ஞாயிறு, 14 ஜூன், 2020

தமிழர் இழந்த நிலம்-9

                                               தமிழர் இழந்த நிலம்-9

(இக்கட்டுரையை எழுதியது: ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்)

இப்படி ஒரு புறத்தில் தமிழர்களிடம் வாக்கு வாங்கி, சட்டமன்றத்திற்கு சென்ற நிறைய பேர், அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள இன நலனை காவு கொடுத்த கதை,,, ஆகக் கொடூரமானது.

இது ஒருபுறம் நடந்தாலும் தென்  எல்லையில், அறிவார்ந்த பெருமக்களின் தலைமையில் ஒரு வீரியம் மிகுந்த போராட்டம் நடந்து கொண்டுதான் இருந்தது. மாமனிதர் மார்சல் நேசமணி மிகத் துணிச்சலாக, அதேநேரத்தில் அறிவார்ந்து இயங்கிய பாங்குதான், திருவிதாங்கூரிலிருந்து விடுபட்டு, இன்றைக்கு தாய் தமிழகத்தோடு இணைந்திருக்கும் தமிழர் நிலங்கள்.

வெறுமனே தான் பிறந்த மாவட்டமான குமரி மாவட்டத்தை மட்டும், திருவிதாங்கூரின் பிடியிலிருந்து விலக்கி, தாய்த்தமிழகத்தோடு சேர்க்க வேண்டுமென்று நினைக்கவில்லை அவர். குமரியிலிருந்து 200 மைல் தொலைவில் இருந்த தேவிகுளம் பீர்மேட்டுக்கும் சேர்த்து குரல் கொடுக்க முன் வந்ததுதான் அவரின் ஆகப்பெரிய பெருந்தன்மை.

இன்றைக்கு வேண்டுமானால் தேவிகுளம் பீர்மேட்டில் வாழக்கூடிய தமிழர்கள் அவரை மறந்திருக்கலாம். ஆனால் அந்த மண்ணில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள், அடிமையாக வாழ்கிறார்கள்,மலையாள அரசு அவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குகிறது என்று உலகத்திற்கு சொன்னதே மார்சல் நேசமணி என்கிற மாமனிதர்தான்.

சம்பந்தமே இல்லாத மகாத்மா காந்தியடிகளுக்கு மூணாறு நகரின் மையப் பகுதியில் முழு உருவச்சிலை வைத்த தமிழ்ச்சமூகம், தனக்காக பெரும் போர் நடத்திய மார்சல் நேசமணியை கவனமாக மறந்துவிட்டது.

அன்றைக்கு மூணாறில் இரண்டே இரண்டு தொழிற்சங்கங்கள் தான்...

1-South Indian plantations workers Union.

2-high range workers Union.

இதில் முதல் சங்கம் தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டது. இரண்டாவது சங்கம் மலையாளிகளை பெரும்பான்மையாகக் கொண்டது.

முதல் சங்கத்தின் தலைமையகம் மூணாறு நகரில் இயங்கிய போது, இரண்டாவது சங்கத்தின் தலைமையகம் மூணாறில் இருந்து 161 கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்த ஆலப்புழையில் இயங்கியது.

மூணாறில் கிட்டத்தட்ட 54 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் தேயிலைத் தோட்டம் வைத்திருக்கும் ரத்தன் டாட்டா,தமிழர்களை கூலிகளாகவும், மலையாளிகளை அறிவாளிகளாகவும் நடத்திய கதை அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

தலைமைப்பணி மற்றும் அலுவலகப் பணி அத்தனையிலும் மலையாளிகளே நியமிக்கப்பட்டிருந்தார்கள்... இன்றும் அதுதான் கதை.

எனவே நிர்வாகத்தில் நடக்கும் எந்த விடயமாக இருந்தாலும் அது மலையாளிகள் நிறைந்த, high range workers Union க்கு எளிதாக சென்று சேர்ந்துவிடும்.

ஆனால் தமிழர்கள் நிறைந்த SIPWU யூனியன் தலைவர்கள், அடுத்த நேர சாயாவிற்கு அல்லாடிக் கொண்டிருப்பார்கள்.

மலையாள யூனியனுக்கு காங்கிரசின் மத்திய தொழிற் சங்கமான INTUC யின் ஆதரவு பலமாகவே இருந்தது.

ஆனால் SIPWU திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸின் ஆதரவு பெற்ற தொழிற்சங்கம். அதனால் கம்பெனியின் ஆதரவு இல்லாததோடு, திருவிதாங்கூர் அரசினுடைய எதிர்ப்பையும் கடுமையாக எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

SIPWU தொழிற்சங்கத்தை நீண்ட காலமாக தொடர்ந்து நடத்திவந்த குப்புசாமி தலைவர், தேவிகுளம் உரிமைப் போரில் தன்னுடைய செவிப்பறையை இழந்தவர். மூணாறு நகரில் திரண்ட சொத்துக்களை தன் கைவசம் வைத்திருந்த இந்த தமிழர் தொழிற்சங்கம், ஒருகட்டத்தில் INTUC யோடு ஐக்கியமாக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.

குப்புசாமியால் வளர்த்தெடுக்கப்பட்ட, நெற்றிமுடி எஸ்டேட்டை சேர்ந்த திரு. ஏ.கே.மணி,பிற்காலத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேவிகுளம் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு தொடர்ந்து மூன்று முறை பணிசெய்தார். அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, எந்த யூனியனை வளர்த்தெடுப்பதற்காக தன் செவிப்பறையை இழந்தாரோ, அந்த யூனியன் அவரது கையைவிட்டு போனது.
(அதை பின்னால் விரிவாக எழுதுகிறேன்)

மொழிவழி பிரிவினைக் கமிட்டி அமைக்கப்பட்டதிலிருந்தே, தேவிகுளம் பீர்மேடு ஒரு பதற்ற நிலைக்கு வந்துவிட்டது. அதற்கு காரணம் கமிட்டியில் உறுப்பினராக இருந்த கே.எம். பணிக்கர்.

பணிக்கரின் பயமெல்லாம் தமிழக அரசை நோக்கியோ, அல்லது தமிழக முதல்வர் காமராஜரை குறித்தோ அல்ல... மாறாக தென் திருவிதாங்கூரில் மிகப்பெரிய போராட்டக் களத்தை அமைத்து, போகிறபோக்கில் பத்துப் பன்னிரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை திருவிதாங்கூர் கொச்சி சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்த மார்சல் நேசமணியைக் கண்டுதான்.

தென் திருவிதாங்கூரில் வலுவாக களம் அமைத்த திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ், மெல்லமெல்ல தேவிகுளம், பீர்மேட்டிலும் பற்றிப்பரவ ஆரம்பித்தது.

தென் திருவிதாங்கூரை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் நேசமணி உள்ளிட்ட தலைவர்கள் கொண்டு வந்து விடுவார்கள் என்று நினைத்து பயந்த பட்டம் தாணுப்பிள்ளை,தேவிகுளம் பீர்மேட்டையாவது தக்கவைக்க வேண்டும் என்று எடுத்த முயற்சிக்கு பின்னால் அரங்கேற்றப்பட்டது பெரிய அரச வன்முறை. பணிக்கர் ஒரு புறத்தில் ராஜதந்திர நடவடிக்கைகளை கவனித்துக்கொள்ள, மறுபுறத்தில் மக்களை அடித்து துன்புறுத்தும் செயலை தொடர ஆரம்பித்தார் பட்டம் தாணுப்பிள்ளை.

தேவிகுளம் பீர்மேட்டில் எங்கு பார்த்தாலும் தமிழ் தோட்டத் தொழிலாளிகளுக்கு அடி உதைதான்.தமிழ்நாட்டோடு தேவிகுளம் பீர்மேடு சேரவேண்டும் என்கிற கனவுகூட காணக்கூடாது, என்று கங்கணம் கட்டி அடிக்க ஆரம்பித்தது திருவிதாங்கூர் காவல்துறை.

குறிப்பாக அன்றைக்கு மூணாறு நகரில் சப்-இன்ஸ்பெக்டராக இருந்த ஒரு வெறி பிடித்த மலையாளிக்கு, தமிழர்களை கண்டாலே ஆகாது.

இந்தத் தகவல் தன் காதுகளுக்கு எட்டியதும், சம்பந்தப்பட்ட அந்த சப் இன்ஸ்பெக்டரை மாற்ற வேண்டுமென்று, மார்ஷல் நேசமணி தலைமையிலான திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ் தலைவர்கள், முதல்வர் பட்டம் தாணுப்பிள்ளையை நேரில் சென்று வலியுறுத்தினார்கள். கதை நடக்கவில்லை.

நாளுக்குநாள் கொடுமை அதிகரித்தது. அடிக்குப் பயந்து தமிழகத்தை நோக்கி ஓட ஆரம்பித்தார்கள் மூணாறு தோட்டத் தொழிலாளர்கள்.

இந்தநிலையில் 1954-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த திருவிதாங்கூர் சட்டமன்ற தேர்தலில், தேவிகுளத்தில் திரு எஸ்.எஸ்.சர்மாவும், பீர்மேட்டில் திரு தங்கையாவும், திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ் சார்பாக வெற்றி பெற்றது, பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அமைதியாக தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்தாலும் இவர்கள் அப்பாவிகள் அல்ல, இவர்களுடைய உணர்வுகள் எல்லாம் தமிழகத்தோடு இணைய வேண்டும் என்பதாகவே இருக்கிறது... என்பதற்கு சாட்சிதான் இந்த வெற்றி என்பதை கவனமாக குறிப்பெடுத்துக் கொண்ட பட்டம் தாணுபிள்ளை, அதற்கடுத்து செய்த வேலைகள் குரூரமானது.தமிழ் விசாரணைக் கைதிகளை, தேவிகுளம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த நிலையை மாற்றி, மூணாறில் இருந்து 87 கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்த மூவாற்றுப்புழைக்கு மாற்றியது.

பேருந்து வசதியற்ற அந்தக்காலத்தில், கால்நடையாகவே அத்தனை தூரத்தையும் கடந்து வழக்கு நடத்தி தங்கள் வாழ்க்கையை தொலைத்திருக்கிறார்கள் அப்பாவித் தமிழர்கள்.

ஒருபுறத்தில் தேவிகுளம் பீர்மேட்டில் தாக்குதல் தீவிரப்படுத்திய பட்டம் தாணுபபிள்ளையின் அரசு, இன்னொரு புறத்தில் கோட்டயம்  சிறையில் இருந்த கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்து, அவர்களை பீர்மேடு பகுதிகளில் குடியேற்றும் வேலைகளை கனகச்சிதமாக செய்து கொண்டிருந்தது. ஐந்து ஏக்கர் நிலமும், குடியிருப்பை உருவாக்குவதற்காக கொஞ்சம் பணமும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டதாக திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ் தலைவரான அப்துல் ரசாக் குறிப்பிடுகிறார்.

(இதற்கான அடி நூல் குறிப்புகள் எல்லாம் புத்தகமாக வெளி வரும்போது கவனமாக பதியப்படும்)

தேவிகுளம் பீர்மேடு பகுதிகளில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை கண்டிப்பதற்காக, 1954 மே மாதம் 30 ஆம் தேதி, திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ் தலைவர்களான திரு பி.இராமசுவாமி பிள்ளை, பி.தாணுலிங்க நாடார், திரு ஏ.அப்துல் ரசாக் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ளும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தை, மூணாறில் நடத்துவதென்று முடிவு செய்தது SIPWU தொழிற்சங்கம்.

கேரள காவல்துறையின் கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் கூட்டம் நடந்தது. எத்தனையோ நெருக்கடிகளை அரசு கொடுத்தும் தமிழர்கள் அந்தக் கூட்டத்தில் பெருந்திரளாக திரண்டார்கள்.

தகவலை கேள்விப்பட்ட டெல்லியில் உள்ள மலையாளிகள், தமிழர்கள் மீதான தாக்குதலை அதிகப்படுத்த சொல்லவே, மீண்டும் பட்டம் தாணுபிள்ளையின் காவல்துறை வெறியாட்டத்தை ஆரம்பித்தது.

இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும் என்று நினைத்த திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ்,1954 ம் ஆண்டு ஜுன் மாதம் 19 ம் தேதி கூடி,,,

ஜுன் 30 ம் தேதியை "தேவிகுளம் தினமாக" அறிவித்தது.

இந்தச் செய்தி தேவிகுளம் பீர்மேட்டை கேரளாவோடு சேர்க்க வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருந்த பணிக்கரின் தலையில் மண்ணை அள்ளிப் போட்டது.

இதைத்தொடர்ந்து 1954 ஜூலை மாதம் நான்காம் தேதி மகத்தான தலைவர் மார்சல் நேசமணி அவர்கள், தேவிகுளம் வருவதாக திட்டம் தீட்டப்பட்டது. மார்ஷல் நேசமணிதேவிகுளம் வந்தால் பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் கூடுவார்கள் என்று அஞ்சிய பட்டம் தாணுப்பிள்ளையின் அரசு,மார்ஷல் நேசமணி தேவிகுளம் வந்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்று கூறி,,,ஜுன் 3 ம் தேதி, தேவிகுளம் பீர்மேடு பகுதிகளில் 144 தடை உத்தரவை பிறப்பித்தது.

144 தடை உத்தரவை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று, கோட்டயம் மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் ஹைரேஞ்ச் கமிஷனர் பி.சி. அலெக்சாண்டர் அவர்களுக்கும் தகவல் அனுப்பியது திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி.

கமிட்டியின் இந்தக் கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் நிராகரித்த நிலையில், திட்டமிட்டபடி ஜூலை நான்காம் தேதி மாலை 3 மணி அளவில்,,,

திரு.மார்சல் நேசமணி,
திரு.சிதம்பரநாத நாடார்,
திரு.அப்துல் ரசாக் ஆகிய மூன்று தலைவர்களும் மூணாறுக்குள் நுழைந்தார்கள்.

சாலையோரங்களில் மக்கள் திரள் குழுமியிருந்த அந்த நேரத்தில், எவ்வித முன்னறிவிப்புமின்றி மூவரையும் கைது செய்தது பட்டம் தாணுபிள்ளை அரசு.

கைது செய்யப்பட்ட தலைவர்களை கோட்டயம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்துவிட்டு, திருவனந்தபுரத்திலுள்ள பூஜப்புரா மத்திய சிறையில் 6 வாரங்கள் அடைத்தது திருவிதாங்கூர் அரசு.

தேவிகுளம் மற்றும் பீர்மேடு சட்டமன்ற உறுப்பினர்களான திரு எஸ் எஸ் சர்மா மற்றும் தங்கையாவும் கைது செய்யப்பட்டார்கள்.

தலைவர்களின் இந்த கைதை கண்டித்து, திருவிதாங்கூர் பகுதிகளில் உள்ள தமிழர் நிலங்கள் எங்கும் போராட்டம் வெடித்தது...

வரலாறு நீளும்...



ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக