சனி, 6 நவம்பர், 2021

மணிப்பவளமும் தமிழும்

  மணிப்பவளமும் தமிழும்


அண்மையில் நமது தமிழ்ப்பணிக் குழு உறுப்பினர் திரு. சோம. நடராசன்அவர்கள் எனக்கு இரு நால்களைப் பரிசளித்தார்.

ஐயாவின் கனிந்த உள்ளத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல் நூல் "குடும்ப விளக்கு". அது பாவேந்தரின் நூல் என்பது அனைவரும்அறிந்ததே. இரண்டாவது நூல் " தேவராஜ்ஜியம்" என்ற நூல்.

தலைப்பைப் பார்த்ததும் சிறிது கடுப்பாகித்தான் போனேன். இதென்ன "தேவராஜ்ஜியம்" என்று சமற்கிருதப் பெயரிட்டுள்ளார்கள்? தமிழில் "இறையரசு" என்று தலைப்பு இருந்தால் எவ்வளவு இனிமையாக இருக்கும் என்று கருதினேன்.


உடனே எனது நினைவானது, 30 ஆண்டுகளுக்கு முன் சென்றது. அன்று எங்கள் வீட்டில் இருந்த கத்தோலிக்க விவிலியமானது மணிப்பவள நடையில் எழுதப்பட்டிருக்கும். பல சொற்களும் சமற்கிருதச் சொற்களாகவே இருக்கும். அதிலுள்ள பல சொற்களுக்கும் பொருள் தெரியாது. படித்து புரிந்து கொள்வதும் சிறிது கடினமான ஒன்றாகவே இருக்கும். படிக்கும்போது ஏதேனும் ஐயம் ஏற்பட்டால் எனது அம்மாவிடம் கேட்பேன்.

அப்போது எனக்கு இரு விதமான புரிதல் இருந்தது. 1) அச்சொற்கள் தமிழ்ச்சொற்களே என்று கருதியது
2) ஏதேனும் ஒரு சொல் சமற்கிருதச் சொல் என்று அறியவந்தால், அதற்கு இணையான சொல் தமிழில் இல்லை. ஆகையால்தான் சமற்கிருதச் சொல்லைக் கையாண்டுள்ளனர் என்றும் நினைத்திருந்தேன்.

பிற்காலத்தில் கத்தோலிக்க விவிலியமானத்தில் மொழிச் சீர்திருத்தம் செய்யப்பட்டு தமிழ்நடையில் எழுதப்பட்டது. இப்போது எங்கள் வீட்டில் உள்ள கத்தோலிக்க விவிலியமானது படிப்போருக்கு எளிதில் புரியும்படி மாறிவிட்டது.

கர்த்தர் ஆண்டவரானார். போசனம் உணவாகியது. பரலோகம் விண்ணுலகமானது. பர்வதம் மலையானது. பிதா தந்தையானார். பரிசுத்த ஆவி தூய ஆவியானது. விசுவாசம் நம்பிக்கையானகு. இவ்வாறு நூற்றுக்கணக்கான சமற்கிருதச் சொற்கள் தமிழ்ப்படுத்தப்பட்டன. ஒரு தமிழனாக எனக்கு இது பெரிதும் உவப்பைக் கொடுத்துள்ளது என்றால் அது மிகையில்லை.

இப்போதெல்லாம் எனது பழைய புரிதல் ஒழிந்து, புதிய புரிதல் ஏற்பட்டுள்ளது.
1) தமிழில் அனைத்துச் சொற்களும் உள்ளன.
2) தமிழில் படிப்பது இனிமையானது
3) தமிழில் படிப்பது எளிமையானது
4) தமிழில் பிற மொழிச் சொற்களைக் கலப்பது கேடானது.



இதனை உங்களுக்கு எளிதில் புரிய வைக்க, நான் மணிப்பவள நடைக்கும் தமிழ் நடைக்கும் உள்ள வேறுபாடுகளை விவிலியத்திலிருந்தே சான்றுகள் எடுத்து அளித்துள்ளேன்.


அதனை நீங்கள் வாசித்து, இரு நடைகளிலும் உள்ள வேறுபாட்டை அறிந்து கொள்ளுங்கள். தமிழின் இனிமையையும் எளிமையையும் உணருங்கள்.


மணிப்பவள நடை :

ஆதியாகமம் 2:7

தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.


தமிழ் நடை:

தொடக்கநூல் 2:7

அப்பொழுது ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்.



மணிப்பவள நடை :

ஆதியாகமம் 2:23

அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.


தமிழ் நடை:

தொடக்கநூல் 2:23

அப்பொழுது மனிதன்,
“இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள்; ஆணிடமிருந்து எடுக்கப்பட்டதால், இவள் பெண் என்று அழைக்கப்படுவாள்” என்றான்.


மணிப்பவள நடை :

ஆதியாகமம் 6:2


தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக செளந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.



தமிழ் நடை:

தொடக்கநூல் 6:2


மனிதரின் புதல்வியர் அழகாக இருப்பதைத் தெய்வப் புதல்வர் கண்டு, தாங்கள் தேர்ந்து கொண்டவர்களையெல்லாம் மனைவியர் ஆக்கிக்கொண்டனர்.


மணிப்பவள நடை :

பிரசங்கி 1:10

இதைப் பார், இது நூதனம் என்று சொல்லப்படத்தக்க காரியம் ஒன்றுண்டோ? அது நமக்கு முன்னுள்ள பூர்வகாலங்களிலும் இருந்ததே.



தமிழ் நடை:

சபை உரையாளர் 1:10

ஏதேனும் ஒன்றைப்பற்றி, 'இதோ, இது புதியது’ என்று சொல்லக் கூடுமா? இல்லை. அது ஏற்கனவே,
நமது காலத்திற்கு முன்பே, பல்லாயிரம் ஆண்டுகளாக இருப்பதாயிற்றே!


மணிப்பவள நடை :

சங்கீதம் 2:1

ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்?


தமிழ் நடை:

திருப்பாடல் 2:1

வேற்றினத்தார் சீறி எழுவதேன்?மக்களினங்கள் வீணாகச்
சூழ்ச்சி செய்வதேன்?


மணிப்பவள நடை :

அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:3

அவர் பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்.


தமிழ் நடை:

திருத்தூதர் பணிகள் 1:3

இயேசு துன்புற்று இறந்தபின்பு நாற்பது நாள்களாக அவர்களுக்குத் தோன்றி, இறையாட்சியைப் பற்றிக் கற்பித்தார்; பல தெளிவான சான்றுகளால் தாம் உயிரோடு இருப்பதைக் காண்பித்தார்.



மணிப்பவள நடை :

எபிரேயர் 7 : 14 - 17


நம்முடைய கர்த்தர் யூதாகோத்திரத்தில் தோன்றினாரென்பது பிரசித்தமாயிருக்கிறது; அந்தக் கோத்திரத்தாரைக்குறித்து மோசே ஆசாரியத்துவத்தைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே.
அல்லாமலும், மெல்கிசேதேக்குக்கு ஒப்பாய் வேறொரு ஆசாரியர் எழும்புகிறாரென்று சொல்லியிருப்பதினால், மேற்சொல்லியது மிகவும் பிரசித்தமாய் விளங்குகிறது.
அவர் மாம்ச சம்பந்தமான கட்டளையாகிய நியாயப்பிரமாணத்தின்படி ஆசாரியராகாமல்,
நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத்தக்கதாக அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியரானார்.


தமிழ் நடை:

எபிரேயர் 7 : 14 - 17

நம் ஆண்டவர் யூதாவின் குலத்தில் தோன்றினார் என்பது தெளிவாகத் தெரிந்தது தானே? குருக்களைப் பற்றிப் பேசியபோது, மோசே அக்குலத்தைக் குறித்து ஒன்றுமே குறிப்பிடவில்லை.
மெல்கிசதேக்கைப் போன்ற மற்றொரு குரு
மெல்கிசதேக்குக்கு ஒப்பான வேறொரு குரு தோன்றியிருப்பதால் நாம் மேற்கூறியது இன்னும் அதிகத் தெளிவாகிறது. இவர் திருச்சட்டத்தின் கட்டளைப்படி மனித இயல்புக்கு ஏற்ப அல்ல, அழியாத வாழ்வின் வல்லமையால் குருவாகத் தோன்றினார். இவரைப் பற்றி,
“மெல்கிசதேக்கின் முறைப்படி
நீர் என்றென்றும் குருவே” என்னும் சான்று உரைக்கப்பட்டுள்ளது.



மணிப்பவள நடை :

யாத்திராகமம் 16 : 4 -5

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் உங்களுக்கு வானத்திலிருந்து அப்பம் வருஷிக்கப்பண்ணுவேன்; ஜனங்கள் போய், ஒவ்வொரு நாளுக்கு வேண்டியதை ஒவ்வொரு நாளிலும் சேர்த்துக்கொள்ளவேண்டும்; அதினால் அவர்கள் என் நியாயப்பிரமாணத்தின்படி நடப்பார்களோ நடக்கமாட்டார்களோ என்று அவர்களைச் சோதிப்பேன்.
ஆறாம் நாளிலோ, அவர்கள் நாள்தோறும் சேர்க்கிறதைப் பார்க்கிலும் இரண்டத்தனையாய்ச் சேர்த்து, அதை ஆயத்தம்பண்ணி வைக்கக்கடவர்கள் என்றார்.


தமிழ் நடை:

விடுதலைப் பயணம் 16 :4-5


அப்போது ஆண்டவர் மோசேயை நோக்கி, “இதோ பார்! நான் உங்களுக்காக வானத்திலிருந்து அப்பத்தைப் பொழியப் போகிறேன். மக்கள் வெளியே போய்த் தேவையானதை அன்றன்று சேகரித்துக்கொள்ள வேண்டும். என் கட்டளைப்படி நடப்பார்களா இல்லையா என்பதை நான் இவ்வாறு சோதித்தறியப் போகிறேன்.✠ ஆனால் ஆறாம் நாளில், நாள்தோறும் அவர்கள் சேகரித்து வந்ததைவிட இருமடங்கு சேகரித்துத் தயாரித்து வைத்துக் கொள்ளவேண்டும்” என்றார்.



புரிந்ததா தமிழர்களே! தமிழில் எழுதுவது எத்துணை இனிமையானது.

இன்று சமற்கிருதக் கலப்பு குறைந்துள்ளது. ஆனால் ஆங்கிலக் கலப்பு மிகுந்து விட்டது.
முந்தையதைப் போல் இதுவும் முற்றிலுமாய் ஒழிக்கப்பட வேண்டிய வழக்கமாகும். ஆங்கிலச் சொற்கள் பெரும்பாலும் நமது ஒலிப்பு முறைக்கு பொருத்தமில்லாத ஒலிகளைக் கொண்டுள்ள மொழியாகும். அது நமது நுரையீரல் இயக்கத்திற்கு ஏதுவான் மொழியல்ல. ஆனால் தமிழ் மொழியானது நமது மூச்சினை நாம் எவ்வாறு வெளியிட வேண்டுமோ, அதற்கு இயைவாக அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு அறிவியல் மொழி. இந்த உண்மையை உணர்ந்து, தமிழில் பிற மொழிச்சொற்கள் கலவாமல் எழுத பேச முயல்வோம்.


நட்புடன்,
பெஞ்சமின் பிராங்கிளின் பி.

5- மேழம்- 2021
(18-4-2021)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக