இன்றைய தேர்தல் முறையை ஒரு எளிமையான கதையின் மூலமாக விளக்கலாம்.
ஒரு விடுதியில் தினமும் காலை உணவாக உப்புமா போடப்பட்டது. 100 பேரில் 80 பேர் அதை விரும்பவில்லை, உப்புமாவை மாற்ற வேண்டும், வேறு சிற்றுண்டி வேண்டும் என்று விடுதி காப்பாளரிடம் புகார் சொன்னார்கள். உப்புமா விரும்பிகளான 20 பேர் அதுவே தொடரவேண்டும் என்றார்கள். மக்கள் தேர்வு முறைப்படி முடிவெடுக்க தீர்மானித்தார் காப்பாளர். அதன்படி, உப்புமாவே மீண்டும் தொடரும் என முடிவானது.
எப்படி?
உப்புமா வேண்டாம் என்று புகார் செய்தவர்களில் 18 பேர் தோசைக்கும், 16 பேர் இட்லிக்கும், 14 பேர் பொங்கலுக்கும், 12 பேர் பிரெட் பட்டருக்கும், 10 பேர் ஊத்தாப்பத்திற்கும், 10 பேர் பூரிக்கும் விருப்பம் தெரிவித்தார்கள்.
இந்த உப்புமா கதைதான் இப்போதுள்ள தேர்தலிலில் நடைபெறுகிறது.
மாற்றம் வேண்டும் என்று எண்ணுபவர்கள் அனைவரும் ஒரே கருத்தை கொண்டால் தான் மாற்றம் வரும். ஆனால் இது நடைமுறையில் சாத்தியமற்றது. பல்வேறு பண்பாடு, தொழில், நிலம், மொழி, மதம் சார்ந்த இந்தியா போன்ற ஒன்றியத்தில் பெருவாரியான மக்களை ஒரு கட்சியின் பின் அணிதிரள வைப்பது கடினமே.
ஆகையால் நாம் எம்மாதிரியான தேர்தல் மாற்றத்தைக் குறித்து பேச வேண்டும்? இதனை மேற்சொன்ன கதையின் வழியே பார்ப்போம்.
ஒரு நல்ல விடுதி நிருவாகத்தினர் என்றால், குறைந்தது 65% உறுப்பினர்களின் விருப்பத் தெரிவினை நிறைவு செய்வதே தனது விடுதியின் எதிர்காலத்திற்கும் நற்பெயருக்கும் நல்லது என்று கருதுவர். விருப்ப உணவிற்காக கிடைக்கப்பெற்ற தேர்வுகளை வைத்து, ஒரு தகுதி விழுக்காட்டினை உருவாக்குவர்.
இந்த கதைப்படி பார்த்தால், 14% டினை, தகுதியாகக் கொள்ளலாம்.
அதன்படி உப்புமாவோடு, தோசை, இட்டிலி, பொங்கல் போன்ற உணவுகளும் பரிமாறப்படும் என்பர். ஆகையால் குறைந்தது, 68% விழுக்காட்டினரின் விருப்பத்தேர்வினை நிறைவு செய்ய இயலும். இம்முறையிலேயே விடுதி உறுப்பினர்களின் உண்மையான விருப்பத்தினை நடைமுறைக்கு கொண்டுவர இயலும்.
இதைத்தான் தேர்தல் முறையிலும் செய்யவேண்டும் நாம் குரல் எழுப்ப வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
இது குறித்து நாம் கண்டிப்பாக பிறரோடு பேசுவோம். மாற்றத்தை உருவாக்குவோம்.
தோழமையுடன்,
பெஞ்சமின் பிராங்கிளின். பி
06-கும்பம்-2021
(18-02-2021)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக