சனி, 11 ஜூலை, 2020

நேசம்


       "தமிழ் - சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின்  

ஆராய்ச்சி நிறுவனத்தில் அருளி ஆற்றிய உரைகள் (தொகுதி-2) "

 நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
                   


                               நேசம்


சொல் மூலம்:
                        ஞய் > நய் > நெய் > நேய் > நேய்+அம்> நேயம்>நேசம்.


சொற்பொருள்கள்:
                     அன்பு, நட்பு, பற்றிமை, தகுதி
                               
ஞய் :
      ஞஃகானும் யகரப் புள்ளியெழுத்தும் கூடி இழைந்தொலிக்கும் அரிய வேராகிய  "ஞய்" என்பதே, நேசம் என்னும் சொல்லின் தோற்றத்திற்கு அடிப்படையானதாகும்.
     
ஞய் > நய்
      "நய்" என்னும் செப்பம் செழித்த ஆணிவேருக்கு முந்தியன்றமை உடையதே இந்த    "ஞய்" என்பது என்னும், மொழியியல் போங்குண்மையை,
ஞண்டு > நண்டு, - ஞரலுதல்> நரலுதல் போலும் பழந்திரிபுச் சொற்களின் நிலைத்த  சான்றுகளிடையே கண்டுணரலாகும்.
     
நய்: நெருங்கு, நெருக்கு, ஒன்று, அழுந்து, நசுக்கு,
      அழி, உருச்சிதை, பொடியாக்கு.
     
நய் > நை
      நகரமும் யகரப் புள்ளியும் இணைந்த "நய்" என்னும் வடிவே, "நை" என்னும் உயிர்மெய் வடிவினும், - ஒலி, எழுத்து ஆகியவற்றின் தோற்றங்களில் முற்பாட்டு நிலைமை பெற்றிருந்ததாகும்.
     
      நை = பொருந்தி அழுந்து, (அழுத்து), நசுங்கு, (நசுக்கு).
     
      (அழுந்துகைக் கருத்தும், நசுங்குகைக் கருத்தும், வேரூற்றம் கொண்டு செழித்த பின்னர்,  அழிப்புக் கருத்துக்குத் தாவிப் பருத்தது.)
     
      நை+ தல்> நைதல் = பொருந்தி நசுங்குதல்.
      நை+ (த்) + தல் > நைத்தல் = நசுக்குதல், அழித்தல், (எரித்தல்)
     
      "வேலே, குறும்பு அடைந்த அரண்கடந்தவர்
      நறுங்கள்ளின் நாடு நைத்தலின்"     (புறம்: 97: 4-5)
     
                  நைத்தலின் = அழித்தலின்
                  நைத்தல் = அழித்தல், சுட்டழித்தல்.
                 
      (1-1)   "நனந்தலைப் பேரூர் எரியும் நைக்க" (புறம்: 57:7)
            எரியும் நைக்க = தீயும் அழிப்பதாக....
           
      (1-2) "ஒள்ளெரிநைப்ப உடம்பு மாய்ந்தது"(புறம்: 240:10)
                  ஒள்ளெரி நைப்ப = ஒள்ளிய தீச் சுட.....
                 
      (1-3) "பரந்துபடு கூர் எரி கானம் நைப்ப" (நற்: 177:1)
                        நைப்ப = எரிந்து அழிக்க...
                       
      நய் >நயி> நசி = அழுத்து , நசுக்கு, அழி
            நசி+ தல்> நசிதல் .   நசி+(த்)+தல் > நசித்தல்
           
      .நோ: பய் >பயி > பசி                           வய் >வயி> வசி
               மய்  >மயி >மசி                  நொய்> நொயி> நொசி
1
            நசிதல் = அழிதல்              நசித்தல் = அழித்தல்
      நசி >(Latin) neco
         > neco = to kill; destroy.
         > neceo = to do harm, do hurt to
         > neco > nex = death, a violent death,destruction, ruin.
         > nec eo
         > nec-sa
         > noxa = hurt, harm, injury
         > noxālis = of or relating to an injury
         > nisus = a pressing, a tread.
        
         நய் > நயு > நசு > நசு+கு> நசுகு > நசுக்கு = தேய், அழி
                                   நசுகு, > நசுங்கு = தேய்வுறு, அழிவுறு.
                                     
      (நய் > நய்யம் > நயம் > நாயம்) நாசம் = அழிவு
      நாசம் >(சமற்கிருதம்) nasa = destruction, ruin, death.
     
      Pali: nāsa = destruction
      Prakrit: nāsa = loss
      West pahari: nās = destruction
      Kumauni: nās = loss
      Nepali:   nās = loss
      Bengali: nās = loss
      Oriya: nāsa = loss
      Hindi: nāsa
      Marathi: nāsa
      நாசம் > (Skt) nāsayati = destroys
      நசி > (Skt) nasyati = perishes
      (Prakrit) nassai = perishes

      நய்,>நய்+(ச்)+சு> நய்ச்சு>நச்சு = உயிரை அழிவிக்கும் கடும் பொருள்.
     
      (.நோ : தய் >தய்+ச்+சு>தய்ச்சு >தச்சு)
     
      நச்சு:  "நடுவூருள் நச்சுமரம் பழுத்தற்று'"  (குறள்: 1008)
     
            அழுந்துகைக் கருத்தும் நகங்குகைக் கருத்தும் செறிந்து நிறைந்தபின், நசுங்கிய ஒன்று குழைவுடைய தாதல் பற்றிக், குழைவுப் பொருளையும் இந்நய்" என்னும் ஆணிவேர் அணிந்து கொண்டது.
     
      நய் > நை = குழைவாகு. 
      நைய = குழைவாக, பொடியாக
      நைபடுதல் = குழைவு படுதல்
      நைச் சாந்து = மிகக் குழைவான சாந்து.
      நையப் புடைத்தல் = குழைவுற்றது போன்று தளரும்படி அடித்துத் தாக்குதல்.

            குழைவுக் கருத்து உள்ளத்தே நேர்வுறும் இழைவுக் கருத்துக்கும்   தாவும். ஒருவர்க்கொருவர் அன்புகலந்து உரையாடுகின்றமையையும்,     நெருங்கிப் பழகுகின்றமையையும்  "அவர்கள் ஒருவரோடு ஒருவர்   குழைகிறார்கள்"   என்று மக்கள் சுட்டிக்காட்டி வழங்குவதில் அப் பொருள்     பசுமையைக் காணலாகும். குழைவில் மென்மையும் ஒட்டுறவும் ஈரமும்       உள்ளமையே, விருப்பத்திற்கும் அன்புக்குமான கருத்துக்குப் பற்றிப் படர்ந்த   அந்நிலைக்கு அடிப்படைக் காரணமாகும்.

      நய் > நய = விரும்பு, அன்பு செய்.
      நய +(த்) + தல் > நயத்தல் = விரும்புதல், அன்பு செய்தல், காதலித்தல்
     
      "நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்" (குறள் : 580)
      நயந்த = விரும்பிய        நயந்தவர் = விரும்பியவர், அன்பு செய்தவர்.
     
      நய>நய +வு >நயவு = விரும்பு
      நயவு + அன் > நயவன் - விரும்புபவன், சுவைஞன்.

      "நயவன் தைவரும் செவ்வழி நல் யாழ்"       (அகம்: 212)
     
      நயவு++மை> நயவாமை = விரும்பாமை.
      "பிறன் வரையாள், பெண்மை நயவாமை நன்று"       ( குறள்: 150)
     
      நய் + அம் >நயம் = விருப்பம், அன்பு, இன்பம்.
      நய+(ப்)+பு>நயப்பு = விருப்பம்.
      நயந்தனிர் = விரும்பினீர்.
      நயம்தலை மாறுதல் = அன்பு ஒழிதல்.
      நயவந்து = விருப்பம் வந்து.
     
      நய்+அகன்> நயகன் > நாயகன் = விரும்பத் தக்க தலைவன்.
      நய் + அகி > நயகி > நாயகி = தலைவி.
     
      நாயகன்> (Skt) Nāyaka
      நாயகி >(Skt) Nāyaki.

      நய்>நாய்+அன்>நாயன் = விரும்பத் தக்க தலைவன்.
     
      நாயன்+மார் >நாயன்மார் = கடவுளர் (!)
                                                                                                      சிவனடியார் (!)
                                                                                                       
      மகன் >மான்            அதியமகன் >அதியமான்.
                              பெருமகன் > பெருமான்.
                             
      மான் > மார் (பெருமையும் மதிப்புங் குறித்த பலர் பாலீறாகப் பயிலப்                                                        பெற்றது)
     
      நய் > நாய் +சி> நாய்ச்சி= அன்பு மிக்க தலைவி, விரும்பத் தக்க தலைவி,
                                                      அன்பு நிறைந்தோள்

      நாய்ச்சி >நாச்சி = தலைவி. (நாமதீப:183)

      நய் >நய்ம்> நம் = (விருப்பக் கருத்துப் பக்கவேர்)
      .நோ:     வெய் > வெய்ம் > வெம்.
                  செய்> செய்ம் > செம்.

      நம் >நம்+பு > நம்பு = விரும்பு, விருப்பம்.
                  'நம்பும் மேவும் நசையாகும்மே"       (தொல் உரி: 325)
                 
      நம்பி = விரும்பி
            (1-1) ''வாயார நின் இசை நம்பி"    (புறம்: 136:17)
      நம்பி = விரும்பிக் கேட்டு
            (1-2) "சேரியம் பெண்டிர் சிறுசொல் நம்பி" (நற்:175:7)
      நம்பு+ >நம்பி.     ('', ஓர் ஆண்பால் ஈறும் ஆகும்)
           
            .நோ :    நள் +(ள்) + > நள்ளி
                        பார் + >பாரி
                        கார் + >காரி
                        ஓர் + > ஓரி
                       
      நம்பி = விருப்பத்திற்குரியவன், நயந்தவன், தலைவன், அன்பன்
     
      நம் +கை >நங்கை = அன்புடையாள், விருப்பத்திற்குரியாள்,
                                                இளையோள்.
                                               
            "என்னுடன் நங்கை ஈங்கிருக்க" (சிலம்பு: 16:14)
           
                  .நோ:     செம்+கை > செங்கை .
                              வெம்+ கோல் > வெங்கோல்
                                    "வெங்கோலன் ஆயின்'"   (குறள்: 563)

            "கை"  ஒரு பெண்பாலீறு
           
            .நோ :    கணி+கை > கணிகை.        
                        நடி+கை >நடிகை.
                       
      நய் >நயை >நசை. (யகர சகரத் திரிபு)
            .நோ:     இய் > இயை = பொருந்து.
                        இயை+பு> இயைபு
                        "இயைபே புணர்ச்சி" (தொல். உரி: 306)
      இயை >இசை = பொருந்து.           இசைதல் = பொருந்துதல்.

      நசை = விருப்பம், ஆசை
            (1-1)  "நசைதர வந்தோர் நசை பிறக்கொழிய"         (புறம்: 15)
            (1-2) "நசைஇயார் நல்கார் எனினும்" (குறள் : 1199)
      நசைநர் = நண்பர். (பிங்கலம்)
      நய்>நய் + (ச்)+சு >நய்ச்சு > நச்சு = விருப்பம்.
                  நச்சுதல் = விரும்புதல்

      (1-1) "ஒருவரால் நச்சப்படாஅ தவன்' (குறள்:1004)
      (1-2) ''.................................பரிசில்
            நச்சுவர நிரப்ப லோம்புமதி" (புறம்:360: 13-14)

            (உரை: நின்பால் பொருள் நச்சி வருவார்வர அவர்கட்கு வேண்டும்
      பொருளை நிரம்ப நல்கு தலைப் பாதுகாப்பாயாக.....)
     
      நச்சு > நச்சினார் = விரும்பியோர், அன்புடையவர்.
      நச்சினார்க்கு இனியர் = (அன்பர்க்கன்பர்) அன்பர்க்கு இனியர்.
     
      நய் : (குழைவுக் கருத்து வேர்)
      நய்>நை.    நை + தல்> நைதல் = குழைவாதல்
      நைந்து = குழைவாகி
            சோறு நைந்து போய்விட்டது” (உலக வழக்கு)
           
      நை+பு> நைப்பு = குழைவு, மென்மை .
     
            வழவழப்பு நிலையைக் குறித்தற்குச் சிற்றூர் மக்கள், "நைப்பு"
      என்ற சொல்லைப் பயன்படுத்துவது ஒரு பரவலான வழக்காகும்.
     
            நை = மெலிவுறு.        நையல் = மெலியச் செய்யும் ஒருநோய்.
      மெலிந்தவனைப் பார்த்து, "இவன் நையென்றிருக்கிறான்" என்பது
      உலக வழக்கு.
     
            எள்ளனமாகப் (ஏளனம்) பகடி செய்து வெறியேற்றும் செயலை,
      "நைக்காட்டுதல்" என்பர், யாழ்ப்பாணத்தார்.

      நைதல் = மெலிதல்.
     
      "நைந்து உருகி, என் நெஞ்சம் ஒல்கும்வாய் ஒல்கல் உறும்"
                                    (திணைமாலை நூற். 17: 3-4)
                                   
      நைந்து உருகல் = மெலிந்து உருகுதல்.
      நை+து >நைது = மெலிதற் குறிப்பு (சதுரகராதி)
            நைந்து = மெலிந்து, நையலுற்று

            "தொன்று துளை யொடு பருவிழை போகி
                  நைந்துகரை பறைந்த என்னுடையு நோக்கி"
                                                (புறம்:376:10-11)
      நைந்து = தேய்ந்து மெலிதாகி...
      நய் >நய்ம் >நம்.
            நம் + து> நந்து = மெலி, தேய் , உள்ளொடுங்கு
      நந்து = தொட்டவுடன் அல்லது பிற பொருள்கள் பட்டவுடன் கூட்டோட்டுக்குள்
            உள்ளொடுங்கிக் கொள்ளும் உயிரி.   Snail (Buccinum)
           
      நந்து = நத்தை (பிங்கலம்), சங்கு (திவாகரம்)
      நந்து > நத்து = நத்தை ("நத்தொடு நள்ளி" பரிபா: 10:85)
     
      நத்து +> நத்தை
     
      நத்து + அம் > நத்தம் = சங்கு (சூடாமணி) நத்தை (அக. நி.)

      நய் = குழைவு
      நய்,>நெய் = குழைந்த பொருளாய் இருக்கும் ஆன் நெய்.
                  அகர எகரத் திரிபு: .நோ. வல்  > வெல்
                                              வறு  > வெறு
                                              கட்டி > கெட்டி.
                                               
            தொடக்க மொழிமாந்தனின் வாழ்க்கைப் பொருள் பயன்பாட்டில்
            குழைவாயிருந்த பசைப் பொருளாக, நெய்யே இருந்தது.

            ஆவினின்று கிடைக்கும் பாற்பொருள்களில் நறுமணம் மிக்கதும்,
      உணவில் கலந்துண்ணச் சுவையும் நலமும் தருவதுமாகிய அரிய பொருளாக "நெய்" பயன்பட்டது. வெண்ணெயையும், நெய்யையும் தொடக்க மொழி மாந்தர்  "நெய்" என்ற சொல்லாலேயே குறித்து வழங்கலாயினர். நீண்ட நெடிய காலத்திற்குப் பிறகு, மொழியானது சிறக்க வளர்ச்சியுற்ற காலத்தில், நெய்க்கு முந்து நிலைத் தன்மைப் பொருளைக் குறித்தற்கு , - வெண்ணிறத் தன்மைக்குரிய அடையை முற்பிணித்து (வெள் + நெய்)> வெண்ணெய் என்றவாறு ஆக்கம் செய்யப்பட்டது. வெப்பத்தில் உருக்கிய நெய்யே, தலை முடியில் தடவிச் சீவுவதற்கு அக்காலத்தில்      பயனாகியிருந்தது.
     
            எள்ளினின்று எடுக்கப் பெற்ற நெய், (எள் + நெய்) எண்ணெய் என்னப் பெற்றது.
           
      நெய்:
            (1-1) "நெய்யணி மயக்கம் புரிந்தோள் நோக்கி"
                                                (தொல். பொருள் : 144:28)
            (1-2) "கண்திரள் நோன்காழ் திருத்தி நெய்யணிந்து
                                                (புறம்: 95:2)
            (1-3) "நறுநெய்க் கடலை விசைப்ப” (புறம்: 120:14)
            (1-4) ............................. நெய்யருந்து
                  ஒருங்கு பிணித் தியன்ற வெறிகொள் ஐம்பால்"
                                                (அகம்: 177:4-5)
            (1-5) "நெய்யால் எரி நுதுப்பேம்” (குறள் : 1148)
           
            தமிழிய மொழிகளில் இந் நெய்யென்னும் சொல்லின் படிவுகளாவன:
           
            Kota: Ney = ghee
            Toda: niy = ghee
            Kannada: ney = ghee
            Kodagu: ney   = ghee
            Tulu:   nëyi  =  ghee
            Telugu: neyyi, nëyi = ghee, oil
            Kolami: ney = butter, ghee
            Naiki: ney   = ghee
            Parji: ney  = oil, fat
            Gadba: ney, neyyu = ghee í
            Gondi: nI  = ghee
            (பால் நெய்) > Pal ni - ghee
            Kui: Níyu = Oil
            Kurukh: nëta = grease, fat
           
            (நோல்>)நோலை =எள்ளுருண்டை           
                        (அரும்பத வுரையாசிரியர் கருத்து)
                  "புழுக்கலும் நோலையும்" (சிலம்பு: 5:68)
            நோலை = எள்ளுடைய நெய்க்கசிவு
                        "அணங்குடை நோலை" (பு.வெ.மாலை: 3:5)
            நோல் + நெய் > நோனெய் (> நோனை)

            எண்ணெய்க்கு,நோனெய்" என்பது மற்றொரு பெயராகும். இச்சொல்
      வடுகுத் தமிழாகிய தெலுங்கில் "நூனெ" எனத் திரிபெய்தியது.
     
            தமிழிய மொழிகள் ஒரு சிலவற்றின் இவற்றின் பசிய ஆட்சியைக்
      காணலாகும்:
     
      Telugu:     nüne - oil
                  nüniya - oil
      Kolami:     nu-ne = oil
                  Pal-nüne = ghee
                       
            (எள்ளினின்று எடுக்கப்பெறும் நெய்யையே சிறப்பாகக் குறிக்கும்
      எண்ணெய் என்னும் சொல்லை மேற்கொண்டு, "தேங்காய் எண்ணெய்",
      "கடலை எண்ணெய்" என்றவாறு தவறாக வழங்கப் பெறுகின்றன.
      அவ்வகைத் தவற்று நிலையே Pal-nune என்னும் கோலாமியர்
      வழக்கிலும் படர்ந்திருக்கின்றது.

      Naiki:     nüne = sesame oil.
      Parji:      nuney = sesame oil.

            பசைமை உடைய தேனும், நெய்" என்னப்பெற்றது.
தேன்+நெய்> தேனெய்

(1-1)           “தேனெய் தோய்ந்தன"             (சீவகசிந். 2747)

(1-2)           “தேன் நெய்யொடு கிழங்கு மாறியோர்"    (பொருநரா: 241)

 (நச். உரை: தேனாகிய நெய்யோடே கிழங்கையும் விற்றவர்கள்...)
தேனை வடிகட்டுவதற்குப் பயன்படுத்திய பன்னாடையை "நெய்யரி” என்ற வழக்கில்,- தேனை நெய்யென்று குறித்த உண்மை , இலங்கலுறக் கண்டு, விளங்கிக் கொள்ளலாகும்.
தேனாகிய நெய்யைப் பிலிற்றிக் கமழும் பூ என்னும் பொருளடிப்படையில் ஒரு வகைப் பூ, நெய்தல்” என்னப் பெயர் பெற்றது.
(1-1) "நெய்தல் கள் கமழ் புதுப்பூ'                             (பெரும்பாண் : 213:4)
 (1-2) “கள்கமழும் நறுநெய்தல்”                                (மதுரைக்: 250)
 (1-3) “மணிகுலை கள்கமழ் நெய்தல்.                     (குறிஞ்சிப்: 84)
(1.4) "வைகறை கள்கமழ் நெய்தல் ஊதி"                (திருமுருகு: 74)

 என்றவாறு பயிலப் பெற்றுள்ள பண்டையிலக்கியச் சான்றுகள், இவ்வுண்மையை நிறக்க மெய்ப்பிப்பனவாகும்.

நெய் > நெய் + அது > நெய்யது = நெய்யையுடையது, தேனையுடையது.

பழைய சோற்றை இக்கால் நாம் “பழையது" என்னுமாறு போல, அக்கால வழக்கில் சுடுசோற்றை “வெய்யது" என்றனர்.

காண்க: வெய்து= வெய்யது. வெய்யசோறு,
                                    வெய்யவுணவு, குடான உணவு.
“நெஞ்சத்தார் காதலவராக வெய்து உண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து”                     (குறள் : 1128)
நெய்> நெய் +து >நெய்து +அல் > நெய்தல் - தேன் நெய்யை மிகுதியாகப் பிலிற்றிக் கமழும் பூ.                                          (“அல்" ஓர் ஈறு)

Malayalam:        Neytal
Kannada;           neydalu, neydilu,
Tulu:                 naidile.

நெய் >நெய்யு = இழையோடு இழையைப் பின்னு, இழைகளைப்பிணை
நெய்+அவு >, நெயவு = நெயவு வினை.
 நெயவு > நெசவு = நெயவு வினை. (யகர சகரத் திரிபு)
தமிழிய மொழிகளில் இதன் திரிபுகளாவன:

Malayalam:        neyka    = to weave.
                        neyttu    =  weaving
                        neyyal    = weaving.
Kota:                 nec        = to weave.
Toda:                nio         =   
Kannada:           ney, neyi, na, nayu = to weave
Kodagu:            ney     = to spin
Tulu:                  neyuni  = to weave
Telugu:              nëyu       = to weave.
Kuwi:                 nahnai     = to inter weave.

நெய்> நெய்வு > (Latin) neo =  to spin, to weave, to interlace, entwine
                        > nexo = to tie or bind together
                        > nexio = a tying
                        > nexibilis = tied or bound together
> nexus    = a tying or binding together,
a fastening, joining.
an interlace, entwining
> (English) nexus = Bond, link, Connection
 > (Old English) nëhsta > (Eng) next = nearest.
> (Old Norse) Near > (ME) near = at a short distance
 (Gothic) nëhwa > (old (English) nëah>(Eng) neigh= near.
 (Old English) nëahgebur> (Eng) neighbour = Dweller of next door, near

நெய் > நெய்யு> (Greek) neö = to weave.
நெய்யுதல் > நெய்தல்> (Greek) Neto = to weave.

>Neith = Goddess Mother of the flax weavers.
N.B:  “ This was the three eyed Shiva of the Hindus whose wife was the 'weaving' Uma, the 'flax (Uma) Goddess, the Goddess mother of flax 'weavers' of Asia Minor who become the Egyptian Goddess Neith".
[History and Chronology of the Myth making age.page: 250. By J.F. Hewitt]
குழைவு, பசைமை ஆகிய கருத்து நிலைகள் அடிக்களனாக அமைந்த "நெய்" என்னும் சொல்லானது, ஆவின் நெய்யையும், தேன்நெய்யையும், மீன்நெய்யையும் ('மீனெய்யொடு நறவு மறுகவும்" பொருநரா: 215) குறித்து வழங்கப்பெற்ற உண்மையைக் கழக இலக்கியப் பரப்பிடத்தில் பரவலாகக் காணலாகும்.

குழைவானதும் பசைமையானதும் ஒட்டுந்தன்மையுடையதும் ஆக இருக்கும் நீர்மப் பொருள், "நெய்" என்னப் பெற்றது போலவே, அத்தன்மைகளே வேறு கோணத்திலமைந்துள்ள உள்ளத்தின் ஒட்டுறவையும், நெகிழ்ந்திழையும் அன்புணர்வையும் சுட்டுவதற்கென்று அம் மூலத்தினின்றே,

(நெய் > நேய்,> நேய் + அம்>) “நேயம்" என்னுமாறு ஒரு சொல்லாக்கம் தமிழ்மொழிக்கண் எழுந்து தழைத்தது!
அன்பு சொதந்திருக்கும் நெஞ்சம் , "நேய நெஞ்சம்" என்னப் பெற்றது.

“நேமி யுய்த்த நேஎ நெஞ்சின்
தவிரா ஈகை கவுரியர் மருக'' (புறம்: 3:4-5)
(பழையவுரை: சக்கரத்தைச் செலுத்திய ஈரமுடைய நெஞ்சினையும், ஒழியாத வண்மையினையுமுடைய பாண்டியர் மரபினுள்ளாய்...)

            {இலக்கிய ஆளுமைகளிடையே, 'தேயம்" எனும் செஞ்சொல், “தேஎம்'' என்றவாறு வடிவமைக்கப் பெற்றிருப்பது போலவே,- “நேயம்'' என்னும் சொல்லும் இங்கு “நேஎம்'' என்ற வடிவு நிலையில் நிறுத்தப் பெற்றுள்ளது.]

            “நேஎ நெஞ்சு" என்பது, இங்கு ஈரமுடைய நெஞ்சு எனச் சுட்டப் பெற்றுள்ளது. “ஈரம்" என்பது, பசைமையுற்றிருக்கும் அன்பு என்று பொருள்படும், ஒரு சொல்லாகும். அன்புப் பசையுடைய நெஞ்சம், ஈரநெஞ்சு'' என்றும், ''ஈரநெஞ்சம்" என்றும் இலக்கிய ஆட்சிகளினூடே வழக்குடைய தாயுள்ளது.

(1-1) "ஈர நெஞ்சின் தன் வயின் விளிப்ப"                (நற்: 181:8)
 (1-2) "கடும் பகட்டு யானை நெடுமான் அஞ்சி
ஈரநெஞ்சம் ……………………………………….. “                      (நற்.381:7-2)

            "ஈரம்" என்னும் சொல்லே நேரிணையாக "அன்பு" என்னும் பொருளையும், தனிப்படத் தருதலும் உண்டு.
            ஈரம் = அன்பு
"ஈரமில் லாதது கிளை நட்பன்று" (முது மொழிக்காஞ்சி: 5:3)


            [நெய் தோய்ந்த திரி, "ஈர்ந்திரி' என்னப் பெற்றது, இங்கு மிகவும் கருதிப் பார்த்தற்கு உரியதாகும்.
“ இரும்பு செய் விவக்கின் ஈர்ந்திர் கொளீ இ"                    (நெடுநல்:42),
            நச். உரை: இரும்பாற் செய்த தகளியிலே 'நெய் தோய்ந்த திரியைக்'
கொளுத்தி..........]

 நெய் > நேய் + அம் > நேயம்.
            இச் சொல்லுக்குரிய பொருள்களாக, நெய்யையும் அன்பையும் எண்ணெய்யையும் பிங்கலம் சுருங்கச் சுட்டும்.
“நெய்யும் அன்பும் எண்ணெயும் நேயம்" (பிங்கலம்: 3740)
நேயம் = அன்பு.
“நேயத்ததாய் நென்னலென்னைப் புணர்ந்து"                   (திருக்கோ : 39)
நேயம் = (பற்று, இறைமாட்டு அன்பு கொள்ளுகை.)
 அருள் உணர்வு: ''நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி"
                                                                                    (திருவாச: 1-13)
 நேயம்,> நேசம் = அன்பு, விருப்பு, நட்புணர்வு
(யகரசகரத் திரிபு) ஒ.நோ     : ஈயல் > ஈசல்
                                                தேயம்,> தேசம்
(நேயம், நேசம் என்னும் அன்பு குறித்த தூய செந்தமிழ்ச் சொற்களின் வடிவங்களே சமற்கிருதத்தில் இல்லை. அவர்களிடம் வழக்கே இல்லாத பலசொற்களை, அவர்களுடைய சொற்கள் என்று தவறாக அறியாது கருதிக்கொண்டு பயன்படுத்தத் தயங்குவதும், அஞ்சியவாறு பயன்படுத்துவதும், அவற்றிற்கு இணையாகப் புதுச்சொற்புனைவு மேற்கொள்ள முனைவதுமாக ஓர் இறங்கல் நிலை, நம்மிடம் உள்ளமைக்கு. இந்த நேசம் என்னும் சொல்லின்பால் உள்ள ஒருவகை மயக்கமும், ஓர் அருமையான எடுத்துக் காட்டாகும்.)

            இனி, இவ்வுரைக்கண் பயின்ற "நெய்" என்னும் சொல்லையும், நேயம் என்னும் சொல்லையும் சமற்கிருதம் திரித்துப் பயன்படுத்திக் கொண்டுள்ள வடிவங்கள் சிலவற்றைக் காண்போம்.

            "நெய்" என்னும் தூய செந்தமிழ்ச்சொல், சமற்கிருதத்தில்  “Snih" என்றவாறு திரிபடைந்துள்ளது. இவ்வகையில், இத் திரிபுச்சொல்லினின்று பன்மடித் திரிபாக்கங்களைச் செய்து, நூற்றுக்கும் மேற்பட்ட சொல்லமைப்புகளைச் சமற்கிருதவாணர் யாத்துள்ளனர். அச் சொற்குலத் தொகுதிக்கு மூலவேர்ச்சொல்லாக, இந்த "Snih" என்பதையே ஆங்காங்கும் காட்டி, மருட்டலும் செய்துள்ளனர். “நெய்" என்னும் செந்தமிழ்வடிவத்தை "neh" என்றவாறு வடநாட்டுப் பகுதி தமிழிய மாந்தர் அக்கால் திரித்தொலித்த பின்றையே, அப்பால் வந்திருந்த ஆரியர், அதனின்று 'Snih" என்னும் கடுந்திரிபை மேற்கொண்டு பயின்று பயனடைந்துள்ளனர்.
            சில தமிழ்ச்சொற்களில் பலுக்கப்பெறும் யகரவொலி மெல்லிய ககரவொலியாகத் திரிபடைவது, தமிழின் அணுக்க இனமொழிகளான தென்றமிழிய மொழிகளிலேயே பொதுவான போக்குடையதாகும்.

            ஒப்பு நோக்க ஓரிரு சான்றுகள் :
(1)     பய்> பயின் = பிசின், ஒட்டும் பசை
"பயின் பிசினொன்றே பேர் "                - (சூடாமணி நிகண்டு)
"பயினொடு சேர்த்திய கல்போல்"
                                                (அகம். நித்திலக்- 256:9.10)
            இந்தப் “பயின்" என்னும் சொல், கன்னடத்தில் – “Paginu" என்றவாறு பயிலப் பெறுகின்றமை இங்குக் கருதுவதற்கு உரியதாகும்.

Kannada:           Paginu = gum, resin.
(2)        வாய் > வாய் + இல் > வாயில்
            வாயில் >(கன்ன டம்) Bagilu
(நெய்) neh என்றவாறான படிவத் திரிபுகளடங்கிய பிற வடபால் மொழிகளாவன:

Sindhi:                           nehu, nihu = oiliness, grease
 Lahnda:                        nehü
Punjabi:                         nëh, nih, nehü, nëhu, niHu nehura
Kumauni:                       neh
Assamese:                     nehä
Bengāli:                         neh
            (வங்காள மொழியில் "nei" என்ற சொல்வடிவமும் உள்ளது)
Maithili:                         neh, nehu
Bhojpuri:                       neh
Old Awathi:                    neha
 Hindi:                           neh
Gujarati:                        neh

            இம் மேற்கண்ட  “neh" என்ற வடிவத்தின், பிறிதொரு புடை வடிவமான “nih" என்பதனொடு, “S" என்னும் முந்துருத்திய ஒலியைப் பிணைத்து "Snih” என்ற வடிவை திரித்தமைத்துக் கொண்டனர்.

            தமிழ்ச்சொற்களைத் தம்மவை ஆக்கிக் கொள்ள, அச் சொற்களின் முன்னர்
“S" புணர்த்தியொலித்துக் கொள்வது சமற்கிருதமொழியியல்பு.

துண்> தூண் > தூணம்) (Skt) ஸ்தூண
 ஊசி > (Skt) சூசி
 மயிர் > (மயிரு)> (Skt) Smasru

            இவ்வகைப் போக்குத் திரியே, “Snih" என்பதுமாகும். நிலையுண்மை இவ்வாறிருக்க, நெய் என்ற சொல்லுக்கு Snëha என்பது ஒருகால் மூலமாயிருக்கலாம் என்று சென்னைப் பல்கலைக் கழக அகராதி குறித்துப் பரப்பி வருகின்றது!

நெய்,> (>நேய்> ) நேயம் என்னும் இரு சொற்களின் கொடுந்திரிபுகளாகவுள்ள “snih" snëha என்ற சமற்கிருத வடிவப் பிரிவுகளும், பொருள்களும்:

>(skt)    snih = to be adhesive, or Sticky
            Snigdha = Sticky
             Snëha = Oiliness, greasiness, lubricity, oil, grease, love, attachment
            Snëhin = Oily
            Snëha = grease, Oiliness, love.

            நேயம் என்னும் தூய் தமிழ்ச்சொல்லின் செப்ப வடிவம் பிராகிருதத்தில்,
 ''ne-am" என்றவாறே நலித்தலின்றிப் பயிலப் பெறுகின்றது.



மின்னெழுத்தில் வடித்தது,

பெஞ்சமின் பிராங்கிளின்பி
28 ஆடவை  2051
/०௬/௨०௫௧]
(12-07-2020)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக