ஞாயிறு, 14 ஜூன், 2020

தமிழர் இழந்த நிலம்-11

                                              தமிழர் இழந்த நிலம்-11

(இக்கட்டுரையை எழுதியது: ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்)


தேவிகுளம் பீர்மேடு பகுதிகளில், தமிழர்கள் இத்தனை கொடுமைக்கு,மலையாள மைனாரிட்டி அரசான பட்டம் தாணுப்பிள்ளை அரசால் உள்ளாக்கப்பட்டார்களென்பதை,,, வெளிச்சம்போட்டு காட்டுவதற்கு, மலையாள இலக்கிய கர்த்தாக்களும் தயாராக இல்லை, அன்றைக்கு எழுதுவதையே தங்களுடைய அடுத்தடுத்த கட்ட நகர்வுகளுக்கான ஆயுதமாக கொண்டிருந்த, திராவிட இயக்க வாதிகளும் தயாராக இல்லை.

இவர்களெல்லாம் வரலாறு என்பது தங்களோடு முடிந்துவிடும் என்று கற்பனை கண்டவர்களாகக்கூட இருக்கலாம்...

இந்த தேவிகுளம் பீர்மேடு தமிழர்களுடைய கையைவிட்டு போனதற்கு,,, பலருடைய கைகள் பின்னால் இருந்தாலும், அதில் ஒருவர் இதுவரை வரலாற்றால் அடையாளப்படுத்தப்படாதவர்.

திருமதி ரோசம்மாள் புன்னூஸ்தான் அவர்...

1956-மொழிவழிப் பிரிவினைக்கு பின்,1957 ல் கேரளாவில் அமைந்த முதல் சட்டமன்றத்தில்...

முதலாவதாக கையெழுத்துப் போட்டு பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டவர்...

சார்பு சபாநாயகராக இருந்து சட்டமன்றத்தின் அனைத்து புதிய உறுப்பினர்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தவர்...

இந்தியாவிலேயே முதல் முதலாக பதவி நீக்கம் செய்யப்பட்ட முதல் சட்டமன்ற உறுப்பினர்...

இந்தியாவிலேயே முதல் முதலாக 1958 ல் நடந்த இடைத் தேர்தலில், மகத்தான வெற்றி பெற்று, மறுபடியும் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றவர்...

என பல பெருமைக்கு சொந்தக்காரரான இந்த ரோசம்மாள் புன்னூஸ், ஆலப்புழா அருகே உள்ள காஞ்சிரப்பள்ளியிலிருந்து, எதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியால் தேவிகுளத்திற்கு இறக்குமதி செய்யப் பட்டார் என்பது, இன்று வரை புரியாத புதிராகவே நீடிக்கிறது.

உலகத் தொழிலாளர்களுக்காக பாடுபடக்கூடிய கம்யூனிஸ்டுகள், எதற்காக தேவிகுளம் வட்டாரத்தில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத் தொழிலாளிக்கு வாய்ப்பு கொடுக்காமல்,எங்கிருந்தோ திருமதி. ரோசம்மாள் புன்னூசை எதற்காக இறக்குமதி செய்தார்கள் என்று கேட்பதற்கு நாதியில்லை...

இதைவிட கொடுமை... இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் தலைமையிலான இசைக்குழுவினர், பண்ணைப்புரத்திலிருந்து, மூணாறுக்கு சென்று ரோசம்மாள் புன்னூசினுடைய வெற்றிக்காக அரும்பாடுபட்டதாக இசைஞானி இளையராஜா தெரிவித்திருக்கிறார் ஒரு நேர்காணலில்...

கூடுதல் தகவலாக மறைந்த புரட்சி நடிகர் எம் ஜி ராமச்சந்திரனும் ரோசம்மாள் புன்னூசுக்காக பிரச்சாரம் செய்ததாக அந்தக்கால தி ஹிந்து வரலாற்றை பதிவு செய்திருக்கிறது.

உள்ளபடியே, அன்றைக்கிருந்த தேவிகுளம் சட்டமன்றத் தொகுதி, கிட்டத்தட்ட 89 விழுக்காடு தமிழர்கள் மட்டுமே வாழ்ந்த தொகுதி. மொழிவழி பிரிவினை எனும் மோசடியால் எதேச்சதிகாரமாக கேரளாவுடன் இணைக்கப்பட்ட தொகுதி. நீறுபூத்த நெருப்பாக தமிழர்களுடைய உணர்வுகள் கனன்று கிடந்த தொகுதி அது...

என்ன யோக்கியதையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஆலப்புழையில் இருந்து, திருமதி ரோசம்மா புன்னூசை இறக்குமதி செய்தது என்பதற்கு பின்னாலும் ஒரு வரலாறு இருக்கிறது.

திருமதி ரோசம்மா புன்னூஸ், மலையாளத்தை போலவே தமிழையும் நன்றாக பேசக்கூடியவர். அதற்குக் காரணம் அவர் சட்டம் படித்தது சென்னையில் இருந்த  சட்டக் கல்லூரியில் என்கிறது அவரது சரித்திரம்.

சென்னை மாகாணத்திற்கு உட்பட்டிருந்த, கொச்சி அல்லது மலபார் பகுதியைச் சேர்ந்தவராக இருந்திருந்தால் கூட, நமக்கு ரோசம்மா மீது சந்தேகம் வந்திருக்காது. ஆனால் அவர் அப்பட்டமாக திருவிதாங்கூர் பகுதியைச் சேர்ந்தவர்.

இயல்பிலேயே தமிழர் விரோத மனப்பான்மையை கொண்ட பகுதி, அவர் பிறந்து வளர்ந்த காஞ்சிரப்பள்ளி. அப்படியிருந்தும் அவரைக் கொண்டுவந்து தேவிகுளத்தில் நிறுத்த  பல காரணங்கள் இருந்தது...

-அவர் ஒரு பெண் என்பது முதல் ஆயுதம்.
தேயிலைத் தோட்டங்களில் பெரிய அளவிற்கு கங்காணிகளால் சீரழிவை சந்தித்தவர்கள் பெண்கள் என்பதால், எளிதாக,பெண் தமிழ் தோட்டத் தொழிலாளர்களை கவர முடியும் என்பது...

-தமிழ் சரளமாக பேச தெரிந்தது இன்னொரு முக்கிய காரணம். (கடந்த 10 ஆண்டுகளாகத்தான் தேவிகுளம் பீர்மேடு பகுதிகளில் வாழும் தமிழர்கள், ஓரளவு மலையாள மொழியை பேச கற்று இருக்கிறார்கள் என்பதை இந்த இடத்தில் நினைவில் கொள்ளுங்கள்)

-திருமதி ரோசம்மாவினுடைய பலமே, அவருடைய எளிமை மற்றும் புன்னகைதான்.அந்தப் புன்னகை தான் நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகும், 1958 ஆம் ஆண்டு நடந்த முதல் சட்டமன்ற இடைத்தேர்தலில் அபாரமாக வெற்றியை சூடுவதற்கு காரணமாக இருந்தது.

-சட்டம் படித்த வழக்கறிஞர் என்பதால், அன்றைக்கு கேரள நாட்டில் சட்டத்துறையில் கோலோச்சிய வி.ஆர். கிருஷ்ணய்யரின் சிபாரிசின் அடிப்படையிலேயே, திருமதி ரோசம்மா தேவிகுளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கதைகள் நிலவுகிறது.

-மேலாக மொழிவழி பிரிவினையால் பெற்ற தமிழ் பகுதி என்பதால், ஒரு தமிழரை சட்டமன்ற உறுப்பினர் ஆக்குவது என்பது,யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொள்வது போலாகும் என்பதை உணர்ந்த, சர்வதேசியம் பேசுகிற கம்யூனிஸ்டுகள், திருமதி ரோசம்மாவை களத்தில் இறக்கியதாக தென் எல்லை போராட்ட வீரரான அப்துல் ரசாக் குறிப்பிடுகிறார்.

-இதையெல்லாம்விட இன்னொரு சிறப்பாக மொழிவழி பிரிவினையின் அத்தனை ஷரத்துகளையும் கரைத்துக் குடித்தவராக இருந்தார் திருமதி.ரோசம்மா.

-தேவிகுளம் சட்டமன்றத் தொகுதியில், கம்யூனிஸ்ட் கட்சியால் நிறுத்தப்படுபவர் ஒரு மலையாளி என்பதால், தமிழர் பகுதிகளில் எதிர்ப்பு எதுவும் வந்துவிடக் கூடாது, அதேநேரத்தில் வெற்றியும் பெற வேண்டும் என்கிற, கம்யூனிஸ்டுகளின் ராஜதந்திரமே, ரோசம்மாளின் மகத்தான வெற்றிக்கு காரணம்.

பதினெட்டு மணிநேர தேயிலைத் தோட்ட வேலைக்கு சொந்தக்காரர்களான,
அப்பாவித் தமிழர்களும், ரோசம்மா தமிழ் பேசக்கூடிய ஒரு பெண்ணாக இருக்கிறாரே, எளிமையாக இருக்கிறாரே,ரே தமிழகத்திலிருந்து பாவலர் வரதராஜன் என்பவர் தலைமையிலான இசை குழுவும், எஸ்டேட்கள் தோறும், தமிழ் பாடல்களைப் பாடி அசத்தி இருக்கிறார்களே என்கிற நம்பிக்கையில் திருமதி ரோசம்மாவை தூக்கிப்பிடித்தது‌.

தமிழர்களின் வாக்குகளால் அபாரமாக வெற்றி பெற்று,கேரளச் சட்டமன்றத்திற்கு சென்ற ரோசம்மா, மறந்தும்கூட தமிழர்களின் அவல நிலையைப் பற்றி பேசுவதற்கு தயாராக இல்லை.

கம்யூனிஸ்ட் அரசின் முந்தைய அரசான பட்டம் தாணுப்பிள்ளையின் எதேச்சதிகார அரசு, அப்பாவி தமிழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு செய்த கொடுமைகளைப் பற்றி பேசுவதற்கும் ரோசம்மா தயாராக இல்லை.

வர்க்கப் போராட்டத்தை வாய்கிழிய பேசிய கேரள கம்யூனிஸ்டுகள், மறந்தும்கூட தேயிலைத் தோட்ட அப்பாவித் தமிழ் தொழிலாளிகளின் அவலத்திற்கு விடிவு காண தயாராக இல்லை.

உலகத் தொழிலாளர்களை ஒன்றுபடச் சொன்ன கேரளத்து மார்க்சிஸ்டுகள், உள்ளூர் தொழிலாளிகளை காவு வாங்கினார்கள்.

இன்றைக்கு மூணாறிலிருக்கும் டாடாவின் தேயிலை தோட்டம், அன்றைக்கு பின்லே கம்பெனிக்கு சொந்தமாக இருந்தது. வழக்கமாக அங்கு ஒரு மலையாளி தான் மேலாளராக இருப்பார். (அது இன்று வரை தொடர்கிறது) அவரின் மிகுந்த அன்பை பெற்றவராக விளங்கினார் திருமதி ரோசம்மா...

ஒரு இன வெறியராக பட்டம் தாணுபிள்ளை,தமிழர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் மற்றும்   செயல்கள், கம்யூனிஸ்ட் கட்சியினுடைய காலத்திலும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருந்தது...

இதையெல்லாம்விட மொழிவழி பிரிவினை குழுவின் உறுப்பினராக இருந்து, தமிழகத்திற்கு பெரும் துரோகம் விளைவித்த திரு கே.எம். பணிக்கருடைய நட்பில் அகமகிழ்ந்து போயிருந்தார் திருமதி ரோசம்மா.

கோடி ரூபாய் சொத்தை கட்சிக்கு எழுதிக் கொடுத்து விட்டு, கடைசி வரை ஒண்டுக்குடிசையில் வாழ்ந்த மகத்தான தோழன் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட்டின் செல்லப் பிள்ளையாக வலம் வந்த திருமதி ரோசம்மா,,, கடைசிவரை தேவிகுளத்து அப்பாவிகளை காப்பாற்றுவதற்கு தயாராக இல்லை...

ஏ.கே.கோபாலன்,
பட்டம் தாணுபிள்ளை,
இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்,
கோளப்பிள்ளை,
பெரியார் ஈவெரா,
கே.எம்.பணிக்கர்,
பண்டித நேரு,..

என தமிழர் நிலத்தை சூறையாடியதில் ஒரு பெரும் பட்டியலே இருக்கிறது...

மேலே நாம் கண்டவர்களெல்லாம், ஏதோ ஒரு வகையில் தங்கள் துறைகளில் ஆளுமை செலுத்தியவர்கள்.ஆனால் அந்தோ பரிதாபம்... அத்தனை பேரும் தேவிகுளம் பீர்மேடு பகுதிகளுக்காக வரிந்து கட்டி நின்றதுதான் வரலாற்றில் பெரும் சோகமாக பதிவு செய்யப்பட வேண்டியது...

1953 ஆம் ஆண்டு தொடங்கிய அடிமைத்தனம், தேவிகுளம் பீர்மேடு பகுதிகளில், இன்று வரை நின்று நிலைத்து நீடித்து கொண்டிருக்கிறது...

வரலாறு நீளும்...

ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக