ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

பாரம்

 

"தமிழ் - சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின்  

ஆராய்ச்சி நிறுவனத்தில் அருளி ஆற்றிய உரைகள் (தொகுதி-3) "

 நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

 

                                  பாரம்

 

 சொல் மூலம்:

            1. புல்> புல > புர> பர> பர+அம்> பரம் > பாரம்

            2. பா> பார்> பார் + அம்> பாரம்

 

சொற்பொருள்கள் :

            1. பொறுக்கை, கனம், சுமை, பொறுப்பு, கடமை, எடை, காய்ச்சல்

            முதலியவற்றால் உண்டாகும்  தலைக்கனம், காவுதடி.

             2. பருமை, குடி, பெருங்குடும்பம், பருத்தி, உலகம், ஓர் ஊர்ப்பெயர்

 

            முதற்கண் சுட்டிய பொறுக்கை, கனம், சுமை, பொறுப்பு, கடமை, எடை, காய்ச்சல் முதலிவற்றால் உண்டாகும் தலைக்கனம் ஆகிய சொற்பொருள்களுடன் கழக இலக்கியப் பரப்பிடத்தில் நிரம்பிய ஆட்சி பெறாது, தொன்றுதொட்டே சிறக்கவும் நிறக்கவும் வாயுரைகளில் மட்டும் வழாது தொடரும் அரிய செந்தமிழ்ச்சொல், இந்தப் “பாரம்” என்பதாகும்.

 

            இம்மண்ணில், இம்மண்ணின் மைந்தர்களால் தோற்றப் பெற்று, முறையுற மலர்ந்து முற்றிய சொல்லை, சமற்கிருதவாரியர் எடுத்தாண்டு பயன்படுத்திய போது, வேறாகக் கருதி மயங்கி, தொடர்ந்து நெகிழ்த்து விட்டுவரும் வரலாறு, கழக இலக்கியக் கண்ணாடியில் புலனாகின்றது.

 

            "புல்" மேலெழுதற் கருத்து மூலம்.

 

            (இம் மூலத்தின், - உயர்ச்சி பெருமை போலும் கருத்து நிலைகளையும், அதன் வளர்ச்சியாக்கங்களையும் புதல்வன், புரை ஆகிய உரைக்கட்டுகளின் உள்ளே விளக்கியிருப்ப வற்றைக் கண்ணுறுக!)

 

புல> புர= மேலெழு, உயர்

புர > பர= மேலெழு, உயர், மேலிரு (உகர அகரத் திரிபு)

 பர> பரி - மேல் தூக்கு , சும, தாங்கு, பொறு.

 

 

            "உம்" என்னும் உயர்ச்சிக்கருத்து வேர்ச்சொல் வழி விளைந்த

“சும்" என்னும் திரிபு வேர், “சும", "சுமை" எடை தூக்குதல், தாங்குதல் பொருளூட்டச் சொற்களை வளர்த்துவிட்டது போன்று, இவ்விடத்தும், உயர்ச்சிக் கருத்து ஊட்ட மூலத்தின் படி நிலைகளில் பொறுத்தல், தாங்குதல், சுமத்தல் கருத்துகள் தழைத்து வளர்ந்துள்ளன.

 

            “எடு” என்னும் மேல் தூக்குதல் கருத்தின் வழி, எடு> எடு+ஐ> எடை எனக் கனப் பொருண்மை ஏற்பட்டுள்ளமையையும் இங்குக் கருதிப் பார்க்க வேண்டும்.

            (ஒ.நோ : ''கை கமந்து அலரும் பூசல்"

                                                                                    (பதிற். பத்: 31:3)

 (உரை: கை சுமந்து = கைகளைத் தலைமேலேந்தி...)

பரி> பரி+(த்) + தல் > பரித்தல் = தாங்குதல், பொறுத்தல்

 "பரித்தல், பொறுத்தல், தரித்தல், சுமத்தல்"

                                                                                    (பிங்கலம்: 1978)

பரிக்கும் = பொறுக்கும், தாங்கும்

            "மண்டமர் பரிக்கும் மதனுடை நோன்றாள்

            விழுமியோன் பெறுகுவன் ஆயின்"         (புறம்: 75:6-7)

 

            பழையவுரை:    "அடுத்துப் பொரும் போரைப் ''பொறுக்கும் " மனவெழுச்சியுடைத்தாகிய வலிய முயற்சியையுடைய சீரியோன் பெறுவானாயின்-''

 

            “மண்டமர் பரிக்கும்" என்னும் இம்மேற்சுட்டிய புறவரி, “வருதார் தாங்கல்” (2:5:15:6) எனவரும் தொல்காப்பியப் பொருளியலின் புறத்திணை நூற்பாச் சொற்றொடரொடு ஒப்பு நோக்கத் தக்கதாகும்.

 

                        (பரித்தலும் தாங்குதலும் ஒன்றே!)

 

            "வருதார் தாங்குதலாவது, தன் மேல் வரும் கொடிப்படையினைத் தானே தாங்குதல்"

 

            ஒ.நோ: “தலைவந்த போர் தாங்கும் தன்மை அறிந்து"  (குறள் : 767)

 பரித்தல் = தாங்குதல்

 

            “இடனில நெரிதரு நெடுங்கதிர்ப் பல்சூட்டுப்

             பனிபடு சாய்ப்புறம் பரிப்ப......'' (அகம்: 236:6)

 

            உரை: களத்தின்கண் இடமில்லாதபடி நெருங்கும் நெடிய கதிர்களால் இயன்ற பல கட்டுகளினது பனியால் நனைந்த பக்கங்கள் தாங்கும்படி”...

 

            முந்தைக் காலத்தில் குடத்திலிட்ட ஓலையைத் தெரிவு செய்வதற்கென்று மேலெடுத் தலைக், 'குடவோலை பரித்தல்" என்ற சொற்றொடரால் கல்வெட்டுகள் குறிக்கின்றன!

 

பர> பர+அம்> பரம் = தாங்குகை, பொறுக்கை, பொறை

 

            ''பரம்" என்னும் இந்த அரிய பழந்தமிழ்ச்சொல்லைக் கழக இலக்கியம் தாங்கியுள்ள போங்கு, மிக மிக ஆழமாகக் கவனிக்கத் தக்கதொன்றாம்.

 

            “...................................................................................... மாறி

            அன்பிலிர் அகறிர் ஆயின் என் “பரம்"

            ஆகுவது அன்று, இவள் அவலம்"                  (நற்: 37:6-8)

            (உரை : மாறுபட்டு அன்பில்லாதீராய் நீயிர் இவளைப் பிரிந்து செல்லுவிராயின், இவள் படுகின்ற அவலம் என்னாலே “தாங்கப்படுவது ஒன்று" அன்று, காண்மின்.......!)

 

என் பரம் அன்று = யான் சுமக்கும் அளவுடைய பாரம் அன்று; பெரிதாம் என்றவாறு.

பரம் = சுமை.

            " நிரைபரப் பொறைய நரைப்புறக் கழுதை"

                                                                                                (அகம்: 207:5)

            (நிரை பரம் = அடுக்கிய சுமை .)

            (உரை: அடுக்கிய சுமைப் பொதிகளைத் தாங்கிய வெள்ளிய முதுகினை உடைய கழுதை…...)

 

 பரம் = சுமை, எடை.

            ''........................................................ கூம்பொடு

மீப்பாய் களையாது மிசைப்பரம் தோண்டாது

புகாஅர்ப் புகுந்த பெருங்கலம்"                   (புறம்: 30:11-13)

 

(உரை: கூம்பொடு மேற்பூரிக்கப்பட்ட பாயை மாற்றாமல், அதன் மேற்பாரத்தையும் பறியாமல், ஆற்று முகத்துப் புகுந்த பெரிய மரக்கலத்தை …………...)

 

            கடலினும் ஆற்றுமுகம் ஆழம் குறைவுடையதாகலின், சரக்கேற்றி அவ்விடத்தில் வரும் மரக்கலம் செவ்வனே நிலை நிற்றற்குப் பாய் களைதலும், பாரம் குறைத்தலும் வேண்டும் என்ற குறிப்பு, இதில் புலப்படுகின்றது.

 

            இவ்வண்ணமாக, அகநானூற்றிலும், புறநானூற்றிலும், நற்றிணையிலும் பயிலப்பெற்றுள்ள “பரம்" என்னும் பாரச் சொல்லின் மூலச்சொல்லுக்குப் - பொறுத்தல், தாங்குதல், சுமை, எடை என்றவாறான நேரிடையான பொருள்களே நிற்கின்றமை மிகத் தெளிவானதாகும்.

            பரஞ்சாட்டுதல் = பொறுப்புக் காட்டுதல் (to saddle                                                                                                 with responsibility)

            "மாற்று மருந்து முக்கண் மருந்தென்று பரஞ்சாட்டி"

                                                                        (குற்றாலக் குறவஞ்சி:12)

பரம் > பாரம்:

பாரம் = சுமை, எடை

 (1-1) "மிடல் புக்கு அடங்காத வெம்முலையோ பாரம்"

                                                            (சிலம்பு: கானல்வரி: 7:17:3)

 (1-2) அகலிடப் பாரம் அகல நீக்கி"                (சிலம்பு: வரந்தரு: 180)

            (உரை : அகன்ற இடத்தினையுடைய இந்நிலந்தாங்கும் சுமை தன்னை விட்டொழிய விலக்கி......)

பரம் > பாரம்:

 

            பரம் என்னும் முன்னைச் சொல், பாரம் என்னப் பின்னைப் பயிலப் பெற்றமையில், “உயிர் நீட்சி" என்னும் பொதுத் திரிபு நிலை மட்டுமே உள்ளது என்பதைக் கருதுதல் வேண்டும்.

 

            இவ்வகை உயிர் நீட்சி தமிழ்மைக்குரியதே!

 

ஒ.நோ :

             * பண்டம் = பொருள்.

                                    “புறநிறை பண்ட த்து " (அகம்: 343:13)

              பண்டம் > பாண்டம்.

            *  வணிகன்> வாணிகன்.

            "வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணி"

                                                                                                (குறள் : 120:1)

            * நகர் + இகம் > நகரிகம் > நாகரிகம்

             * தக்கு = தாழ்வு, (தாழ்ந்தவோசை)

             தக்கு > தாக்கு = தாழ்வு, பள்ளம்.

                                                                        ''பள்ளத் தாக்கு”

·         குறுத்தல் = வெட்டுதல். குறு> கூறு.

நறு > நாறு                   நுறு> நூறு

படு > பாடு                   அடு > ஆடு

விடு > வீடு                   கொடு > கோடு

 

            இம் மேற்கண்டவாறு, குற்றுயிர் நெட்டுயிராகத் திரிந்து நீடிய சொல்லாக்கப் பெருக்க வரலாற்றுப் பரப்பைப் பார்க்கையில்,

பரம்> பாரம் என இயல்பொழுங்காய்ப் பயிலப் பெற்றுள்ள உண்மை , தெளியத் தெரிகின்றது.

 

            “பரம்" என்பதைப் 'பாரம்" என்றவாறு பலுக்கியமைக்கு, அச்சொல்லுக்குரிய எடைப் பொருளின் அழுத்தமும் ஒரு காரணமாயிருக்கக் கூடும்; பரம் என்பது தொடக்கத்தில் உயர்ச்சிக் கருத்தைச் செறித்திருந்தமையை மயக்கொழிக்கவும், இம் மேற்கண்ட உயிர் நீட்டப் பலுக்க நேர்வுக்குக் காரணமாகவும் இருக்கலாம். எது எவ்வாறாயினும் மூலமும், அதன் வளர்ச்சிப் போங்கும் தமிழ்மொழியில் தழைப்பெய்திக் கிடக்கின்றன. அது,பொதுமக்கள் வாயிடைத் தொடர்ந்த நிலைப்பாட்டுப் பேறுடையதும் ஆகும்!

 

பாரம் = பொறுக்கை (சூடாமணி நிகண்டு)

பாரம் - கனம் (சூடாமணி நிகண்டு)

 பாரம் = சுமை

"பார் ஏறு பெரும்பாரம் தீர"                 (திவ். பெரியதி. 2:10:8)

பாரம் = காய்ச்சல் முதலியவற்றால் உண்டாகும் தலைக்கனம்.

            பாரித்தல் = நோயினாற் கனமாதல்.

            ஒ. நோ: " தலை பாரித்துக் கொண்டிருக்கிறது”

 

            குற்றம் சுமத்து தலைக் "குற்றம் பாரித்தல்" என்றவாறு சுட்டும், நாட்டுப்புற வழக்கும் உண்டு.

 

            சுமைப்பொருள், - அதாவது- தாங்குதல் பொருள், “பொறுப்பு" என்றவாறான பொருளையும், கடமை என்றவாறான பொருளையும் கிளைகளாய்க் கிளைக்கவிட்டது.

 

            பாரம் = பொறுப்பு.

            பாரம் = கடமை (யாழ். அக)

 

            சுமையைத் தாங்கிச் செல்லுதற்கு ஏந்துக் கருவியாய் மேற்கிடையாகப் பொறுத்துக் கிடந்த காவு தடியும் “பாரம்” என்னும் சொல்லால் சுட்டப்பெற்றது.

 

            பாரம் = காவு தடி

 

            “பாரம்” என்னும் தூய தமிழ்ச்சொல், சமற்கிருதத்தில் “Bhāra" எனத் திரிபெய்தியுள்ளது ''Bhara" என்னும் சொல்லுக்கு மூலமாகச், சமற்கிருதவாணர் ''Bhri" என்னுமோர் நலுக்கக் குறுக்கச் சொல்லைக் காட்டி மருட்டுவர். "பொறை" என்னும் பொறுத்தல் கருத்துச் சொல்லினின்று மேலையாரியம் கொண்ட திரிபு வடிவங்களில் ஒன்றனைப் பற்றிக் , குறுக்கமுற நலித்தொலித்தவாறு ஆரியர் இங்குக் கொணர்ந்த 'Bhri" என்னும் சொல்லையே மூலமென வலித்துரைப்பது, அன்னோரின் வரலாற்றறிவு, மொழியியலறிவு மழுக்கப் போங்கையே காட்டுவதாயுள்ளது.

 

            “பரம்" என்னும் சுமைக் கருத்துக் கொண்ட சொல்லையே, இந்தியவாரிய மொழிகளில் சில, அடிமாற்றாது முடிசிதைத்து, வழக்கு மேற்கொள்கின்றமை கருதுதற்கு உரிய தாகும்.

 

Gāndhari or North-west prakrit:     Bhara = Burden, load.

Language of Kharosthi:        Bhara= Burden. Bhara = load.

 (European) Gypsy:   Pharo = heavy.

Palesi dialect of shina: B       ar = load.

Khowar (Dard):          Bar = load, burden.

Shina (Dard):             Bar = load, bundle of wood.

Sinhalese:       Bara= load, burden. Bara = load, weight.

Maldivian dialect of Sinhalese:        Baru = burden, weight.

 

            பாரம் என்னும் செந்தமிழ்ச் சொல், திரிபெய்தி வழங்கும், பிற வடபால் மொழிகளாவன:

 

Prakrit:            Bhāra = Burden.

Pali:     Bhara, Bharaka = Burden, weight.

Ashkun:          Bar = load.

 Pashai:           Bhar = load.

 Sumasti: (Dardic):    Bār

Wotapuri language (Dardic):           Par = heavy

Rumbur dialect of Kalasha: Phar=load.

Urtsun dialect of Kalasha:    Phar=load.

Phalura (Dard):          Bharu= Burden.

Guresi dialect of shina:         Bar = burden.

Kashmiri:        Bar, Boru= load.

                        Bara= heavy.

Lahnda:          Bhār = load, burden.

                        Bhara = heavy.

West Pahari: Bhāro = load.

Bhalesi dialect of West Pahari:        Bhār= burden.

Kumauni:                                            Bhāro = load.

Nepāli:                                                Bhār - load, weight.

                                                            Bhāri = bundle.

Assamese:                                          Bhār - load carried on pole over shoulder,

                                                            Weight, responsibility.

 Bengail:                     Bhār = load.

Oriya:                          Bhāra = load.

Maithili:                      Bhār

Old Awadhi:               Bhāra

Hindi:                          Bhār

Gujarati:                     Bhār

Marathi:                      Bhār, Bhāra.

 

            கணவனால் தாங்கவும் காக்கவும் பெறுகின்றவள் என்னும் பொருளடிப்படையில், ''பாரம்” என்னும் செந்தமிழ்ச் சொல்லின் திரிபான

Bhāra என்பதனின்ற, -  Bhārya என்றவாறு மற்றமொரு வடிவமானது, மனைவியைக் குறிக்கச் சமற்கிருதத்தில் யாக்கப்பெற்றது.

            > Bhārya =     to be borne or supported or

                                    cherished or nourished or maintained. One supported by or                                                     dependent on another.

            > Bhāryaka = a wife.

          > Bhāryā = a wife.

            Bhāryā - jita = Ruled by one's wife.

            Bhāryātva = the condition of a wife.

             Bhāryā - pati = Man and wife.

 

            பார்யா என்ற திரிபுச்சொல்லுடன், தமிழப் பேதையர் “ஆள்” என்னும் ஒரு பெண்பால் ஈற்றை வாலாகப் பிணித்து, (ஆள்: ஒ.நோ: அள் > ஆள் (நல்லள்> நல்லாள்) (இல்லள்> இல்லாள் = இல்லவள்) பார்யா+ஆள்> பார்யாள் (பாரியாள்) என்றவாறு ஓர் இருபிறப்பிச் சொல்லாக வழங்கவும் தலைப்பட்டனர்.

 

            பரம்   >(Greek) Barus = heavy, weight.

            கிரேக்கச் சொல்வழியாக ஆங்கிலமொழி பெற்ற ஆக்கச்

சொற்களாவன:

            பரம்> (GK) Barus>

            (English) Baritone (Barytone) = Male voice between tenor and base,

                    (Barus-)                                      single with voice.

                          Barometer = lnstrument measuring atmospheric pressure used for

                                                Fore-casting weather and ascertaining heigh

                                                above sea-level.

                        Barograph =  Self-recording baro-Meter.

                        Barysphère = Dence core of the earth within the lithosphere.

                        Barytes = A heavy earth

            * Isobar = Curve or formula for physical system at consisting pressure one or           more isotopes of different elements with same atomic weight.

            [(Gk) Baros = weight.

             (Gk) Isobarës= equal weight.

                        (இசை = இணை. இசைவு = இணைவு, இணக்கம்)

                        இசை> (Greek) Iso = equal

                        இசை +பரம்> (Greek) Isobaros]

 

 

 

பாரம்:

பா = பரப்பு

            ஒலி நீட்டி அராகமிட்டிசைக்கும் ஓசை, முதற்கண் “பா” என்னப் பெற்றது. கழக இலக்கியப் பாக்களின் பெரும் பரப்பில், ஒவ்வொரு பாவின் ஈற்றசையும் ஏகாரத்தாலும் ஓகாரத்தாலும் நீட்டப்பெற்று நிற்கின்ற காட்சியில், மொழித் தொடக்க மாந்தனின் பாமுறைப் படிவு படர்ந்திருக்கின்றது. ' ஏ யென்றும் 'ஓ' வென்றும் பரக்க நீட்டியிசைத்தமையே அப்பழங்காலத்தே பாவாகக் கருதப் பெற்றது. இசையின் பரந்த நீட்சியில் தான், கருச் சிறப்பை விளக்கும் உணர்ச்சி படர்ந்து கிடக்கின்றது.

            பா என்பதன் முதற்கருத்து, “பரவல்” என்பதே.

பா:     பாவும் இசையொலி, பாவும் இசையொலி செழிக்க யாக்கப்பெறும் அல்லது இசைக்கப் பெறும் கருத்துகளடங்கிய பாட்டு.

            “மரபே தூக்கே தொடைவகை எனாஅ

             நோக்கே பாவே அளவியல் எனாஅ"

                                                            (தொல் : செய் : 1:3-4)

பா= பாட்டு.

            “அத்தொடை பாவி நடத்தலின் பாவே”

                                                                 (இலக்.வி.711)

பா> பா+டு > பாடு = இசையுறக் கூறு.

பாடு > பாட்டு = இசைமை பொருந்திய பா.

             “பாட்டு, உரை, நூலே வாய் மொழி பிசியே"

                                                            (தொல்.செய் : 1:75:1)

 பாடு+அல் > பாடல் = பாட்டு.

பா=பரப்புறு, விரி, விரிவெய்து, பரவு.

பா = பரப்பு

(1-1) "பருவ வானத்துப் பாமழை கடுப்ப" (பெரும்பா:190)

                                                (பாமழை = பரந்த முகில்)

 (1-2) "பாஅடி யானை"                                                   (புறம்:233:2)

            உரை: பரந்த அடியையுடைய யானை.

பா = நெசவு நூல் பாவு

            நெயவு நூல்களை நீட்டிப் பரம்ப அவற்றை விரித்துத் திருத்துதலின், அந்நூற் பரப்பு, "பா" என்னும் சொல்லால் சுட்டப் பெற்றது.

             (1-1) "துகில் ஆய் செய்கை பாவிரிந் தன்ன"

                                                                                    (அகம்:293:4)

            (உரை: ஆடை நெய்தலை நுணுக்கமாகச் செய்யும் செயலுக்குரிய       பாவானது விரிந்தாற்போல……..)

            (1-2) ''பாவிடையாடு குழல்" (திருவாச: 24:8)

            பா> பாய் = பரவு, பெருகு, பெருக்கெடுத்துப் பரவியோடு.

 

            தா, வா, மா ("மா" என்னும் மூலவொலி, பரப்புக் கருத்து அடிப்படையில் "மா" என்றவாறாகவும், விலங்குகளைக், குறிப்பாக மாட்டைக் குறித்தற்கு ஒப்பொலி யடிப்படையாக "மா'' என்றவாறாகவும் தனித் தனியே தோன்றின. கருமைக் கருத்தைக் குறிக்கும் ''மா" என்னும் சொல், மய் > மாய்>மா என்றவாறு விளர்ந்து தோன்றி நின்றதாகும்) என்றவாறுள்ள தனி மூல வேர்களைப் போன்றே, 'பா' என்பதுவும், ஒரு தனி மூலமாகும். அது, பரப்புக் கருத்தை கருவடியாகக் கொண்டது.

பா> பார்

             ஒ.நோ: தா > தார்.   வா > வார். பார் = பரப்பு, விரி.

                        மா > மார்.

பா> பார் = கண்களை அகலவிரித்தல் செய், காண்

                        [ஒ.நோ: விய் = விரிவடை

                        விய் + அல் வியல் = அகலம்

                        விய், வியி> விழி = இமைகள் விரிய விழித்து                                                                                              நோக்கும் கண்.

                        ஒ.நோ :        பய் >பயி,>பழி.

                                    குய் (துளை)> குயி > குழி

                                    ஒய் ஒயி> ஒழி]

பார்+(ப்) +பு >பார்ப்பு .

பார்ப்பு+ஆர் >பார்ப்பார் = பார்ப்பவர்.

பார் + (த்)+தல் பார்த்த ல் = விழித்தல்.

 பார் + (ப்)+ பு> பார்ப்பு = பறப்பவற்றின் இளமை

                                                                                    (தொல்.பொ: 559)

                        தவழ்பவற்றின் இளமை (தொல். பொ.)

                        விலங்கின் குட்டி (பிங்கலம்)

            (தாய்ப்பறவை கொணர்ந்த இரைக்கென அங்காந்து வாயகற்றி உணவு வேட்டு ஆர்கின்றமை காரணமாக, இளம் பறவை "பார்ப்பு" என்னப் பெற்றிருக்கலாம்)

            (பார் நடை வெருகு = இரையைப் பார்த்துநடத்தலையுடைய                                                                              காட்டுப்பூனை.)

            பா>பார் (Sanskrit) Sphāra = extensive, wide, large

            பா> பார் = பரப்பு (சூடா), பருமை (சீவக: 224)

                        பரந்த நிலவுலகம் "பார் தோன்ற நின்ற பகை''

                                                                                           (சீவக: 1931)

            வியன்றலை (வியல் தலை), மலர் தலை, அகன்றலை

 (அகல் + தலை), நனந்தலை (அகலிதான நிலம்), என்றவாறு உலகத்தைச் சுட்ட வழங்கிய இலக்கிய ஆட்சிகளினூடே, இந்தப் 'பார்'' என்னும் சொற்பொருள் காரணஅடிப்படை பரக்கத் துலங்குவதைக் காணலாம்.

 

பார் +அம்> பாரம் = நிலம் (பிங்கலம்)

            பரப்புக் கருத்து வலிமைக் கருத்தையும் தோற்றுவிக்கும். பரிய ஒன்று வன்மையுடையதாதலின்.

            ஒ.நோ: ''பரியது கூர்ங்கோட்டது ஆயினும்"

                                                                                           (குறள்:599)

பார் = பருத்த வன்மையுடை பாறை, வலிய நிலம்.

 

(1-1) "கரவென்னும் பார் தாக்கப் பக்கு விடும்"

                                                                                     (குறள்: 1068)

(1-2) ''பார்முதிர் பனிக்கடல்"                          (திருமுரு: 45)

பார் +இ> பாரி = பெரியோன், வலியோன்,

                                    (கடையெழு வள்ளல்களில் ஒருவன்)

 பாரி = பரப்பு, பரக்கச் செய், விரித்தல் செய்.

“பயனில பாரித்து உரைக்கும் உரை"                    (குறள்:195)

பார் + அம்> பாரம் - பருமை. "அம்" (Augmentative suffix)

பாரம் = பருத்தி, பருத்திப் பூ, பருத்திச்செடி.

 

            பருந்து விளர்ந்து வெடித்துப் பரவுவதாகிய தன்மையாலேயே

பரு> பரு+தி> பருத்தி என்றவாறு சொல் வளர்ந்து நின்ற போங்கும், கருத்தொருமையும் இங்குக் கருதத் தக்கதாகும்.

(1-1) "பாரம் பீரம் பைங் குருக்கத்தி"          (குறிஞ்சிப்: 93)

                                                (நச். உரை: பாரம் = பருத்திப் பூ)

(1-2) "பாரம் மலிசிறு கூவலின் தணியும்"                         (நற்: 41:4)

பாரம் = ஓர் ஊர்ப் பெயர்.

(1-1)       "காக்கும் பாரத்து அன்ன "                 (நற்: 265:4-5)

(1-2)       “ பாரத்துத் தலைவன் ஆர நன்னன்"         (அகம்: 152:12)

 

            நற்றிணையுள் வரும் 'அகலுள்" போன்ற சொல்லாட்சிகள் அகன்ற இடத்தையுடைய ஊர் என்று பொருள்படுவது. இங்கு ஒப்பு நோக்க வேண்டிய தாகும்.

பாரம் = பரிய ஊர். (அல்லது) ஒரே பெருங்குடும்பத் தொகுதி அக்கால் வாழ்ந்திருந்த ஊராயிருக்கலாம்.

பாரம் = குடி, பெருங்குடி, பெருங்குடும்பம்

 (1-1) ''பசித்தும் வாரேம் பாரமும் இலமே”                       (புறம்: 145:4)

 (1-2) "பகடு புறந்தருநர் பாரம் ஓம்பி"                                (புறம்: 35:32)

                        (உரை: ஏரைப் பாதுகாப்போருடைய குடியைப் பாதுகாத்து...)

 

மின்னெழுத்தில் வடித்தது,

 

பெஞ்சமின் பிராங்கிளின்பி

25 கடகம் 2051

//௨०௫௧]

(09-08-2020)


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக