சனி, 6 நவம்பர், 2021

தமிழகம் ஊரும் பேரும் -3

 ரா.பி. சேதுப்பிள்ளை எழுதிய "தமிழகம் ஊரும் பேரும்" நூலிலிருந்து.


பகுதி - 3


இல் என்றால் வீட்டினைக் குறிக்கிறது. ஆயினும் இச்சொல் சில பழமையான ஊர்ப் பெயர்களிலும் சேர்ந்துள்ளது.

அன்பில் என்ற ஊர் திருச்சி நாட்டில் உள்ளது. இதன் பொருள் அன்பின் இருப்பிடம் என்பதாகும். இவ்வூரின் இன்றைய பெயர் கீழ் அம்பில்.

தேவாரப் பாடல் பெற்ற ஊர்களில் ஒன்று திருப்பாச்சில். (இன்று அது திருவாசி).

இல் என்ற பெயரில் இருந்த சில ஊர்களின் பெயர் ஊர் என்று மாறியுள்ளது. அவை,

திருச்செந்தில் ~ திருச்செந்தூர்
மைலாப்பில் ~ மைலாப்பூர்
இடை மருதில் ~ திருவிடை மருதூர்
புடை மருதில் ~ திருப்புடை மருதூர்
மணவில் ~ மணவூர்

அதுபோலவே இல் என்ற பின்னொட்டோடு அமைந்த ஊரின் பெயரில் அழைக்கப்பட்ட சில புலவர்களின் பெயர்கள்,

அரிசில் கிழார்,
அஞ்சில் ஆந்தையார்,
பொருந்தில் இளங்கீரனார்,
கள்ளில் ஆத்திரையர்.


வீட்டைக் குறிக்கும் அகம் என்ற சொல்லின் அமைந்த சில ஊர்களின் பெயர்கள்.

திரு ஏரகம்,
திரு ஏடகம்,
மருதகம்,
கையகம்,
கல்லகம்.

உள் என்னும் சொல் மிக அரிதாக ஊர்ப் பெயரில் காணப்படும். சென்னைக்கு அடுத்துள்ள வைணவத் திருப்பதிகளுள் ஒன்று எவ்வுள் என்பதாகும்.
திருமங்கையாழ்வாரும் திருமழிசையாழ்வாரும் அப்பதியைப் பாடியுள்ளனர். இவ்வூரின் பெயரில் ஏற்பட்டுள்ள மாற்றமானது சுருக்கமாக,

எவ்வுள் > திரு எவ்வுள் > திரு எவ்வுளூர் > திருவள்ளூர்.




வாசல், வாயில் போன்ற பெயரில் முடியும் ஊர்களும் தமிழ்நாட்டில் உண்டு.

கொற்றவாசல் ~ கொத்தவாசல்

அரண்மனையின் தலைவாயிலை கொற்றவாசல் என்பர்.

திருவள்ளூர் அருகில் உள்ள பில வாயில் என்ற ஊர்,

பில வாயில் > பிலவாயிலூர்> வாயிலூர்> வயலூர் என வழங்கப்படுகிறது.


ஒரே குலத்தவர் சேர்ந்து வாழும் ஊர் குடியிருப்பு என்றும் குடி என்றும் சொல்லப்படும்.

கற்குடி, விற்குடி, திருக்குறுங்குடி, இடையன்குடி போன்ற ஊர்ப்பெயர்களே இதற்குச் சான்று.

இருப்பு, இருக்கை முதலிய பின்னொட்டிலும் சில ஊர்ப்பெயர்கள் உள்ளன.

ஓரிர விருக்கை என்ற பெயரே மருவி ஓரிக்கை ஆனது.

பல குடிகள் சேர்ந்து வாழுமிடம் சேரி எனப்படும். பள்ளர் வாழுமிடம் பட்சேரி. இதுபோல் பறைச்சேரி, ஆயர்சேரி, பார்பனச் சேரி போன்ற ஊர்களும் உண்டு. எனவே, சேரி என்னுஞ்சொல் ஒரு குலத்தவர் சேர்ந்து வாழும் இடத்தை முற்காலத்தில் குறிப்பதாயிற்று.

சோழ மண்டலக் கடற்கரையில் புதிதாக உருவான சேரி, புதுச்சேரி ஆகும். இதனை ஐரோப்பியர் பாண்டிச்சேரியாகத் திரித்துவிட்டனர்.

கூறை என்ற சொல் ஆடையைக் குறிக்கும். கூறை நெய்யுந் தொழில் மிகுதியாக நடந்த நாடு, கூறை நாடு எனப்பட்டது.

தொழில்களால் சிறப்புறும் ஊர்கள் பேட்டை எனப்படும். சேலத்தில், ஓரிடத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் சந்தை கூடும் இடமாதலால், செவ்வாய்ப் பேட்டை என ஒரு ஊர் பெயர் பெற்றது. திருநெல்வேலிக்கு மேற்கே பேட்டை என்ற ஊர் உண்டு. அங்கு பல பட்டறைகள் உண்டு.

ஐரோப்பியருள் போர்த்துக்கீசியரை தமிழ்நாட்டார் பறங்கியர் என்று அழைத்தனர். அவர்களால் திருத்தப்பட்ட ஊர் தென்னார்க்காட்டில் உள்ள பறங்கிப் பேட்டையாகும்.

சென்னை மாநகரத்தின் தண்டையார்ப் பேட்டை, வண்ணார்ப் பேட்டை, சிந்தாதிரிப் பேட்டை முதலிய ஊர்கள் கைத்தொழிலின் சிறப்பினால் பேட்டை எனப் பெயர் பெற்றன.

மன்னார் கடற்கரையில் உள்ள ஊர் முத்துப் பேட்டை ஆகும். முத்து வேலை நிகழ்ந்த இடம் அது.

வட ஆர்க்காட்டில் உள்ள வாலஜா பேட்டை மகமது அலியின் பெயரால் நிறுவப்பெற்ற நகரமாகும்.
பதினெட்டுப் பேட்டைகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கிய அந்நகரம், பஞ்சு வணிகத்திலும் கூல வணிகத்திலும் முன்னணியில் இருந்தது.

கொற்கை மூதூரின் அருகே நாணயம் அடிக்கும் அக்கசாலை ஒன்று அமைக்கப்பட்டதால், அவ்வூரும் அக்கசாலை எனப் பெயர் பெற்றது.

புதிதாய் தோன்றும் ஊர்கள் புது என்னும் அடைமொழியை பெரும்பாலும் ஏற்கும்.
புதுக்கோட்டை, புதுச்சேரி, புதுக்குளம், புதுப்பேட்டை, புதுவயல் போன்ற ஊர்கள் அவ்வாறு பெயர் பெற்றவையே.

கிழக்கில் அமைந்த ஊர் குணவாசல்.
மேற்கில் அமைந்த ஊர் குடவாசல்.
கிழக்கில் அமைந்ததால் கீழ் வேளூர் எனப்பட்ட ஊர் இன்று கீவளூர் என சிதைந்துள்ளது.

இதுபோலவே கீழக்கரை, கீழக்குடி, மேலூர், மேல்பாடி போன்ற ஊர்ப் பெயர்கள் திசையின் பெயரில் அமைந்தவையே.

தமிழ்நாட்டிற்கு வடக்கே உள்ள நாட்டை வடுகு என்று அழைத்தனர்.

ஊர்களின் அமைப்பைக் கருதி, தலை, இடை, கடை என்னும் அடைமொழிகள் அவற்றின் பெயரோடு இணைக்கப்படுவதுண்டு.

அவை, தலையாலங்கானம், தலைச் செங்காடு, தலைவாசல், தலைக்காடு, தலைவாய் நல்லூர், திருவிடை மருதூர், திருவிடைச் சுரம், இடையாறு, இடைக்காடு, கடைக் கோட்டூர், கடைவாய்ச்சேரி, கடையம் போன்றவை.

இடை என்னும் பொருள்படும் நடு என்ற சொல்லில் நடுவக்குறிச்சி, நடுக்காவேரி போன்ற ஊர்கள் உண்டு.

ஆந்திராவில் உள்ள சித்தூர் என்ற பெயர் சிற்றூர் என்ற பெயரின் திரிபே.

பழைய சிவ தலங்களில் ஒன்று சிற்றேமம். அது திருச்சிற்றேமம் ஆகிப் பின் திருச்சிற்றம்பலம் ஆனது.

சில ஊர்களின் நெடுமையும் குறுமையும் அவற்றின் பெயர்களால் அறியப்படும். நெடுங்களம் என்ற ஊர் இன்று திருநெடுங்குளம் என்று வழங்கப்படுகிறது. நீடூர் என்ற ஊர் பெரிய ஊராய் இருத்தல் வேண்டும்.

திருக்குறுங்குடி, குறும்புலியூர், குறுங்கோழியூர் போன்ற ஊர்கள் குறுகிய ஊர்களாய் இருந்திருத்தல் வேண்டும்.

செந்நிறக்குன்று உள்ள ஊரே திருச்செங்கோடு ஆனது. இதே பொருளில் சேர நாட்டில் செங்கன்னூர் என்ற ஊர் உள்ளது.
அருணாசலம் என்ற வட சொல்லின் பொருள் செங்குன்றம் என்பதே.

கருங்குளம், கருங்குழி, கார் குறிச்சி முதலிய ஊர்கள் கருமைக் கருத்தின் அடிப்படையில் உருவானவை.

கருநிறம் வாய்ந்த தரை கரிசல் எனப்படும். (சின்னக் கரிசல், குலையன் கரிசல்). செந்நிறம் வாய்ந்த நிலம் செவ்வல் எனப்படும். (மேலச் செவல், கீழச் செவல், முள்ளிச் செவல்).

வெண்மையின் அடியாய் பிறந்த ஊர்கள் திருவெண்காடு, திருவெண்பாக்கம், திருவெள்ளறை போன்றவை.

மேடான நிலத்தில் அமைந்ததால் கள்ளிமேடு, கூனிமேடு, மேட்டூர், மேட்டுப் பாளையம் எனப் பெயர் பெற்றன.

திட்டை, திடல் போன்ற சொற்களும் மேட்டைக் குறிப்பவையே.

குழி என்னும் சொல் பள்ளத்தைக் குறிக்கும். (கருங்குழி, ஊற்றுக்குழி, அல்லிக்குழி, பள்ளக்குழி, குழித்தலை).

தாவு = குழி

(கருங்குழித்தாவு, பணிக்கத்தாவு)

தாள் = மரத்தின் அடி

திருப்பனந்தாள், முருகந்தாள், ஆலந்தாள், ஈச்சந்தாள், கருவந்தாள், மாவடி, ஆலடி, இலவடி, மூங்கிலடி.

ஊர்ப்பொதுவாக அமைந்த இடம் நத்தம் எனப்படும்.

பொட்டல் வெளியில் எழுந்த நத்தம் பொட்டல் நத்தம் எனப்பட்டது. அது மருவி பொட்டணம் ஆயிற்று.

களம் = சமவெளியான இடம்.

திருவேட்களம், திருவஞ்சைக் களம், நெடுங்களம்.

களம் என்ற சொல்லின் அடியாகப் பிறந்தது களத்தூர்.

எயில் = கோட்டை

தொண்டை நாட்டின் 24 கோட்டங்களுள் ஒன்று எயில் கோட்டம். அக்கோட்டத்தில் காஞ்சி மாநகரம் இருந்ததால், காஞ்சியை எயிற்பதி என்றார் சேக்கிழார்.

பேரெயிலூர் பேரையூர் ஆனது.

செஞ்சி அருகே உள்ள எய்யல் என்னும் ஊர் எயில் என்ற பெயரின் திரிபே.

கோட்டையின் மதிற்சுவர் இஞ்சி எனப்படும்.
பழஞ்சி = பழ + இஞ்சி

வட பழஞ்சி, தென் பழஞ்சி, பெரும் பழஞ்சி (தளபதி சமுத்திரம்), சிறு பழஞ்சி போன்ற ஊர்கள் உள்ளன.

ஆரை = கோட்டை மதில்

சேலம் நாட்டில் ஆரைக்கல் என்னும் கோட்டை உண்டு. அங்குள்ள பாறையின் மீது பெருமாளின் நாமம் இடப்பட்டது. ஆகையால் ஆரைக்கல் என்ற ஊர் நாமக்கல் ஆனது.

அகழி நிறைந்த கோட்டையை கிடங்கில் என்று கூறுவதுண்டு. அவ்வாறு ஒரு இடம் திண்டிவனத்திற்கு அருகில் கிடங்கால் என்ற பெயரில் உள்ளது.

அரசனுக்கு உரிய படைகள் அமைந்த இடம் படைவீடு எனப்படும். பாண்டியனுக்குரிய படைவீடு பொருநையாற்றின் கரையில் உள்ளது. அதன் பெயர் மணப்படை வீடு. தற்போது மணப்படை என அழைக்கப்படுகிறது.


படைவீரருக்குரிய ஊர் பாளையம் எனப்படும். தமிழ்நாடு முழுமையும் பல பாளையங்கள் காணப்படினும், கொங்கு நாடே பாளையத்திற்குப் பேர் பெற்ற நாடாகும். மேட்டுப்பாளையம், உத்தம பாளையம், உடையார் பாளையம் என்று பல. நெல்லைச் சீமையில் பாளையங்கோட்டையும் அதற்கு மேற்காக மேலப் பாளையமும் உள்ளது.

வல்லம் என்ற சொல்லும் அரணுடைய ஊரைக் குறிப்பதாகத் தெரிகிறது. வட அர்க்காட்டில் உள்ள திருவல்லம், தஞ்சாவூருக்கு மேற்கே வல்லம் போன்ற ஊர்கள் இன்றும் உள்ளன.


தொண்டைமான் ஆட்சியைத் தோற்றுவித்த இரகுநாதன் என்பவர் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புதிதாக ஒரு கோட்டை கட்டி, அதற்குப் புதுக்கோட்டை என்று பெயரிட்டார். அவர் காலத்தில் அது தலைநகராய்ச் சிறந்திருந்ததால், அக்கோட்டையின் பெயரே நாட்டின் பெயராயிற்று.

மலைகளில் அமைந்த கோட்டை துர்க்கம் எனப்படும். எ.கா: மகி மண்டல துர்க்கம்.

ஆண்மையூர் என்ற ஊர் ஆம்பூர் என்று தற்போது மாறியுள்ளது. அங்குள்ள நடுகல்லில் வில்லும் வாளும் தாங்கிய ஒருவன், மாற்றார் அம்புகள் உடலிற் பாய்ந்தும் முனைந்து நிற்கும் நிலை காட்டப்படுகிறது.

ஏனாதி = போர்க்களத்திலும் அவைக்களத்திலும் சிறந்த சேவை செய்தவர். இப்பெயரிலும் பல ஊர்கள் உள்ளன.


மின்னெழுத்தில் வடித்தது.

பெஞ்சமின் பிராங்கிளின். பி

19 துலை 2021
(05-11-2021)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக