வெற்றிக்கொடி கட்டு என்ற படத்தில் பார்த்திபன் வடிவேலுவைப் பார்த்து " இதுக்குப் பெயர் 'போட்டு வாங்குவது' அதாவது Give and Take policy " என்பார். இதற்கு இணையான ஒரு பழந்தமிழ்ச் சொல் குறித்து நான் அறிய வந்ததை உங்களோடு பகிர்கிறேன்.
விளா மரத்தில் ஏறி விளாங்காய் பறிப்பது கடினமான காரியம். ஆகையால் விளாங்காய் பறிக்க விரும்புபவன், விளா மரத்தில் உள்ள குரங்கினை நோக்கி கல்லினை விட்டெறிவான். உடனே குரங்கும் பதிலுக்கு ஏதேனும் ஒன்றை அவன் மீது விட்டெறியப் பார்க்கும். குரங்கின் கைகளுக்கு எளிதில் கிடைப்பது விளாங்காயே. ஆகையால் விளாங்காயைப் பறித்து கல்லெறிந்தவன் மீது எறியும்.
கல்லெறிந்தவன் விளாங்காய்களைப் பொறுக்கிக் கொண்டு செல்வான். இப்படிக் கிடைக்கும் விளாங்காயே "குரங்கெறி விளாங்காய்" எனப்பட்டது.
இனிமேல் "போட்டு வாங்குவது" , "Give and Take Policy" என்ற சொற்றொடருக்கு இணையாக "குரங்கெறி விளாங்காய்" என்றும் சொல்லப் பழகுவோம்.
உசாத்துணை : பாவாணரின் சொல்லாய்வுக் கட்டுரைகள்.
இவண்,
பெஞ்சமின் பிராங்கிளின் . பி
28- கடகம் - 2021
(13-08-2021)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக