத்து நடத்திய போது தினத்தந்தி ஏட்டிலே, நேர்காணல் அளித்தார். அதிலே,
"கடவுள் சிலை உடைப்புப் போராட்டத்தை நான் துவங்கி இருப்பதால் எல்லைக் கிளர்ச்சியில் கவனம் செலுத்த முடிய வில்லை. அவரவர்கள் போராட்டம் அவரவர்களுக்குப் பெரிது" என்றார். (ம.பொ.சி.யின் 'எனது போராட்டம்' நூல் பக்.643 .)
இப்படி தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் நிலங்களை மீட்க எந்த வேலையும் செய்யாமல், தமிழர் நிலங்களை அண்டை மாநிலத்தார் களவாடிச் செல்ல உதவியதே திராவிடர் கழகமும் அதில் இருந்த திராவிடர்களும். (எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்த கதையாக காமராசரும் குளமாவது மேடாவது, எல்லாம் இந்தியாவில் தானே இருக்கிறது என்று நக்கல் அடித்தார் காமராசர்).
ஆகையால்தான் நவம்பர் 1 - இனை தமிழ்நாடு நாளாகக் கொண்டாடினால், தனது முகத்திரை கிழிக்கப்படும் என்று உணர்ந்த தி.க, இந்த நாளினை தமிழர்கள் கொண்டாடுவதில் இருந்து, திசைதிருப்ப, அண்ணாதுரையால் கொண்டு வந்த தமிழ்நாடு பெயர் சூட்டி மசோதாவினை கையிலெடுத்து உள்ளது.
திராவிடர்களின் இந்த இரண்டக வேலையைப் பார்த்துக் கொதித்துப் போயுள்ளனர் தமிழ் இன உணவாளர்கள்.
குழந்தை பிறந்த நாளைத்தான் கொண்டாடுவது முறை. அதற்குப் பெயர் வைத்த நாளைக் கொண்டாடுவதில் என்ன சிறப்பு?
என்று பல தமிழர்கள் கேள்வி கேட்கின்றனர்.
அதே நேரத்தில் திராவிடர்கள் கேட்கும் ஒரு கேள்வியும் சரியானதே!
கேரளமும் ஆந்திரமும் கருநாடகமும் நவம்பர் 1 இல் முழுமையாகப் பிறந்தது. ஆனால் தமிழ்நாடு நவம்பர் 1 இல் தனது உறுப்புகள் சிலவற்றை இழந்தே பிறந்நது. 1956 நவம்பர் 1 இல் உருவானது தலையில் சிறிது குறைந்தும் காலில் சிறுது வெட்டப்பட்டும் கிடைக்கப்பட்ட தமிழ்நாடே. கூடுதலாக அதற்கென முகமும் (பெயர்) இல்லாமலே பிறந்தது.
முகமற்ற குறையான ஒரு குழந்தை என்பது தமிழர்களுக்கு மகிழ்ச்சியான நாள் அல்ல. இருந்தாலும் இவையாவது கிடைத்ததே என்ற உணர்விலேயே பல தழிழுணர்வாளர்களும் நவம்பர் 1 ஐக் கொண்டாடி வருகின்றனர்.
உண்மையில் நவம்பர் 1 இல் தமிழ்நாடு முழைமையாக உருவாகவும் இல்லை. சூலை 18 இல் தமிழ்நாடு பிறக்கவும் இல்லை. இதில்தாம் நாம் அண்டைய மாநிலத்திலிருந்து மாறுபடுகிறோம்.
தமிழர் என்ற உணர்வினை நம்மிடையே உருவாக்காமல் போனதால் கிடைத்த அன்றைய இழப்புதான் பீர்மேடும், தேவிகுளமும், நெய்யாற்றின்கரையும், சித்தூரும். அன்றைய இழப்பின் இன்றைய தொடர்ச்சியே முல்லைப் பெரியாறு போராட்டம். தமிழ்த்தேசிய அரசியல் இங்கு மலராமலே போனதன் விளைவே 1954 ஆகத்து 11 இல் மலையாள அரசால் 11 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது.
நமக்குத் தேவையான தமிழ்நாடு நாளென்பது, இன்று நம் கையில் உள்ள தமிழ்நாட்டைப் பெற, நமது முன்னோர்கள் எவ்வாறெல்லாம் போராடினர் என்பதை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும்படியாக இருக்க வேண்டும். நாம் மீட்க வேண்டிய நிலம் குறித்து அந்த நாளில் நமது பிள்ளைகள் பேசும்படியான நாளாக இருக்க வேண்டும். அந்தவகையில் ஆகத்து 11 இனை நாம் தமிழ்நாடு நாளாகக் கொள்ளலாம். அது
தெற்கு எல்லையைக் காக்கும் போராட்டத்தில் பட்டம் தாணுப்பிள்ளையின் துமுக்கிக் குண்டுகளுக்கு தன்னை இரையாக்கிய 11 பேர்களின் நினைவுநாள். இது கொண்டாட்டத்திற்கான நாள் அல்ல. இது வரலாற்றினை நினைவூட்டுவதற்கான நாள். நாம் இழந்துள்ளோம் என்பதை நம் மக்கள் உணரச்செய்யும் நாள்.
ஒருவேளை அரசியல் மாற்றத்தினால் மீண்டும் நவம்பர் 1 அன்றே தமிழ்நாடு நாளாக மீண்டும் அறிவிக்கப்பெற்றால் மகிழ்ச்சியே. அதனை நாம் கொண்டாட்ட நாளாக வைக்கலாம். ஆனால் ஆகத்து 11 ஒவ்வொரு தமிழர்களும் தனது நெஞ்சில் வைக்க வேண்டிய நாள். ஆகையால் அந்த நாளை நாம் எல்லை மீட்புப் போராளிகளின் நாளாகவாவது நினைவுற வேண்டும். நாம் நினைவு கூறும் நாளானது, நமது முன்னோர்களின் போராட்டத்தையும், நமது எதிரிகளின் அடக்குமுறைகளையும் நம் பிள்ளைகள் உணரும்படியான நாளாக இருத்தல் , போராடிப் பெற்ற இந்த நாட்டைத் தொடர்ந்து தக்க வைக்க உதவும்.
15 துலை 2021
(01-11-2021)
(01-11-2021)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக