தைஇ என்ற சொல்லுக்கு குளிர்ச்சி, குளிர், குளிர் பொருந்திய மாதம் என்ற பொருள்கள் உள்ளதாக சொல்லாய்வு அறிஞர் அருளியார் கூறுகிறார்.
தை என்ற சொல்லுக்கு ஒன்று, நெருங்கு, கூடு, செறி என்ற பொருள்கள் உள்ளன.
இதில் செறிவுப் பொருள் குளிர்ச்சிப் பொருளையும் தரும்.
நள்= செறிவு
நள்+பு = நட்பு = சேர்க்கை
நள்>நளி (நளியென் கிளவி செறிவும் ஆகும்- தொல்.உரி: 25)
நளி = குளிர்ச்சி
"நளிச் சிலம்பில்" (புறம்: 136)
நள்+இர்>நளிர்= குளிர், நடுங்குகை
நளிர் சுரம் = குளிர் காய்ச்சல்
தை>தைஇ = குளிர்ச்சி, குளிர், குளிர் பொருந்திய மாதம். இந்தக் காலத்தில் ஆறு, குளம் போன்றவை குளிர்ந்த நீர்மையாயிருத்தல் உண்மை.
இந்த "தைஇ" என்றச் சொல் குளிர்ந்த தைமாதத்தைச் சுட்டும் விதமாக தமிழிலக்கியங்களில் காணப்படுகிறது. அப்பாடல்கள் யாவென்றும், அதன் பொருள் என்னவென்றும் பார்ப்போம்.
1. அகநானூறு 269
செம்பூங் கரந்தை புனைந்த கண்ணி
வரிவண்டு ஆர்ப்பச் சூட்டிக் கழற்கால்
இளையர்பதிப் பெயரும் அருஞ்சுரம் இறந்தோர்,
தைஇ நின்ற தண்பெயல் கடைநாள்,
பொலங்காசு நிறைந்த கோடுஏந்து அல்குல்
பொருள்:
சிவந்த கரந்தைப் பூவைத் தொடுத்து இயற்றிய கண்ணியை, வரிகளையுடைய வண்டினம் மொய்க்குமாறு அதன்மேற் சூட்டினர். இப்படிப் புனைந்து வழிபட்டு விட்டுக், கழல் விளங்கும் காலினரான வீரர்கள், தம் ஊருக்குத் திரும்பினர். அத்தகைய கடத்தற்கரிய சுரநெறியினையும் கடந்து சென்றோர் நம் தலைவர்.
தைத் திங்களிலே எஞ்சி நிற்கும் குளிர்ந்த பெயலின் கடைப்பட்ட நாட்களிலே பொற்காசுகளைத் தொடுத்து அணிந்த பக்கம் உயர்ந்த அல்குலினிடத்தே, நலம் வாய்ந்த பெரிய பூங்கொத்துக்கள் குழையோடுஞ் சேர்ந்து அசைந்து கொண்டிருக்கும்.
2. குறுந்தொகை - 196 :
வேம்பின் பைங்காய் என்தோழி தரினே,
தேம்பூங் கட்டி என்றனிர் ; இனியே,
பாரி பறம்பின் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர்
ஐய ! அற்றால் அன்பின் பாலே !
பொருள்:
“தலைவனே ! முன்பு என் தலைவி வேம்பின் காயை உனக்குத் தந்தாள். அதனை அழகிய இனிக்கும் வெல்லக் கட்டி என்று சொன்னாய். இப்போதோ தை மாதத்தில் குளிர்ந்து கிடக்கும் பாரியின் பறம்பு மலையில் உள்ள குளிர்ச் சுனையின் நீரை அவள் தருகிறாள். ‘அது வெம்மையாய் உள்ளது - உவர்ப்பாய் உள்ளது’ என்று கூறுகிறாய். நின் அன்பின் தன்மை இப்படிப்பட்டதாகி விட்டதே !”.
3. புறநானூறு- 70
தேஎம் தீம் தொடைச் சீறியாழ்ப் பாண!
'கயத்து வாழ் யாமை காழ் கோத்தன்ன
நுண் கோல் தகைத்த தெண் கண் மாக் கிணை
இனிய காண்க; இவண் தணிக' எனக் கூறி;
வினவல் ஆனா முது வாய் இரவல!
தைஇத் திங்கள் தண் கயம் போல,
கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியல் நகர்,
அடுதீ அல்லது சுடுதீ அறியாது;
இரு மருந்து விளைக்கும் நல் நாட்டுப் பொருநன்,
கிள்ளி வளவன் நல் இசை உள்ளி,
நாற்ற நாட்டத்து அறு கால் பறவை
சிறு வெள் ஆம்பல் ஞாங்கர் ஊதும்
கை வள் ஈகைப் பண்ணன் சிறுகுடிப்
பாதிரி கமழும் ஓதி, ஒள் நுதல்,
இன் நகை விறலியொடு மென்மெல இயலிச்
செல்வைஆயின், செல்வை ஆகுவை;
விறகு ஒய் மாக்கள் பொன் பெற்றன்னதோர்
தலைப்பாடு அன்று, அவன் ஈகை;
நினைக்க வேண்டா; வாழ்க, அவன் தாளே!
பொருள் :
சீறியாழ்ப் பாணனே யாமையைக் கோத்து வைத்தது போலக் கிணையைக் கொம்பில் இயைத்து வைத்துள்ளாய்; உன் பாடல் இசையைக் கேட்க என்று என்னை அழைத்து வினவுகின்றாய்; இரவலனே!
தை மாதத்துத் தண்குளம்போல் கொள்ளக் கொள்ளக் குறையாத செல்வ வளம் மிக்கது அவன் அரண்மனை.
அந்த நாட்டு மக்கள் அடுப்புத் தீயைக் கண்டு உள்ளனர். சூரியனின் வெப்பத்தை அறிந்துள்ளனர். வெம்மை என்பதை அவர்கள் கண்டது இல்லை. அவன் ஆட்சியில் செம்மையைத்தான் காண்கின்றனர். அத்தகைய தலைவன் கிள்ளி வளவனின் நற்புகழைக் கேட்டு அறிந்து அதனை மதித்து இனிய நகைமொழி உடைய விறலியோடு நீ சென்றால் செல்வம் பெற்று உயர்வாய்.
விறகு வெட்டி எடுத்துவரச் செல்லும்ஆள் எதிர்பாராமல் பொன் கிடைக்க அதனைப் பெறுகிறான். அதைப் போன்றது அன்று அவன் ஈகை, பெறுவோமோ இல்லையோ என்று ஐயுறுதல் வேண்டாம்; எதிர்பாராமல் கிடைப்பது அன்று; பரிசில் பெறுவது உறுதி.
கிள்ளிவளவன் தாள் வாழ்க.
4. நற்றிணை - 80-7
'மன்ற எருமை மலர் தலைக் காரான்
இன் தீம் பாற்பயம் கொண்மார், கன்று விட்டு,
ஊர்க் குறுமாக்கள் மேற்கொண்டு கழியும்
பெரும் புலர் விடியலின் விரும்பிப் போத்தந்து,
தழையும் தாரும் தந்தனன், இவன்' என,
இழை அணி ஆயமொடு தகு நாண் தடைஇ,
தைஇத் திங்கள் தண் கயம் படியும்
பெருந் தோட் குறுமகள் அல்லது,
மருந்து பிறிது இல்லை, யான் உற்ற நோய்க்கே.
பொருள்:
தொழுவத்துள்ள அகன்ற தலையையுடைய கார் எருமையின் மிக இனிய பால் நிரம்பக் கறந்துகொள்ளும் பொருட்டு அவற்றின் கன்றுகளைத் தொழுவத்து நிறுத்திவிட்டு; ஊரிலுள்ள மாடு மேய்க்கும் இளஞ் சிறுவர்கள் அவ் வெருமைகளின் மீதேறிக்கொண்டு தனியே மேய்த்து வருதற் கேகாநிற்கும் பெரிய இருள் நீங்கும் விடியற் காலத்து, விரும்பிப் போத்தந்து தழையும் தாரும் இவன் தந்தனன் என விருப்பத்தோடு வந்து உடுக்குந் தழையும் சூடுமாலையும் இவன் தந்தான் என்று; கலன் அணிந்த ஆயத்தொடு தகுதியுடைய நாணம் தன்னை வளைக்கப்பட்டு; என்னைப் பெறுமாறு தான் எடுத்துக்கொண்ட நோன்பின் பயனாகத் தைத்திங்களிலே தண்ணிய நீரில் ஆடுகின்ற பெரிய தோளையுடைய அவ்விளமகளே யான் உற்ற நோயை நீக்கும் மருந்தாயமைந்துள்ளாள்; அவளல்லது பிறிதொரு மருந்து இல்லைகாண் !;
நன்றி.
பெஞ்சமின் பிராங்கிளின் பி
3- சுறவம்-2021 (பொ.ஆ)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக