சனி, 6 நவம்பர், 2021

காரணம்-2

 சொல்வாய்வு அறிஞர் ப. அருளி அவர்கள் தற்போது "காரணம்" என்ற திங்களிதழை நடத்திவருகிறார் என்று நான் ஏற்கனவே கூறியுள்ளேன். அதன் இரண்டாவது பதிப்பு வந்துள்ளது.

அதில் "பன்றி" என்ற சொல் குறித்து பல தகவல்கள் உள்ளன. அது குறித்து நாம் பார்ப்போம்.


பன்றியின் பெயர் "பல்" என்னும் அடிப்படையில் உருவானது.

பல் > பல் [பன்]> +தி > பன்றி

பன்றி கொண்டுள்ள பற்கொம்பிற்கு மருப்பு என்ற வேறோர் பெயருமுண்டு. அம்மருப்புகள் கொண்டு பன்றியானது சேற்று நிலத்தினை குத்திக் கிழிக்கும். ஆகையால் பன்றிக்கு "கீழல்" என்னும் வினையாலணையும் பெயரும் உண்டு.

கீழ்த்தல் = குத்தித் தோண்டுதல்

[காண்க : "வேரொடுங் கீழ்ந்து வௌவி" (சீவக. 272) ]

கீழ் >கீழ்+ அல் > கீழல் > கேழல்

" கேழல் கிண்டிய " [நற் . 399:4]
"கேழல் உழுதென" [ஐங்குறு. 269.1]

பன்றியின் கருநிறம் சார்ந்து, அதற்கு "ஏனம்" என்று மற்றுமொரு பெயருமுண்டு.

யா = கருமை
யா+அன்> யான்> யான்+ அம் > யானம்> யேனம்> ஏனம்

"இருள்" நிறப் பன்றியை "ஏனம்" என்றலும் [தொல்.பொருள். மரபி. 69:5]

இருள் நிறப் பன்றியை "இருளி" என்றவாறு திவாகரம் சுட்டும்.

கருமையான பன்றியை "கருமா" என்கிறது பிங்கலம்.

வலிமை வாய்ந்த உளியினைப் போன்ற கொம்பொத்த மருப்புடைமை பற்றி (வல் + உளி)
"வல்லுளி" என்னும் சிறப்புப் பெயரினாலும் பன்றி சுட்டப்பெற்றது.

மருப்பு என்னும் பன்றியின் வாய்ப்பல் கொம்புரு உறுப்பு, சற்றே மேனோக்கி வளைந்திருக்கும்.

1. "வளை மருப்பு ஏனம்" [பெரும்பாண் :110]
2. "ஏனத்து வளைவெண் கோடு" [சிலம்பு: வேட்டுவ: 24]
3. "வளைவெண் மருப்பின் கேழல்" [ஐங்குறு : 265:2]
4. "இளம் பிறையன்ன கோட்ட கேழல்" [ஐங்குறு: 264:1]


வளைந்த [கொம்புகளை- கோடுகளை] மருப்புகளை உடைய பன்றிக்கு "கோணி" என்றவாறும் தெளிவுச்சொல் ஒன்று சுட்டப்பெற்றது.

[கோணல்>] [கோண்>கோண்+இ] > கோணி

அகத்திப்பூவானது வெள்ளை நிறத்தில் வளைந்து காணப்டும்.

(இக்கட்டுரை அமையப்பெற்ற காரணம் திங்களிதழின் அட்டைப்படம் அகத்திப்பூவையே கொண்டுள்ளது. செவ்வகத்தி, வெள்ளகத்தி ஆகிய இரண்டும் உள்ளது)

பன்றியின் மருப்பானது வெள்ளகத்தி (வெள்ளை நிற அகத்தி) பூவினை ஒத்து இருப்பதால், பன்றிக்கு "அகத்தி" என்ற பெயரும் உண்டு.

"புகழா வாகைப் பூவின் அன்ன
வளை மருப்பு ஏனம்......" [பெரும்பாண் : 109 -110]

[நச்.உரை: அகத்திப் பூவினையொத்த வளைந்த கொம்பினையுடைய பன்றியினது.....]

(வெண்மை அடிப்படையில் அகத்திக்கும் வாகை என்னும் குறிப்பீடு உள்ளது. அதே நேரத்தில் வாகைப்பூவும், அகத்தியாகிய வாகைப்பூவும் வேறுவேறானவை.
வாகை என்றால் 1. வெற்றியாளர் அணியும் மாலை, 2. வெற்றி, 3. வெற்றியால் ஆரவாரித்தல் போன்ற பொருள்கள் உண்டு. வெற்றிக்கும் புகழுக்கும் உரியதாகக் குறிக்க வேண்டாத வாகை " புகழா வாகை" எனப்படும். அதுவே அகத்தி.

புகழா வாகைப் பூ = அகத்திப் பூ)

ஆக இந்தக் கருமை நிற விலங்கிற்கு தமிழில் 1) பன்றி, 2) கீழல், 3) ஏனம், 4) இருளி, 5) கருமா, 6) வல்லுளி, 7) கோணி, 8) அகத்தி என்றெல்லாம் பெயருள்ளது.


தமிழ் மொழியின் வளமையைக் கண்டீர்களா?


பி.கு: இந்த மாத காரணம் இதழில் அருளியார் அகர வரிசைச் சொற்களுக்கான சொற்பிறப்பியல் வேர் மூலங்களை எழுதியுள்ளார். அதில் ஒன்றுதான் இந்த அகத்தி என்னும் சொல். இச்சொல்லுக்கான அருளியாரின் நீண்ட உரையே நான் மேலே எழுதியுள்ளவை. இது போல் பல சொற்களுக்கான விளக்கங்களும் வெறும் 20 உரூபாய் மதிப்பில் அருளியார் நமக்குத் தருகிறார். உடல் நலம் குன்றி பார்வைக் குறைபாடும் கொண்டுள்ள சொல்லாய்வு அறிஞர் ப. அருளியாரை நாம், அவர் வாழும் போதே வாழ்த்துவோம்.

இதழைப் பெற : அறிவன் அருளி
+919444576660.


மின்னெழுத்தில் வடித்தது,

பெஞ்சமின் பிராங்கிளின் . பி
12- மடங்கல் - 2021
(28-08-2021)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக