மூச்சுள்ள வரைக்கும் உலகத் தமிழின
முன்னேற்றம் ஒன்றே பேசுவேன்! - அதில்ஏச்சுகள் பேச்சுகள் ஆயிரம் வரினும்
எதிர்நின் றிருகை வீசுவேன்!
காசுள்ள வரைக்கும் கையுள்ள வரைக்கும்
கவின்தமிழ் ஒன்றே பரப்புவேன்! - இதை
மாசுள்ளம் கொண்டே மதித்திடார் செயல்களை
மண்மே டிட்டே நிரப்புவேன்!
காலுள்ள வரைக்கும் கருத்துள்ள வரைக்கும்
காடுமே டெல்லாம் முழக்குவேன்! - என்
மேலுள்ள அன்பால் எனும் பற்று வோர்க்கும்
மேலும்மேல் அவ்வினை பழக்குவேன்!
உயிருள்ள வரைக்கும் உடலுள்ள வரைக்கும்
ஒவ்வோர் அணுவிலும் தமிழ்மணம்! -
அவை
அயர்வுற்று மறையினும் ஆழ்வெளி பரவினும்
அங்கங்கு கிளர்ந்தெழும் தமிழினம்! - 1982
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக