ஞாயிறு, 11 அக்டோபர், 2020

ஆரம்

 

"தமிழ் - சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின்  

ஆராய்ச்சி நிறுவனத்தில் அருளி ஆற்றிய உரைகள் (தொகுதி-3) "

 நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

 

 

                                                      ஆரம்

 

சொல் மூலம்:

            1. உர்> உரு> அரு> ஆர் +அம்>ஆரம்

            2. உர்> அர்>ஆர்>ஆர் +அம் >ஆரம்

 

சொற்பொருள்கள் :

ஆரம் = 1. மாலை 2. மணிமாலை

                 3. முத்துமாலை 4. அணிகலன் 5. ஆரக்கால் 6. பதக்கம்

                7. தோட்டம் 8. பறவை கழுத்து வரி

 

ஆரம் = 1. சாந்தம் (சந்தனம்) 2. சாந்தக் குழம்பு

                        (மணப்பொருள் வகையினுளொன்று), 3. ஆத்தி 4. காட்டாத்தி

                        5. கடம்பு

 

 “ உர்": பொருந்துகைக் கருத்து மூலவேர்.

உர் + ஐ> உரை=சேர், கூடு, பொருந்து

 உரை> உராய் = சேர், கூடு, பொருந்து, தீண்டு, தேய்

                        (ஒ.நோ: குழை> குழாய்)

உரை+சு > உரைசு> உரசு = உராய்

(தெலுங்கு): ஒரட்சு          (கன்னடம்): ஒரெ

(மலையாளம்) : உர        (துளு): உரெ

உரைதல் = தேய்தல்.        “வெண்ணெய் உரைஇ" (கலித்:115)

உரைதல் = பூசுதல்.             “உரைக்கு நானமும்” (சீவக:831)

 

 

உர்>உர்+இ> உரி = சேர்க்கை , உடைமை.

 உரி+மை > உரிமை = சேர்க்கை , கூட்டு, உடைமை.

உரி+அது > உரியது.      உரி+து> உரிது = உரிமையானது

"உரிதினின்னோ  டுடன்பிறப் புண்மையின்"    (சிலம்பு:2:40)

உரி + அன் > உரியன் = உரிமையுள்ளவன்,

                                    உறவினன் (பிங்கலம்),

                                    கணவன் (பிங்கலம்)

உர்> உரு = சேர், ஒப்பாகு, முதிர்

(ஒத்தல்):    “நின் புகழ் உருவின கை' (பரிபா: 3:32)

 (முதிர்தல்): ''பண்டை யூழ்வினை உருத்தென்"  (சிலம்பு: 16:217)

உர் >உரு = அட்டை (பிங்கலம்)          (Leech) (ஒட்டியூரும் உயிரி)

            ஒ.நோ: அடு = சேர், பொருந்து, ஒன்று

                        அடு>அட்டு+ஐ >அட்டை .

 உரு >உறு = சேர், பொருந்து.

 உறுதல்= சேர்தல், பொருந்துதல், சார்ந்திருத்தல், ஒத்தல், மிகுதல்  உறு+அவு> உறவு = தொடர்பு, இணைவு, நெருக்கம்.

உரு > அரு (உகர அகரத் திரிபு )

உரு >அரு= அட்டை (Leech)

“இருநிலந் தீண்டா வரு"        (தொல். பொருள் : 71: இளம்பூ)

 

அரு+கு> அருகு = சேர் , கிட்டு, அணுகு , நெருங்கு, பக்கமாகு.  

 அருகுதல் = கிட்டுதல் (சூடா)

அருகு+அன்> அருகன் = தோழன்         (பிங்கலம் : 929)

அருகு+அர்>அருகர் = அருகு, அண்மை

 (“அர்” ஓர் ஈறு. ஒ.நோ : கொம்பு+ அர் >கொம்பர்)

“துறக்க நாடு அருகர்க் கண்டான்" (கம்பரா. கடறாவு: 2)

 அரு+ அக்கு> அரக்கு = உரசு, தேய், நெருக்கு

அரக்குதல்: "கண்ணரக்கல்"    (சினேந்: 456)  

அழுத்தல் :  “விரலாற் றலையரக்கினான்"    (தேவா: 223:11)    

 (அரக்கி அரக்கி நடத்தல் = தொடைகள் செறிந்துரசுமாறு நடத்தல்)

 

அரு>ஆர் = பொருந்து, சேர், ஒவ்வு, இணை, நெருங்கு, பூணு, அணி

                        ஒ.நோ: பொரு > போர் பெரு >பேர்

                                    கரு > கார்               தெரு > தேர்

ஆர் + கலி > ஆர்கலி = பேரொலி, நிறைந்தவொலி,

ஆர் + அமர் > ஆரமர் = செறிந்த போர்.

“ஆரமர் ஓட்டலும் ஆ பெயர்த்துத் தருதலும் "  (தொல். பொருள் : 2:5:11)

 

ஆர்+அஞர் >ஆரஞர் = பெருந்துன்பம்.

ஆர்+(ப்)+பு> ஆர்ப்பு நிறைவு, செறிவு, மிகுதி.

ஆர்ப்பு+ஆட்டம்= ஆர்ப்பாட்டம் > (Skt) ஆரபாட்ட

ஆர்தல் = நிறைதல்.

ஆரமாந்துதல் = நிறைய வுண்ணுதல்.

             ''ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை

            அவரை கொய்யுநர் ஆர மாந்தும்" (புறம்: 215:45)

 வயிறார உண்ணுதல் = வயிறு நிறக்க வுண்ணுதல்

 

ஆர்>ஆர்+வு >ஆர்வு = பற்று, செறிவு, விருப்பம், ஆசை

            ஆர்வு+அம் >ஆர்வம் = பெருவிழைவு, உளவிருப்பம், நெருக்க அன்பு

ஆர்வு+வல்லர் > ஆர்வல்லர்>ஆர்வலர்= அன்புடையார், அன்புமிக்கார். அன்பு செய்தலில்வல்லோர்.

 ''ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்"      (குறள் : 71)

ஆர்+ அம் > ஆரம் = சகடக் குறட்டின்கண்ணிருந்து வட்டையில்

                                    செறிவுறப் பொருந்திய ஆரக்கால்.

''அச்சுடைச் சாகாட்டு ஆரம்"         (புறம்: 256:2)

                        "ஆர் சூழ் குறடு" (புறம்: 283)

                        (குறடு = நடுவிடம், நடுவிடமாகிய குடம்)

                        = குடத்தை ஆர்ந்து சூழ்ந்த ஆரக் கால்கள்.

ஆரம் >(Sanskrit) ara

“ஆரஞ் சூழ்ந்த அயில்வாய் நேமியொடு” (சிறுபாண்: 253)

ஆர்+ ஐ> ஆரை = ஆரக்கால்

ஆர் + அம்>ஆரம் = செறியக் கோத்த மாலை, முத்துகளைச்

செறியக் கோத்த மாலை, முத்துமாலை, மணிமாலை.

 

(1-1)       "எழுவர் நல்வலங் கடந்தோய் நின்

 கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பே”    (புறம்: 19:18-19)

 (உரை: இரு பெரும் வேந்தரும், ஐம்பெரும் வேளிருமாகிய

எழுவரது நல்ல வலியை வென்றோய்! நினது கழுவி விளங்கின முத்துக்களால் ஆகிய ஆரம் அகத்திய மார்பை...)

 

(1-2)       ''தன்கடற் பிறந்த முத்தின் ஆரமும்” (அகம்:13:1)

(1-3)       ''............ புகல் அகல் நின் மார்பில்

  பல்காழ் முத்து அணி ஆரம் பற்றினன் பரிவானால்"  

                                                                                 (கலித்: 79:11-12)

(1-4)       “மார்பிற் பூண்ட வயங்குகாழ் ஆரம்" (புறம்: 150 20)

(1-5)       ''மாண் இழை மகளிர் புலந்தனர் பரிந்த

 பரூஉ காழ் ஆரம் சொரித்த முத்தமொடு "

                                                                        (மது.காஞ் : 680-681)

ஆரத்தின் செறிவையும் பருமையையும்

(2-1) "ஆரந் தாங்கிய அலர்முலை ஆகத்து"     (நெடுநல்:136)

 (2-2) “ஆரந் தாங்கிய அலர்முலை ஆகத்து”     (அகம்: 75:12)

(2-3) ஆரந் தாங்கிய அலர்முலை ஆகத்து''      (அகம்: 206:9)

 

எனவரும் ஒத்த வரிகளும் அவற்றில் தவிராது வருகின்ற ''தாங்கிய ' என்னும் வினைக்காட்சியும் சிறக்கவுணர்த்துகின்றன.

 

            அவ் வரிகளுக்கு உரையெழுதிய அறிஞர் பெருமக்கள், ''ஆரம்'' என வருமிடத்துக்கு 'முத்துமாலை” என்றே பொருள் குறித்துள்ளனர்.

(3-1) ''ஆரம் தாழ்ந்த அணிகிளர் மார்பின்''     (புறம்: 59:1)

 (3-2) ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பு"       (திருமுரு: 104)

 (3-3) 'ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பில் " (புறம்: 320:10)

 (3-4) அருவி தாழ்ந்த பெருவரை போல

         ஆரமொடு பொலிந்த மார்பில் ..."        (புறம்:198.2-3)

            என்றவாறு வரும் இலக்கிய வரிகளில், அது நீளத் தாழ்ந்து தொங்கிய எழிற்காட்சி மிளிருகின்றது.

 

            “ஆரம்" என்ன முத்துமாலையையே சிறக்கக் குறித்து வழங்கிய சொல், கிளைக்காரணங்கள் அடிப்படையிலும், பொருளொப்புமையிலும், பிற சில பொருள்களுக்கும் பொருந்தி வழங்குவதாயிற்று.

 

ஆரம் = முத்து (பிங்கலம்)

 ஆரம் = (பதிக்கம்) பதக்கம் (திவாகரம்)

 ஆரம் = மணிவடம் (பிங்கலம்)

 

ஆரம்=பூமாலை           (சூடாமணி நிகண்டு)

ஆரம்= பறவை கழுத்துவரி

ஆரம் = ஆடுமாடுகளின் கழுத்தில் (ஆரம்போல்) தொங்கும் தசை.

 

"ஆரம்” என்னும் தாய செந்தமிழ்ச் சொல், சமற்கிருதத்தில் "hara” எனத் திரிபெய்தி வழங்குகின்றது.

ஆரம்> (Skt) Hāra = necklace

                        Hāraka = string of pearls.

 

            தமிழினின்று திரிபெய்தி வழங்கும் இச் சமற்கிருதவடிவிற்குச், சமற்கிருதவாணர் படைத்துக் கூறி வரும் மூலம் "hri" என்பதாகும். அம் மூலச்சொல்லுக்கு அவர்கள் இட்டுக் கட்டும் பொருள்களாவன:

 

hri (Skt) = Bearing, wearing, conveying, bringing.

 

            “அ” என்னும் ஒலியை “Ha" என்றவாறு ஒலித்தல், சமற்கிருதத்திற்கும், சில வடபால் மொழிகளுக்கும் இயல்பாய ஒரு வழக்க முறையாகும். "அ" என்னும் ஒலியின் கட்டொலிப் பலுக்கம் (rough breathing) 'ha" என்பதாகும். ''Alpha" என்னும் ''a" எழுத்தின் மீது ஒரு நெடுங்கிடையாக நிறுத்திய இடுகிய பிறைக்குறியொன்றை நட்டபின், அவ்வெழுத்தை ''ha' என்று பலுக்க வேண்டும் என்ற வரம்பையும் வழக்குண்மையையும் இங்குக் கருதிப் பார்த்தல் வேண்டும்.

            அகரத்தை ஹகரமாகத் திரித்து வழங்கிக்கொள்ளும் வழக்கம் சமற்கிருதத்திற்கு உண்டென்பதைக் கீழ்க்காணும் ஒரு சில சான்றுகளில் காணலாகும்.

அலை> (சமற்கிருதத் திரிபு) halla = movement

ஓடம் > (சமற்கிருதத் திரிபு) hÕta

ஏது >(காரணம்) ''ஆக்கமொடு புணர்ந்த ஏதுக்கிளவி”

                                                                                    (தொல். சொல். 93:2)

ஏது > (சமற்கிருதத் திரிபு) hētu = Motive, reason, cause

அடு >((சமற்கிருதத் திரிபு)) hata = struck, killing

                                                            hati = killing.

                                                            hatya = killing

                                                            hatyākāraka = killer.

இவ்வகை முறையையே பலவடபால் மொழிகளில், இந்த “ஆரம்” என்னும் செந்தமிழ்ச் சொல் பற்றிப் படர்ந்து ஒலிக்கின்றது:

 

            Prakrit:            hāra= garland.

                        (Kashmiri: āra = necklace.)

 Sindbi: hāru = necklace.

Lahnda:   Awānkāri dialect of Lahnda: hār=garland.

Panjābi: hār=necklace, garland.

Kumauni: Gangoi dialect of Kumauni: har = wreath.

Nepāli: hāri = necklace.

Assamese: hār=necklace.

 Oriya: hāra = necklace.

Bihari: hār = necklace.

Maithili: bār=necklace, wreath

Bhojpuri: hār=garland.

Old Awadhi: hāra = string of pearls.

Hindi: hārā= necklace, string of pearls. Gujarati: hār = necklace, garland. Marathi: hār=garland.

Sinhalese: hara = string of pearls.

 முத்து + ஆரம் > முத்தாரம் > (Sanskrit) Muktāhara

ஆர் = சேர், நிறை, செறி

 ஆர்+அம்>ஆரம் = மரம் செடி கொடிகள் செறிவுற்ற தோட்டம்.

            ஆரம் = தோட்டம் (பிங்கலம்)

 

2. ஆரம்

            சந்தன மரத்தையும் (சாந்தம், சாந்தக் குழம்பு, அதன்வழி மணக் குழம்பு), காட்டாத்தியையும் குறித்தெழுந்த ஆரம் என்னும் சொல், ''உர்" என்னும் வெம்மை, நெருப்பு எரிகை ஆகிய கருத்துகளின் கருவேரினின்று தோன்றி, செந்நிறக் கருத்தை உரிமையாக்கிக் கொண்ட “அர்'' என்னும் பக்க வேரில் செழித்து மலர்ந்து மணந்து நின்றது.

 

            [(நெருப்பு) வெம்மைக் கருத்துக் கருவேரான "உர்” என்னும் வெவ்வொலியின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் அதன் விரிவு விளக்கங்களையும், "உரு" என்னும் உரைக்கட்டில் விளக்கமுறக் காண்க!]

உர்>அர்       (உகர அகரத் திரிபு.)

அர்+அன் > அரன் = சிவந்தவன், சிவன்

                        அரன்> (Sanskrit) Hara

  அர் + அக்கு >அரக்கு ('அக்கு' ஓர்ஈறு)

                                    அரக்கு = சிவப்பு. (திவாகரம்)

                                    அரக்கு நீர் = ஆலத்தி நீர்

                                    “அரக்கு நீர் சுழற்றி"    (விநாயகபு: 80:277)

                        = (சாதிலிங்கம் கலந்த) நீர்

                        ''அரக்கு நீர் சிவிறியேந்தி" (சீவக : 2657)

                        = குருதி புண்ணிடை யரக்கு நீர் பொழிய"  (சூத. முத்தி . 7,25)

 

            அரக்கு மஞ்சள் = செம்மஞ்சள்

            அரக்கு = செம்மெழுகு, சிவந்த மெழுகு

            “தீயூட்டு அரக்கே யென்ன வுருகி" (கந்தபு. மார்க்கண்:95)

 

அரக்கு+அம்> அரக்கம் > (Sanskrit) raksa> (laksha)>

            (Hindi) lakh, lakh> (English) Lac= sealing wax, shellac or resin melted with

turpentine.

 (சமற்கிருதத்திலும் இந்தியிலும்,- (அரக்கம் என்னும் சொல்லில் வரும்) ரகரம் லகரமாகத் திரிபெய்தியது.]

அரக்கு+அம்> அரக்கம் = சிவப்பு, அவலரக்கு, (செவ்வரக்கு)

(1-1) ''அரக்கத் தன்ன நுண்மணற் கோடுகொண்டு"    (பதிற். பத். 30: 27)

(உ.வே.சா. உரை: செவ்வரக்கைப் போன்ற நுண்ணிய மணலையுடைய குன்றுகளைத் தன்னிடத்தே கொண்டு....)

 (1-2) ' .அரக்கத் தன்ன செந்நிலப் பெருவழி" (அகம்:14:1)

அரக்கு+ஆம்பல்> அரக்காம்பல் = செவ்வாம்பல் (பிங்கலம்)

அரக்கு= துப்பு, பவழம்.

அரக்கு = அரத்தம், குருதி.

“ அரத்தமும் துப்பும் அரக்கின் பெயரே” (பிங்கலம் : 1733)

அர்+இ> அரி = 1. சிவன். (திருப்போ . சந். பெரியகட்.2:5)

            2. நெருப்பு உன்னத வரி (இரகு.யாக. 29)

            3. ஒளி (பிங்)

            4. கதிரவன் (பிங்)

            5. மதி (பிங்)

             6. பொன் (பெரும்பாண்.490)

            7. நிறம் (மலைபடு : 465)

 

அர்+அத்து> அரத்து +அம்>அரத்தம் = 1. சிவப்பு

            2. குருதி "அரத்தம் உண்டு ஒளிறும் வாள் அவுணர் "

                                                (நைடத. நளன்றூ . 14)

             3. பவழம் (திவாகரம்)

             4. செம்பரத்தை (மலை.)

             5. செங்கழுநீர்ப்பூ (சூடாமணி. நி.)

            6. செங்கடம்பு (பிங்)

            7. செம்பருத்தி 8. சிவந்த நிறமுடைய ஒருவகைத் துகில்.

(காண்க: சிலம்பு: ஊர்காண் காதை: வரி: 108: அடி. நல். உரை விளக்கம்.)

 

 

 

அரத்தம் = அரக்கு (திவாகரம்)

 அரத்து+அன் அரத்தன் = செவ்வாய் (பிங்கலம்)

 "ஆரல் உதிரன் அரத்தன் அறிவன்"       (பிங்கலம்: 230:3)

 

            “அர்” செம்மை நிறக் கருத்துப் பக்க வேரினின்று மிகச் செப்பமாய் வளர்ந்து வழக்கூன்றியிருந்த (அர்+அத்து+ அம்>) அரத்தம் என்னும் செந்தமிழ்ச்சொல், சமற்கிருதத்தில் ''Rakta" என்றவாறு திரி பெய்தியது.

 ஒ-நோ:1. முற்றி> முத்தி > (Skt) முக்தி. 2. முற்று> முத்து (Skt) முக்த .

3. பற்றி> பத்தி > (Skt) பக்தி.)

 

            (''அரங்கம்" என்னும் தூய செந்தமிழ்ச்சொல்லை, சமற்கிருதம் “ரங்க” என்றவாறு பலுக்கி வழங்கி வருவது போலவே,) “அரத்தம்” என்னும் சிவப்பு நிறத்தையும் குருதியையும் சிறக்கக் குறித்த செந்தமிழ்ச்சொல்லை வடபால் தமிழிய மொழிகளில் சில “ரத்த" என்றவாறு திருத்தமற்ற பேச்சுவழக்கில் பயிலுகையில், அதனை 'Rakta" என்ற வடிவில் சமற்கிருதம் பயிலுவதாயிற்று,

 

            “அரத்தம்” எனும் செந்தமிழ்ச்சொல், சிலவடபால் மொழிகளில் திரிபெய்தி வழங்கும் வடிவங்களைக் கீழ் வருவனவற்றுள் காணலாம்:

 

அரத்தம் (Sanskrit) rakta = (coloured, dyed) red.

            > (Pali:            ratta = red, dyed

             Prakrit:           ratta = red, red colour

                                    rattaga =red.

            Nidoc:             rataga = red.

             Gypsy: (European): rat=Blood.

            Dumaki:          rot=blood.

            Ashkun:          rutusta= red

            Wotapüri:       rat = blood.

            Maithili: rāt=

            Pahlvi: (Iranian): rāt

            Kashmiri: rath

            Sindhi: ratu =blood.

                        rato=red.

            Lahnda: ratt

            Jatki or Western panjābi: rat = blood

                                    rattā=red.

            Panjābi: ratt=blood.

                        rattā - dyed, blood.

            Pahari dialect: rātu -red, crimson.

            Kumauni: ratuwa - ruddy.

            Gangoi dialect of Kumauni: rāt=red.

            Nepāli: rāto Assamese: rāta, rätul.

            Oriya: ratā = red, rosy complexion

             Old Marathi: rātula=red.

             Old Awadhi: rātā

            Hindi: rātā = dyed, red.

            Gujarati: rātu=red

             Sinhalese: rat-a=blood, fire

                        Ratur = red, red colour.

 

அர் >ஆர் = செவ்வாய்  (விதான . பதி . 13. உரை )

            ஆர் >(Greek) areas.

            ஆர்+அல் >ஆரல் = நெருப்பு.

                        ஆரல் = செவ்வாய்    (பிங் :1335)  (திவாகரம்)

            சிவந்த சந்தனம், (சந்தனமரம்) (ஆர் +அம் > ) ஆரம் என்னப்பெற்றது.

 

ஒ.நோ: செஞ்சாந்து = சிவந்த சந்தனம்.

(1-1) ''செஞ்சாந்து சிதைந்த மார்பின்”     (பட்.பாலை : 297)

            உரை: சிவந்த சந்தனமழிந்த மார்பினையும்...)

 (1-2) "குயம் மண்டு ஆகம் செஞ்சாந்து நீவி" (அகம்:48:11)

(1-3) “மலைச் செஞ்சாந்தின் ஆர மார்பினன்''    (குறுந்: 321)

 

 

ஆர்+அம்>ஆரம் = செஞ்சாந்தம், சாந்தம் (சந்தனம்),

            சந்தனமரம், சந்தனக்குழம்பு, மணக்குழைவு (மணப் பொருள்).

 

(1-1)       "அரையுற்று அமைந்த ஆரம் நீவி

புரையப் பூண்ட கோதை மார்பினை"     (அகம்: 100:1-2)

(1-2)       "ஆர மார்பின் அரிஞிமிறு ஆர்ப்ப " (அகம்: 102: 10)

(1-3)       "ஆரம் நாற” (அகம்: 22:12)

 

 

மின்னெழுத்தில் வடித்தது,

 

பெஞ்சமின் பிராங்கிளின்பி

24 கன்னி 2051

/ /௨०௫௧]

(10-10-2020)

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக