இந்தப் பதிவானது சொல்லாய்வு அறிஞர் ப. அருளி அவர்களின் அயற்சொல் அகராதி (பாகம் 3) நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.
படி ~ ப்ரதி
சங்கதச் சொற்களில் பல சொற்களின் வேரச்சொல் தமிழில் இருப்பது நாம் அறிந்த்தே. தமிழ்ச்சொற்கள் ஒலியமைப்பில் திரிபடைந்து சங்கதச்சொற்களாக கிளைவிட்டு புடைத்து நிற்கும்.
எ-டு: உண்ணம்~உஷ்ண, கலுழம்~கலிஷ, பவளம்~ப்ரவள, சடம் ~ஜட, குட்டம்~குஷ்ட , மெது~ம்ருது, மீனம்~மீன, நீர்~நீர, நீலம்~நீல.
இந்த வரிசையில் ஒரு சொல்தான் பிரதி என்ற சங்கதச்சொல். படி என்ற தமிழ்ச்சொல்லே ப்ரதி என்று சங்கதத்தில் புழங்கலாயிற்று.
(படி என்றால் படியெடுத்தல் என்பதை நினைவிற்கொள்க)
பிரதி என்ற சொல்லுக்கு படி, ஒப்பு, ஒத்த தன்மை, விடை என்ற பொருள்கள் உண்டு. அது மட்டுமல்லாது ஒத்த தன்மைக்கு எதிர்மறையான பொருளாக, மாறு என்ற பொருளும் பிரதி என்ற சங்கதச்சொல்லுக்கு உண்டு. போட்டி, ஒவ்வொரு என்ற பிற பொருளும் பிரதி என்ற சொல்லுக்கு உண்டு.
சுருங்கக்கூறின் படி, ஒப்பு, ஒத்த தன்மை, விடை, மாறு, போட்டி, ஒவ்வொரு போன்ற பொருள்களை பிரதி என்ற சங்கதச்சொல் கொண்டுள்ளது.
அந்த வகையில் பிரதிநிதி என்ற சொல்லை நிகராளி, பகராளி என்று தமிழ்ப்படுத்தியுள்ளார் சொல்லாய்வு அறிஞர் ப.அருளி அவர்கள்.
ஆங்கிலத்தில் representative என்ற சொல்லுக்கு இணையாக நாம் பிரதிநிதி என்ற சங்கதச்சொல்லை கையாள்கிறோம். எனது தொகுதியின் பிரதிநிதி இவர் என்று ஒருவரைக் குறிப்பிட்டுப் பேசுகிறோம். ஒரு வெளிநாட்டு அரசின் சார்பாக குழு ஒன்று இங்கு வந்தால், அரசு பிரதிநிதிகள் வந்துள்ளனர் என்று செய்தித்தாள்கள் எழுதுகின்றன.
இதற்கு மாற்றாக எனது தொகுதியின் நிகராளி/பகராளி இன்னார் என்று கூறலாம். வெளிநாட்டரசின் நிகராளி/பகராளிக் குழு இங்கு வந்துள்ளது என்று எழுதலாம்.
இதே வரிசையில் வேறு சில சொற்களையும் காண்போம்.
பிரதிக்கிரகம் = செய்நன்றி
பிரதிக்கினை = உன்னித்த பொருள்,
சூள், ஒப்புகை, ஏற்பு, தீர்மானம்
பிரதிகாசம் = பகடி, ஏகடியம்
பிரதிகூலம் = தீமை, தடை
பிரதிபலம் = கைம்மாறு,
மாற்றுப்பயன்
பிரதிபலித்தல் = எதிரொளிறல்
பிரதிபிம்பம் = எதிருரு, எதிர்ச்சாயை
பிரதியுபகாரம் = கைம்மாறு
பிரதி ரூபம் = ஒத்த வடிவம்,
பெயர்த்தெழுதுகை
பிரதிவாதம் = எதிர் வழக்குரை
பிரதிவாதி= எதிராளி,
வழக்கெதிராளி
பிரதிஷ்டை= திருநிலை நிறுவல்
என்ன நண்பர்களே! உங்கள் தொகுதியின் பகராளி உங்கள் ஊர்ப்பக்கம் வருகிறாரா?
அடுத்த நிகராளியாக தற்போது உள்ளவரைத்தான் தேர்ந்தெடுக்கப் போகிறீர்களா?
நட்புடன்,
பெஞ்சமின் பிராங்கிளின். பி
11 கடகம் 2051
[ ௧௧/०௭/௨०௫௧]
(26-07-2020)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக