ரா.பி. சேதுப்பிள்ளை எழுதிய "தமிழகம் ஊரும் பேரும்" நூலிலிருந்து.
பகுதி - 2
புத்தூர் = புதியதாய்த் தோன்றும் ஊர்
கொங்குநாட்டில் பழைய பேரூருக்கு அருகே கோவன் என்னும் தலைவன் பெயரால் எழுந்த ஊர் கோவன்புத்தூர். அதுவே இன்று கோயம்புத்தூர் என அழைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் கடற்கரைகள்:
சோழ மண்டலக்கரை என்று முன்பு அழைக்கப்பட்ட பெயர், பின்னர் ஐரோப்பியர் நாவில் கோரமண்டல் கரையாயிற்று.
முத்துக்கரை = பாண்டி நாட்டுக் கடற்கரை
மேல்கரை = சேர நாட்டுக் கடற்கரை
ஒவ்வொரு கடற்கரை நகரமும் இரு பாகங்களை உடையதாய் இருந்தது. ஒரு பாகம் ஊர் என்றும் மற்றொரு பாகம் பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது. பூம்புகார் நகரின் ஒரு பாகம் மருவூர்ப்பாக்கம் எனவும் மறுபாகம் பட்டினப்பாக்கம் என்றும் பெயர் பெற்றன. இரண்டும் சேர்ந்தது காவிரிப்பூம்பட்டினம்.
அதுபோலவே நாகூர், நாகப்பட்டினம் என்ற ஊர்களும் பெயர் பெற்றுள்ளது.
சேர நாட்டின் முசிரி என்னும் பட்டினமும் கொடுங்கோளூர் மற்றும் மகோதைப்பட்டினம் என இரு பாகங்களாக இருந்தது.
கடற்கரைச் சிற்றூர்கள் பாக்கம் எனப் பெயர் பெறும்.
சென்னையில் உள்ள சில பாக்கங்கள்.
கோடம் பாக்கம், மீனம் பாக்கம், வில்லி பாக்கம், புரசைப் பாக்கம்.
திருக்களர் = களர் நிலமாக (உப்பு நிலமாக) உள்ள ஊர்.
பேரளம் = நன்னிலத்திற்கு அருகில் உள்ள உப்பளம் உடைய ஊர்.
குப்பம் = நெய்தல் நில மக்களாகிய வலையர், செம்படவர், பரதவர் போன்றோர் வாழும் இடம்.
பாலைவனத்தம் = பாண்டி நாட்டில் உள்ள ஊர். இதன் பழம் பெயர் பாலைவன நத்தம். முன்பு பாலையாய் இருந்து, பின்னர் குடியிருப்புக்கு ஏற்ற நத்தமாகிப் பின்பு ஊராகியது.
பாலூர் = தொண்டை நாட்டின் ஊற்றுக் காட்டுக் கோட்டத்தில் (செங்கற்பட்டு அருகில்) உள்ள ஊர். இதன் பழைய பெயர் பாலையூர்.
தேரி = செக்கச் சிவந்த மணற்பாங்கான ஊர்.
கொர நாடு = கூறை நாடு என்பதே கொர நாடு என மருவிற்று. கூறை என்றால் ஆடை. ஆடை நெய்யப்பட்ட ஊர். இது மாயவரத்திற்கு அருகில் உள்ளது.
சிறந்த ஊர்கள் நகரம் என்ற பெயரால் வழங்கும்.
ஆழ்வார் திரு நகரி = நம்மாழ்வார் பிறந்த இவ்வூரின் பழைய பெயர் குருகூர்.
விருதுநகர் = விருதுப் பட்டி என்ற ஊரே, அதன் வர்த்தகத்தால் மேம்பட்டு இன்று விருதுநகர் ஆனது.
புரம் என்ற சொல்லும் சிறந்த ஊர்களைக் குறிப்பதாகும்.
ஆதியில் கச்சி என்றும் காஞ்சி என்றும் பெயர் பெற்றிருந்த ஊர், பின்னர் காஞ்சிபுரம் ஆனது.
பல்லவர் புரம் பல்லாவரம் ஆனது.
திருவல்லிக்கேணி = கண்ணைக் கவரும் அல்லி மலர்கள் உடைய குளம் அருகே அமைந்த ஊர். அங்கே பெருமாள் கோயில் கொண்டமையால், திரு என்னும் அடைமொழியும் சேர்ந்தது.
திருவல்லிக்கேணிக்கு வடக்கே மேடும் பள்ளமுமாகப் பல இடங்கள் இருந்தன. அவற்றுள் ஒன்று நரிமேடு. இன்று மண்ணடி என வழங்கும் ஒரு மேட்டின் அடியில் பெரும்பள்ளம் அந்நாளிலே காணப்பட்டது.
ஆங்கிலேயர் சென்னப்ப நாயக்கர் என்பவரின் மகனிடமிருந்து வாங்கிய இடமே சென்னப் பட்டினம். அவ்வூர் வளர்ந்து விரிவுற்றது. மேடு பள்ளமெல்லாம் பரந்த வெளியாயிற்று. நரி மேடு இருந்த இடத்தில் இப்போது பெரிய மருத்துவச் சாலை உள்ளது. மண்ணடியின் அருகே இருந்த பெருமேடு தணிந்து பெத்து நாயக்கன் பேட்டை ஆயிற்று. ஆங்கிலக் கம்பெனியார் ஆதரவில் பல பேட்டைகள் எழுந்தன. இங்ஙனம் விரிவுற்ற நகரில் பல பாக்கங்கள் எழுந்தன. புதுப்பாக்கம், சேப்பாக்கம் போன்ற சிற்றூர்கள் தோன்றி நாளடைவில் நகரத்தொடு இணைந்தன.
எனவே சென்னையில் ஆதியில் அமைந்தது கோயில். அதன்பின் எழுந்தது கோட்டை. அதைச் சார்ந்து பேட்டையும் பாக்கமும் பெருகின.
அனைத்தும் ஒருங்கு சேர்ந்து சென்னை மாநகரமாக விளங்குகிறது.
மின்னெழுத்தில் வடித்தது.
பெஞ்சமின் பிராங்கிளின். பி
14 துலை 2021
(31-10-2021)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக