ஞாயிறு, 14 ஜூன், 2020

தமிழர் இழந்த நிலம்-15

                                          தமிழர் இழந்த நிலம்-15

(இக்கட்டுரையை எழுதியது: ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்)

இப்படியாக தோழர்களின் துரோகத்தால் தேவிகுளம் பீர்மேடு பகுதிகள் நம் கையை விட்டு போக தயாரானது.

வழக்கம்போல் சென்னையில் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து, தேவிகுளம் பீர்மேட்டை மீட்போம் என்று தோழர்கள் பி. ராமமூர்த்தி மற்றும் ப.ஜீவா ஆகியோர், செங்கொடிகளை கையிலேந்தி சென்னை வீதியெங்கும் பயணித்தார்கள்.

அன்றிலிருந்து இன்றுவரை எனக்கு புரியாத புதிர் ஒன்று இருக்கிறது...

அந்தப் புதிருக்கான முடிச்சை அவிழ்க்கும் பொறுப்பை உங்களிடமே விட்டு விடுகிறேன்...

தேவிகுளம் பீர்மேடு பகுதிகளை மீட்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், சென்னை மாகாணத்தில் நடைபெற்ற,,,அத்தனை ஆர்ப்பாட்டங்களிலும், போராட்டங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், பிரதான கட்சியாக பங்கெடுத்தது...

தோழர்கள் பி ராமமூர்த்தி மற்றும் ப. ஜீவா ஆகியோர், அதில் முன்னணி தளகர்த்தர்களாக களத்தில் நின்று, தேவிகுளம் பீர்மேடு பகுதிகளை மீட்போம் என்று பெருங்குரலெடுத்து முழங்கினார்கள்...

இன்னொரு புறத்தில் காங்கிரஸ் கட்சிக்காரர்களும், ஆரம்பத்தில் தேவிகுளம் பீர்மேடு பகுதிகளை மீட்போம் என்று தான் குரல் கொடுத்து வந்தார்கள்.

இவர்கள் இருவர்கள் அல்லாது,,, அன்றைக்கு தமிழகத்தில் ஓரளவு நிலைகொண்டிருந்த பிரஜா சோஷலிஸ்ட் கட்சியும், தேவிகுளம் பீர்மேடு பகுதிகளை மீட்போம் என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்தது...

ஒரே கட்சி,
ஒரே தத்துவம்,
ஒரே கொடி,
ஒரே அகில இந்திய தலைமை என பல "ஒரே" ஒற்றுமைகளை கொண்ட இவர்களெல்லாம், எங்கே விலகி நின்றார்கள் என்று ஆராய்ந்தபோது, மொழியும்,நிலமும்தான் அதனுடைய பிரதானம் என்பதை நான் தெளிவாகவே கண்டுகொண்டேன்.

தந்தை பெரியார் தனக்கு எது பிடிக்கிறதோ அதில் பிடிவாதமாக இருப்பார்.சமாதானத்திற்காக சர்வதேச தலைவர்களே வந்தாலும், அவர்களை மூக்குடைத்து அனுப்புவதில் அவர் கை தேர்ந்த அனுபவசாலி.

மொழிவழி பிரிவினை குழுவின் உடைய உறுப்பினர் கே. எம். பணிக்கர், தந்தை பெரியாரை வந்து சந்திப்பதற்கு முன்பே, மார்ஷல் நேசமணியும்,ம.பொ.சி யும் சந்தித்து... நிலைமையை விளக்கி இருந்தால், நிலைமை மாறி இருக்குமோ என்னவோ...!

இதில் ஒரு கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால்...

மறந்தும்கூட கேரளாவில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும்,தேவிகுளம் பீர்மேடு உள்ளிட்ட பகுதிகள், தமிழகத்திற்கு செல்ல வேண்டுமென்று... உடலளவிலும், மனதளவிலும் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

ஆனால் நம்முடைய துரதிஷ்டம்...

தேவிகுளம் பீர்மேடு பகுதிகள் கேரளாவுக்கு சென்றால் தப்பில்லை என்று வாதாடுவதற்கு ஆட்கள் இருந்ததுதான்.

சென்னை மாகாண தலைமை அமைச்சரே, தேவிகுளம் பீர்மேடு பகுதிகள் கேரளாவிற்கு போனாலென்ன என்று கேட்குமளவிற்கு நிலத்தின் மீதான, இனத்தின் மீதான புரிதலிருந்தது அவருக்கு...

தமிழகம் முழுவதும் மக்கள் செல்வாக்குப் பெற்ற தந்தை பெரியார், தேவிகுளம் பீர்மேடு பிரச்சினையில் சற்று விலகியே நின்றார். அவருடைய நடவடிக்கை எல்லாம் விடுதலையில் எழுதுவது மட்டுமாகவே இருந்தது.

அதற்கு காரணம் சிலம்புச் செல்வர் ம. பொ.சி.தமிழரசுக் கழகம் என்கிற அவரது கட்சி பெயரை பெரியாரை சற்று எட்டி நிற்க வைத்தது.

ம.பொ.சி முன்னெடுக்கும் ஒரு கூட்டத்தில், நாம் கலந்து கொள்ள வேண்டுமா என்கிற ஏற்றத்தாழ்வு பிரச்சினைதான்,விஸ்வரூபமெடுத்து பணிக்கரை சந்திக்குமளவிற்கு பெரியாரை கொண்டு சென்றது.

கூடுதலாக... அன்றைக்கு எதிரும் புதிருமாக இருந்த திமுகவிற்கும், தி.க விற்குமிடையிலான கருத்து மோதல்கள்...

வரம்பு மீறல்களோடு, ஆபாச அர்ச்சனைகளும் தி.க விற்கும்,, தி.மு.க.விற்கும் இடையில் நடந்த கால கட்டங்களில்தான் இந்த மொழிவழிப் பிரிவினைச்சிக்கல் வருகிறது.

ம.பொ.சி யோடு இந்த விடயத்தில் மிகுந்த அணுக்கம் காட்டி வந்த அறிஞர் அண்ணா மீதான, தந்தை பெரியாரின் வெறுப்பு, தேவிகுளம் பீர்மேடு வரை கொண்டு சென்றது என்பதுதான் உண்மை.

ஆனால் கேரளாவில் அப்படியில்லை...

மாத்ருபூமி பத்திரிக்கை அலுவலகத்தில் ஒருநாள் கூட்டம் நடக்கிறது என்றால், மறுநாள் கேரள காமுதி அலுவலகத்தில் நடக்கும்... ஒரு சில நாள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான தேசாபிமானி அலுவலகத்திலும் கூட்டம் நடந்தது... அனைத்துக் கட்சித் தலைவர்களும் அங்கு வந்து கலந்து கொண்டார்கள்...

அது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த கோளப்பிள்ளையாக இருக்கட்டும்...

கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த தோழர் ஈ எம் எஸ் நம்பூதிரிபாட்டாக இருக்கட்டும்...

அரசியலில் எதிரெதிர் நிலைப்பாடு கொண்டிருந்தாலும், நிலம், மொழி என்று வந்தபோது ஓரிடத்தில் சங்கமமானார்கள்.

அனைவரிடத்திலும் ஒரு அந்நியோன்யம் இருந்தது...

ஆனால் தமிழகத்தில் அப்படியில்லை...

மொழி குறித்தோ, நிலம் குறித்தோ பெரிய அக்கறை கொண்டிராதவர்களே, அன்றைக்கு மக்கள் செல்வாக்குப் பெற்ற தலைவர்களாக இருந்தார்கள் என்பதுதான் உண்மை.

திராவிடநாடு கேட்டு... கேட்டு சலித்துப்போன, பெரியாருக்கும்,அவரது பெருந்தொண்டர்களுக்கும், தேவிகுளம் பீர்மேடு உள்ளிட்ட பகுதிகள் பெரிய விடயமாக அன்றிலிருந்து இன்றுவரை தெரியவில்லை.

அதற்கு காரணம் திராவிட பற்றாககூட இருக்கலாம். அந்தப் பற்றை நாம் குறை கூறவில்லை. ஆனால் அது தான் வாழும் நிலத்துக்கும், மொழிக்கும் "பற்று" இல்லாமல் இருக்கும்போதுதான் பிரச்சனை ஆகிறது.

22-08-1954 ம் ஆண்டு கேரள காமுதி பத்திரிகை அலுவலகத்தில் நடந்த கூட்டமொன்றில்,கலந்துகொண்டு உரையாற்றிய மொழிவழி பிரிவினை குழுவின் உறுப்பினரான திரு கே. எம். பணிக்கர்,,,

""தேவிகுளம் பீர்மேடு பிரச்சனையை என்னிடம் விட்டுவிடுங்கள்... தென்திருவிதாங்கூரை நோக்கி உங்களுடைய கவனம் செல்லட்டும், ஏனென்றால் அங்குதான் நம்முடைய பாரம்பரியத்தின் தலைநகரான பத்மநாபபுரம் இருக்கிறது... எனவே இன்றிலிருந்து தேவிகுளம் பீர்மேடு பிரச்சனையை என்னிடம் விட்டுவிடுங்கள், அதை நான் பார்த்துக் கொள்கிறேன்."""

இந்த துணிச்சலும் தைரியமும் தமிழகத்தில் எவருக்கும் வரவில்லை என்பதுதான் என்னுடைய ஆதங்கம்.

மத்திய அரசு நியமித்த ஒரு குழுவினுடைய உறுப்பினர் என்கிற அடிப்படையில், முதலில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பணிக்கர் கலந்து கொண்டதே தவறு,அதைவிட தேவிகுளம் பீர்மேடு பிரச்சினையை என்னிடம் விட்டுவிடுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னது அதனினும் தவறு.

முகமது அலி ஜின்னா விடம்
பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுத்து, திராவிட நாட்டுக்கு ஆதரவு கேட்ட தந்தை பெரியார்... எதற்காக ஒரு அரசு கமிட்டி உறுப்பினரான பணிக்கர், இத்தகைய அத்துமீறலில் ஈடுபடுகிறார் என்பது குறித்து விடுதலையில் எழுதவில்லை.

திராவிட நாட்டுக்காக மும்பைக்கு சென்று முகமது அலி ஜின்னாவை சந்தித்த தந்தை பெரியார்,தேவிகுளம் பீர்மேடு பிரச்சினைக்காக எந்த டெல்லிக்கு சென்று எத்தனை பேரை சந்தித்தார்...?

தேவிகுளம் தாலுகாவிலுள்ள மறையூருக்கு, ஒரு முறைக்கு பலமுறை வந்த பணிக்கருக்கு,மறையூர் சுற்றுவட்டாரம் பழனி மலை குன்றிலிருக்கிறது என்கிற செய்தி அங்குள்ள வருவாய் துறை அதிகாரிகளால் சொல்லப்பட்டும், அதை எந்த அடிப்படையில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் வருகிறது என்று மொழிவழி பிரிவினை குழுவிற்கு தகவல் கொடுத்தார் இந்த அயோக்கிய பணிக்கர்.

மொழிவழி பிரிவினை குழுவின் சட்டப்படி மேற்குத் தொடர்ச்சி மலைதான் தமிழக-கேரள எல்கைக்கான மையம்..

அந்த அடிப்படை விதிகளை உடைத்தெறிந்து பழனி மலைக் குன்றை கைப்பற்ற முயன்ற பணிக்கருக்கு எதிராக, தந்தை பெரியாரோ, தோழர்கள் ராமமூர்த்தி மற்றும் ஜீவா போன்றவர்களோ, அன்றைக்கு தமிழக முதல்வராக இருந்த கருமவீரர் காமராஜரோ,
மற்றவர்களுமோ,,,
ஏன் பேசவில்லை என்கிற கேள்வியை உங்களிடமே விட்டுவிடுகிறேன்...

இந்தப் பேசாமடந்தைகள்தான் இந்த நிலத்தை ஊனமாக்கியது என்று குற்றஞ்சாட்டுகிறேன்...

கியூபாவிலே சர்வாதிகார பாடிஸ்டா நடத்திய அட்டூழியங்களுக்கு எதிராக பொங்கிய விடுதலை...

ரஷ்யாவின் சைபீரிய பாலைவனங்களிலே கம்யூனிசக் எதிர்ப்பாளர்களை கொன்று குவித்த ஸ்டாலினுக்கு ஆதரவாக எழுதிய விடுதலை...

கூப்பிடு தூரத்தில் சொந்த நிலங்களை அபகரித்ததோடு, சொந்த மக்களை கொன்று குவித்தும், அடித்து உதைத்தும் சித்திரவதைக்கு உள்ளாக்கிய மலையாளிகளுக்கு எதிராக எழுதிய பக்கங்கள் எத்தனை...?

வரலாறு நீளும்...

- ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக