சனி, 6 நவம்பர், 2021

பாயிரவியல்

 திருக்குறளின் 133 அதிகாரங்களில் முதல் நான்கு அதிகாரங்கள் கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்பதாகும். இந்நான்கு அதிகாரங்களையும் பாயிரவியல் என்ற தமிழறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் அவை பாயிரவியலுக்கான இலக்கணத்தைக் கொண்டிருக்கவில்லை, ஆகையால் அவ்வதிகாரங்களை பாயிரவியல் என்ற பெயரில் குறிக்கலாகா என்றும் சில அறிஞர்கள் குறுகின்றனர். இது குறித்து பாவலரேறு பெருச்சித்திரனார் எழுதிய "திருக்குறள் மெய்ப்பொருளுரை" என்ற நூலில் எழுதியுள்ளவையைக் காண்போம்.


தமிழிலயக்கியங்களில் பாயிரம் என்ற சொல் முதலில் எங்கு எழுதப்பட்டுள்ளது என்பதை நாம் அறிதல் வேண்டும்.

தமிழின் தொன்மையான இலக்கண நூலான, தொல்காப்பிய மரபியலில் நூல்மரபு பற்றிய நூற்பாக்களிலும் நூலுக்கு பாயிரம் கூறுவது மரபு என்பது கூறப்பெறவில்லை. ஆனாலும் தொல்காப்பியத்திற்குச் சிறப்புப் பாயிரமாகப் பனம்பரனார் என்பவர் செய்த பாயிரம் ஒன்று உள்ளது. எனவே இதுபற்றிய வரலாறு மயக்கமளிப்பதாகவே உள்ளது.

எனினும் நூலுக்குப் பாயிரம் பாடுவது ஒரு மரபாக உள்ளதைப் பிற்கால நூல்களால் அறியலாம்.



தமிழ் இலக்கியங்களிலில் பாயிரம் என்ற சொல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது பொ.கா. 8 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பழமொழி நானூறு என்ற இலக்கியத்தில்தான்.
அதில் வரும் 35 ஆம் பாடலில்
"செறு மனத்தார் பாயிரம் கூறிப் படைதொக்கால்" என்று உள்ளது. ஆனால் இதில் வரும் பாயிரம் என்ற சொல்லுக்கு வீரத்திற்கு வேண்டும் முகவுரை என்றே பொருள்.

தமிழிலக்கிய வரலாறில் பொ.கா.12 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நன்னூலில்தான் பாயிரம் கூறுவதற்குரிய இலக்கணம் கூறப்பெற்றுள்ளது.

நன்னூலில் கூறப்படும் இலக்கண முறைப்படி பாயிரம் என்பது, பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் என இருவகைப்படும்.

இதன்படியும் திருக்குறளில் உள்ள பாயிரம் பொதுப்பாயிரமா, சிறப்புப் பாயிரமா என்று மதிப்பிட இயலாத வகையில் உள்ளதை நாம் மனதில் கொள்வோம்.



யாரெல்லாம் பாயிரம் எழுதலாம் என்பதையும் நன்னூல் தெளிவாக விளக்குகிறது.

'தன்ஆ சிரியன் தன்னொடு கற்றோன்
தன்மா ணாக்கன் தகும்உரை காரன் என்(று)
இன்னோர் பாயிரம் இயம்புதல் கடனே' -51

இதன் பொருள் : நூலாசிரியனின் ஆசிரியர், நூலாசிரியனுடன் கல்வி பயின்றவர், நூலாசிரியனின் மாணவர், நூலாசிரியனின் நூலுக்கு உரை எழுதியவர், இந்நால்வருள் ஒருவர் நூலுக்குரிய சிறப்புப் பாயிரம் எழுதுவதே முறை.

இந்த கருத்தினடிப்படையில் பார்த்தால், திருக்குறளுக்குப் பாயிரம் எழுதியவர் திருவள்ளுவர் அல்ல என்ற பொருளல்லவா வருகிறது?


மேலும் நன்னூல் 52 இல், நூலாசிரியனே தனது நூலுக்கு பாயிரம் கூறுதல் கூடாது என்று கூறுகிறது.

தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினும்
தான்தற் புகழ்தல் தகுதி யன்றே - 52


இதற்கடுத்த நூற்பாவில் (53) எந்தச் சூழலில், நூலாசிரியனே தனது நூலுக்கு பாயிரம் எழுதலாம் என்பதை நன்னூல் கீழ்கண்டவாறு சுட்டுகிறது.


"மன்னுடை மன்றத்து ஒலைத் தூக்கினும்
தன்னுடை ஆற்றல் உணரார் இடையிலும்
மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினும்
தன்னை மறுதலை பழித்த காலையும்
தன்னைப் புகழ்தலுநம் தகும்புல வோற்கே"


அதாவது, அரசவையில் பாடும் போதும், தன்னுடைய புலமைத் திறன் அறியாதவரிடையிலும், அவையில் ஏற்படும் தருக்கத்தில் வெற்றி பெறவேண்டிய சூழ்நிலையிலும், எதிரியொருவன் தன்னைப் பழித்துரைக்கும்போதும் புலவன் தன்னைத்தானே புகழ்ந்து சொல்வது தவறாகாது என நன்னூல்.


ஆனால் இந்நூற்பாவில் கூறப்பட்டுள்ளபடி, திருவள்ளுவர் தன்னைத்தானே புகழ்ந்தபடியாக முதல் நான்கு அதிகாரங்களையும் படைக்கவில்லை என்பதை நோக்கும் போது, அந்த நான்கு அதிகாரங்களும் பாயிரம் என்ற வகையில் இல்லை என்பதையும் அறியலாம்.

சிறப்புப் பாயிரத்தில் கூறப்பட வேண்டிய கருத்துகள் இன்னின்ன என்பதை நன்னூல் 47 ம் 48 ம் பின்வருமாறு கூறுகிறது.


" ஆக்கியோன் பெயரே வழியே எல்லை
நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே
கேட்போர் பயனோ டாயெண் பொருளும்
வாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே" - 47


" காலங் களனே காரண என்றிம்
மூவகை ஏற்றி மொழிநரும் உளரே " - 48

அதாவது, ஆக்கியோன் பெயர், அந்நூல் வழிநூலா அல்லது முதல்நூலா என்பது, அந்நூல் வழங்குதற்குரிய இட எல்லை, அந்நூலின் பெயர், அஃது அமைந்துள்ள யாப்பு, அந்நூல் கூறுகின்ற பொருள், அதனைக் கேட்பதற்குரியவர், அதன் பயன், அது தோன்றிய காலம், அது தோன்றிய இடம், அது தோன்றுவதற்குரிய காரணம் ஆகிய பதினொரு விளக்கங்களும் அப்பாயிரத்துள் கூறப்பெறுதல் வேண்டும் என்பது இவ்விரு நூற்பாக்களிலும் கூறப்பெற்றுள்ளது.

இப்பதினொரு விளக்கங்களிலும் ஒன்றுகூட, திருக்குறளில் இடம்பெற்றுள்ள முதல் நான்கு அதிகாரங்களிலும் கூறப்படவில்லை என்பதை நோக்கும்போது, அவை பாயிரவியல் எனப் பெயர் பெற்றிருத்தல் பொருத்தமானதா என்று சிந்திக்க வேண்டியுள்ளது.


இனி பாயிரம் என்ற சொல்லின் பொருளை அறிவோம்.

பாவாணர் கூற்றுப்படி, பாயிரம் என்ற சொல் பயிர்தல் என்ற சொல்லிலிருந்து உருவானதாகக் குறிப்பிடுகிறார்.

1) பயிர்தல் - ஊரி (ஊர்வன), விலங்கு, பறவைகள் ஒன்றையொன்று அழைத்தல்

"செங்காற் பல்லி தன்துணை பயிரும்
(குறுந்: 16)

கடுவன்..... மந்தியைக் கையீடுஉப் பயிரும்" (புறம்: 158 )

"புலம்புதரு குரல புறவுப்பெடை பயிரும்" (குறுந்: 79)

2) பயிர்தல் - மக்களை அழைத்தல்

"நாடுபுறை பயிருங்காலை முரசம்" (சிலப் : 26-52)

பயிர் >பயிரம்>பாயிரம் = அழைப்பு, போருக்கழைப்பு, போருக்கு அழைக்கும் முன்னுரை, முகவுரை

(ஒ.நோ.) அகவுதல் = அழைத்தல்
அகவு = அகவம் = போர்

போர்க்களத்தில் பகைவரை விளித்துக் கூறும் "நெடுமொழி", "வஞ்சினமொழி" என்னும் மறவியல் பாயிரம் (முகவுரை) வேறு. நூல்முகவுரையைக் குறிக்கும் பாயிரம் வேறு.

இவ்வாறு நன்னூலாருக்கு முன் (பொ.கா: 12 ம் நூற்றாண்டு), நூல் வழக்கேறாத ஒரு சொல்லால் திருவள்ளுவர், தம்நூலுள் பாயிரவியல் என்றோர் இயல் வகுத்துப் பெயரிட்டிருப்பார் என்பது எவ்வாற்றானும் பொருந்தாத ஒரு கூற்றே என்பதில் ஐயமே இல்லை.


அதே ஐயப்பாட்டின் பொருட்டு, திருக்குறளின் முதல் நான்கு அதிகாரங்களும் திருக்குறளைச் சாராதவை என்றோ, அவை இடைச்செருகல் என்றோ முடிவு செய்வது கொஞ்சமும் பொருத்தமாயில்லை.

அந்த நான்கு அதிகாரங்களும் 'பாயிரவியல்' என்று அடக்கிக்கூறப் பெறுவதற்குப் பொருத்தமாயில்லை என்று கருதலாமே தவிர, அவை திருக்குறள் நூல் அமைப்பிற்கு ஒத்தனவாக இல்லை என்று கூற இயலாது.

முதல் அதிகாரம் 'கடவுள் வாழ்த்து' என்று கூறப்பெறுவதற்குப் பொருத்தமாயில்லை என்பது பல உரையாசிரியர்களின் கருத்து. எனவேதான் இவ்வுரை நூலில் "அறமுதல் உணர்தல்" என்று பெயர் பெற்றுள்ளது. (இதற்கான நெடிய விளக்கம் அவ்வதிகார முன்னுரையில் உள்ளது).

ஆக, அறமுதல் உணர்தல், வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் ஆகிய நான்கு அதிகாரங்களை உள்ளடக்கிய பகுதிக்கு ஒரு பெயர் சூட்டுவதென்றால் "அறவியல்" என்னும் பெயரே மிகவும் பொருத்தமானதாக இருக்கும். அந்நான்கு அதிகாரங்களும் அறத்தொடர்புடையன என்பதில் யாருக்கும் ஐயப்பாடு வரவேண்டியதில்லை.

இவ்வாறு இவ்வியலை அமைத்துக் கொள்வதானால், அறத்துப்பால் என்னும் பால்பகுப்பில் அறவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்னும் நான்கு இயல்கள் அடங்குவதாகக் கொள்ளலாம்.

பாயிரவியல் என்பதைவிட அறவியல் என்பதே இவ்வியலுக்கு மிகவும் பொருத்தமுடையது. பாயிரம் என்பதற்கான இலக்கணக்கூறுகளில் ஒன்றுகூட இந்நான்கு இல்லையென்பது ஒன்று. பாயிரம் என்னும் சொல்லே தொல்காப்பியர் காலத்திலோ, திருவள்ளுவர் காலத்திலோ தோன்றியிருக்கவில்லை என்பதால், திருவள்ளுவரே இவ்வியலுக்கு இப்பெயரைச் சூட்டியிருக்க முடியாதென்பது இரண்டு.

எனவே பாயிரவியல் என்று அழைப்பதைக் காட்டிலும் அறவியல் என்பதே பொருத்தம் என்க. அறவியல் என்பது இயற்கையாக நின்றியங்கும் ஒழுகியலுக்கு ஒத்த அமைப்பு விளக்கமாக அமைந்துள்ளதை அறிவினார் அறிந்து மகிழ்க.


நூல் : திருக்குறள் மெய்ப்பொருளுரை

மின்னெழுத்தில் வடித்தது,


பெஞ்சமின் பிராங்கிளின் . பி
02- கன்னி - 2021
(18-09-2021)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக