ஞாயிறு, 14 ஜூன், 2020

தமிழர் இழந்த நிலம்- 20

                                              தமிழர் இழந்த நிலம்- 20

(இக்கட்டுரையை எழுதியது: ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்)

தேவிகுளம் பீர்மேடு பகுதிகளில் மட்டும்,
ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போதும், மூன்று மடங்கு, நான்கு மடங்காக பெருகியது
மலையாள மக்கள் தொகை.

கோட்டயம் முதல் பீர்மேடு வரை சாலை போடப்பட்ட பிறகு, பெரும்பாவூர் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மலையாளிகள் மூட்டை முடிச்சுகளோடு பீர்மேடு பகுதிகளுக்கு வந்து சேர்ந்தார்கள்.

தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்ததால், அடிமையாகவே வாழப் பழகிவிட்ட அப்பாவி தமிழர்கள், மறந்தும் கூட அந்த குடியேற்றவாசிகளுக்கு எதிராக வாய் திறக்கவில்லை.

உள்ளபடியே தேவிகுளம் தாலுகாவில் உள்ள பள்ளிவாசல் பகுதியிலும்,,, பீர்மேடு தாலுகாவில் உள்ள பெருவந்தானம் பகுதியில் மட்டுமே ஆரம்பத்தில் மலையாளிகள் குடியேறி இருந்தார்கள்.

இன்று
அப்படியில்லை, பீர்மேடு,வண்டிப் பெரியாறு,குமுளி, உடும்பஞ்சோலை, பூப்பாறை, மூணாறு உள்ளிட்ட தமிழர்கள் நிறைந்து வாழ்ந்த அத்தனை நகரமும் இன்றைக்கு அவர்களுடைய நகரமாக மாறிவிட்டது...

ஒரு கட்டத்தில் தேவிகுளம் தாலுகாவில் கடைக்கோடியில் இருக்கும் மறையூர் நகர பஞ்சாயத்தையே "ஆன்சி" என்ற மலையாளி கைப்பற்றி சாதனை படைத்தார்.

தமிழர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும் என்றிருந்த வண்டிப்பெரியாறு பஞ்சாயத்து, கேரளாவில் உள்ள மிகப்பெரிய பஞ்சாயத்துகளில் ஒன்று... அது கூட ஒரு கட்டத்தில் நம்மிடமிருந்து தட்டிப் பறிக்கப்பட்டது.

எம்.எம்.சுந்தரம், தேவசகாயம் கங்காணி,
மார்க்சிஸ்டுகளால் படுகொலை செய்யப்பட்ட பாலு,
சங்கரி என தமிழர்கள் கோலோச்சிய வண்டிப்பெரியாறு பஞ்சாயத்தில்...
யூசுப்,
விஜயானந்த் போன்ற
மலையாளிகள் உட்புகுந்து தங்கள் அதிகாரத்தை நிலை நாட்டினார்கள்.

மறுபடியும் மஞ்சுமலையைச் சேர்ந்த சாந்தி என்கிற தமிழச்சி அதிகாரத்தை மீட்டெடுத்திருக்கிறாள்.
தேவிகுளத்தை விட இன்று பீர்மேட்டில் தமிழர்களுடைய எண்ணிக்கை மிக மிக மிகக் குறைவு.

வண்டிப்பெரியாரை சுற்றி நிரம்பிக் கிடக்கும் தேயிலை தோட்டங்களிலுள்ள, பெரும்பாலான வீடுகள் காலி செய்யப்பட்ட நிலையிலேயே இருக்கிறது...

காரணம் தேவிகுளத்தை விட பீர்மேட்டில் மலையாளக் குடியேற்றம் அதிகமதிகம்.கேரளாவின் மிகப்பெரிய நகராக அறியப்படும் கோட்டயத்தில் இருந்து நேரடியாக,பீர்மேட்டிற்கு இணைப்புச் சாலை இருப்பதால், புற்றீசல் போல கிளம்பி வந்து குவிந்து விட்டார்கள்.

1930 களில் ஆரம்பித்த தேவிகுளம் பீர்மேட்டை நோக்கிய மலையாளிகளின் பயணம்... இன்றுவரை முற்றுப்பெறவில்லை. வந்துகொண்டே இருக்கிறார்கள்... இன்று நீங்கள் குமுளியிலிருந்து வண்டிப்பெரியாறு வரை செல்லும் திண்டுக்கல்- கோட்டயம் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும்,,, நூற்றுக்கணக்கான வீடுகள் மலையாளிகளால் கட்டப்பட்டிருக்கின்றன.
அத்தனையும் அப்பட்டமான ஆக்கிரமிப்பு என்று தெரிந்தும், மலையாள அரசு அவர்களை எவ்விதத்திலும் தொந்தரவு செய்யாது பட்டாக்களை வழங்கிவருகிறது.

தேயிலைத் தோட்டங்களில் வேலை இழப்பு, மலையாள நெருக்கடி, குழந்தைகளின் கல்வி, வாழ்வாதாரம் போன்ற காரணங்களால், பீர்மேடு தாலுகாவை விட்டு, ஆயிரம் தமிழர்கள் வெளியேறினால், 5000 மலையாளிகள் உள்ளே வந்து கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு முக்கியமான விடயம், கேரளாவில் உள்ள ஒரே கோடை வாசஸ்தலம், அதாவது குளிர் நிறைந்த கோடை வாசஸ்தலம், தேவிகுளம் மற்றும் பீர்மேடு தாலுகாக்கள் மட்டுமே.இதுவும் மலையாளிகளுடைய கண்களை நீண்ட காலமாக உறுத்தியதால் வந்த விளைவுதான் பெருமளவிலான இந்த மலையாள குடியேற்றம்.

1955 ம் ஆண்டு, மலையாள மனோரமாவில் வந்த ஒரு செய்தியை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்...

நேரடியாக மனோரமாவில் அதை எழுதினால் பிரச்சனை வரும் என்பதற்காக... ஏதோ ஒரு தலைவரின் பெயரில் எழுதப்பட்டிருந்தது அந்த அறிக்கை.

-சர்வதேச நெருக்கடி வரும் போதெல்லாம் அதற்குப் பரிகாரம் காண வேண்டிய இடத்தில் மலையாளியான வி.கே. கிருஷ்ணமேனன் இருப்பதாகவும்,

-ஜனாதிபதியின் மூன்று மெய்க்காப்பாளர்களில் இரண்டு பேர் மலையாளிகள் இருப்பதாகவும்,

-நேருவின் அந்தரங்கச் செயலாளராக மலையாளியான எம். ஓ. மத்தாய் இருப்பதாகவும்,

-காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக மாதவன் நாயர் இருப்பதாகவும்,

-இந்திய எதிர்க்கட்சித் தலைவராக மலையாளியான ஏ.கே. கோபாலன் இருப்பதாகவும்,

இவற்றிற்கெல்லாம் மேலாக மொழிவழி பிரிவினை கமிட்டியில் சர்தார் பணிக்கர் ஒரு உறுப்பினராக இருப்பதாலும்...

மலையாளிகள் தங்கள் நிலம் குறித்து எந்த நிலையிலும் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என்று நீண்டது அந்த செய்தி...

எந்த நெருக்கடியான நிலையிலும் மலையாளிகள் தங்களுடைய பொறுமையை மட்டும் இழப்பதில்லை... இன்னும் சொல்லப் போனால் அதுதான் அவர்களுடைய ஆயுதம்.

வரலாறற்ற அவர்களுக்கு, வாழ்க்கை வசப்பட்டு விட்டது...

வரலாற்றை நீண்ட காலமாய் தன்னகத்தே கொண்ட நமக்கு, எதுவும் வசப்படவில்லை.

அதற்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டு...

1954 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி, திண்டுக்கல்லில் பிரஜா சோசலிஸ்ட் கட்சியின்  மாநாடு நடைபெறவிருந்தது...

இந்தப் பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் முதல்வரான பட்டம் தாணுபிள்ளைதான் திருவிதாங்கூர்- கொச்சி முதல்வராக இருந்து கொண்டு, தமிழர்களை வேட்டையாடிக் கொண்டிருக்கும் ஒரு நபர்.

அவரை திண்டுக்கல்லில் நடக்கும் பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக அழைத்திருந்தது அந்தக் கட்சியின் தமிழ் மாநில கமிட்டி. அன்றைக்கு அந்த கட்சியின் பிரதான தலைவர்களில் ஒருவர் பின்நாட்களில் தமிழர் தந்தை என்று அழைக்கப்பட்ட சி பா ஆதித்தனார் அவர்கள். இனி நாம் பேசுவதற்கு ஏதாவது இருக்கிறதா...?

ஆனாலும்கூட மானத் தமிழர்கள் 30 பேர் திரண்டு பட்டம் தாணுபிள்ளையை வரவிடாது தடுத்த கதையும் நடந்தது...

ஒரு விடயத்தை கூர்ந்து கவனித்தோமானால், கம்யூஸ்டுகள் எப்போதெல்லாம் கேரளாவை ஆள்கிறார்களோ, அப்போதெல்லாம் தேவிகுளம் பீர்மேடு பதட்டமாவதை என்னால் நன்றாகவே உணர முடிகிறது.

ஈ எம் எஸ் நம்பூதிரி பாட்

சி.அச்சுதமேனன்

பி.கே.வாசுதேவன் நாயர்

ஈ.கே.நாயனார்

வி.எஸ்.அச்சுதானந்தன்

தற்போது தோழர் பினராயி விஜயன்...

என இவர்கள் அனைவருடைய காலத்திலும், ஏதோ ஒரு பிரச்சனை தேவிகுளம் பீர்மேடு பகுதியில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இன்னொரு வகையில் பார்த்தால் தமிழர்களை கொடூரமாக ஒடுக்கிய பட்டம் தாணுபிள்ளை கூட ஒரு இடதுசாரி என்பதுதான் வேதனை.

இன்னொரு முக்கியமான விடயத்தை குறிப்பிட வேண்டும் என்றுதான் என்று ஆரம்பித்தேன்...

பண்டித நேரு அரசாங்கத்தால் தமிழகத்தின் மீது திணிக்கப்பட்ட மோசடியான
மொழிவழி பிரிவினைக்கு... தந்தை பெரியார் காரணம் இல்லை என்று ஆயிரக்கணக்கான விளக்கங்கள் எனக்கு உள் பெட்டியில் வந்து கொண்டே இருக்கிறது...

ஏற்கனவே பல அத்தியாயங்களில் எழுதியது தான் என்றாலும்...

நாளை நேரடியாக பெரியாரின் பெருந்துரோகத்தை பட்டியலிடுகிறேன்...

வரலாறு நீளும்...

-ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக