ஞாயிறு, 14 ஜூன், 2020

தமிழர் இழந்த நிலம்-14

                                         தமிழர் இழந்த நிலம்-14

(இக்கட்டுரையை எழுதியது: ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்)


அன்றைக்கு இருந்த செல்வாக்கிற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் நினைத்திருந்தால், மொழிவழி பிரிவினை என்கிற பெயரில் பண்டித நேருவின் அரசாங்கம் இத்தகைய பெரிய மோசடியை அரங்கேற்றியிருக்க முடியாது.

கே.எம். பணிக்கர் என்கிற நிலவெறி பிடித்த மலையாளியை, மொழிவழி பிரிவினை கமிட்டிக்குள் திணித்ததில், மூன்று கம்யூனிஸ்டு எம்.பி.க்களுக்கு முக்கியப் பங்குண்டு.

1-ஏ.கே.கோபாலன்.

2-பி.டி.புன்னூஸ்.

3-ஸ்ரீ நீலகண்டன் நாயர்.

இவர்கள் மூவரும் 1952-ஆம் ஆண்டு நடந்த முதல் நாடாளுமன்றத் தேர்தலில், கேரளாவிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்கு சென்றவர்கள்.

சமநேரத்தில் கே.பி. கோபாலன்,சி.ஹெச்.கனரன் ஆகிய ஆளுமை படைத்த மலையாள கம்யூனிஸ்டு தலைவர்கள், சென்னை மாகாண சட்ட மன்றத்திற்கு எம்.எல்.ஏ க்களாக வருகின்றனர்.

இந்த ஐந்து கம்யூனிஸ்டுகளின் பிரதான பணியே,தமிழகத்திற்கும் கேரளத்திற்குமிடையே ஊசலாடிக் கொண்டிருந்த 9 தாலுகாக்கள் குறித்ததாகும்...

கிட்டத்தட்ட 32 ஆயிரம் தமிழ் விவசாயிகளின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியிருக்கும், அட்டப்பாடி பகுதியை உள்ளடக்கிய சித்தூர் சட்டமன்ற தொகுதி, முன்னொரு காலத்தில் தமிழர்கள் நிறைந்து கிடந்த தொகுதி.

கிட்டத்தட்ட 62 விழுக்காடு தமிழர்கள் நிறைந்து கிடந்த இந்த சித்தூர் சட்டமன்ற தொகுதி, பாலக்காடு மாவட்டத்தின் ஒரு அங்கமாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால் பாலக்காடு நகரத்தை விட, சித்தூர் நகரம் கேரளாவின் இரண்டாவது பெரிய நதியாக அறியப்படும் பாரதப்புழா நதியின், கிளை நதியான கண்ணாடிப்புழா நதிக்கரையில் அமைந்திருக்கும் ஒரு நகரமாகும்.

கோபக்கார தோழரான வி.எஸ்.அச்சுதானந்தன் அவர்கள், ஆலப்புழா மாவட்டத்தில் பிறந்தாலும், அவரது சொந்த சட்டமன்றதொகுதி, இதே பாலக்காடு மாவட்டத்திலுள்ள சித்தூர் அருகே இருக்கும் மலம்புழா தொகுதியாகும்.

மொழிவழி பிரிவினையில் எந்தப் பகுதி எல்லாம் தங்கள் கையை விட்டுப் போகும் என்று எதிர் பார்த்தார்களோ, அந்தப் பகுதிகளில் எல்லாம் ஒரு மலையாள கம்யூனிஸ்ட்டை வலுக்கட்டாயமாக குடியேற்றியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

அந்த வகையில் பாலக்காட்டுக்கு நீதியரசர் வி ஆர் கிருஷ்ணய்யரும், வி. எஸ். அச்சுதானந்தனும் தளகர்த்தர்கள்...

தேவிகுளம் பீர்மேடு பகுதிகளுக்கு பி.டி.புன்னூஸ்,
திருமதி.ரோசம்மா புன்னூஸ் மற்றும் வி.எஸ்.அச்சுதானந்தன்...

தோவாளை
கல்குளம் நெய்யாற்றின்கரை நெடுமங்காடு
விளவங்கோடு
அகஸ்தீஸ்வரம் போன்ற பகுதிகளுக்கு தோழர் இ. எம் .எஸ். நம்பூதிரிபாட் மற்றும் எம்.என் கோவிந்தன் நாயர் ஆகியோர்...

இந்த கோவிந்தன் நாயர்தான், செங்கோட்டை தாலுகாவிலுள்ள மேற்குப் பகுதியை, கேரளாவோடு இணைக்க வேண்டும் என்று குரல் கொடுத்து, சம்பந்தப்பட்ட புனலூர் சட்டமன்ற தொகுதிக்கும்,,,, பின்னாட்களில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றியும் பெற்றவர்.

இவர் ஒரு கம்யூனிஸ்டாக இருந்தால் கூட... தன்னுடைய பணிகளுக்காக, தன் சமுதாயம் சார்ந்த நாயர் சர்வீஸ் சொசைட்டியையும் பயன்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது...

இன்னொரு புறத்தில் டி.வி. தோமஸ்,
பி.கே.வாசுதேவன் நாயர்,
சி அச்சுத மேனன்,
சி.கே.சந்திரப்பன் ஆகிய கம்யூனிஸ்டு தலைவர்களும் மொழிவழி பிரிவினை
காலத்தில் ஐக்கிய கேரளத்தை அமைப்பதற்காக, பம்பரமாக களத்தில் நின்றார்கள்.

உள்ளபடியே கேரளாவில் முதல் தேயிலைத் தோட்டம் உருவாக்கப்பட்டது வயநாடு மாவட்டத்தில் அல்ல...

தேவிகுளம் பீர்மேடு பகுதிகளில்தான் முதன் முதலில் ஆங்கிலேய வியாபாரியான சர். தாமஸ் மன்றோவால் தேயிலைத்தோட்டம் உருவாக்கப்பட்டது.

ஆனால் இந்த மாபெரும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் எல்லாம் கவனமாக தேவிகுளம் பீர்மேட்டை புறக்கணித்துவிட்டு, ரப்பர் எடுக்கும் தொழிலாளர்களுக்காக போராடிக் கொண்டிருந்தார்கள்.

Plantation என்கிற பொதுப்பதத்திற்கு கீழ்
தேயிலையும் வரும், ரப்பரும் வரும் என்பதால், plantations தொழிலாளர்கள் சங்கம் என்கிற பெயரில் ரப்பர் தோட்ட தொழிலாளிகளுக்காக போராடிக் கொண்டிருந்தார்கள்.

அன்றைய கோட்டயம் மாவட்டத்திலுள்ள, முண்டகாயம் வரை வந்த இந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள், கவனமாக பீர்மேடு பகுதிக்குள் நுழையவே இல்லை.

மீறி நுழைந்தால் எங்கே பீர்மேடு தேவிகுளம் பகுதிகளில் பெருத்த ஆளுமை செலுத்திக் கொண்டிருக்கும் தமிழர்கள் அறிவு பெற்று விடுவார்களோ என்று அஞ்சினார்கள்.

பின்னாட்களில் மிகப் பெரும் தலைவராக அறியப்பட்ட ஏ.கே. கோபாலன் போன்றவர்கள், நாடாளுமன்றத்தில் தான் ஒரு "இந்திய" கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் என்பதையும் மறந்து,தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் தாவா நீடித்து வந்த 9 தாலுகாக்களையும், கேரளாவோடு இணைக்க வேண்டுமென்று உரத்த குரல் கொடுத்தார்.

எதிர்முனையில் ஒரே ஒரு குரல் மட்டும் தமிழகத்திற்காக பரிந்து பேசியது...

அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் மார்ஷல் நேசமணி என்கிற மாமனிதன். கொடுமை என்னவென்றால் கேரளாவில் உள்ள கம்யூனிஸ்ட் தலைவர்களில் எவரெல்லாம் தமிழகத்திற்கு எதிராக களத்தில் நின்றார்களோ, அவர்களெல்லாம் சென்னை மாகாணத்தில் பிறந்த தோடு, சென்னையில் படித்து பட்டம் பெற்றவர்களே...

அன்றைக்கு பொலிட்பீரோ உறுப்பினராக இருந்த தோழர் இராமமூர்த்தி உள்ளிட்டவர்கள்,,, மறந்தும்கூட தான் பிறந்த மாநில எல்லைக்காக, பொலிட் பீரோவில் குரல் கொடுக்க முன் வரவில்லை.

(அந்தக் கூத்து இன்றும் நடக்கிறது...2011 நீர்ப்பிரச்சினைக்கு பிறகு,
முல்லைப் பெரியாறு அணையை உடைத்துவிட்டு, புதிய அணையை கட்ட வேண்டும் என்கிற தீர்மானத்தை,சம்மந்தமே இல்லாமல் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய பொலிட்பீரோ கூட்டத்தில், மலையாள உறுப்பினர்கள் முன்மொழிந்த போது,அதைக் கண்டும் காணாததுபோல் கடந்து வந்தார் தமிழகத்து பொலிட்பீரோ உறுப்பினரான தோழர் ஜி ராமகிருஷ்ணன்)

இந்தப்பட்டியலில் நூற்றாண்டை கடந்த முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரான கே. ஆர். கவுரியம்மாவையும் நாம் சேர்த்துக் கொள்ளலாம்...

மாமேதை மார்க்ஸ் தான் பிறந்த ஜெர்மனிக்கு மட்டும் மார்க்ஸியத்தை எழுதி இருப்பாரானால், லெனின் என்கிற மகத்தான தலைவனை இந்த உலகம் அடையாளம் கண்டிருக்க முடியாது...

உலகத்தை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து, உலகத் தொழிலாளர்களை எல்லாம் ஒரு சித்தாந்தத்தின் கீழ் இணைக்க வேண்டும் என்று கனவு கண்ட மார்க்சின் இந்த மகத்தான சீடர்கள்...

ராஜாளிப் பறவை போல உயர உயரப் பறப்பதை விட்டு விட்டு...

பருந்துகளைப் போல ஒரு குறுகிய நிலப் பரப்புக்காக களத்தில் நின்றதுதான் வேதனை.

இந்த லட்சணத்தில் தேசாபிமானியில், கம்யூனிச சித்தாந்தம் குறித்து தினமும் கட்டுரை வேறு போட்டு, தங்களுக்குத் தாங்களே ஆறுதல் சொல்லி  கொண்டார்கள்.

எது எப்படியோ...

தேவிகுளம் பீர்மேடு உள்ளிட்ட தமிழர்கள் பெருவாரியாக நிறைந்து கிடந்த பகுதிகளை எல்லாம், நயவஞ்சகமாக, திட்டமிட்டு, மொழிவழி பிரிவினை என்கிற பெயரில், நம்மிடமிருந்து தட்டிப்பறித்ததோடு, அதற்காக களத்திலே நின்று பகலென்றும் இரவென்றும் பாராது பணியாற்றிய மலையாள கம்யூனிஸ்டுகளை விட, பெருந்துரோகக்காரர்கள் எவருமில்லை இந்த நிலத்தில்.

இரவு உறங்கச் செல்லும் நேரத்தில் தமிழனாக உறங்கச் சென்ற தேவிகுளம் பீர்மேடு பகுதி வாழ் தமிழர்கள்...

காலை எழும்பும் போது மலையாளியாக எழுந்திருக்க வேண்டிய அவலம் ஏற்பட்டது...

உலகச் சரித்திரத்தில் எங்கினும் இது போன்ற ஒரு அடக்குமுறையை நீங்கள் கண்டதுண்டோ...

மொழி என்பதும்,
நிலம் என்பதும் பெற்ற தாயைவிட மேலானது.

இந்த உலகத்தில் பிறந்த என்னுடைய தாத்தாவும் பாட்டியும் போய் சேர்ந்து விட்டார்கள்...

அதே உலகத்தில் பிறந்த என்னுடைய தகப்பனும் தாயும்கூட போய் சேர்ந்துவிட்டார்கள்...

நானும் ஒருநாள் இந்த மண்ணை விட்டு போய் விடுவேன்...

ஆனால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும்...

என் தாத்தாவும் பாட்டியும் பேசிய மொழிக்கும்...

என் தகப்பனும் தாயும் பேசிய மொழிக்கும்...

நானும் என் மனைவியும் பேசிய மொழிக்கும்...

ஒருபோதும் அழிவு கிடையாது.

இது நாங்கள் வாழ்ந்த நிலத்திற்கும் பொருந்தும்...

அந்த நிலத்தை போகிறபோக்கில் தங்களுடைய நரித்தனத்தால் கைப்பற்றிய இந்த கம்யூனிஸ்டுகளை எப்படி மறக்க முடியும்...

(சில இடங்களில் கடுஞ்சொற்கள் வருகிறது.அந்தக் கடும் சொற்களை அந்த இடத்தில் பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கிறதா என்பதை மட்டும் அவதானியுங்கள்)

வரலாறு நீளும்...


- ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக