ஞாயிறு, 14 ஜூன், 2020

தமிழர் இழந்த நிலம்-10

                                  தமிழர் இழந்த நிலம்-10

(இக்கட்டுரையை எழுதியது: ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்)

மார்ஷல் நேசமணி உள்ளிட்ட தலைவர்களின் கைதை கண்டித்து... தென் எல்லையில் போராட்டம் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது.

பின்னாட்களில் மிகப்பெரிய ஆளுமையாக அறியப்பட்ட தோழர் ஜீவாவை, போராட்டக்களத்தில் எங்கு தேடியும் காணவில்லை என்கிறார் அப்துல் ரசாக்.அவர் பிறந்த பூதப்பாண்டியில் உள்ள வீடு அடைக்கப்பட்டிருந்ததாகவும் சான்று பகர்கிறார்.

தென் எல்லையில் வெடித்த போராட்டத்தின் வீரியம், தேவிகுளம் பீர்மேடு பகுதிகளில் சுத்தமாக காணாமல் போயிருந்தது. அதற்கு ஒரு காரணம் பட்டம் தாணுப்பிள்ளையின் அரச பயங்கரவாதம் என்றாலும், இன்னொரு புறத்தில் தேயிலைத் தோட்ட முதலாளிகளும் அதற்கு ஒரு காரணமாக இருந்தார்கள்.

அன்றைக்கு மூணாறில் கொடிகட்டி பறந்தது இரண்டு தொழிற்சங்கங்கள்...

1-தமிழர்கள் நிறைந்த, குப்புசாமியை தலைவராகக் கொண்ட SIPW -South Indian plantations workers Union... இது தமிழ் தோட்டத் தொழிலாளிகளினுடைய சங்கமாக அறியப்பட்டது...

2-மலையாளிகளின் சங்கமாக அறியப்பட்ட ஏஐடியுசி.

இந்தியாவின் முதல் தொழிற்சங்கமாக அறியப்படும் ஏஐடியுசி,
மலையாள தொழிற்சங்க தலைவர்களால் தேவிகுளம் பீர்மேடு பகுதிகளில் வலிய திணிக்கப்பட்டிருந்த காலம் அந்தக் காலம்.

மார்ஷல் நேசமணி தலைமையிலான தமிழக தலைவர்கள் ஏற்றெடுத்த கூட்டத்தை மூணாறில் நடத்தியது, குப்புசாமி தலைவரின் தலைமையிலான,
SIPW  சங்கம் என்பதால், அந்த சங்கத்தின் நிர்வாகிகளை விரட்டி விரட்டி வேட்டையாடியது திருவிதாங்கூர் கொச்சி காவல்துறை.

எல்லப்பட்டி
சிட்டிவாரை
செண்டுவாரை
குண்டல
மாட்டுப்பட்டி
நெற்றிமுடி
அருவிக்காடு உள்ளிட்ட எஸ்டேட் பகுதியில் வாழும் தமிழ் தோட்டத் தொழிலாளிகள், அடி தாங்க முடியாமல், குரங்கணி வழியாக,போடிக்கு தப்பித்து வரும் நிலை ஏற்பட்டது.

நயமக்காடு
தலையாறு
வாகுவாரை அப்பர்
வாகுவாரை
லக்கம்
சட்டமூணாறு உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள்,மறையூர்- சின்னாறு வழியாக உடுமலைப்பேட்டைக்கு தப்பி வந்தார்கள்.

வட்டவடை
கோவிலூர்
கொட்டக்கம்பூர்
உள்ளிட்ட 12 மலைக்கிராமங்களில் பட்டா நிலத்தில் வாழ்ந்த தமிழர்களும்,கேரள காவல்துறையின் அடக்குமுறைக்கு அஞ்சி பேரிஜம் ஏரி வழியாக கொடைக்கானலுக்கு தப்பி ஓடினார்கள்.

வண்டிப்பெரியாறு மஞ்சமலை
பட்டுமலை
பாம்பனாறு
பீர்மேடு
ஏலப்பாறை
இஞ்சிக்குழி
சப்பாத்து
டைமூக் உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் குமுளி வழியாக கூடலூருக்குள் இறங்கினார்கள்...

இப்படி தேயிலைத் தோட்ட தமிழ் அப்பாவிகளை திருவிதாங்கூர் காவல்துறை, நர வேட்டையாடியதால் தேவிகுளம் பீர்மேடு தாலுகாக்களில் அரசுக்கு எதிராக எவ்வித சலசலப்பும் இல்லாமல் போனது.

இதற்கு மாறாக தென் திருவிதாங்கூரில் போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்தது.

21 -11 -1939 தொடங்கி தொடர்ந்து 25 ம் தேதி வரை,தமிழ்நாடு தமிழருக்கே என்று விடுதலையில் எழுதிக் குவித்த எவரும், தேவிகுளம் பீர்மேட்டில்,  தமிழ் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு எதிராக நடந்த, அரச பயங்கரவாதத்தை பற்றி ஏன் வெளிப்படையாகப் பேசவில்லை என்கிற கேள்வியும் எழுகிறது...

வடக்கெல்லை போராட்டத்தில் சிறையில் இரண்டு பேர் மாண்டு போனார்கள்...

தெற்கெல்லை போராட்டத்திலும் 9 அப்பாவிகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இரையானார்கள்...

ஆனால் தேவிகுளம் பீர்மேடு பகுதிகளில் பட்டம் தாணுப்பிள்ளையின் பயங்கரவாத அரசு நடத்திய மனித வேட்டையில் எத்தனை பேர் மரணித்தார்கள் என்கிற பட்டியல் இதுவரை சொல்லப்படவில்லை...

குப்புசாமி தலைவரிடம் ஒரு முறை நேரடியாக பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்ன தகவல் நெஞ்சை உறைய வைத்தது...

தேவிகுளம் பீர்மேட்டில்
குறைந்தது ஐம்பது பேரையாவது சுட்டுக்கொன்றிருக்கும் பட்டம் தாணுபிள்ளையின் அரசு என்கிற அவரின் கூற்று ஒருபோதும் புறந்தள்ள முடியாத ஒன்று.

(ஊரடங்கு நிறைவு பெற்றதும் தேவிகுளம் பீர்மேடு பகுதிகளில்,பட்டம் தாணுப்பிள்ளை அரசால் அடித்துக் கொல்லப்பட்டவர்களின் பட்டியலை கண்டிப்பாக தருவேன்)

அன்றைக்கு மலையாள நாட்டில் புகழ்பெற்று விளங்கிய கேரள காமுதி என்கிற தினப்பத்திரிகை,
"நேசமணி எந்தா இங்ஙனம் ஆயிப்போயி" என்று ஏகடியம் செய்தது.

மலையாளி என்கிற பத்திரிகையோ...
மார்சல் நேசமணி அவர்களை அரசாங்கத்திற்கு எதிரான "ஒரு வெல்லுவாளி" என்று அடையாளப்படுத்தியது.

செழுமை மிகுந்த மலையாள இலக்கிய உலகம், இன்றளவும் தேவிகுளம் பீர்மேடு பகுதிகளில் அப்பாவித் தமிழர்களுக்கு நேர்ந்த கொடுமைகளை எழுதவுமில்லை, பேசவுமில்லை.

உலகத் தொழிலாளர்களை எல்லாம் ஒன்றுபடச் சொன்ன மார்க்சிஸ்டுகளின் கண்களுக்கு, தேவிகுளம் பீர்மேடு கொடுமைகள் தெரியாமல் போனதுதான் ஆகப்பெரிய விந்தை.

வைக்கத்தில் நடந்த கோவில் நுழைவை விட,ஆயிரம் மடங்கு கொடுமை நடந்த தேவிகுளம் பீர்மேடு பகுதிகளுக்குச் சென்று தமிழர்களுக்கு ஆறுதல் கூறுவதற்கு, தந்தை பெரியாருக்கு நேரமில்லாமல் போனது இன்னொரு கொடுமை.

இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மலையாளக் கூட்டம்,,,

தங்களுக்கு சம்பந்தமே இல்லாத, மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு சற்றும் தொடர்பேயில்லாத, பழனி மலைக் குன்றுகளையும் கையகப்படுத்த ஆரம்பித்தது...

மொழிவழி பிரிவினையின் விதிகளின்படி தமிழக கேரள எல்லை என்பது, மேற்கு தொடர்ச்சி மலையை மையப்படுத்திதான் பிரிக்க வேண்டும் என்பதாகும். அதிலும் எண்ணிக்கை மிக முக்கியமாகும்.

இதை எல்லாம் காற்றில் பறக்க விட்டுவிட்டு... பழனிமலை குன்றிலிருந்த, மறையூர்
காந்தலூர்
கீழாந்தூர்
கோடாந்தூர்
பட்டிக்காடு
முதுவாங்குடி

போன்ற பகுதிகளை தேவிகுளம் தாலுகாவில் இணைத்தது பட்டம் தாணுப்பிள்ளை அரசு.

உடுமலைப்பேட்டையில் இருந்து இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயத்தின் வழியாக, மறையூருக்கு ஏறிவந்து நியாயம் கேட்க அன்றைக்கு தமிழர்கள் யாரும் தயாராக இல்லாததால், மிக எளிதாக மறையூர் சுற்றுவட்டாரத்தை கையகப்படுத்தி, மலையாள நாட்டிற்கு பட்டா போட்டது,மாபாவிகள் அரசு.

இது ஒருபுறம் என்றால் மறுபுறத்தில் அன்றைக்கு, ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தின் வருவாய் பிரிவில் ஒரு பகுதியாக இருந்த,,,

வட்டவடை
கோயிலூரையும் அது தொட்டு இன்றைக்கிருக்கும் 23 மலை கிராமங்களையும் போகிற போக்கில் தன் வசப்படுத்தியது திருவிதாங்கூர் அரசு.

இன்றைக்கு தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கொழுக்குமலை,,,
டாப் ஸ்டேஷன் உள்ளிட்ட பகுதிகளை தங்களை நியாயப்படுத்த தமிழகத்திடம் தள்ளிவிட்டது திருவிதாங்கூர் அரசு.

அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது...

கடல்மட்டத்தில் இருந்து 8000 அடி உயரத்தில் இருந்த கொழுக்குமலைக்கு செல்ல வேண்டுமானால் அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.... அதனாலேயே அதை நம்மிடம் தள்ளிவிட்டார்கள்.

அதைப்போல டாப் ஸ்டேஷனும் பெரிய நிலப்பரப்பு அல்ல...
அது ஒரு மலைச் சரிவு அவ்வளவே...

பார்த்தீர்களா தமிழர்களே... கொழுக்குமலையையும், டாப் ஸ்டேஷனையும்... எத்தனை தாயுள்ளத்தோடு மலையாளிகள் தமிழர்களுக்கு தந்திருக்கிறார்கள்... என்று பின்னாட்களில் அறம் பாடுவதற்காக கூட, இந்த செயலை மலையாள அரசு செய்திருக்கலாம்...

உலகமெங்கும் அப்பாவிகளுக்கு எதிராக எதேச்சதிகார அரசுகளால் நடத்தப்பட்ட வன்முறை ஒவ்வொன்றும் வரலாறாகிக்கொண்டிருக்கிறது...

துரதிஷ்டவசமாக தேவிகுளம் பீர்மேடு கொடுமைகள் மட்டும் இன்னமும் வரலாறாக்கப்படவில்லை...

மலையாள இலக்கியம் உலக இலக்கியம் என்று தூக்கிப் பிடிக்கும் முற்போக்கு முண்டங்களே...

தேவிகுளம் பீர்மேடு கொடுமைகளை தொட்டுக் கூட பார்க்காத மலையாள இலக்கியவாதிகளை இனிமேலும் தூக்கிப் பிடிப்பீர்களானால்...

வரலாறு நீளும்...


ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக