சூரிய நாராயண சாஸ்திரியா? பரிதிமாற் கலைஞரா?
தமிழ் கூறும் நல்லுலகில் தமிழ் வளர்த்த அறிஞர்கள் பலர் உண்டு. அதில் ஒருவர் வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார் ஆவார். 1870 பிறந்த இவர் 1903 இல் இறந்து விட்டார். தான் வாழந்த 33 ஆண்டுகளிலேயே 74 நூல்களைப் பதிப்பித்துள்ளார். முத்தமிழுக்காகப் 12 நூல்களை எழுதியுள்ளார். "ஞானபோதினி" இதழில் ஆசிரியராகச் செயல்பட்டு "தனிப்பாசுரத் தொகை" என்ற பாடல் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.
ரூபாவதி, கலாவதி, மானவிஜயம் என்ற நாடக நூல்களை எழுதியுள்ளார். இவை அனைத்தையும் வெறும் 12 ஆண்டுகளில் எழுதியுள்ளார். தமிழ்மொழி வரலாறு என்ற நூலும் எழுதியுள்ளார்.
மதுரையில் தமிழ்ச்சங்கம் அமைக்க தீவிரமாக முயன்றவர். பல்கலைகழக பட்டப்படிப்பிற்கு தமிழ் ஒரு பாடமாக இருக்க வேண்டாம் என்று அரசு தீர்மானித்த போது, அதனை முறியடித்தவர் சூரிய நாராயண சாஸ்திரியாரே.
தமிழில் வடமொழி கலந்து எழுதும் மணிப்பவள முறையைச் சாடுகிறார். அதனை ஆபாச பாஷை என்றும் கூறியுள்ளார்.
ஆனால் அவர் தனக்குத் தன் பெற்றோர் இட்ட வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரி என்ற பெயரையே தன் வாணாள் முழுமைக்கும் பயன்படுத்தியுள்ளார்.
தான் எழுதிய அனைத்து .நூல்களிலும் தனது இயற்பெயரையே பயன்படுத்தியுள்ளார். அவர் 1897 ஆம் ஆண்டு "ஞானபோதினி" இதழ் வாயிலாக தனிப் பாசுரங்கள் எழுத ஆரம்பித்தார். அவை sonnet என்னும் இலக்கிய மரபில் அமைந்தவை. அதில் சில புதுக்கருத்துகளை புகுத்தியிருந்தார். அவை மக்களிடம் எம்மாதிரியான வரவேற்பைப் பெறும் என்ற அச்சம் அவரிடம் இருந்தது. ஆகையால் தனது இயற்பெயரில் எழுதாமல் புனைப்பெயரில் எழுத முடிவெடுத்தார். அந்த புனைப் பெயரே பரிமாற் கலைஞர் என்பது. பின்னாளில் அந்தப் பாசுரங்கள் தனி நூலாக வெளிவந்த போது, தனது இயற்பெயராகிய வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரி என்ற பெயரிலேயே வெளியிட்டுள்ளார்.
அந்த நூலில் முகவுரையில் இவ்வாறு எழுதியுள்ளார்.
" இப்பாசுரங்களில் சில புதுக்கருத்துக்கள் காட்டியிருக்கின்றமை பற்றி அஞ்சுவோம். எமது மெய்ப்பெயரில் வெளியிடாது பரிமாற் கலைஞன் என்னும் புனைவுப்பெயரின் வெளியிடுவேமாயினோம். அன்றியும் நன்னூலொன்று செய்தானது புகழின்மையான் இகழப்பட்டொழிதலும் புன்னூலொன்று செய்தானது உயர்ச்சியாற் சாலவும் புகழப்பட்டிலங்கலும் நாடொறுங் காண்டலின் இந்நூலைப் பற்றிய தமிழ் மக்களின் உண்மை மதிப்பு இனைத்து என்றுணர வேண்டியும் அவ்வாறு செய்ய விரும்பினோம். அன்னணம் வெளிப்படுத்திய நூல் கண்டு பலரும் உவந்து வியந்து பேசக் கேட்ட யாம் உள்ளக் கிளர்ச்சியுற்று நூலிற்கு மறுபதிப்பொன்று வெளியிடலாமென்றெண்ணினேம்."
தனது புது முயற்சி மக்களிடம் கெட்ட பெயரை உருவாக்கிவிடுமோ என்று அஞ்சிய சாஸ்திரியார், புனைவுப் பெயரில் வெளியிட்டுப் பின், அப்பாசுரங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று தெரிந்தபின், தனது இயற்பெயரிலேயே அப்பாசுரங்களைத் தொகுத்து வெளியிட்டுள்ளார் என்பதே, அவரது முகவுரையைப் படித்து நாம் புரிந்து கொள்வது.
அந்தப் பாசுரங்களுக்குப் பின்னர் அவர் எழுதிய எந்த நூலிலுமே தன்னை பரிதிமாற் கலைஞர் என்று குறிப்பிட்டதில்லை என்பதையும் நாம் இங்கே கண்ணோக்க வேண்டும்.
"பரிமாற் கலைஞர்" என்னும் நூலை லெளியிட்டுள்ள அவரது பெயரரான வி.சு.கோவிந்தன் என்பவரும் தனது பாட்டனார் வடமொழியின் மீதுள்ள காழ்ப்பினால் தமது பெயரை மாற்றிக்கொண்டார் என்று சிலர் கருதுவது தவறென்றே குறிப்பிட்டுள்ளார். இளவயதிலேயே பண்பட்ட சாஸ்திரியார் வடமொழி, ஆங்கிலம் இவற்றிடையே அவர் வேற்றுமை பாராட்டவில்லை. மொழிகளுக்கிடையே ஏற்றத்தாழ்வுகள் காணக்கூடாது என்றே கருதியிருந்தார். தம்படைப்பின் உண்மையான மதிப்பை அறிய வேண்டியே தம் வடமொழிப் பெயரை தமிழில் மாற்றிக்கொண்டார். எனினும் தம் தாய் தந்தையர் தமக்குச் சூட்டிய சூரிய நாராயணன் என்ற பெயயையே பெரிதும் பயன்படுத்தினார் என்றே சாஸ்திரியாரின் பெயரன் திரு. வி.சு.கோவிந்தன் எழுதியுள்ளார்.
சுருங்கக்கூறின், வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார், என்றுமே தனது பெயரை வடமொழியிலிருந்து தமிழுக்கு மாற்ற விரும்பியதே இல்லை என்பதே உண்மை. அவரே விரும்பாதபோது, நாம் அவரை "பரிதிமாற் கலைஞர்" என்று அடையாளப்படுத்துவது அவருக்குச் செய்யும் சிறப்பாகுமா?
உசாத்துணை நூல் : பரிதிமாற் கலைஞர் (வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார்)
ஆசிரியர்: வி.சு. கோவிந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக