==========================
தமிழ்த்தேச விடுதலைக் கருத்தியலுக்காகத் தன் இறுதி மூச்சு வரை அயராது துணைநின்ற அம்மாவின் பிறந்தநாள் இன்று.
அவர்களைப் பற்றிய பாவலரேறு அவர்களின் பாடல்.👇👇என் மனைவி தாமரையாள் !
====================
++++எடுப்பு++++
இனிது அவளது நினைவு – எனக்
கெத்துணை நீண்ட தொலைவில் இருப்பினும் (இனிது)
++++முடிப்பு++++
கனிவு சான்ற அன்பு விழியினள் !
கதைகள் பேசும் பிள்ளை மொழியினள் !
முனிவு நீக்கும் தொண்டு வினையினள் !
முதிர்ந்த உணர்வின் இணைந்த துணையினள் ! (இனிது)
காலை விழித்த பொழுது தொடங்கி
கணமும் ஓய்வில் லாமல் இயங்கி
வேலை குவிந்த வாழ்வு சுமந்தாள்;
விரிந்த உணர்வில் உயிரில் கலந்தாள் ! (இனிது)
ஆறுநல் உயிர்களைத் தோற்றிய தாயவள் !
ஆயினும் என்னுடன் ஒன்றிய சேயவள் !
கூறுசொல் ஒவ்வொன்றும் அன்பினில் தோய்த்தவள் !
கொள்கை செய் வாழ்க்கையில் எனக்கென வாய்த்தவள் (இனிது)
ஏற்காத கொள்கைக்கு வம்படி செய்வாள் !
இணையாத சூழலுக் கென்னொடும் நைவாள் !
தோற்காத உறுதிசெய் பேச்சவள் பேச்சு !
தோல்விக்கும் குலையாத வீச்சவள் வீச்சு ! (இனிது)
எளிமையின் தோற்றத்தாள் ! வலிமையின் போர்வாள் !
ஏழ்மையில் மனங்கோணா தென்னொடுந் தேர்வாள் !
களிமயில் போலாவாள் மகிழ்வாகும் நாளை !
கல்போலும் அமர்வாளோர் துயர்தோயும் வேளை ! (இனிது)
விருந்துக்குச் சளைக்காத கைவினைக் காரி!
வெந்துயர்க் கிருவிழி பொழிதரும் மாரி!
வருந்துவார்க் கழுங்கியுளம் இரங்குகின்ற அன்னை!
வாழ்விக்க வந்தவளாம் கொள்கையோ டென்னை ! (இனிது)
++++(இசைமாற்று)++++
பொன்னுக்கும் பட்டுக்கும் விழைவில்லாத் துறவி !
பொழுதுக்கும் காலாறா நடைபாவும் இறைவி !
சின்னக்கைக் குழந்தைக்கும் குழந்தையவள் நெஞ்சம் !
சீறியெழின் பெண்புலியின் சீற்றத்தை விஞ்சும் ! (இனிது)
சிறு அழைப்பும் தவிராத ஓட்டநடைக் காரி !
சிணுங்கிவிட்டால் வணங்காத சினந்தேங்கும் ஏரி!
மறுமொழியும் பேசாமல் வினைசெயினும் செய்வாள் !
மனம் நோக விட்டாலோ கண்மழையும் பெய்வாள் ! (இனிது)
பிள்ளைகள்மேல் உயிர்மொய்க்கும் பெருந்தாய்மைப் பேறு !
பெற்றவரை மறவாத நறும் பெண்மைக் கூறு !
கள்ளமிலா உள்ளத்தின் கனிவு நிறை தெய்வம் !
கரவில்லா மொழியுதிர்க்கும் அருளுணர்வு மெய்மம் ! (இனிது)
நல்லிளமைப் போதினிலே எனைத்தேடிக் கண்டாள் !
நறும்பிறவி உயிர்தொடர்பால் கணவனெனக் கொண்டாள் !
சொல்லுழவன் எனக்கவளை முழுஈகம் செய்தாள் !
சொந்தம் நான் முழுதுமவட் கென்றுரிமை கொய்தாள் ! (இனிது)
எனக்கெனவே வாழ்கின்றாள் எனக்கெனவே உயிப்பாள் !
இனிவரும் எப் பிறவியிலும் எனைப்பிரிந்து வாழாள் !
தனக்கெனவோர் எண்ணமிலாள் செயலில்லாள் பேதை !
தாயுக்கும் தாயானாள் உயிர்கலந்தாள் கோதை ! (இனிது)
இனியுயிர்க்கும் பிறவியிலே அவட்கடிமை செய்வேன் !
என்றனைநற் பெண்டாக்கித் தலைமையவட் குய்வேன் !
தனியுயிர்க்கும் நினைவில்லை, திறப்பாடும் இல்லை !
தாமரையாள் அன்புணர்வுக் கவளன்பே எல்லை ! (இனிது)
==============================
-பாவலரேறு பெருஞ்சித்திரனார்
- (1981)
====================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக