"தமிழ் - சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின் ஆராய்ச்சி
நிறுவனத்தில் அருளி ஆற்றிய உரைகள் (தொகுதி-2) "
நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
வித்து
சொல் மூலம்:
விய் > விய்ல் > வில் > விள் (விள் +து) > விட்டு > வித்து
சொற்பொருள்கள் :
வித்து: (1) விதை (2) வித்து (என்னும் ஏவல்)
(3) விந்து (4) காரணம் (5) பரப்பு
(6) பிறர் மனத்தில் பதியவை (7) கருவி
விய்; விரிவு படுதற் கருத்து மூலவேர்.
விரிவுக் கருத்துக்கு மூலமாய பிளவுபடற் கருத்து,
இதற்கும் முற்படையான தாகும்.
பிளவினின்று பிரிவும்- பின்னர் விரிவும், விரிவினின்று
அகலக் கருத்தும், அகலக் கருத்தினின்றும் பரப்பும்
பெருமையும் போலும் கிளைக்கருத்து விளர்ச்சிகளும்
இயல்நெறி உடையனவாகும்.
விய் = பிள, விரி , பிரி, பரவு, அகலு, நீங்கு.
விய் + அம்>வியம் = விரிவு.
“வியம் பெறு தோற்றமும்"
(திருக்காளத். பு. ஞானோப. 62)
வியம் வேறுபாடு. (திவ். பெரியதி. 8, 7, 1. வ்யா )
வியம் = சமமற்றது. "விய நிலையுருவகம்" (தண்டி. 35,6.)
விய் + அவு > வியவு = வேறுபாடு.
"உலப்பினவாய் வியவாய்" (திவ். திருவாய். 7, 8, 3)
விய் + அல் > வியல் = விரிவு, அகலம், பெருமை.
(அகலம்): "வியலென் கிளவி அகலப் பொருட்டே "
(தொல். சொல். 364)
(வியல் = பெருமை): "வியன்றானை" (பதிற்றுப். 33:5)
வியல் = பெருமை (திவாகரம்)
வியல்+ அகம் > வியலகம் = பரந்த நிலமாகிய இம் மண்ணகம்.
பார் , பாரகம்.
வியல்+ இடம் > வியலிடம் = பாரகம்
அகலம் (சூடா நிக)
வியல் + உள் > வியலுள் = அகன்ற இடம்
"விழவுவீற் றிருந்த வியலுளாங்கண்"
(பதிற்றுப்: 56:1)
விய் > (விய்ல்) > வில் = பிரி , நீங்கு, அகலு.
வில் + அகு > விலகு = நீங்கு, விட்டு நீங்கு, பிரி , இடம்
விட்டுப் பெயர், பின்னிடு, ஒதுங்கு, செல்.
விலகு > விலங்கு = களை (பிங்கலம்),
வேறுபாடு, மாறுபாடு.
விலங்கு = வேறுபாடு
“விலங்கோரார் மெய்யோர்ப்பின்" (கலித், 52)
விலங்கு = மாறுபாடு
"விலங்கானே னாதலினால் விலங்கினேன்"
(கம்பரா. சடாயு. 22)
வில் > வில = பிரி, நீங்கு.
வில+தல் >(வில +(த்)+தல்) > விலத்தல் = நீங்குகை.
(யாழ். அக)
வில + (த்)+து)> விலத்து = விலக்கு (யாழ். அக)
வில்+ அக்கு > விலக்கு, விலகச்செய், நீக்கு, பிரி,
மாற்று, பிரித்துத் தள்ளு.
வில் > விலா = பிரிவு பிரிவாகத் தோன்றும் மார்பின்
எலும்புத் தொகுதியின் பக்கம்.
(ஓ.நோ: விலாவெலும்பு)
"கழுகும் பாறும் விலாவிற்றுக் கிடந்தவன்றே"
(சீவக, 804).
வில் > விள் = விரி, வெளிப்படு, மலர், உடைபடு,
வெடி, பிள, பகை, நீங்கு,
(வாய் முதலியன) திற.
விள் + கை > விள்கை = பிரிகை, விட்டகலுகை.
விள் + அல்> விள்ளல் = பிரிவு.
"விலங்கிற்கும் விள்ளல் அரிது" (நாலடி,76)
விள் = விரி, வெளிப்படு, முதிர்வடை, முற்று, தோன்று
விள் + அர்> விளர் = பிரி, அகல்
விள் +இ> விளி = பிரி, அகல், இற, இறந்துபோ
விளி+ தல் > விளிதல் = இடையறவு.
"விளிவின்று ..... தளிபொழி சாரல்" (பரிபா:12.2)
விளிதல் = இறத்தல், உயிர் பிரிவெய்துகை.
"விளிந்தாரின் வேறல்லர்" (குறள் : 143)
விளிதல் = கழிதல்
"வேண்டு நாள் வறிதே விளிந்தன்றால்"
(கம்பரா. நிந்தனை: 31)
விள் > விளை = விரி, வெளிப்படு, வெளித்தோன்று,
மேலெழு , முற்று.
விளை = முற்று, முதிர்.
விளை + அல் > விளையல் = முதிரல்.
விளை + வு > விளைவு = விளைகை.
விளை+அல் > விளையல் >விளைசல் >விளைச்சல் = விளைவு
விளை தயிர் = முற்றிய தயிர் (அகம்: 394:2)
விளை + உள் > விளையுள் = விளைவு, விளைச்சல்
விளை+ தல் > விளைதல் = உருவாதல்
"ஆற்ற விளைவது நாடு" (குறள்: 732)
விளைதல் = முதிர்தல்
"புன்புல மயக்கத்து விளைந்தன தினையே"
(ஐங்குறு: 260)
"விளை+வு> விளைவு = முதிர்ச்சி
"விளைவமை தயிரொடு மிசைகுவிர்" (சீவக; 122)
விளைவு = முதுமை (பிங்கலம்)
விளைவு = பழம். "வெள்ளில் விளைவுதிரும்"
(பு.வெ.10. சிறப்பிற்:1)
விளை+(த்) + தல் > விளைத்தல் = உண்டாக்குதல்.
"புகழ் விளைத்தல்" (பு.வெ. 2,14.)
விள் + அம்பு > விளம்பு. ("அம்பு"- ஓர் ஈறு)
விளம்பு = வெளிப்படுத்து, வெளிப்படக்கூறு,
பரப்பு, (பிங்கலம்), சொல்லு
விள்+து > விட்டு ஒ.நோ: கள்+து > கட்டு.
வள்+து > வட்டு.
விட்டு > விடு ஒ.நோ: தொட்டு > தொடு
வட்டு > வடு
விடு = விரி, வெளிப்படு, தோன்று. வெளியேறு,
கட்டு அவிழ், மலர்.
விடு = வெளிப்படு, வெளிப்படுத்து
(1-1) "விளக்கின் அன்ன சுடர்விடு தாமரை"
(நற்: 310:1)
(1-2) "கிளிவாய் ஒப்பின் ஒளிவிடு வள் உகிர்"
(பொருநரா: 34)
(ஒளிவிடு = ஒளியை வெளிப்படுத்து)
விடு = தோற்றுவி
"புல்லுணாத் தெவிட்டும் புலம்புவிடு குரலொடு"
(நெடுநல்: 94)
புலம்புவிடு குரலொடு = (நச். உரை) தனிமை
"தோற்றுவிக்கின்ற" குரலோடே...
விடு = ஏவு.
"........................................வேறூர்
வேந்துவிடு தொழிலொடு செலினும்
சேந்துவரல் அறியாது செம்மல் தேரே" (குறுந்:242:4-6)
வேந்துவிடு தொழில் = மன்னன் ஏவிய வினை."
விடு = ஏவு:
"எம் அம்பு கடிவிடுதும் நும் அரண் சேர்மின்" (புறம் 9:5)
விடு = கட்டு அவிழ், விரி
"தளைவிட்ட தாமரை” (கலித். 77)
"கொழுந்து விட்டிருக்கின்றது", "இந்தச்செடியில் இலை
விட்டிருக்கின்றது", "அந்த மரத்தில் தளிர் விட்டிருக்கின்றது"
என்பன போலும் பொது வழக்குகளுக்குள்ளேயே, விடு
என்பதன் வெளிப்பாட்டுக் கருத்து, - பரவலாக
அடர்ந்திருக்கின்றமையைக் காணலாம்.
"முளை விட்டிருக்கிறது" என்பது வெளிப்படையான வழக்கு!
விடு + அல் > விடல் = தீர்தல், நீங்குதல், முடிதல்
"தீர்தலும் தீர்த்தலும் விடற் பொருட்டு ஆகும்"
(தொல். உரியியல்: 316) (24)
"குவளையம் பைஞ்சுனை யசைவுவிடப் பருகி"
(மலைபடு: 25)
(நச். உரை: வழியின் களைப்புத் தீரும்படிக் குடித்து..... )
விடு = நீங்கு, விலகு, செல்
"கடல் சூழ் மண்டிலம் பெறினும் விடல் சூழலன் யான்
நின்னுடை நட்பே"
(குறுந்தொகை: 300:7-8)
விடு" என்பதன், சமற்கிருதத் திரிபு:
Vita - gone away, departed, disappeared, Vanished
விடு > vita (skt)
> Vita Baaya = Fearless
> Vita Bhi = Free from fear
> Vita soka = Free from Sorrow
(Skt): Viti = Seperation.
விடு = நீங்கு, தீர், பிள, அகல், விலகு
"முளியரிற் பிறந்த வளிவளர் கூரெரிச்
சுடர் நிமிர் நெடுங்கொடி 'விடர்முகை' முழங்கும்'
(அகம்: 143:6-7)
உரை: விடர் முகை="பிளவாகிய குகை"
விடு +அர் விடர் = நிலப்பிளப்பு.
மலைப்பிளப்பு
விடரகம் = மலைக்குகை, முழை
விடரளை = வெடிப்புடைய பொந்து
விடு = நீக்கு, பிள.
'விடு' என்னும் தூய தமிழ்ச்சொல்லை,
"Bhid'' என்றவாறான திரிபிலும்,- சமற்கிருதம் கடன் கொண்டது.
(Skt) Bhid = to Split, cleave, break, Cut or rend
asunder, Pierce, to pass through
வேறு வடிவங்கள் : (சமற்கிருதத்தில்)
விடு> Bhitt = A fragment, section, a partition
Bhitti Breaking, Splitting
Bhittika = Breaking, splitting
Bhid = Splitting, breaking
தூய தமிழின், விடு என்னும் பிளவுக்கருத்துச்சொல்,
சமற்கிருதத்தில் "Bhid" என்ற வடிவெய்திய பின்,
அதனின்று - மேலும் "Bheda" என்ற சொல்லும், ஆங்கே திரிபெய்தியது.
சமற்கிருத மொழியியல் வாணர் "Bhida" என்னும்
சொல்லுக்கு மூலச் சொல்லாக "Bhid" என்பதனையே
மாறாது குறிப்பர்!
Bheda = (Bhid) - Breaking, Splitting, cleaving,
piercing, breaking open.
வேறுவடிவங்கள் : சமற்கிருதத்தில்:
Bhedaka = Breaking, in to or through, piercing
Bhedana = Breaking, cleaving
Bhedita = broken, split
Bhedin = Breaking, splitting.
விள் > விள் +து >விட்டு >விடு
விடு = வெளித்தோன்று, எழு, முளை
விடு> விடி = விடி தலைச்செய்
விடி >விடி + தல்> விடிதல் =
கதிரவன் வெளித்தோன்றுகை
விடி > + அல்> விடியல் = கதிரவன் தோன்றும் பொழுது.
தெலுங்கு: Vidiyu
"பிரம்பின் திரள்கனி பெய்து விடியல் வைகறை யிடூஉம் ஊர"
(அகம்: 196:)
விடு > விடை = கேள்விக்கு எதிராக விடுக்கும் விளக்கம்.
விடு + தல் - விடுதல் = வெளிவருதல்
விட்டு > வித்து: டகர தகரத் திரிபு
படாகை > பதாகை
படி > பதி என்றாற்போல
வித்து: (வித்துக்களுக்குப் பொதுப்பெயர்)
(1-1) "அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து" (361: குறள்)
(1-2) "வீழ்குடி யுழவன் வித்து உண்டாஅங்கு"
(புறம். 230:13)
(உரை : தளர்ந்த குடியையுடைய உழவன், விதையை
உண்டாற்போல....)
(1-3) "வித்தும் இடல் வேண்டும் கொல்லோ! விருந்தோம்பி"
மிச்சில் மிசைவான் புலம்" (குறள் : 85)
(1-4) "வெண்ணெல் வித்தின் அறைமிசை உணங்கும்" (அகம் 216:6)
( வெண்ணெல் வித்து = வெண்ணெல் விதை)
உள்ளிருந்து விளர்ந்து முளைத்து வெளிவருகின்றமை
நோக்கி, விதைமணி,- வித்து எனப்பெற்றது.
வித்து = வித்து தலைச் செய், வித்தினை இடு,
வித்தி ஊன்று
ஒரு மரத்தின், அல்லது ஒரு செடியின், அல்லது ஒரு
கொடியின், - மூலமாக, பயன் கருவாக, "வித்து" இருப்பதால்
அச்சொல் ''காரணம்'' எனும் பொருட்கும் பயனேற்றம் பெற்றது.
"நன்றிக்கு வித்து ஆகும் நல்லொழுக்கம்"
(திருக்குறள் : 138)
வித்து = காரணம்
வித்தி = விதைத்து
(1-1) "சிற்சில வித்திப் பற்பல விளைந்து"
(நற்றிணை : 328:2)
(உரை : மிகச்சிலவாய தினைகளை விதைத்து,-
அவை, மிகப்பலவாக விளைதலும்....)
(1-2) "வித்தி வானோக்கும் புன்புலம்" (புறம்: 18:24)
(1-3) "பூழி மயங்கப் பல உழுது வித்தி” (புறம்: 120:4)
(உரை: புழுதி கலக்கப் பலசால்பட வுழுது வித்தி ...)
(1-4) "நிலத்து இட்ட நல்வித்து நாறாமை இன்னா "
(இன்னா நாற்: 19:2)
தமிழிய (திரவிட) மொழிகள் சிலவற்றில் இத் தூய் தமிழ்ச்
சொல்லின் திரிபுகள் சிலவற்றைக் காண்போம்:
Malayalam:
வித்து = விதை
விதைக்க = வித்தை விதை
வித = வித்துதல், விதைக்கும்
காலம், விதைப்புக்குரிய விதை
விதார் = விதை
Kota:
வித் = வித்தை விதை
வித் = விதை
விதன் = விதைக்கும் நேரம்
Toda:
Pit = (Pity-) = (வித்தை ) விதை
Pit = வித்து
Kannada:
Bittu = வித்தை ஊன்று, விதை
Bittu, Bitta = விதை
Bittige = விதைக்கை
Bede = விதை, (விதையை) விதை
Kodagu:
Bitt = (bitti) = (விதையை) விதை, தூவு
Bitti = விதைப்பதற்குத் தேர்ந்தெடுத்த விதை
Tulu:
Bittuni, Buttuni = (விதையை) விதை.
Bittu = விதை
Bittige = வித்துகை
Bitte = விதைக்கை
Bide = குறிப்பிட்ட ஒரே வகையான விதை.
Telugu:
Vittu = வித்துதல் செய்
Vittu = வித்து
Vittanamu = வித்து
Veda = விதைக்கை
Kolāmi:
Vitanam = வித்து
Vit = பரவலாக விதை
Naiki:
Vit = வித்தினை வித்துக!
Vitanam = வித்து
Pārji:
Vit = வித்தினை வித்து
Vittid = வித்து
Gadba (Ollari)
Vit = வித்துக
Gadba (South)
Vit = வித்துக
Viti = வித்து
Gondi:
Witna = வித்துக.
Konda:
Vit =வித்துக.
Kuwi:
(S) Bitza = வித்து
வித்து> விது = (தூவு, தெளி, சிதறு, பரவு, பரப்பு ).
விது +இர் = விதிர்
ஒ.நோ: அது+இர் = அதிர்,
முது+இர் = முதிர்
எது+இர் = எதிர்.
விதிர்த்தல் : (முதலில், விதையைத் தெளிப்பதாகிய, தூவுவதாகிய வினைக்கே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.)
[அது > அதம்
அது+பு = அதுப்பு >அதப்பு.
அது+கு= அதுக்கு > அதக்கு.
அது > அதை
அது > அதி = மிகுதி அதி > அதி + அன் > அதியன்
அதி+இகம் = அதிகம் அதிகம் >அதிகன்
அதியம் + மான் = அதியமான் (மகன்' என்பதன் திரிபு, மான்")
அது > அதம் > அதன் = பெரியோன்
அதன் > ஆதன் = தலைவன், உயிர்
அது >அதன் > அத்தன் = பெரியோன், தலைவன்
அது என்னும் மிகுதிப்பொருள் செறிந்த முதனிலை,
"இர்” என்ற ஈறேற்று,, -"அதிர்" என்றாகி நடுக்கத்தைக் குறித்தது.]
ஈண்டு, 'விது' என்னும் தெளித்தல், தூவுதல், சிதற வீசுதல் கருத்துச்
செறிவுடைய முதனிலையும், 'இர்' என்ற ஈறேற்று, - 'விதிர்' என்றாகி, நடுக்கம் குறித்த சொல்லாக விளர்ந்தது!
"அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கம் செய்யும்"
(தொல். உரியியல்: 18)
"விதிர்ப்பு", என்பது முதலில் தெளித்தலையே குறித்தது!
"யாஅ ஒண்டளிர் அரக்கு விதிர்த்தன்ன நின் ஆகமேனி அம்பசப்பு ஊர”
(அகம்: 333:1-2)
(உரை : யாஅ மரத்தினது ஒள்ளிய தளிரின்மேல் காக்கினைத் தெளித்துவிட்டாற் போன்று, நின்னுடைய உடலினது அழகிய நிறத்தின் மேல் பசலை பாயாநிற்ப...)
விதிர்த்தல் = சிதறுதல்
"இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்த்தும்"
(புறம்: 188:4-5)
(மெய்பட விதிர்த்தும் = உரை: உடம்பின் கண்படச் சிதறியும்...)
விதிர்த்தல் = உதறுதல்:
"ஈர்ங்கை விதிரார் கயவர்" (குறள். 1077)
(பாவா: உரை) : கீழ்மக்கள் தாம் உண்ட எச்சிற்கையில் ஒட்டிய இரண்டொரு பருக்கையையும் உதறி வீழ்த்தார்.)
தெளித்தல், சிதறுதல், உதறுதல் ஆகிய கருத்துகளடர்ந்த,
"விதிர்த்தல்" என்னும் சொல்லின் தமிழியத் திரிபுகளை, இங்கு ஒரு சிறிது காண்போம்.
Malayalam: Vitaruva = to Scatter, (சிதறச்செய்)
Strew (as seed)
Kota: Vid = to throw
Kannada: Bidiru = to be scattered or spread out
scatter about, spread about,
to throw about
Telugu: Viduru; Vidulu = to fall or drop upon
Viduru = to be scattered.
Vidurucu = Vidr(u)cu, Vidul(u)cu
= Scatter, Shake of.
Kui: Viti = Scattered
Kurukh: Bidraana = to scatter about in disorder.
spread all over
Malto: Bidrare = to be dispersed.
வித்து > விது > விதை; விதை = வித்து
ஓ. நோ: பொத்து > பொது
முல் +து > முற்று >முத்து >முது.
முது > முதை : முதைப்புனம் = பழங்கொல்லை.
முதைப்புனம் கொன்ற ஆர்கலி உழவர்"
(குறுந். 155:1)
விதை : "ஊன்கிழித் தன்ன செஞ்சுவல் நெடுஞ்சால்
வித்திய மருங்கின் விதைபல நாறி"
(அகம் 194:4-5)
(உரை : ஊனைக் கிழித்தாற் போன்ற செந்நிறம் அமைந்த மேட்டு நிலத்தின்கண் அமைந்த, நெடிய படைச்சாலினிடத்தே பண்டு விதைக்கப் பெற்ற இடங்களிலெல்லாம் விதைகள் பல முளைத்தெழுதலால்...)
விதை + அர்> விதையர் : விதை விதைக்கும் ஆயர்
"விதையர் கொன்ற முதையர் பூழி" (நற்: 121.1)
(உரை : விதை விதைக்கும் ஆயர், பலபடியாக உழுது புரட்டிய
பழங்கொல்லைப் புழுதியில்...)
விதை என்னும் சொல், - சமற்கிருதத்தில் Vija, Bija ஆகிய
வடிவங்களில் திரிந்துள்ளது.
தகரம் 'ஜகர ஒலி' பெறுவது, ஒலியியலில் ஒவ்வக்கூடிய அரிதான மாற்றமாகும்.
மதுரை என்பதை "மெஜுரா" என ஆங்கிலர் ஒலித்ததையும்,
அது தொடர்ந்து வழங்கப் பெற்று வருவதையும் இங்குக் கருத்தில்
கொள்ள வேண்டும்.
தகர ஜகர ஒலித்திரிபு, வடபால் தமிழிய மொழிகளில் அடிப்படையான வழக்கு உடையதே!
[" பொத்து" என்று மூடுதலைக் குறித்த தூய தமிழ்ச்சொல்,
Kui மொழியில், 'Poja' என்றும்,
Kuwi மொழியில், 'Pojali' என்றும்,
Kurukh மொழியில், 'Pojjana' என்றும்,
Malto மொழியில், 'Poje' என்றும்,
Brahui மொழியில், 'Puc' என்றும்,
தகரம் ஜகாமாகத் திரிந்த வடிவுகளில் மாற்றமுற்றுக் கிடப்பதை
ஒரு சோற்றுப்பதமாக இங்குக் கொள்ளலாம்.]
விதை என்னும் சொல், (தமிழிய இனமொழிகளில்)
"குவி" மொழியில் (S) Bitza (=Seed) என்றும்,
மால்டோ மொழியில் Bici (Seed) என்றும்,
கோண்டியில் Vija= (Seed) என்றும்
திரிபடைந்தவாறு இன்றும் வழங்குகின்றமை இவ்விடத்தில்
கருதத்தக்கதாகும்! இவ்வகைத் திரிபு, தென் தமிழிய மொழிகளில் அரிது. வடபால் தமிழிய மொழிகளுக்கு ஓரளவுக்கு உடன்பாடானது!
விதை >(சமற்கிருதத்தில்) Vija.
Bija = (also Writen,, ' Vija") of doubtful Origin"
என்ற மொழியறிஞர். மானியர் வில்லியம்சின் நேரிய குறிப்பு, இங்குக் கருதத்தக்கது.
(Sanskrit & English Dictionary: (P. 732)
(Skt): Bija = Seed (of plants)
சமற்கிருதத்தில் இதன் வேறிய வடிவங்கள் :
Bijakala = Seed-time.
Bijadhana = Seed-Corn.
Bijadhanya = Seed-Corn.
Bija dhanyavati = Seed Bed.
Bija vati = seed plot.
Bija vapa = sowing seed.
Bijabara = Collection of seeds.
Bija-laya = Seed- bed.
Bijya = Produced from seed.
Pali: Bija = seed.
Prakrit: Bia = seed.
Bija என்ற சமற்கிருதச் சொல்லின் முதனிலை மட்டும் நீடி நின்றவாறு, வழங்கி வருகின்ற பிற இந்திய ஆரிய மொழிகளும் அதன் வடிவங்களுமாவன:
Ashkun: Bi = seed grain
Kalasha: Bi = grain
Kohistani: Bih
Lahnda: Bi
Punjabi: Bi
Bi = Seed
Marathi: Bi
Konkani: Bi
Wot: Biu
Gaw: Biu = a single grain.
Biyo,
Bengali: Bia = seed
Bihari: Biya
Maithili: Bia
Bhojpuri: Biya
Awadhi: Bia
Hindi: Bia, Biya
Gujarati: Biyu
Nepali: Biu = seed
Biyu (grain of rice remaining unhusked)
வித்து என்னும் தூய தமிழ்ச் சொல்லுக்கு, "விந்து" என்னும் பொருளுண்மையை, நாமதீப நிகண்டு சுட்டும். (601) வித்து எனும் சொற்கு , - மூலம், காரணம் என்னும் பொருள்களுண்மையும் ஈண்டுக் கருதத்தக்கதாகும். ஆனேற்றை "வித்துக்காளை" என்னும் வழக்கும், விதைக்கொட்டை, விதை (Testicle) போன்ற பரவலான
பொதுவழக்குகளும் மிகவும் கருதத்தக்கனவாகும்.
பயிர் ஒன்றனுக்கு, அதாவது- நிலைத்திணை ஒன்றுக்கு மூலமானதும், கருவானதும் ஆக, - வித்து இருப்பதுபோல், உயிர்த்தோற்றம் ஒன்றனுக்கு மூலமானதும், கருவானதும் ஆக, உயிர்களின் கருநீர் உள்ளது.
இந்த உயிர் நீர் (Semen), (விது) > "விந்து" எனக் குறிப்பிடப் பெற்றது!
உயிர்வித்தாகிய நீர்த்துளி விந்து" எனப் பெற்றது. உலகிலேயே மிக ஒள்ளிய நாகரிகமும், பண்பாட்டுணர்வும் பெற்ற மாந்தக் கூட்டத்தினராகத் தமிழர்கள் இருந்தமையால், பிறப்புறுப்புச் சொற்கள், அவற்றின் பிரிவுகள், அவற்றின் உள்ளுறுப்புச் சொற்கள் போன்ற எவற்றையும், அவர்கள் நூல்களில் வருமாறு குறித்தாரில்லை.
"அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல்" என்னும், தொல்காப்பியம்! இம்மேற் காட்டியவாறான சொற்களை மறைத்துக் கூட , - பிற சொற்களால் சுட்டிய தாகச் செய்திகள் இல.
ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்டுத் தோன்றிய திருக்குறளின் காமத்துப்பால் பகுதியை, இன்றைக்கு நம் தாய் எதிரில் கூட அமர்ந்து, விளங்கப் படித்துக் காட்டலாம்!
எவ்வளவு நாகரிகமாகப் பழந்தமிழ் நூல்கள் இலங்கியிருந்தன, என்பதற்கு. ஈதொரு சான்று! புணர்ச்சியைக் கூட, "தோள் மேல் துயில்" என்றவாறு சுட்டுகின்ற தமிழ்ப்பண்பு இங்குக் கருதுதற்கு உரியது! (காண்க: குறள்கள் :1103,149, 916,917)
வித்து > விது விது +ஐ = விதை ...
விது > விந்து.
ஒ.நோ: முது > முந்து பொது > பொந்து
மணியில் உற்ற துளி போலம் புள்ளி, அதன் குற்றங்களில் ஒன்றாகக் கருதப்பெற்று, அக் குற்றம் 'விந்து" என்றே அழைக்கப் பெற்றது.
"களங்கமும், விந்துவும் ஏகையும் நீங்கி”
(சிலம்பு: 14:110:111.)
(விந்து = புள்ளி, துளி)
விந்து, சமற்கிருதத்தில் - Bindu' எனத் திரிந்தது.
(Skt) Bindu = drop, spot.
(Connection with word group under 'vita") என்று
குறிப்பெழுதுவார் "அறிஞர். மானியர் வில்லியம்சு"!
Pali: Bindu = drop, spot.
Kashmiri: Bend = Semen.
Sindhi: Bindu = Semen.
Punjali: Bind = Semen. (Bindi = dot.)
Sinhalese: Binda = drop.
Oriya: Binda = dot.
Kumauni: Bid = drop, seed, semen.
Gujarati: Bidu = drop.
Marathi: Bid, Bidde = drop of semen
------------------------------------------------------------------------
பின்னிணை :
வித்து = பரப்பு, விளம்பு.
"நாம் வித்தாவாறென்னே " (சீவக: 1611)
வித்து = பிறர் மனத்தில் பதியவை.
"செவிமுதல் வயங்கு மொழி வித்தி"
(புறம்: 206.)
வித்து = காரணம்.
“முத்திக்கு வித்து முதல்வன்றன் ஞானமே”
(திருமந்: 2506)
மின்னெழுத்தில் வடித்தது,
பெஞ்சமின் பிராங்கிளின். பி
13 ஆடவை 2051
[ ௧௩/०௬/௨०௫௧]
(27-06-2020)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக