ஞாயிறு, 14 ஜூன், 2020

தமிழர் இழந்த நிலம்-19

                                               தமிழர் இழந்த நிலம்-19


(இக்கட்டுரையை எழுதியது: ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்)

இத்தனை ஊர்களில் தமிழர் பெரும்பான்மை இருந்தும் எந்த அடிப்படையில் மொழிவழி பிரிவினை கமிட்டி தேவிகுளம் பீர்மேடு பகுதிகளை கேரளாவோடு சேர்க்க முன் வந்தது என்று எனக்கு தெரியவில்லை.

பழனி மலைக் குன்றுகளில் அமைந்திருக்கும்... அஞ்சுநாடு என இன்றளவும் அழைக்கப்படும், மறையூர்
காந்தலூர்
கோடாந்தூர்
கீழாந்தூர்
கொட்டகம்பூர் உள்ளிட்ட பகுதிகளின் மொத்த பரப்பு 112 சதுர கிலோ மீட்டர்கள்.

இந்தப் பகுதிக்கும் தேவிகுளம் தாலுகாவிற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை.மூணாறிலிருந்து மறையூர் வழியாக உடுமலைப்பேட்டை செல்லும் சாலை மட்டும் இல்லாதிருந்தால், இன்று மறையூர் உள்ளிட்ட அஞ்சு நாடு, உடுமலைப்பேட்டை தாலுகாவில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ளடங்கிய ஒரு பகுதியாக இருந்திருக்கும்.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில், கேரளாவிற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் 30
டி.எம்.சி தண்ணீரில், இந்த மறையூர் அஞ்சு நாட்டிலிருந்து கிளம்பி அமராவதி அணைக்கு செல்லும் பாம்பாறிலிருந்து,3 டிஎம்சி  தண்ணீரை எடுப்பதற்காக, தூவானம் என்னுமிடத்தில், தடுப்பணை கட்டும் வேலையை தீவிரப்படுத்தி இருக்கிறது கேரள மாநில அரசு.

காவிரியின் துணை நதிகளில் ஒன்றான இந்த பாம்பாறு, தூவானத்தில் மூன்று டிஎம்சி க்காக மறிக்கப்பட்டால், அமராவதி அணை வற்றி வறண்டுபோகும்.

இந்தச் சிக்கல் அன்று இல்லாத காரணத்தினால், மறையூர் அஞ்சு நாட்டை, அன்றைக்கிருந்த சென்னை மாகாண அரசு கிஞ்சித்தும் கண்டுகொள்ளவில்லை.

ஆனால் தேவிகுளம் பீர்மேடு விஷயத்தில் மலையாளிகள் இந்த அளவிற்கு பிடிவாதம் காட்டுவதற்கான பின்னணியில், வேறொரு கிளைக் கதையும் இருக்கிறது.

கேரளாவின் இரண்டு பிரதான நதிகள் பம்பா மற்றும் பெரியாறு.

இதில் பெரியாறு பெரிய அளவிற்கு விவசாயத்திற்காக பயன்படாவிட்டால் கூட, கேரள மாநிலத்திற்கான மின் தேவையில் 42 விழுக்காடை அதுதான் பூர்த்தி செய்கிறது.

ஆனால் பம்பை அப்படி அல்ல,கேரளாவில் விவசாயம் செழித்த குட்டநாடு பகுதியினுடைய ஜீவாதாரமே இந்த பம்பை தான். மேலாக மத்திய திருவிதாங்கூரின் நீர் வளத்திற்கு காரணமாக விளங்குவது இந்த பம்பை நதிதான்.

பழைய பீர்மேடு தாலுகாவில் புளிச்ச மலையில் உற்பத்தியாகும் இந்தப் பம்பா நதி,
ஆலப்புழா மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களில் வழியே ஓடி, வேம்பநாட்டு காயலில் சென்று கலக்கிறது.

ஒரு விடயத்தை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்... கடந்த 2014 ஆம் ஆண்டு, முல்லைப் பெரியாறு பிரச்சனை தொடர்பான விவாதங்கள் ஓய்ந்து முடிந்தபின்னர், அன்றைய கேரள மாநில முதல்வர் திரு. உம்மஞ்சாண்டி ஒரு திட்டத்தை முன்மொழிந்தார். அதனடிப்படையில் ஆலப்புழா மாவட்டம், கேரளாவின் முதல் விவசாய கேந்திர பகுதியாக அறிவிக்கப்பட்டது...

அந்த ஆலப்புழா மாவட்டத்தில்தான் விவசாயம் செழித்த குட்டநாடும் இருக்கிறது... இந்த ஆலப்புழாவை விவசாய கேந்திரமாக அறிவிப்பதற்கு பின்னாலிருக்கும் நதி சாட்சாத் மேலே நாம் குறிப்பிட்ட பம்பை நதி.

இத்தனை முன்னெச்சரிக்கையாக ஒரு மாநிலம்,60 ஆண்டுகளுக்கு முன்பே செயல்பட்டிருக்கிறது என்றால்,,, அவர்களின் அறிவை மெச்சாமல் என்ன செய்வது...?

இதைவிட இன்னொரு கொடுமை இன்றளவும் நீடித்துக் கொண்டிருக்கிறது...

கேரளாவிற்கும்- தமிழகத்திற்குமிடையிலான எல்லையின் நீளம் 830 கிலோமீட்டர்கள். அதாவது நீலகிரி மாவட்டத்திலுள்ள முதுமலை சரணாலயத்தில் தொடங்கும் எல்லை...

கோவை
திருப்பூர்
திண்டுக்கல்
தேனி
மதுரை (சதுரகிரி)
விருதுநகர்
தென்காசி வழியாக பயணித்து குமரி மாவட்டத்தின் கொல்லங்கோட்டில் முடிவடைகிறது.

இத்தனை நீளமான எல்லையில் முறையாக அளக்கப்பட்ட பகுதிகள் வெறும் 203 கிலோமீட்டர்கள் மட்டுமே...அப்படியானால் மொழிவழி பிரிவினை கமிட்டி போகிற போக்கில் கையை காட்டிவிட்டு சென்றதுதான், நமக்கும் கேரளாவிற்கு மான எல்லையாக இதுவரை இருந்து வருகிறது.

அளவீடு செய்யப்படாமலேயே இரண்டு மாநில எல்கைகளும் நிர்வகிக்கப்பட்டு வருகிறது... எத்தனை ஆண்டுகளாக தெரியுமா, கிட்டத்தட்ட 63 ஆண்டுகளுக்கு மேலாக...

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த சிக்கல் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். மிக நீண்டகாலமாக கர்நாடகத்தின் வட எல்லையிலுள்ள பெல்காம் மாவட்டத்தில், மராட்டிய மொழியை முன்னிறுத்தி போராட்டங்கள் நடந்து கொண்டே இருக்கிறது.60 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கும் அந்த எல்லை சிக்கல், இன்றுவரை தீர்ந்தபாடில்லை.ஆனால் கர்நாடகா மற்றும் மராட்டிய மாநிலங்களுக்கு இடையிலான எல்லை முழுமையாக அளவீடு செய்யப்பட்டு விட்டது.

அளவீடு செய்யப்பட்ட பின்னரும் இரண்டு மாநிலங்களுக்குமிடையிலான போர் நிற்கவே இல்லை... ஆனால் அளவீடே செய்யப்படாத நிலையிலும் இங்கு, எவ்வித போராட்டமும் நடக்கவே இல்லை.

அப்படியானால் என்ன மனநிலையில் வாழ்கிறோம் நாம்....

21- 11; 1955 ஆம் ஆண்டு, சென்னை மாகாண சட்டமன்றத்தில் பேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினரான திரு. எஸ். தினகரசாமி தேவர் அவர்களின் வாதம் புறக்கணிக்கப்பட முடியாத ஒன்று.

"தேவிகுளத்தில் 90 விழுக்காடு தமிழர்களும்,பீர்மேட்டில் 51 விழுக்காடு தமிழர்களும் வாழ்ந்து வரும் நிலையில்...எந்த அடிப்படையில் மேற்கண்ட இரண்டு தாலுகாக்களையும், கேரளாவோடு இணைப்பதற்கு மொழிவழி பிரிவினை கமிட்டி சம்மதம் தெரிவித்திருக்கிறது என்பதாகும்.

ஆனால் திரு எஸ். தினகரசாமி தேவர் அவர்களுடைய இந்த வாதத்தை, அன்றைக்கு சென்னை மாகாண சட்டமன்றத்தில் இருந்த மலையாள உறுப்பினர்கள் எவரும் மறுக்கவில்லை என்பதை, அன்றைய சட்டமன்றக் குறிப்பேடுகளிலேயே நாம் பார்த்துக்கொள்ள முடியும்.

தேவிகுளம் தாலுகாவில் 1931 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தமிழர்கள் எண்ணிக்கை-51,730 ம் பேர்.

மலையாளிகள் எண்ணிக்கை-3,834 மட்டுமே.

இதுவே 1941 ல் தமிழர்களின் எண்ணிக்கை-53,394 பேர்.

மலையாளிகளின் எண்ணிக்கை- 8,282 பேர்.

இதுவே 1951ஆம் ஆண்டு தமிழர்களின் எண்ணிக்கை-62,130 பேர்.

ஆனால் அதே ஆண்டு மலையாளிகளின் எண்ணிக்கை 16,050 பேர்.

அதாவது 51 ஆயிரத்து 730 பேர், 62 ஆயிரத்து 130 பேர் ஆக உயர்ந்திருக்கிறார்கள்.

ஆனால் வெறும் 3,834 பேர்,16,050 பேராக உயர்ந்திருக்கிறார்கள்.

இந்தக் கணக்கில் ஏதாவது நியாயம் இருக்கிறதா...?

பிராய்லர் கோழிகளைப் போல தங்கள் எண்ணிக்கையை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தேவிகுளம் தாலுகாவில் உயர்த்திக் கொண்ட இவர்கள்...

இன்று மண்ணின் மைந்தர்கள் ஆகிவிட்டார்கள்...

ஆனால் 1931 ஆம் ஆண்டு அரை இலட்சத்திற்கும் மேல் வாழ்ந்த தமிழர்கள், இன்று அந்த மண்ணுக்கு அந்நியமாகிப் போனார்கள்..

இதுதான் இந்திய ஜனநாயகத்தின் ராஜபாட்டை...

வரலாறு நீளும்....

-ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக