சனி, 6 நவம்பர், 2021

இரதம்

 ஒரு மரத்தின் வளர்ச்சியில் இலைகள் துளிர்த்துத் தோன்றி, தழைத்து உதிர்வதுபோல், ஒரு மொழியில் காலத்திற்கு காலம் மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப, புதிது புதிதாகச் சொற்கள் தோன்றுவதும், மக்களிடையே வழங்குவதும், மாற்றம் பெறுவதுமான செயற்பாடுதான் மொழி வளர்ச்சி.


மாந்த இனத்தின் தோற்ற வளர்ச்சியில் நெடுங்காலம் பயன்பட்டு வந்திருக்கும் மொழி தமிழ்மொழியாகும். மாந்தன் தோன்றிய கற்காலம் முதல் இக்காலம் வரை ஒவ்வொரு காலகட்டத்திலும், நேர்ந்துள்ள வளர்ச்சிகள் அனைத்தும் தமிழ்மொழியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு ஒரு சொல்லின் வரலாற்றை விளக்கும் முறைக்கு சொற்பிறப்பியல் என்று பெயர். இந்த சொற்பிறப்பியல் என்ற ஆய்வு முறை தமிழின் தொன்மைமிகு நூலான தொல்காப்பியத்திலேயே
பதிவாகியுள்ளது. மேலைநாட்டு மொழியியலறிஞர் கால்டுவெல் திராவிடமொழிக் குடும்பத்தையும், அதன் தனித்தன்மையையும் வரையறுத்தபோதே, திராவிட மொழிக்கான சொற்பிறப்பியலை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அந்த அடிப்படையில் ஞானப்பிரகாச அடிகளார் அகரமுதலியைத் தொகுக்கத் தொடங்கினார். அவரைத் தொடர்ந்து மாகறல் கார்த்திகேயனார் தமிழில் சொற்பிறப்பியலையும் அதன் வளர்ச்சிப்போக்கையும் ஆராய்ந்தார். அவருக்குப்பின் வந்த தேவநேயப் பாவாணர் அவர்கள் கிரேக்கம், இலத்தீனம் போன்ற மொழிகளின் பல சொற்களுக்கு தமிழில் வேர்மூலம் காட்ட இயலும் என்பதை தனது ஆய்வுகள் மூலம் வெளிக்கொணர்ந்தார். சொன்மூலம் மட்டும் காண்பதே உலக மொழியியல் அறிஞர்களின் வழமையாய் இருந்தபோது, பாவாணர் மட்டும்தான் சொன்மூலம் மட்டுமன்றி வேருக்கு வேர் மூலமும் கண்டறிந்தார். மேனாட்டு அறிஞர்கள் மொழிகளின் பிறப்பையும் நெறிமுறைகளையும் கணித்து வரையறுப்பதில்லை. ஆனால் பாவாணரோ தொல்வரவு நோக்கி எந்தந்த மொழிகளிலிருந்து எந்தந்த மொழி பிறந்தது என்று கணித்து அதற்கான நெறிமுறைகளை வரையறுப்பது என்று கொள்கையுடைவராய் தனது ஆய்வினை நடத்தினார். மேனாட்டு அறிஞர்கள் சொல்லின் ஒலியனியலை மட்டும் நோக்கி முந்து தமிழை மீட்க முயன்றனர். ஆனால் பாவாணர் பொருட்பாடும் சொல்லின் ஏரண முறைப்பட்ட அடிவரவும் நோக்கி முந்துதமிழ் வடிவங்களை மீட்கும் வழியைக் கொண்டிருந்தார். இதனாலேயே பாவாணர் பிற மொழியியல் அறிஞர்களைக் காட்டிலும் மேம்பட்டவராய்த் தெரிகிறார். தமிழின் தொன்மையை உலகிற்கு அறிவித்ததில் பாவாணரின் பங்கு ஈடு இணையில்லாதது.

அந்தப் பாவாணரின் வழியில் அருளியர், கு.அரசேந்திரனார் போன்ற மொழியியல் அறிஞர்கள் தமிழ் உலக மொழிகள் பலவற்றிற்கு கொடையாக வழங்கியுள்ள பல சொற்களை நமக்கு அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.

இவர்கள் இருவரில் நாம் கு.அரசேந்திரனார் அவர்கள் இணைவழிக் கருந்தரங்கு ஒன்றில் "இரதம்" என்றச் சங்கதச் சொல்லுக்கான வேர் தமிழில் "உல்" என்றச் சொல்லில் இருந்து பெறப்பட்டது என்பதை தனது ஆய்வின் மூலம் நிறுவியுள்ளதை எடுத்துரைத்தார். மேலும் இந்தத் தமிழ் வேர்ச்சொல் எவ்வாறு மேலை மொழிகளில் கிளைத்துள்ளது என்பதையும் விளக்கினார். அதனை இங்கு நாம் காண்போம்.

கம்பர் தான் எழுதிய
கம்பராமாயணம் நூலில் பாடல் 820 இல் இவ்வாறு எழுதியுள்ளார்.

'தெருண்ட மேலவர் சிறியவர்ச் சேரினும் அவர்தம்
மருண்ட புன்மையை மாற்றுவர் ' எனும் இது வழக்கே;
உருண்ட வாய்தொறும் உருள் உரைத்து உரைத்து ஓடி
இருண்ட கல்லையும் தன் நிறம் ஆக்கிய - இரதம்

இதில் வரும் "இரதம்" என்றச் சொல் "ரத" என்ற சங்கதச்சொல்லின் தமிழ் வடிவமே.


தமிழில் உல் என்று ஒரு வேர்ச்சொல் உண்டு. இச்சொல் குறித்து பாவாணர் அவர்கள் தமது தலைமைத் தமிழ் என்ற நூலில் பின்வருமாறு விளக்கியுள்ளார்.


உல் = வளைவுக் கருத்து மூல வேர்

உல்>உர்>உருள் = உருள்தல்

உல்- உலம் = 1. உருட்சி 2. திரட்சி 3. திரண்ட கல்

உலம் வருதல் = 1. சுழலுதல் 2. நெஞ்சு உழலுதல்

உல் - உலக்கை = 1. உருண்டு நீண்ட உரற்குற்றுக் கருவி


உருள் >உருளை>உருடை= 1. சக்கரம் 2. வண்டி

தமிழ் இலக்கியங்களில் இச்சொல்லை பின்வரும் பாடல்களில் காணலாம்.

குறள் 667

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து




"உருடையூடு திரியும்" (சேதுபு. முத்தீர்.42)



முதல் உயிரிழப்பு : முதலெழுத்து உயிரெழுத்தாக உள்ள சொற்கள் மக்களின் பல ஆண்டுப் பேச்சு வழக்கில் அதன் முதல் உயிரெழுத்து வழக்கில் இழந்து போகும். இதனை முதல் உயிரிழப்பு என்று கூறுவர். காட்டாக, அரசன் >ராஜன், அரத்தம்>ரத்தம். இந்த நெறிப்படியே,
உருள் >roll என இலத்தீனத்தில் திரிந்துள்ளது.
உருடை >ரோட, ரோதை, rota
எனவும் தமிழ் வேற்று மொழிகளில் திரிந்துள்ளது.


ரோட (தெலுங்கு)
Rota (Latin)
Ratha (Sanskrit)

இலத்தீன் மொழியில்,

roto = to cause to turn around like a wheel, to whirl round, swing round
rotula = a little wheel
rotunde = roundly
rotunditos = roundness
rotundo = to round





Walter W. Skeat அவர்கள் எழுதிய ஆங்கில மொழிக்கான சொற்பிறப்பியல் அகராதியில், Ret என்றச் சொல்லைக் குறிக்கும் போது, அது சங்கத மொழியின் ரத என்ற சொல்லோடு உறவுடையது என்று எழுதியுள்ளார்.

RET = to run along, rotate. Olrish reth-im, I run; Lith. rit-u, I roll; Skt. rath-a(s), a Chariot, car; L. rot-a , a wheel. Ex. rotate" rotary, round, roll, rouleau, rotund, &c. Also barouche, roué.

Monier Williams என்ற சங்கத சொற்பிறப்பியல் அகராதி எழுதிய அறிஞர், "ரத" என்ற சொல்லைக் குறித்து பின்வருமாறு எழுதியுள்ளார்.

ratha- goer , a chariot, car, esp. a two wheeled war - chariot, any vehicle or equipment or carriage (applied also to the vehicles of the gods), waggon, cart, RV.

சக்கரம் என்ற சொல் வண்டியைக் குறிக்குமா?

சறுக்குதல் என்ற சொல்லிலிருந்து சக்கரம் என்ற சொல் உருவாகியது.

வட்டவடிவில் செய்யப்பட்ட வெல்ல உருண்டை, சருக்கரை என்றாகிப் பின் சர்க்கரை என்றாகியது. அதுவே ஆங்கிலத்தில் சுகர் என்றாகியது.

சோகன் என்றால் துயரம் என்று பொருள். அசோகன் என்றால் துயரமற்றவன் என்று பொருள்.

சக்கரம் >சக்கர>சக்கட>சாகாட>சாகாடு = வண்டி

"பீலிபெய் சாகாடும் அச்சிறும்" (குறள்: 416)

சாகாடு= வண்டி

"சகடக்கால் போல வரும்" : (நாலடி:2:4)

சகடு>சாடு

"குறுஞ்சாட் டுருளை" (பெரும்பா :188)



சாமி சிலைகளை ஏற்றிச் செல்லும் வண்டியை சகடக்கால் வண்டி என்று மக்கள் கூறுவதையும் இங்கே நினைவுகூறத்தக்கது.


மற்றுமொரு சான்று:

கால் என்றச் சொல்லுக்கு சக்கரம் என்று பொருள்.

"கடலோடா கால்வல் நெடுந்தேர்" (குறள்: 496)

கால்வல் நெடுந்தேர் = வலிய சக்கரங்களை உடைய பெரிய தேர்

கால்= உடலுறுப்பு, காலம், சக்கரம், காற்று

இவை அனைத்துமே இயக்கம் என்ற வினையோடு தொடர்புடையது என்பதையும் அறிக.

" காலின் வந்தன" சிலப்பதிகாரம்

வண்டியிலே பொருள்கள் ஏற்றி பூம்புகார் வந்தன என்ற பொருளில் இளங்கோவடிகள் எழுதியுள்ளார்.


காலின் வந்த கருங்கறி மூடையும்
(பட்டினப்பாலை 186)


"வைகல் எண்தேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த கால்அன் னோனே"
(புறநானூறு: 87)

இப்பாடலில் கால் என்பது சக்கரத்தைக் குறிக்கிறது.

"கடலோடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும்
நாவாயும் ஓடா நிலத்து" (குறள்-496)

இக்குறளில் கால் என்பது சக்கரத்தையே குறிப்பிடுகிறது.



"கலத்தினும் காலினும் தருவனார் ஈட்ட" (சிலப்: 2:7)

இவ்விடத்தில் கால் என்ற சொல் சக்கரம் உடைய வண்டியைக் குறிக்கிறது.


ஆகையால் தமிழில் கால் என்ற சொல் சக்கரத்தையும், சக்கரத்தையுடைய வண்டியையும் குறித்ததைக் காண்கிறோம்.



கால்>காரி>காடி(gaadee)= வண்டி

ஒப்புநோக்கு: தால் >தாரி>Toddy

தால் என்றால் பனை. அது குசராத்தி மொழியில் தாரி என்று திரிந்தது. இந்த தாரி என்ற சொல்லிலிருந்தே toddy (கள்) என்ற ஆங்கில்ச்சொல் வந்ததாக ஆங்கில அகராதிகள் குறிக்கின்றன. அவர்களுக்கு தாரி என்ற குசராத்தியச் சொல்லுக்கு மூலமே தமிழில் உள்ள தால் என்பது தெரியாதே.



ஆங்கிலத்தில் wheel என்றச் சொல் சங்கரத்தைக் குறிக்கும். இச்சொல்லின் மூலமாக kwel "க்யூல்" என்ற முந்தை இந்தோ ஐரோப்பியச் சொல் ஒன்றைக் கருதுகின்றனர். அதற்கு மேல் அவர்களுக்கு மூலவேர் தெரியவில்லை. உண்மையில் தமிழறிந்த நமக்கு அந்த "க்யூல்" என்ற சொல்லே தமிழின் கால் என்ற சொல்லிலிருந்துதான் வந்திருக்க இயலும் என்று அறிய முடிகிறது.




ஐரோப்பிய மொழி வல்லுநர்கள் முந்தை இந்தோ ஐரோப்பிய மொழி என்று பொதுவில் குறிக்கும் வேளையில், நாம் ஐரோப்பிய மொழியறிஞர் திரு. Stephen Hillyer Levitt அவர்களின் கருத்தையும் நினைவில் கொள்ள வேண்டும்.

அவர் உரலிக், அல்டெய்க், இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பங்கள் திராவிட மொழிகளிலிருந்தே கிளைத்திருக்க வேண்டும் என்று உரைக்கிறார்.


அதாவது,

கால்>க்யூல்>வீல்(wheel)

Wheel என்ற ஆங்கிலச் சொல்லின் மூலம் தமிழே.


ககரம் சகராமாக திரிபது இயல்பு.
காட்டாக,
Kenatop >Scenario
Kirche>Church
Kand> Chand
Greek 'Keras' > Latin 'Ceros'

இந்த அடிப்படையில் க்யூல் என்ற சொல் சைல் என்றாகி cycle, cyclone என்றாகியது.

சுருக்கமாக,

கால் >க்யூல்>சைல்>சைக்கிள் என்று துணிந்து கூறலாம்.

Cycle என்ற ஆங்கிலச் சொல்லின் மூலம் தமிழே.

இவ்விடத்தில் நாம் வேறொரு கருத்தையும் நினைவு கொள்ளவேண்டும். தமிழில் கால் என்பது சக்கரத்தையும், சக்கரம் உடைய வண்டியையும் குறித்தது. கூடவே,


கால்>காரி>காடி (இந்தியில் வண்டி என்று பொருள்)

Rota>ratha (சமற்கிருதத்தில் தேர்)

என்பதையும் நினையுங்கள்.

அது போலவே ஆங்கிலத்தில் cycle என்பது சக்கரத்தையும், இருசக்கர வண்டியையும் குறிக்கிறது.

கால் என்றச் சொல் இயக்கம் என்ற வினையோடு தொடர்புடையது எனறு பார்த்தோம். இதே கருத்தை ஆங்கில சொற்பிறப்பியல் அகராதியைத் தொகுத்த Walter W Skeat அவர்களும் தனது நூலில் குறித்துள்ளார். அவரது அகராதியில் 52 ஆம் வேர்ச்சொல்,
√Kar or Kal என்பதாகும். (√ குறி வேர்ச்சொல் என்று குறிப்பது).
அவர் Kal என்றச் சொல்லுக்கு to move, speed, run என்று எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் குறில், நெடில் என்ற பாகுபாடு கிடையாது. ஆகையால் தமிழில் உள்ள கால் என்ற சொல்லேயே அவர் தவறுதலாக கல் ( kal ) என்ற ஒலியினின்று to move, speed, run போன்ற சொற்கள் உருவானதாகக் குறித்துள்ளார் எனக் கருதலாம்.

அதுபோலவே அவர் kar மற்றும் kal ஆகிய சொற்களை இணையாகக் கருதியுள்ளதையும் நாம் காணலாம்.
தமிழில் ரகரம் லகரமாகத் திரிபது இயல்பே.

காட்டாகக் கூற வேண்டுமானால்,

அரத்தம்~ அலத்தம்
சாம்பல்~சாம்பர்
திருவாரூர்~திருவாலூர்
துரும்பு~துலும்பு
தொரும்பு~தொலும்பு
இருப்பை~இலுப்பை


ஆங்கிலத்தில் accelerate என்றச் சொல் உண்டு. அதற்கான வேர்ச்சொல்லாகச் சுட்டுவது, ad-kal என்றச் சொல்லையே. ககரம் சகரமாகத் திரியுமாவதால், ad-kal என்றச்சொல் ad-cal என்றானது. அதிலிருந்து accel என்று கிளைத்துள்ளது.


அதுபோலவே kar என்றச் சொல்லிலிருந்து currency, current, cursor, Horse என்றச் சொற்கள் கிளைத்துள்ளதாகக் Skeat அவர்கள் கூறுகிறார்கள். இவையனைத்துமே இயக்க்கம் சார்ந்த சொற்கள் என்பதை நாம் தினைவுகூற வேண்டும்.

செல்வம் என்பது நிலையில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் என்பது வாழ்வியல் உண்மை. அது சென்று கொண்டிருக்கும் என்பதாலேயே செல்வம் எனப்பட்டது.

"கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று." (குறள் 332)

ஆங்கிலத்திலும் currency என்றால் condition of flowing என்று பொருள். ஒருவரை விட்டு ஒருவரிடம் சென்று கொண்டிருப்பதாலேயே பணத்திற்கு Currency என்று பெயர்.

சரித்திரம் என்ற சங்கதச் சொல்லுக்கு நகர்தல் என்று பொருள். வரலாறு என்பதே நகர்ந்து கொண்டே இருப்பதுதானே?
இந்த சரித்திரம் என்ற சொல்லுக்கு வேர்ச்சொல் கூறவந்த மோனியர் வில்லியம்சு என்ற அறிஞர், சரா என்ற சொல்லையே வேர்ச்சொல்லாகக் காட்டுகிறார். சரா என்றால் நகர்தல் என்றும் குறிக்கிறார். ஆனால் அந்தச் சரா என்ற வேர்ச்சொல்லுக்கு மூலம் கர் என்ற சொல் என்பதையும் குறித்துள்ளார். அந்தவகையில் சரித்திரம் என்றச் சங்கதச்சொல்லின் வேர்மூலத்தை பின்வருமாறு எழுதலாம்.

கால்>கல்>கர்>சர்>சர>சரிதா= சரித்திரம்.

சரிதா, சரித்திரா, சாரணி, சாரதி போன்ற சொற்கள் கால் என்ற தமிழ்ச்சொல்லேயே மூலமாகக் கொணீடுள்ளன என்பதே உண்மை.


கல் என்ற ககரம், சல் என்ற சகராமத் திரியும் என்று Skeat போன்ற ஐரோப்பிய அறிஞர்களும் கூறுவதே.

அதன்கண் பார்த்தால், சலம் என்ற சொல்லும் சல் என்ற சொல்லிருந்து பெறப்பட்டதாகவே சமற்கிருத அகராதி சுட்டுகிறது. நீர் என்பது ஓடிக்கொண்டிருக்கும் தன்மையுடையதுதானே!

கல்>சல்>சலம்

சலம் என்பது நகரும் நீரைக் குறித்தது. அசலம் என்றால் அசையாத மலையைக் குறிக்கும்.

காண்க: வேங்கடாச்சலம் (வேம் + கடம்= வெம்மையான பாறை) விருத்தாச்சலம் (பழ மலை, முதுகுன்று)
[வ்ருத்த - வட்டம்]


சுருங்க்ககூறின்,
உல்>உர்>உருள்>உருட்>ருட்>rat>ret>rota, ratha


மின்னெழுத்தில் வடித்தது,
பெஞ்சமின் பிராங்கிளின் பி
26 சிலை 2051
(10-01-2020)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக