பூமி சுழன்று கொண்டிருக்கிறது. ஆண்டுகள் மீண்டும் மீண்டும் பிறக்கின்றன. ஆறு பெரும்பொழுதுகளும் மீண்டும் மீண்டும் வருகிறது. இதில் இந்த நாள்தான் ஆண்டின் துவக்கம் என்று அறுதியிட்டுக் கூற இயலாது. ஆண்டின் 365 நாள்களில் எந்த நாளையும் ஆண்டுத் துவக்கமாகக் கொள்ளலாம்.
ஆனாலும் உலகின் மாந்த இனங்கள் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நாளை அவர்களுக்கு ஏற்ற வகையில், ஆண்டின் துவக்கமாகக் கொண்டுள்ளனர். பெரும்பாலும் தங்கள் நிலப்பகுதியின் நிலவும் தட்பவெப்பநிலையைக் கொண்டே, ஆண்டின் துவக்கத்தை வைத்துள்ளனர். இந்த புத்தாண்டானது இடத்திற்கு ஏற்ப மாறுபடும். காரணம் தட்பவெப்பம் என்பது இடத்திற்கு இடம் மாறுபடுவதே.
சிலர் வானியல் நிகழ்வு சார்ந்து ஆண்டினைக் கணக்கிட்டுள்ளனர். கடலோடிகளானத் தமிழர்கள் வானியல் அறிவு பெற்றவர்கள். கடலில் வெகுதூரம் சென்று மீண்டும் ஊர் திரும்ப வானியல் அறிவு இன்றியமையாதது.
வானின் உடுக் கூட்டத்தை உற்று நோக்கிய தமிழர்கள், அதில் சில உடுக்கள் சேர்ந்து, ஒரு குறிப்பிட்ட வடிவில் இருப்பதை அறிந்தனர். அந்த உடுக்கூட்டத்தை ஓரை என்பர். இந்த ஓரையானது 30 நாள்கள் மட்டுமே கண்ணுக்குப் புலப்படும். அடுத்து வேறொரு ஓரை புலப்படுகிறது என்பதை அறிந்த மக்கள், இதற்குக் காரணம் கதிரவனானது ஒரு ஓரைக்குள் புகுந்து அடுத்த ஓரைக்குச் செல்வதாக நம்பினர். ஆகையால் ஒவ்வொரு மாதத்தையும் அப்போது தெரியும் ஓரையின் பெயரில் அழைத்தனர்.
அவை, சுறவம், கும்பம், மீனம், மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி,துலை, நளி, சிலை என்பனவாகும்.
ஆனால் தமிழர்கள் ஆண்டின் முதல் இந்த மாதத்தைத் தான் வைத்தார்கள் என்று அறுதியிட்டுக் கூறுவதற்கு நம்மிடையே உறுதியான சான்றுகள் இல்லை.
அதே நேரத்தில் ஈராயிரம் ஆண்டிற்கு முன்னர், சூலியசு சீசர் என்ற உரோமைப் பேரரசன் , உலகின் பல வானியல் அறிஞர்களை அழைத்து, ஒரு புதிய நாள்காட்டியை உருவாக்கப் பணித்தான். அந்த அறிஞர்கள் உருவாக்கிய நாள்காட்டி சூலியன் நாள்காட்டி எனப்பட்டது. அதன் படி (இன்றைய 21 ஆம் நூற்றாண்டுப்படி ) சுறவம் 1 (சனவரி 14) ஆண்டின் துவக்கமாகக் கொண்டனர்.
இதற்குக் காரணம் பின்வருமாறு. கதிரவன் நிலையான இருந்தாலும், பூமியில் இருந்து அதனை நாம் பார்க்கும்போது, கதிரவன் நகர்வது போல் இருக்கும். இந்த நகர்வானது முதல் ஆறு மாதகாலம் வடக்கில் இருந்து தெற்கிற்கும், அடுத்த ஆறு மாதம் தெற்கில் இருந்து வடக்கிற்கும் செல்லும். பரிதியின் இத்தகைய தோற்ற நகர்வினை வட செலவு, தென்செலவு என்பர்.
வட செலவினை பரிதி துவங்கும் காலம் (Southern solstice) சிலை 6 (திசம்பர் 21) ஆகும். அதனை ஆண்டின் துவக்கமாக் கொள்ள நினைத்தனர் அந்த அறிஞர்கள். ஆனால் அந்த நாள் ஒரு மாதத்தின் துவக்கம் அல்ல. ஆகையால் பரிதி வட செலவினை துவங்கிய பின் வரும் மாதத்தை ஆண்டின் முதல் மாதமாகக் கொண்டு, அம்மாதத்தின் முதல் நாளையே ஆண்டின் துவக்கமாகக் கொண்டனர். அந்த நாள், இன்றைய 21 ஆம் நூற்றாண்டுப்படி, சனவரி 14 (சுறவம் 1).
இந்த நாள்காட்டி உலகின் பல நாடுகளிலும் பல நூற்றாண்டுகளாகப் பயன்பட்டு வந்தது. இன்றளவும் பழமைக் கிறித்தவ மதத்தினர் சனவரி 14 (சுறவம் 1) நாளையே ஆண்டுப் பிறப்பாகக் கொள்கின்றனர். அவர்களுக்கு கிறித்து பிறப்பு நாள், சனவரி 7 ஆகும். (அதாவது திசம்பர் 25 இலிருந்து 14 நாள்கள் கழித்து).
பதினாறாம் நூற்றாண்டில் கத்தோலிக்கத் தலைமைகுரு கிரகோரியன் என்பவர் சூலியன் நாள்காட்டியைத் திருத்தினார். காரணம் அதில் சிறிய அளவிலான பிழை இருந்தது. சூலியன் நாள்காட்டிப் படி ஒராண்டிற்கு 365.25 நாள்கள் உண்டு. ஆனால் உண்மையில் ஒராண்டிற்கு 365.2422 நாள்களாகும். இதனைக் கருத்தில் கொண்டு ஒராண்டிற்கு 365.2425 வரும்படியாக கிரகோரியன் நாள்காட்டி உருவானது. பிழையான பழைய நாள்காட்டியால் கூடுதலாகப் போன 11 நாள்களை நீக்கப்பட்டது. அதன்பின் ஆண்டின் துவக்கமும் சனவரி 1 ஆக மாறியது. அதாவது 14 நாள்கள் பின்சென்றது. இதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை.
இந்த கிரகோரியன் நாள்காட்டியை முதலில் பல நாடுகள் எற்கவில்லை. பின்னர் படிப்படியாக ஏற்றுக் கொண்டன. இறுதியாக சவுதிஅரேபியா நாடு 2016 ஆம் ஆண்டு கிரகோரியன் நாள்காட்டியை ஏற்றுக் கொண்டுள்ளது.
என்னைப் பொறுத்தவரை ஆண்டின் துவக்கமாக பழைய நாள்காட்டிப் படி சனவரி 14 (சுறவம் 1) நாளைக் கொள்ளலாம். பரிதியின் சுற்றுப்பாதையில் ஒரு திசைக்குச் சென்று மறுதிசைக்கு மாறிய பின் வரும் முதல் மாதத்தையே ஆண்டின் முதல் மாதமாகக் கொண்டால் சுறவமும் கடகமும் வரும். வடசெலவிற்குப் பின்னர் வரும் முதல் மாதம் சுறவம். தென்செலவிற்குப் பின்னர் வரும் முதல் மாதம் கடகம்.
இதில் ஏதேனும் ஒன்றை நாம் முதல் மாதமாகக் கொள்ளலாம். இந்த இரண்டு மாதங்களில் சுறவம் துவங்குவதற்கு ஒரு நாள் முன்னர், ஓராண்டாக வீட்டில் தேங்கிய பழைய பொருள்களை எரித்துவிடும் தமிழர்களின் வழக்கத்தை நினைத்துப் பாருங்கள். அந்த நாளின் பெயரையும் பாருங்கள். போகிப் பண்டிகை. இந்தப் பெயரிலேயை தெரிகிறது, ஒராண்டு தன்னை விட்டுப் போவதையே, தமிழர்கள் போகிப் பண்டிகையாகக் கொண்டுள்ளனர். அடுத்த நாளின் சிறப்பையும் பாருங்கள். பொங்கல் அன்று கதிரவனை வணங்கி வரவேற்கிறார்கள்.
இந்த இரண்டு நிகழ்வுகளையும் வைத்துப் பார்த்தால், தமிழர்கள் சுறவம் 1 நாளையே ஆண்டின் துவக்கமாகக் கருதியிருக்கலாம் என்று புலப்படுகிறது.
இது வானியல் சார்ந்த அணுகுமுறை. உலகம் முழுமைக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும். காலநிலை சார்ந்த ஆண்டுத் துவக்கம் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு பொருத்தமானது. வானியல் சார்ந்த ஆண்டுத் துவக்கம் உலகிற்கானது.
ஆகையால் ஆண்டின் பிறப்பாக சனவரி 1 இல்லாமல் சனவரி 14 இருப்பது, ஏரண முறையில் எனக்குச் சரியானதாக இருக்கிறது.
உலக மாந்தர் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்து.
பி.கு: கீழே உள்ள படங்களைப் பாருங்கள். உங்களின் புரிதலுக்கு உதவும். அதில் ஒரு படம் 2015 ஆம் ஆண்டு, ஒரு குறிப்பிட்ட பகுதியில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கதிரவனின் இடத்தை தொடர்ச்சியாக எடுத்து ஒரே படத்தில் பொருத்தியது. அதனை ஆங்கிலத்தில் Analemma என்பர். அதன்படி கிரகோரியன் புத்தாண்டு, சூலியன் புத்தாண்டு, இந்துப் புத்தாண்டு மூன்றினையும் குறித்திருப்பேன். எளிமையாகப் புரியும்.
இவண்,
பெஞ்சமின் பிராங்கிளின். பி
01- சுறவம் -2022
(14-சனவரி -2022)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக