"தமிழ் - சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின் ஆராய்ச்சி நிறுவனத்தில் அருளி ஆற்றிய உரைகள் (தொகுதி-2) " நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
புத்தகம்
சொல் மூலம்:
புல்> புள் > பொள் > (பொள்+து) > பொட்டு
பொத்து> (பொத்து + அகம்) > பொத்தகம்>
புத்தகம்.
சொற்பொருள்கள்:
புத்தகம்: ஓலைச்சுவடி, நூல்.
தலைசிறந்த அறிவுக் கருவியின் அழகிய பெயரிது. மொழியுணர்வும் மொழிக் காப்புணர்வும், தன்னுணர்வும் நெகிழ்ந்த நம் முன்னோரால், பேணப்படாது தளர்த்திவிடப் பெற்ற சொற்களில் இதுவும் ஒன்று!
இயற்கை யொழுங்கினூடேயே தோய்ந்து வளர்ந்த முந்தியல் தமிழமாந்தர், ஒவ்வொரு சொல்லையும் மிகநுட்பமாகப், பொருந்த உருவாக்கிப் பயன் படுத்தியுள்ளனர்! தரையில் கீறிப் பயின்ற நிலைக்கு அடுத்த நிலை, ஓலையில் மாழையூசியால் அஃதாவது எழுத்தாணியால் எழுதிப் பயின்றதாகும். நம் முந்தையர்க்கு மிகவும் பொருந்திய, ஏற்ற
சுவடிக்கருவியாக பனையின் ஓலையே பயன்பட்டிருக்கின்றது வரலாறு. அதனினும் பொருந்திய வேறொரு அடிக்களம் அவர்கட்கு அக்கால் புலனாகவில்லை . உலக மொழியாகிய தமிழை வளர்த்தெடுத்ததும் அப்பனை ஓலையில் தாம்!
கோரையின நாணற்புல்லாகிய
“Papyrus” என்னும் நிலைத்திணையின் தோகையில் எகிப்தியர் எழுதிப்பழகினர். உரோமரும் பின்பற்றினர். “Papyrus” என்னும் இலத்தீனச் சொல்லின் கடைத்திரிபே இக்கால் நாம் வழங்கும் paper என்னும், ஆங்கில வழக்கும்! 'Papyrus' என்னும் இலத்தீனச் சொல்லுக்கு, நேரிய “கிரேக்கச்சொல்” Bublos என்பதாகும்.
“பேபிரஸ்” தாளில் எழுதிய பின்னர், சுருட்டிய வடிவிலேயே அதை வைத்துக் 'காப்பர். அவற்றைச் சுருளாகவே வைத்திருப்பது அன்னோரது வழக்கமாகும். பேபிரஸ், கோரையின் நாணற்புல்லின் தோகையைக் குறித்த ‘Bublos’ என்னும் கிரேக்கச் சொல்லினின்று, புத்தகம் என்னும் பெயரைக் குறிக்க (Bublos) > biblio எனத் திரிபடைந்தது. 'Biblio' என்னும் கிரேக்கச் சொல் ‘Bible’ என்ற வடிவில் ஆங்கிலத்திலும் போய்த் தவழ்ந்தது. புத்தகம் என்னும் பொதுப்பொருளால் முன்னர் வழங்கிய ‘Bible’ என்னும் சொல், பின்றைக் காலத்தில், கிருத்துவ மத நூலின் சிறப்புப் பெயராக மட்டுமே, நிலைத்து நின்று விட்டது.
கிரேக்க உரோம எகிப்தியர்க்கு
‘Papyrus’ என்னும் நாணற்புல்லின் தோகை பயன்பட்டது. தமிழர்க்குத் தாளாக ஓலையே சிறப்பாகப் பயன் பெற்றது.
ஓல் > ஓலம் = ஓசை
ஓல் > ஓலை = காற்றில் சலசலத்து ஓசையிடும் திண்ணிய பனை இலை, பனையோலை.
“வற்றிய ஓலை கலகலக்கும் எஞ்ஞான்றும் பச்சோலைக் கில்லை ஒலி"
-
என்ற பழம்பாட்டு இதற்கொரு எடுத்துக் காட்டு.
"பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது" என்னும் பழம் பழமொழித் தொடர்ச்சியில், பனை ஓலையின் சலசலப்பு ஓசை உள்ளடங்கியுள்ளமையைக் காணலாம்.
நன்கு முதிர்ந்து காய்ந்த ஓலையே எழுத்தாணியாற் கீறி எழுதற்கு ஏற்றதாயிருந்தது. எழுதப்பெற்ற ஓலைகளின் சுவடிப்பு, ஓலைச்சுவடி எனப் பெற்றது. சுவடித்தல் = இணைத்தல், கட்டுதல்.
புனைவு செய்தலைக் குறிக்க, சுவடித்தல், சோடித்தல் என்னும் நாட்டுப்புற வழக்குகள் உள்ளமையையும், புனைதல் என்பதற்குக் கட்டுதல் என்னும் பொருள் உள்ளமையையும், வேடம் புனைதலை வேடம் கட்டுதல் என்பதனையும், இங்குக் கருதிப் பார்த்தல் வேண்டும். புத்தகத்தைக் குறிக்கும் பனுவல், நூல் என்னும் நுட்பமான சொல்லாட்சிகள், பண்டைத் தமிழரின் நுண்மாண் நுழைபுலப்பாங்கைக் காட்டவல்லனவாகும்.
பன்னல், பனுவல் என்பன, பஞ்சைக் குறித்த பழந்தமிழ்ச் சொற்கள் :
“பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன" (புறம்: 125)
பனுவல் = பஞ்சு.
நுண்மையான பஞ்சும், அப்பஞ்சினின்று இழைக்கப் பெற்ற இழையும் நூற்கப் பெற்ற நூலும் ஆகியவற்றை, நுண்ணிய அறிவுக் கருவியாகிய புத்தகத்துக்குப் பயன்படுத்திய நுட்பம், மிகவும் நுழைபுலமுடைய பண்பட்ட ஆளுமையுடையதாகும்.
பனுவல்: பஞ்சு: அறிவு நூற்கு ஆகிவந்தது.
“ஈற்றுப் பெயர் முன்னர் மெய்யறி பனுவல்''
(தொல் : சொல் : 3:13)
பனுவல் = அறிவு நூல்
இழை: “இழைத்துணர்ந்து ஈண்டிய கேள்வியவர்”
(குறள் : 417)
இழைத்துணர்ந்து என்பதற்கு "நுண்ணிதாக ஆராய்ந்து," என்பார் பரிமேலழகர்!
நூல்:
(1-1) “பல்வேறு செய்தியின் நூல்நெறி பிறழாது"
(தொல். சொல்:463)
(1-2) “நூல் நவில் புலவர்'' (தொல். பொருள்: 467)
(1-3) “அவைதாம் நூலினான உரையினான"
(தொல். பொருள் : 477)
(1-4) “நூலென மொழிப நுணங்கு மொழிப்
புலவர்'' (தொல். பொருள் ; 653)
(1-5) நுனித்தகு புலவர் கூறிய நூலே"
(தொல். பொருள் : 665)
(1-6) “ஆறு உணர்ந்த ஒருமுது நூல்"
(அகம்:166:4)
நூல் எனும் சொல்லின் மூலவேர், “நுல்” என்பதாகும்.
நுல் நுள் > நுளை > நுழை> நுழைவு = நுண்மை
(“நுண்மாண் நுழைபுலம்”:
நுழைபுலம் = நுண்ணிய பேரறிவு)
நுல் > நுள் > நுண் (நுண்+மை) > நுண்மை
=
கூர்மை, நுண்மை
நுல் > நுள் > நுண்> நுணு > நுணுகு >
நுணுக்கு + அம் > நுணக்கம் = நுண்மை
நுல் > நுள்> நுண்> நுண் + அங்கு > நுணங்கு
=நுண்மை
“நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய வாயின ராதல் அரிது” -
(குறள் 419)
நுல்> நுள் நுள்+பு> நுட்பு +அம் >நுட்பம்
=
நுண்மை .
“நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை "
(தொல்காப்: உரியியல். 76)
நுண்ணியர் என்பது, நுட்பமான அறிவுடையவர் என்னும் பொருளையும், நுண்ணவை என்பது, 'நுட்பமான அறிவுடையோர் கூடிய அவை'
(குறள் : 726) என்னும் பொருளையும், நுண்ணியம் என்பது, நுட்பமான அறிவுடையேம்
(710) என்னும் பொருளையும், தரும் கழகக் காலக் குறளின் ஆட்சிகள், நுண்மை என்பதே அறிவைக் குறிக்க வழங்கிய சொல்லாகும், என்னும் உட்புலனை விளங்க உணர வைப்பதாகும்.
நுல் > நூல் = இழைத்த அறிவு நூல், புத்தகம், நுண்ணிய அறிவுத் தொகுதி.
தச்சு என்னும் தூய தமிழ்ச்சொல்லின் இலத்தீனத்திரிபான, Techna , கிரேக்கத்திரிபான
Texnee ஆகியவை, தச்சுத் தொழிலுக்கும், கலைத்தொழில்கட்கும் அவ்வம் மொழிகளில் பயன்படுத்தங் கொண்டன.
தைக்கும் வினை, அதாவது ஒன்றோடொன்று பொருத்தும் வினை,- தச்சுத் தொழிலுக்கும், நெயவுத் தொழிலுக்கும் பொதுவாயின நிலையில், “Texo” என்ற சொல்லின்றே நெயவுத்தொழிலும், நெயவுத் தொழிலுக்கு மூலமான இழை நூல்களும் பெயர் பெற்றன.
Textum (n) that which is Woven: a web. Textor
= a weaver. Textura = a web. Textus - texure, tissue, structure
(P.
1865 Lat. Dic. (Lewis &short)
இழையைக் குறித்த ‘Textus’ எனும் இலத்தீனச் சொல், ஆங்கிலத்தில் புத்தகம் என்னும் பொருளில் ஆளப்பெறும் பொருளொப்பும், கருத்தொருமிப்பும், மிகவும் கருதி
மகிழ்தற்குரியன.
(English) Text - (Tissue of literary works)
lit.
that which is woven: web.
(P.143.0x.
Dic. VolX.)
ஏடு என்பது, பனை ஓலை ஒன்றின் ஒற்றை ஏட்டைக் குறிக்கும்.
இப்பொழுது நாம் பயன்படுத்தும் அச்சுத் தாள்களும், எழுதுதாள்களும், பழக்கத்திற்கு வந்த பின்னரே, சுவடித்த மலைத் தொகுதியை ''ஓலைச்சுவடி" என்று சுட்டுப் பொருளாக வழங்கத் தலைப்பட்டிருக்க வேண்டும். ஓலை என்னும் அடையைச் சேர்த்து வழங்குதற்கு, வேறுவகைத்தாள் பயன்படுத்தம் கொண்ட பின்னரே இயல்வதாகும் என்ற ஏரண அடிப்படை இம்முடிபை நமக்குத் தருகின்றது!
நூல் என்பதும், பனுவல் என்பதும் நுட்ப அடிப்படையில் பெயர் பெற்ற சிறப்புப் பெயர்களாக விளங்கின.
பொத்து + அகம் = பொத்தகம் என்பது, அவ்வோலைச் சுவடிகளைச் சேர்த்து இணைத்த தொகுதிக்கென அமைந்த பொதுப் பெயராக விளங்கியுள்ளது.
'பொட்டு' என்னும் சொல்லின் திரிபான பொத்து என்பது, அணைதல், சேர்தல், பொருத்துதல், பொருந்துதல் இணைதல், மூள்தல், கோத்தல், தைத்தல், கட்டுதல், கலத்தல், தொகுத்தல், கொத்தாயிருத்தல் என்னும் இணைவுப் பொருள்களில் பரவலாக வழங்கியுள்ளமை மகவும் கூர்ந்து கவனித்தற் குரியதாகும்.
பொத்து = பொருந்து, அணைந்து,
".... ........ முன்னுற
நாருடை நெஞ்சத்து ஈரம் பொத்தி" (நற்: 236:6-71)
(உரை: இதன் முன் பல நாளும் இங்கு வருதலால் யான் அறிந்த அளவில் அவன் தன் அன்புடைய உள்ளத்து அருள் பொருந்தி ...")
பொத்து = மூளுதல், அடைதல், சேர்தல்
"கடாஅம் வார்ந்து கடுஞ்சினம் பொத்தி"
(பதிற். பத். 16:7)
(கடுஞ்சினம் பொத்தி = கடுஞ்சினம் மூண்டு,
கடுஞ்சினம் சேர்ந்து)
பொத்து = இணைத்தல், தைத்தல்
“பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை”
(பொருநரா: 8)
(பொல்லம் பொத்திய : நச். உரை: இரண்டு தலையும் கூட்டித்தைத்த)
பொத்து = கட்டு பொத்துதல் = கட்டுதல்
“மறுகண்ணியும் பொத்தி" (ஈடு: 1:3:1)
பொத்து = கல. பொத்துதல் = கலத்தல்
“நெஞ்சம் பொத்தி நிறைசுடு நெருப்பே"
(பு.வெ. மாலை . 11;4)
(உரை: என் மனத்திலே கலந்து என்னுடைய நிறையுடைமையைச் சுடாநின்றது காமத் தீ ......)
நெருப்பு மூட்டு தலை, நெருப்புப் பற்ற வைத்தலை, கொளுத்துதலை, பொத்துதல் என்ற சொல்லால் குறிப்பது, கழகக் காலத்திலும், அதற்கு முந்திய பண்டையிலும் தமிழகத்தில் பரவிய வழக்கமாகும்.
‘பற்றிக் கொண்டது’ என்ற குறிப்பிலேயே, நெருப்பு எரியத் தொடங்கி விட்ட செய்தி, விளங்கி விடும். “நெருப்பு பிடித்துக் கொண்டது" என்ற வழக்கும் இதை மெய்ப்பிக்கும்.
தீயைக் குறித்த பெரும்பாலான சொற்களும், பொருந்துதல் கருத்திலேயே தோன்றியுள்ளமை இங்குக் கருதத் தக்கனவாகும்.
பொத்துதல் = பற்றுதல், எரிதல், மூட்டுதல்.
(1-1) ''காடுதீப் பிறப்பக் கனையெரி பொத்தி"
(சிலம்பு: 14:122)
(உரை : காடு முழுவதும் தீயுண்டாக, முழங்கும்
அழலை மூட்டி...)
(1 -2) “மீன்நெய் அட்டிக் கிளிஞ்சில் பொத்திய
சிறுதீ விளக்கின் துஞ்சும்"
(நற்: 175:3-4)
(உரை: மீன் கொழுப்பாலாகிய நெய்யை வார்த்துக் , கிளிஞ்சலில் ஒற்றிய சிறிய சுடர் விளக்கினொளியிலே துயிலுகின்ற ......)
(1-3) “உள்ளம் பொத்திய உரஞ்சுடு கூர் எரி"
(அகம்: 279:1)
(உரை: உள்ளத்திலே மூட்டப்பெற்று, நம் அறிவினைச் சுட்டெரிக்கின்ற கூர்த்த கவலையாகிய நெருப்பினை...)
(1-4) "வெள்ளிடைப் பொத்திய விளைவிறகு ஈமத்து"
(புறம். 245:4)
(உரை: வெள்ளிடையில் மூட்டிய தீயை விளைக்கும் சிறிய விறகையுடைய படுக்கையின் கண்)
(1-5) ''கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து"
(புறம்: 247:1-2)
(1-6) ''இடையன் பொத்திய சிறுதீ விளக்கத்து"
(புறம் 324: 112)
பொத்துதல் என்னும் இச்சொல்லின் தமிழியத்
திரிபுகளில் சில:
Kota: Pot, (Poty) = to light (as a fire)
Kannada: Pottu = to be kindled, catch fire, flame,
be burnt.
Pottu
= flaming.
Pottige
= flaming, flame
Tulu: Pottuni = to burn.
Pottavuni, Pottadruni = to light,
Kindle, burn.
Potta = hot, burning
Potturuni
= to kindle, set fire.
Potruni
= to kindle,
set fire
' பொத்துதல் = கோத்தல் , சேர்த்தல்
“பொத்த நூல் கல்லும் புணர் பிரியா அன்றிலும் போல்
நித்தலும் நம்மைப் பிரியலம் என்றுரைத்த
பொற்றொடி ........” (நாலடி 376:1-3)
பொத்த நூல் கல்லும்: நூலில் கோக்கப்பெற்ற மணிகளும்...
பொத்து என்பதன் ஒருபுடைத் திரிபான (பொத்து > பொது > பொதி) "பொதி" என்னும் சொல், தொகுதி என்ற பொருளிலும், கொத்து என்னும் பொருளிலும், வழங்கியமை இங்குக் கருதத் தக்கதாகும்.
பொதி = தொகுதி
பொதி: "பெய்கணைப் பொதிகளாலே வளர்ந்தது பிறந்த
கோபம்"
(கம்பரா:114)
பொதி = கொத்து
பொதி: ''அம்பொதித்தோரை"
(மலைபடு: 1215)
தனித்தனியே எழுதப்பெற்ற ஓலையேடுகளை முறைப்
படப் பொருத்திச் சேர்த்து இணைத்த அறிவுக் கருவியாகிய
ஓலைச்சுவடி, பொத்துதல் என்னும் வினையடிப்படையில்
பொத்து+அகம் > பொத்தகம் என்றாகியுள்ளது.
‘சுவடிசேர்த்தல்’ என்னும், பண்டைய மரபு வழக்கம்,
இதை வலியுறுக்கும்.
“மிக்க கனம் பொதிந்த நூல்" (பா
: 341) என்ற நாலடியாரின்
தொடரியம்.- மிகுவாகப் பொத்திச் சேர்த்த பெரிய பொத்தகத்தைக் குறித்ததாகும்.
பொத்திய எழுத்தேட்டுக் கற்றையாகிய தொகுதி, பொத்தகம் எனப் பெற்றது.
“நிறைநூற் பொத்தகம் நெடுமனை யேற்றி"
(பெருங். உஞ்சைக். 34:26)
கணக்கு வழக்குகளை எழுதித் தொகுத்து வைத்த ஓலைச்சுவடியும், பொத்தகம் எனப் பெற்றது.
தென்னிந்திய பொறிப்பேட்டின் மூன்றாம் மடலத்தின் எண்பதாங் குறிப்பில், "பொத்தகப்படி குழி" என்ற வரி வருகின்ற து. (S.I.I.iii-80)
மயிலிறகு ஒன்றோடொன்று கற்றையாகப் பிணைந்து தொகுப்பாய் ஒடுங்கியிருப்பது காரணமாக, மயிலிறகும் பொத்தகம் என்ற சொல்லால் குறிக்கப் பெறுகிறது. பதினெண் சித்தர்களின் பாடல் தொகுப்பாகிய பாலவாகடத். திரட்டில் (1012) பொத்தகம் என்னும் சொல், மயிலிறகுஎன்னும் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பொத்தகம் > புத்தகம் (ஒகர உகரத்திரிபு.)
(கொடு என்பது, பேச்சு வழக்கில் “குடு” என்று வழங்குகின்றமை போன்று)
பொத்தகம் > புத்தகம்.
(1-1) “புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள் தெரியார்
உய்த்து அகம் எல்லாம் நிறைப்பினும்.
(நாலடி: 318)
(1-2) “ ஊணொடு கூறை, எழுத்தாணி புத்தகம்”
(ஏலாதி 63:1)
"பொத்து" என்பதன் அடியாகத் தோன்றிய, பொத்து + அகம் = பொத்தகம் என்பது, முகமையான வடபால் மொழிகள் பலவற்றில் முதனிலையமைப்பு குலைவுறாக செப்ப நிலையில், பசுமையாக வழங்கி வருகின்றது!
பொத்தகம் என்னும் சொல்லின் திரிபுகளை, அம் மொழிகள் சிலவற்றில் காண்போம்;
Prakrit: Putha = Book.
Putthaya
= Books
Kashmiri: Puthi =
Book.
Pothe - Book.
Sindhi: Pothu =
large Book
Punjabi: Pottha
= Book.
Kumauni: Pothi =
Book.
Nepali: Pothi=
Book
Assamese: Pothi = Book
Bengali: Potha = Book
Puthi = Book.
Oriya: Potha = Book
.
Maithili: Potha = Book
Bhojpuri: Pothi = Book.
Awadhi: Potha = Book.
Laghmani dialect of Awadhi: Potha. Pothi = Book
Gujarathi:
Pothu= Book
Marathi: Pothi = Book
Sinhalese: Pota = Book
பொத்தகம் என்பதன் சமற்கிருதச் சிதைவு. "Pustaka' என்பதாகும். சமற்கிருத அகராதிகளில், அதன் முதற் பொருள்களாக, முந்தித்தோன்றும் அணிகலனும் (Protruberant Ornament), குமிழும் (Boss) குறிக்கப்பட்டுள்ளன. பின்னர், பொத்தகப் பொருள் குறிக்கப்பட்டுள்ளது. ‘Pustaka’ என்பதற்கு மூலச்சொல்லாகக் காட்டும் “ Pust” என்னும் சொல்லுக்கு எதிரே, “to respect o disrespect” என்று பொருள் குறிப்பிட்டுப், பக்கத்தில் கேள்விக் குறியொன்றை நட்டுவைப்பார்.- அறிஞர் ''மானியர் வில்லியம்ஸ்"! 'Pust' என்பதற்குத் தாதுபாடத்தின் பொருள்கோள், "கட்டு" (to bind) என்பதாகும். அம் மூலமும் பொத்து என்னும் தமிழடியினின்றே திரித்தொலித்துக் கொண்டதாகும்.
மின்னெழுத்தில் வடித்தது,
பெஞ்சமின் பிராங்கிளின். பி
07 ஆடவை 2051
[ ௦௭/०௬/௨०௫௧]
(21-06-2020)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக