அருளியாரின் வேர்ச்சொல்லாய்வு இதழான "காரணம்" என்ற இதழின் மூன்றாம் பதிப்பிலிருந்து சில வேர்ச்சொல்லாய்வுத் தகவல்கள்.
1) ஒரு வயலில் முளையிட்ட பசிய நாற்றைப் பிடுங்கி வேறோரு வயலில் நட்டுவைப்பது போல், ஒரு வீட்டில் பிறந்த பெண், அவரின் திருமணத்திற்குப் பின் வேறொரு புக்ககத்தில் (புகு+ அகம்) வாழ வேண்டியிருப்பதால், அப்பெண்ணை நாத்தனாள் (நாத்தனார்) என்று அழைப்பதாக ஒரு கருத்து, சில அறிஞர்களிடையே உள்ளது.
ஆனால் அருளியாரோ, நாத்தனாள் என்ற சொல்லுக்கான விளக்கம் வேறு என்கிறார்.
நாத்தாண் என்றால் பேச்சுக்கு ஒத்திசைவாக (நாவுக்குத் துணையாக) இயங்கும் உறவள் என்று பொருள் கொள்கிறார் அருளியார்.
"நாத்தூண் நங்கை" (சிலப் : 16:19)
தூண் = துணை
நாத்தூண் + ஆள் [<அள்]> நாத்தூணாள்>நாத்தனாள் (கொச்சை வழக்கு)
2) நாய் என்ற விலங்கிற்கு தமிழில் உள்ள வேறு பெயர்களும் அதன் காரணங்களும் பின்வருமாறு.
2.1) நாய் = செக்கச் செவேல் நிற நாவுறுப்பு, வாயிவிருந்து தொங்கியவாறு உள்ள சிறப்புக் காட்சியமைந்த விலங்கு.
2.2) நாய் தனது கனிவினையும் அன்பினையும் நன்றியுணர்வினையும் மாந்தனிடம் காட்டுவதற்கென்றே வாய்த்துள்ள அரிய தோகையன்ன வளைவுற்ற வாலும், நாய்க்குரிய சிறப்பு உறுப்பு ஆகும்.
"வையெயிற்று வலஞ்சுரித் தோகை ஞாளி மகிழும்" (அகம் : 122 :9)
உல் = வளைவுக் கருத்து வேர்
உல்>ஒல்>அல்
அல்>[யல்]> ஞல் >ஞால்>ஞாள்>ஞாளி = சுரிந்த வாலினையுடைய நாய்
2.3) ஊரே அயர்ந்து துஞ்சிக் கிடக்கும் இராப் போதிலும், தான் துஞ்சாது விழித்திருந்து காவல் புரியும் தன்மைகாரணமாக நாயை, ஞமலி என்றும் அழைத்தனர்.
யா =கருமை
யா>யாஅம்>யாம்>யாம்+அம்>யாமம்
யாம்+அல்>யாமல்>ஞாமல்>+இ>ஞாமலி>ஞமலி = நாய்
3) கதிரவன் என்ற சொல்லுக்கு இணையான சில சொற்கள்.
3.1) ஞாயிறு
3.2) எல்
3.3) எல்லவன்
3.4) எல்லை
3.5) என்றவன்
3.6) என்றூழ்
3.7) என்று
3.8) எரி
4) கேணையன் என்ற சொல்லில் உள்ள இழிக்கருத்து.
தொடாரி = பறை வகையுள் ஒன்று, கிணைப் பறை
"தென்கண் மாக்கினை" (புறம் : 376: 6-5, 397: 9-11)
பறை (கிணை)என்னும் தொல்லிசைத் தோற்கருவியை இயக்கும் உழைப்பாண்மையரை இழிவுப்படுத்தும் முகமாக கேணையன் என்றான் மடமாந்தன்.
கிணையன்>கிணைஞன் (புறம் : 377: 10-15)
கிணைஞன் >கேணையன்
5) அன்றில் என்று ஒரு பறவையினம் உண்டு. அதன் இணைபிரியா வாழ்வினை எடுத்துக்காட்டும் முகமாகவே அப்பறவைக்கு அன்றில் எனப்பெயரிட்டதாக அகராதிகள் சுட்டுகிறது. (அன்று+இல்) அதாவது இரு பறவைகளில் ஒன்று இறந்தாலும், மற்றொரு பறவை உயிரோடு இராதாம்.
ஆனால் அருளியார் இதற்கான பெயர்க்காரணமாக அப்பறவையின் தலை, சிவந்து இருப்பதையே சுட்டுகிறார்.
இல் = ஒளி, செம்மை, செந்நிறம்
இல்>எல் = கதிரவன், ஒளி, செந்நிறம்
எல்>என்>என்+து>என்று = கதிரவன்
என்று + ஊழ்>என்றூழ் = கதிரவன்
எகர அகரத் திரிபில் என்று > அன்று ஆனது.
அன்று + இல் [ஒர் ஈறு] = அன்றில்
இந்தப் பொருள் அடிப்படையில், தலையில் செந்நிறம் பொறிக்கப்பெற்ற பறவையை தமிழர்கள், அன்றில் பறவை என்றழைத்தனர்.
"நெருப்பின் அன்ன செந்தலை அன்றில்" (குறுந்: 160:1)
சூட்டு என்றால் உச்சிக் கொண்டைப் பகுதி (crest). செஞ்சூட்டு என்றால் சிவந்த தலை.
(சிவந்த தலையைக் கொண்ட அன்றில் பறவையின் படம் காரணம் இதழின் முகப்பில் உள்ளது)
6) எருவை என்றால் தலை வெளுத்து உடல் சிவந்திருக்கும் பருந்து என்று செ.சொ.பி. அகராதி சுட்டுகிறது. ஆனால் அருளியாரோ எருவை என்பது கழுகு வகையில் ஒரு தனியினம் என்கிறார்.
6.1) கழுகுகளோடு சிவந்த செவியையுடைய எருவைகளும் வட்டமிட்டன (புறம்: 370: 22-26)
6.2) நிணந் தின்னும் செஞ்செவி எருவையும் கூடியிருக்கும். (புறம் : 373 : 36-39)
6.3) செஞ்செவி எருவை (அகம் : 3 :2-6)
6.4) எருவையின் சிவந்த செவி (அகம் : 111 : 10-14)
6.5) குருதி போன்ற சிவந்த செவியையுடைய எருவை (ஐங்கு : 335 :2-4)
6.6) ஊனைப் பதித்தாற்போல் அஞ்சத் தக்க சிவந்த செவியையுடைய எருவைச் சேவல் (அகம் : 51: 2-7)
குழு - திரட்சிக் கருத்து முதனிலை
கழுகு = பருத்த உருவமுடைய பறவை
புரம் = உயர்ச்சிக் கருத்து
பருந்து = உயரப் பறக்கும் பறவை
(பறவை என்னும் பெயரும் புரம் என்ற சொல்லிலிருந்து கிளைத்ததே.
புர >பற
பறவு> +ஐ> பறவை)
ஊறு = பறவையினத்தையும் கொல்ல வல்ல வல்லிய பருந்து வகை
"பறவையை ஊறுகொண்டெழச் சிரற்றின பார்ப்பினில் (கம்பரா :
268)
வல்+ (ல்)+ ஊறு = வல்லூறு
வல்லூறு = அரசாளி (இராஜாளி)
புல்லூறு = சிறு கழுகு வகை
எருவை என்னும் பறவை கழுகுமன்று, பருந்துமன்று, வல்லுறுமன்று, புல்லூறுமன்று.
ஊன் பதித்தாற் போன்ற செஞ்செவியை உடைய பறவையே எருவை என்பதாகும்.
எரிவு> எருவு> எருவு +ஐ> எருவை
(காரணம் இதழின் பின்பக்கத்தில் எருவையின் படத்தைக் காணலாம்)
எருவை = செம்பு
எருவை நீர் = குருதி
7) தமிழில் அண்டுதல் என்றால் சேர்தல் என்று பொருள். (காண்க: அண்டிப் பிழைத்தல்)
இந்த அண்டு என்ற சொல்லே ஆங்கிலத்தில் and என்றானது எனச் சிலர் கூறுகின்றனர். அது பிழையானது என்கிறார் அருளியார்.
உம் = ஓர் இணைப்பு இடைச் சொல்
உம் +து >உந்து
உந்துதல் = பொருந்துதல், ஒத்தல், நெருங்குதல்
"உம் - உந்து ஆயிற்று" (இலக்கணக் கொத்து - வினையியல் : 3 :16)
"உம் உந்து ஆகும் இடனுமார் உண்டே" (தொல்.சொல். 292. சேனா)
"உம் என்பது உந்து என விரிந்து நிற்கவும் பெறும் இடமும் உண்டு (தொல்.சொல். 287. தெய்வச் உரை)
உந்து > unde - und (German)
> endu (Icelandic)
> und (Modern German)
> ande, and (Old Fries)
> and (English)
உந்து (தமிழ்) > and ( English)
இது போன்று ஏராளமான தகவல்கள் அடங்கியுள்ளன.
இதழைப் பெற : அறிவன் அருளி
+919444576660 & 9994125321
இவண்,
பெஞ்சமின் பிராங்கிளின் . பி
15- கன்னி - 2021
(01-10-2021)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக