(இணையத்தில் கிடைத்தது. எழுதியவர் யார் என்று தெரியவில்லை)
மலையாளம்
மலையாளம்1 malaiyāḷam, பெ.(n.)கேரள நாட்டில் பேசப்படுவதும் திராவிட மொழிக் குடும்பத்துள் ஒன்றுமான ஒரு மொழி (சி.பெ.அக.);; one of the Dravidian languages, now spoken in Kerala.
[மலை + ஞாலம் → மலையாளம்.]
அம்மொழியில் ‘மலையாளம்’ என்றே எழுதப்படுகிறது.
மலையாளப் பெயர் :
கோளம், மலையாளம் என்பன தற்போது மலையாள நாட்டையும், அங்கு வழங்கும் மொழியையும் குறிக்கும் பெயர்களாம்.
கழக (சங்க);க் காலத்தில் முத்தமிழ் நாடுகளில் ஒன்றாயிருந்த சேரநாட்டின் மேல்பாகமே இப்போது மலையாள நாடாயிருக்கின்றது. கீழ்ப்பாகம் கொங்குநாடும் (கோயம்புத்துர், சேலம், கோட்டகப் பகுதிகள்);, கங்கநாடும் (சேலம் எருமையூர் (மைசூர்);ச் சீமைப் பகுதிகள்); ஆகும். மறன், திறன் முதலிய பெயர்கள் முறையே மறல், திறல் என்று திரித்தாற் போல, சேரன் என்னும் பெயரும் சேரல் எனப் போலியாகிப் பின்பு ‘அன்’ ஈறுபெற்றுச் சோலன் என வழங்கிற்று.
எ-டு: சேரன் செங்குட்டுவன்;களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல், தகடுர் எறிந்த பெருஞ்சேரல், குடக்கோ இளஞ்சேரல்.
தென்னவன் சேரலன் சோழன் (திருவாசகம்);
செறுமா வுகைக்கும் சேரலன் காண்க
சேரலன் என்னும் பெயர் முறையே கேரலன், கேரளன் என மருவிற்று, இம் மரூஉ வடிவங்கள் பழந்தமிழ் நூல்களில் ஒரிடத்துங் காணப்படவில்லை;பிந்திய நூல்களில்தாம் காணப்படுகின்றன. இதனால் இவை பிற்காலத்தன என்பது தெளிவு.
ச-க, போலி ‘ஒ.நோ: சீர்த்தி-கீர்த்தி, செம்பு – கெம்பு (க.); ல-ள, போலி, ஒ.நோ:செதில் – செதிள்,
வேலை – வேளை.
பாண்டியன் என்னும் பெயர் பாண்டியம் என ஈறு திரிந்து பாண்டியன் செய்திகளைக் குறித்தாற்போல, கேரலன் கேரளன் என்னும் பெயர்களும், கேரலம் கேரளம் என ஈறு திரிந்து சேர நாட்டையும், அந் நாட்டு மொழியையுங் குறிக்கும்.
மலையாள நாட்டெல்லை:
மேற்குத் தெடர்ச்சி (குட); மலைக்கு மேற்கே, வடக்கில் மங்களூரி (மங்களபுரம்);லிருந்து தெற்கில் திருவனந்தபுரம் வரைக்கும், தென்கன்னடம் மலபார் கொச்சி திருவிதங்கோடு (திருவாங்கூர்); என்னும் நான்கு சீமைகளில் தாய்மொழியாகப் பேசப்படுவது மலையாளம்.
தென்னை மரத்தின் வடமொழிப் பெயராகிய நாளிகேரம் என்பது, கேரம் என முதற்குறையாய்ப் பின்பு, கேரளம் என விரிந்து அம் மரம் மிகுதியாய் வளரும் மலையாள நாட்டைக் குறித்ததென்பது பொருந்தக் கூறும் பொய்ம்மைக் கூற்றாகும். வட மொழிக்கும் வடமொழியாளர்க்கும் உயர்வும் அதனால் தமிழுக்கும் தமிழர்க்கும் இழிவும் கற்பிக்கப்பட்ட புராணக் காலத்தில், வடமொழித் தொடர்பை உயர்வென மயங்கிய மலையாள நாட்டார், கேரளம் என்னும் பெயர்க்கு வடமொழி மூலத்தையும், கேரள நாட்டிற்குப் பரசுராமக்ஷேத்திரம் என்னும் புதுப்பெயரையும் மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொண்டனர். பரசுராமர்க்கு முந்தியே வழங்கிய பெயர் சேரநாடு என்பதும், அவர் இறுதிக் காலத்தில் தவஞ் செய்த இடமாகக் கூறியிருப்பது சேரநாட்டிற்கு வடக்கிலுள்ள கடற்கரைப் பகுதி யென்பதும் அறிதல் வேண்டும். (பண்டைச் சேரநாடு கூர்ச்சரம் (குஜரத்); வரையில் தொடர்ந்திருந்ததாலும், வடநாட்டு ஆரியர் தென்னாட்டிலும் வந்து குடி புகுந்ததாலும், பரசுராமர் தவஞ்செய்த இடத்திற்கு ஏற்பட்ட ‘பரசுராம க்ஷேத்திரம்’ என்னும் பெயர் அவ்விடத்தோடு தொடர்ந்த தென்பாகத்தையும் பிற்காலத்தில்
தழுவலாயிற்று. இந்து (சிந்து); என்னும் வடநாட்டுப் பகுதியின் பெயர் தென்னாட்டையும் தழுவினாற்போல.
பதினெட்டாம் நூற்றாண்டில் ஒரு நம்பூதிரிப் பார்ப்பனரால் இயற்றப்பட்டதாகத் தெரிகின்ற கேரளோத்பத்தி என்னும் புராணத்தில், பிராமணர் பஞ்சாபினின்று பரசுராமரால் தென் கன்னடத்திலுள்ள கோகர்ணத்தில் முதல் முதல் குடியேற்றப்பட்டனர் என்னும் செய்தி கூறப்பட்டுள்ளது. இதை எசு.சீனிவாச ஐயங்கார் தமது தமிழாராய்ச்சி (Tamil Studies); என்னும் நூலில் (ப.348); மறுத்து, பிராமணரைக் கோகர்ணத்தில் குடியேற்றியவன் கடம்ப மரபினரில் முதல்வனான மயூரவர்மன் என்றும், அவன் காலம் கி.பி.6ஆம் நூற்றாண்டின் முற்பகுதி யென்றுங் கூறியுள்ளார்.
மலையாளம் என்னும் பெயர் அண்மையில் தோன்றியதாகும். சேரநாடு மலைநாடாதலால் சேரநாட்டான் மலையாளி யெனப்பட்டான். மலை + ஆளி = மலையாளி. ஆளி = ஆள். முதலாளி. தொழிலாளி, வங்காளி, பங்காளி முதலிய பெயர்களை நோக்குக. மலையாளியின் நாடும் மொழியும் மலையாளம் எனப்பட்டன.
ஒ.நோ.: வங்காளி → வங்காளம்.
சேரநாடு கி.பி.10 ஆம் நூற்றாண்டு வரை செந்தமிழரசரும் செந்தமிழ்ப் புலவரும் திகழ்ந்த செந்தமிழ் நாடாயிருந்தது. (நன்னூற் சிறப்புப்பாயிரத்தில் “குணகடல் குடகம் குமரி வேங்கடம், எனும் நான்கெல்லையினிருந்தமிழ்க் கடலுள்” என்று கூறியிருத்தலால் 12ஆம் நூற்றாண்டில் சேரநாடு கொடுந்தமிழ் நாடாயிருந்தமை பெறப்படும்);. ஐங்குறுநூறும் பதிற்றுப் பத்தும் ஆகிய கழக நூல்களும், சிலப்பதிகாரம் ஆகிய கழக மருவிய நூலும், புறப்பொருள் வெண்பாமாலையும், சேரமான்
பெருமான் நாயனாரின் ஆதியுலாவும், குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழியும் மலையாள நாடெனப்படும் சேரநாட்டில் எழுந்த செந்தமிழ் நூல்களே.
பதினாலாம் நூற்றாண்டில் (கி.பி.1320); வீரராகவ சக்கரவர்த்தியால் பொறிக்கப்பட்ட கோட்டயம் செப்பேட்டு மொழி ‘வாதில்’ (வாயில்); ‘ஒண்டாயில்’ (உண்டாகில்);, ‘எழுந்நள்ளி’ (எழுந்தருளி);’ முதலிய சில மலையாளத் திரிபுகளுடன் கூடிய தமிழே. அதே நூற்றாண்டில் (கி.பி.1350); இயற்றப்பட்ட கண்ணச்சப் பணிக்கர் இராமயண மொழியும் இத்தகையதே.
எ – டு :
“கொண்டலிந் நேரிருண்டு சுருண்டு நீண்டொளி வார்ந்து
திங்ஙும், குந்தள பாரமோடு முகில் குலத்திட மின்னல்
போலே, புண்டரீகேணந் நரிகெப் பொலிந்தவள சீதசொந்நாள்”
இதில், குந்தளபாரம் புண்டரீகேகூணன் என்னும் இரண்டே வடசொற்கள். இவற்றுள்ளும் குந்தளம் என்பது கூந்தல் – என்னும் தென்சொல் திரிபு;வார்ந்து – வார்ந்து, திணுங்கும் – திங்ஙும் இடை – இட, அருகே – அரிகெ.
போர்த்துக்கீசிய விடைத் தொண்டர் (Missionaries); முதன்முதல் மலையாளக் கரையில் வந்திறங்கினர் என்றும், மலையாள நாட்டு மொழியைத் தமக்கு முந்திய அரபியர்போல மலபார் என்றழைத்தனர் என்றும், கீழ்க்கரையிலும் இலங்கைக் கரையிலும் வழங்கிய மொழி (தமிழ்); அதை யொத்திருக்கக் கண்டு அதையும் அப்பெயரால் அழைத்தனர் என்றும் அவர்கள் மலையாளக் கரையிலுள்ள அம்பலக்காட்டில் 1577 அல்லது 9இல் முதன் முதல் தமிழெழுத்தில்
அச்சிட்ட புத்தக மொழியை ‘மலவார் அல்லது தமிழ்’ (Malabar or Tamil); என்று குறித்தனர் என்றும் கால்டுவெல் கண்காணியார் கூறுகின்றார் (முன்னுரை பக்.10-13);.
இதனால், 16ஆம் நூற்றாண்டு வரை மலையாள நாட்டு மொழி கொடுந்தமிழாயிருந்த தென்றும், அதன் பின்னரே வடமொழிக் கலப்பால் மலையாளமாகத் திரியத் தொடங்கிற்றென்றும் அறியலாம். மலையாளம் மிகத் தெளிவாய்ப் பிரிந்து போனது 17ஆம் நூற்றாண்டில் (கி.பி.1650); ஆரியவெழுத்தை வகுத்தும், பெரு வாரியாய் ஆரியச் சொற்களையும் விகுதிகளையும் புகுத்தியும், சேரநாட்டு மொழியைச் சிதைத்தது துஞ்சத்து எழுத்தச்சனாலேயே.
1860ஆம் ஆண்டில்தான் முதல் மலையாள இலக்கணமும் எழுந்தது. 19ஆம் நூற்றாண்டு வரை மலையாளியர் தமிழையும் கற்றுவந்தன ரென்றும் அதன் பின்புதான் அவ் வழக்கம் அடியோடு விடப்பட்டதென்றும் முதியோர் கூறுகின்றனர்.
மலையாள நாட்டில் பார்ப்பனரொழிந்த மற்றக் குலத்தாரெல்லாம் தமிழர் அல்லது திரவிடரே. குயவர், பணிக்கர், பாணர், ஆயர், ஈழவர், கவுடர் (கவுண்டர்); முதலிய பல குலத்தினர் தமிழ் நாட்டிலும் உள்ளனர். நாயர், நாயாடி, வாரியர், செறுமன் முதலிய குலத்தினர் மலையாளத்திற்குச் சிறப்பாயிருந்த தாலும், அவர் குடிப்பெயரெல்லாம் தனித் தமிழே. தாழ்ந்தது உயர்ந்தது என்று முறையே பொருள் தரும் கிழக்கு மேற்கு என்னும் திசைப்பெயர்கள் குடமலைக் கீழ்நாட்டிற்கே ஏற்றவை. இவை மலையாளத்திலும் வழங்குவது மலையாள நாடு தமிழ்நாட்டுப் பகுதியே யென்பதையும் மலையாளியர் தமிழ் மரபினரே என்பதையும் உணர்த்தும். பிற்காலத்தில் மேற்குத் திசைக்குப் படு ஞாயிறு என ஒரு பெயரை அவர்கள் புனைந்து கொண்டாலும், அதுவும் தனித்தமிழே என்பதை அறிதல் வேண்டும்.
மலையாள நாட்டு அல்லது சேரநாட்டுத் துறைமுகங்கள் பழந்தமிழ் நூல்களில் பெருங்கடல் வாணிக நிலையங்களாகக் கூறப்பட்டுள்ளன.
செங்கோற், குட்டுவன் தொண்டி (ஐங்-178);
……………………… சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிரி யார்ப்பென (அகம்.148);
கலந்தந்த பொற்பரிசம்
கழித்தோணியாற் கரைசேர்க்குந்து
மலைத்தாரமும் கடற்றாரமும்
தலைப்பெய்து வருநர்க்கீயும்
புனலங் கள்ளின் பொலந்தார்க் குட்டுவன்
முழங்குகடல் முழவின் முசிரி யன்ன (புறம் 343);
இயற்றேர்க் குட்டுவன் வருபுனல் வாயில் வஞ்சி (பத்.3);
மலையாள நாட்டிலுள்ள பல சிவநகரங்களும் விண்ணகரங்களும் நாயன்மாராலும் ஆழ்வாராலும் பாடப்பட்டுள்ளன. கோகர்ணம் திருச்செங்குன்றூர் (கொல்லத்திற் கருகிலுள்ளது); என்பன அப்பராலும் சம்பந்தராலும் 7ஆம் நூற்றாண்டிலும், திருவஞ்சைக்களம் சுந்தரரால் 9ஆம் நூற்றாண்டிலும், நேரிற் பாடப்பட்டுள்ளன. திருமுழிக்களம், திருநாவாய், திருவல்லவாழ் என்பன திருமங்கையாழ்வார் 8ஆம் நூற்றாண்டில் நேரிற் சென்று கண்டவை. இவற்றுடன் திருவனந்தபுரம், திருவண்பரிகாரம், திருக்காட்கரை, திருப்புலியூர், திருச்செங் குன்றூர், திருவண்வண்டூர், திருவத்தரு, திருக்கடித் தானம், திருவாறன் விளை என்பன நம்மாழ்வாரால் (கி.பி.920); குறிக்கப்படுகின்றன. வித்துவக்கோடு குலசேகராழ்வாரால் 8ஆம் நூற்றாண்டிற்
பாடப்பட்டது (தமிழாராய்ச்சி, ப.347); மேற்கூறிய திருநகரங்கள் 10ஆம் நூற்றாண்டுவரை செந்தமிழ் நிலையங்களா யிருந்திரா விட்டால் பாடல் பெற்ற நகரங்களாயிரா என்பது திண்ணம்.
மலையாளத்திலுள்ள பழைமையான ஊர்ப் பெயர்களெல்லாம் இன்றும் தனித்தமிழாயே யிருக்கின்றன. கோடு (கோழிக்கோடு – calicut);, சேரி (தலைச்சேரி);, குளம் (எர்ணாக்குளம்);, புரம் (அங்காடிபுரம்);, நாடு (வலையநாடு);, ஊர் (கண்ணனூர்);, குன்றம் (பூங்குன்றம்);, கா (கன்னங்காவு);, காடு (பாலைக்காடு – Palghat);, குடி (சாக்குடி);, வாசல் (பள்ளிவாசல்);, அங்காடி (பரப்பனங்காடி);, தோட்டம், பாடி, துறை (திருப்புனித்துறை);, குறிச்சி, ஏரி, கரை (கொட்டாரக் கரை);, களம் (திருவஞ்சைக் களம்);, இருப்பு முதலியன தனித்தமிழ் ஊர்ப் பெயரீறுகளாம். கோடு = மலை. கா = சோலை.
பழஞ்சேரநாட்டின் கீழ்ப்பகுதியின் தென்பாகம் (கொங்குநாடு); இன்றும் தமிழ்நாடா யிருக்கின்றது;வடபாகத்திற் கன்னடம் புகுந்துள்ளது.
13ஆம் நூற்றாண்டில் கொடுந்தமிழ் நாடுகளாகக் குறிக்கப்பட்ட வேணாடு, பூமி நாடு, குட்ட நாடு, குட நாடு, மலை நாடு என்பன இற்றை மலையாள நாட்டுப் பகுதிகளாயுள்ளன.
பூமியன் உதியன் கொங்கன் பொறையன்
வானவன் கட்டுவன் வான வரம்பன்
வில்லவன் குடநாடன் வஞ்சி வேந்தன்
கொல்லிச் சிலம்பன் கோதை கேரளன்
போந்தின் கண்ணிக்கோன் பொருநைத் துறைவன்
சேரன் மலையமான் கோச் சேரன் பெயரே
என்பது திவாகரம்.
இவற்றுடன் கொங்கன், கொல்லிச் சிலம்பன், பொருநை (ஆன் பொருநை);த் துறைவன் என்னும் பெயர்கள், கோயம்புத்துர் சேலம் ஆகிய இரு கோட்டகங்களும் சேரநாட்டைச் சேர்ந்தன என்பதை விளக்கும். கொங்கன் = கொங்கு நாட்டரசன், கொங்கு நாடு கோயம்புத்தூர்க் கோட்டகப் பகுதி. ஒரு கிளையினரான அதிகமான் மரபினர் சேலத்தைச் சேர்ந்த தகடூரை (தர்மபுரியை);த் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.
குற்றியலுகரத்தைப் புள்ளியிட்டுக் காட்டல், திதியைப் பக்கமென்றல் முதலிய பழந்தமிழ் வழக்கங்கள் இன்றும் மலையாள நாட்டில் தானுள்ளன.
தொன்றுதொட்டுச் சேரநாட்டு மெலித்தல் திரிபுச் சொற்கள் சில சோழ பாண்டி நாடுகளிலும் இருவகை வழக்கிலும் வழங்கி வருகின்றன.
எ-டு: ‘திரிநவும்’ (தொல்.83); பழனி, (புறம் 113); பழுனிய (மணிமே.328); ‘அறியுனன்’ (புறம் 134); (திரிகின்ற திரிகுன்ன – திரியுன்ன – திரியுனி – திரிந); ‘பழுத்து – பழுன்னு – பழுன்னு’ – பழுநி – பழுதி, மகிழ்கின்றான் – மகிழுன்னான் – மகிழுநன் – மகிழ்நன். வாழ்கின்றான் – வாழுன்னான் – வாழுநன் – வாழ்நன் – வாணன். இனி, திரியும் – திரியுன் + அ = திரியுன – திரின – திரிந என்றுமாம். இங்ஙனமே பிறவும், னகரத்தினும் நகரம் முந்தினதெனக் கொள்ளவும் இடமுண்டு. ஆங்கனம் – அங்கனம் – அங்ஙனம் – அன்னணம்.
ஆஒ வாகும் பெயருமா ருளவே
ஆயிடன் அறிதல் செய்யு ளுள்ளே
என்று கூறியதும் சேரநாட்டிற்கே சிறப்பாய் ஏற்கும். இவற்றால், பண்டை முத்தமிழ் நாட்டுத் தொடர்பையும், சேரநாட்டு வினைமுற்றுகள் பாலீறு பெற்றதையும், அறியலாம்.
……… வண்டமி ழிகழ்ந்த
காய்வேற் றடக்கைக் கனகனும் விசையனும்
செங்குட்டு வன்றன் சினவலைப் படுதலும் என்று சிலப்பதிகாரத்திலும்,
வடதிசை யெல்லை யிமய மாகத்
தென்னங் குமரியொ டாயிடை யரசர்
முரசுடைப் பெருஞ்சமந் ததைய வார்ப்பெழச்
சொல்பல நாட்டைத் தொல்கவி னழித்த
போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவ
என்று பதிற்றுப்பத்திலும் பாடப்பட்டுள்ள சேர நாட்டுச் சீரிய மறம் இன்று ஆரிய அடிமைப்பட்டு அணுவளவுத் தமிழுணர்ச்சியின்றிக் கிடப்பது நினைக்குந்தோறும் நெஞ்சைப் புண்படுத்துவதா யிருக்கின்றது.
மலையாளம் திரிந்ததற்குக் காரணங்கள் :
1. சேரநாடு பெரும்பாலும் மலைத்தொடரால் தடுக்கப்பட்டுப் பிற தமிழ்நாடுகளுடன் பெருந் தொடர்பு கொள்ளாதிருந்தமை.
2. 12ஆம் நூற்றாண்டோடு பாண்டிய மரபும் 13ஆம் நூற்றாண்டோடு சோழ மரபும் சேர மரபுடன் மணவுறவு நிறுத்தியமை.
3. வடமொழிக்கும் வடமொழியாளர்க்கும் தெய்வ உயர்வு கற்பிக்கப்பட்டமையும் வரம்பிறந்த வடசொற் கலப்பும்.
4. மிகு மழையால் மலையாளியர்க்கு மூக்கொலி சிறந்தமை.
5. மலையாளியர் முன்னோரின் செந்தமிழ் நூல்களைக் கல்லாமை.
6. மலையாளியரின் ஒலிமுறைச் சோம்பல்.
மலையாளம் திரிந்த முறைகள் :
1. முற்றுவினைகள் பால் காட்டும் ஈறிழத்தல். எ-டு: வந்தான் – வந்து.
2. மெலித்தல் திரிவு. எ-டு: எழுந்து – எழுந்நு, அங்கு – அங்ஙு, கழுகு – கழுங்ஙு. குஞ்சி – குஞ்ஞி. வீழ்ந்து – வீணு.
3. நிகழ்கால வினைமுற்றின் கின்றது என்னும் இடைநிலை உன்னு எனத் திரிதல். எ-டு: செய்கின்ற – கெய்குன்னு – செய்யுன்னு.
4. வேற்றுமை யுருபுத் திரிவு. எ-டு : அதினுக்கு – (அதின்கு); – அதின்னு, உடைய – உடே – டே -றே.
5. போலித் திரிவு. எ-டு: நரம்பு – ஞரம்பு, செய்ம்மின் – செய்வின்.
6. கொச்சைத் திரிவும் தொகுத்தலும், எ-டு: உள்ள – ஒள்ள, மலை – மல, அகற்றுக – அகத்துக இரு – இரி, புறா-, ப்ராவு, கனா – கினாவு, வேண்டும் _ வேணம், செய்யவேண்டும் – செய்யேண்டு, போக வேண்டும் – போகேணம்.
7. றகர ரகர வேறுபாடின்மை. எ-டு: உறவு – உரவு.
8. நிகழ்கால வினையெச்சத்திற்குப் பதிலாக ‘வான்’ ‘பான்’ ஈற்று வினையெச்சங்களும் அவற்றின் திரிபுகளும் வழங்கல். எ-டு: குடிப்பான் = குடிக்க, நடப்பான் – நடக்கான் = நடக்க, வருவான் = வர.
9. சிறப்புச் சொற்கள் பொதுப் பொருளில் வழங்கல். எ-டு: வெள்ளம் (புதுப் பெருக்கு நீர்);, = நீர். மூரி (கிழஎருது); – எருது, நோக்கு (கூர்ந்து பார்); = பார்.
10. சொற்களை ஒருமருங்கு பற்றிய பொருளில் வழங்கல். எ-டு: அதே = ஆம், வளரே – மிக மதி = போதும்;வலிய = பெரிய.
11. ஒருபொருட் பல சொற்களில் தமிழில் வழங்காத ஒன்றை வழங்கல். எ-டு: சொல்(த.); – பறை (ம.); கூப்பிடு (த.); விளி (ம.);.
12. ஆய் என்னும் வினையெச்ச வீறு ஆயிட்டு என வழங்கல். எ-டு: சிவப்பாய் – சிவப்பாயிட்டு.
13. நெடுஞ்சுட்டு வழக்கு வீழாமை. எ-டு: ஆயாள் (அவ் ஆள்);, ஈ.மூரி (இம்மூரி);.
14. ஏவல் வினைகள் பெரும்பாலும் வியங்கோள் வடிவில் வழங்கல். எ-டு: தா-தரிக, தர.
15. துணை வினை வேறுபாடு. எ-டு: பறையுவான் கழியும் (சொல்ல முடியும்);. பறையுவான் கழியுன்னில்ல (சொல்லமுடியாது);.
16. செய்யும் என்னும் முற்று மூவிடத்தும் வழங்கல். எ-டு: ஞான், நீ, அவன் – போகும்.
17. றன்னகரம் தந்நகரமாக எழுதப்படல்.
18. வழக்கற்ற சொல் வழங்கல். எ-டு: கைநீட்டக் காசு, தம்பிராட்டி.
19. புதுச்சொற்கள். எ-டு: மேடி = வாங்கு, வெடிப்பி = துப்புரவாக்கு.
20. வினைமரபு வேறுபாடு எ-டு: முட்ட புழுங்ஙுக (அவிக்க);, விளக்கு கெடுக்க (அணைக்க);, முட்டுக் குத்துக (கொடுக்க);, காலுற முறிக்க (வெட்டுக);. மடங்ஙி (திரும்பி); வருக.
குறிப்பு : சேரநாட்டுக் கொடுந்தமிழாகிய மலையாளத்திலுள்ள இருவகைத் தமிழ்ச் சொற்களையும் வழக்கு வீழ்த்தற்கும் மலையாளத்தார் தமிழ்ச் சொற்களைக் கடன்கொண்டு அதனால் அவர்க்கும் தமிழர்க்கும் தொடர்பு ஏற்படாதபடியும், ஆரியர் வடசொற்களை மிகுதியாய்க் கலந்து மலையாளத்தைக் கெடுத்துத் தமிழுக்கு மிக அயன்மைப்படுத்திவிட்டனர்.
மலையாளம்2 malaiyāḷam, பெ.(n.)
மலையாளத்து மிளகு; pepper grown in Malabar (சா.அக.);.
மலையாளம்3 malaiyāḷam, பெ.(n.)
ஐம்பத்தாறு நாட்டினுள் ஒன்று; Malabar, one of 56 {} (q.v.);.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக