ஞாயிறு, 9 ஜனவரி, 2022

திருப்பாவை

 திருப்பாவை என்கிற பற்றி (பக்தி) இலக்கியப் பாடல் ஒன்றினை கீழே கொடுத்துள்ளேன். அதனை ஒரே மூச்சில் படிக்க முயலுங்கள். நான் முயன்றேன். என்னால் ஒரே மூச்சில் படிக்க முடிந்தது.


"கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண், மிக்குள்ள பிள்ளைகளும்
போவான்போ கின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்து நின்றோம்; கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய்"

இப்போது, அந்தப் பாடலின் ஒலிப்பு முறையில் சிறிது மாற்றத்தைச் செய்துள்ளேன். அதனை கீழே கொடுத்துள்ளேன். அதனை முதலில் படிப்பதற்கு குழப்பம் ஏற்படும். ஓரிரு முறை வாசித்து பழகிக் கொள்ளுங்கள். பின்னர் அந்தப் பாடலையும் ஒரே மூச்சில் படிக்க முயலுங்கள்.

"ஹீழ்வானம் வெள்ஹென்று, எருமை ஸிறுவீடு
மேய்வான் baரந்தனகாண், மிஹ்ஹுள்ள biள்ளைகளும்
Boவான்bo கின்றாரைப் boகாமல் ஹாத்துன்னைக்
ஹூவுவான் வந்து நின்றோம்; ஹோது ஹலமுடைய
Baவாய்! எழுந்திராய்"

உங்களால் முடிகிறதா? என்னால் ஒரே மூச்சில் படிக்க முடியவில்லை. உங்களால்
படிக்க முடிந்தாலும், இரு பாடலையும் ஒரே மூச்சில் படிக்கும் போது, இரண்டிற்கும் ஏதேனும் வேறுபாட்டினை உணர்ந்தீர்களா?

இதற்கான காரணம் Sa,Ha, ba , Ja போன்ற ஒலிப்புகள் ஒரு சொல்லின் முதலில் வரும் சொற்களை நாம் பலுக்கும்போது, நமது மூச்சுக் காற்று வெளியேறுவதில் ஒரு சீரற்ற தன்மை உருவாகிறது. ஆகையால் தான் முதல் பாடலை எளிதாக ஒரே மூச்சில் பாடிய நம்மால் இரண்டாம் பாடலை எளிமையாகப் பாட இயலவில்லை.

அதே நேரத்தில் நான் மேற்சொன்ன Sa, Ha, Ba, Ja போன்ற ஒலிப்புகள் ஒரு சொல்லின் இடையில் வரும்போது, எந்தச் சிக்கலும் இல்லை. நமது மூச்சுக் காற்று சீராகவே வெளியேறுகிறது.
இதனால் தான் தமிழில் Sa, Ha, Ba, Ja போன்ற ஒலிப்புகள் ஒரு சொல்லின் துவக்கத்தில் இடம்பெறாது. மாறாக அவை சொல்லின் இடையிலோ இறுதியிலே வரும்.

காட்டாக, நேசம் (Sa), காகம் (Ha), மன்பதை (Ba) , மஞ்சள் (Ja) போன்ற சொற்களில் Sa, Ha, Ba, Ja என்ற ஒலிகள் சொல்லின் இடையில் வருகிறது.
அதுபோலவே பாசி (Si), வரகு (Hu), முன்பு (Bu), இஞ்சி (Ji) போன்ற சொற்களையும் நம்மால் இயல்பாகப் பலுக்க இயலும்.

இந்த உடல் காற்றின் இயக்கவியலை அறிந்த தமிழர்கள் Sa, Ha, Ba, Ja போன்ற ஒலிப்புகளுக்கு என்று தனியாக எழுத்துகளை உருவாக்கவில்லை. மாறாக அந்த ஒலிப்புகளுக்கு இணையான வல்லின எழுத்துகளை மட்டும் உருவாக்கி விட்டு, அந்த எழுத்துகள் சொல்லின் முதலிலோ, அல்லது தனது ஒற்றோடோ வரும்போது, வல்லினமாகவும், சொல்லின் இடையிலோ இறுதியிலோ வரும்போது, தனது வலிமையில் சிறிது குறைந்து (இடையினம் போன்று) ஒலிக்கும் என்று விதி எழுதியுள்ளனர்.

மேற்சொன்ன Sa, Ha, Ba, Ja ஒலிப்புகளுக்கு என்று தனி எழுத்துகளைப் படைத்தால், மக்கள் அவற்றை சொற்களின் முதலில் எழுத ஆரம்பித்துவிடுவர் என்று அறிந்தே, அவ்வெழுத்துகளை உருவாக்காமல் விட்டுவிட்டனர் என்றே கருதுகிறேன்.
அதுபோல் sha/She போன்ற ஒலிப்புகள் அதிக ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியவை என்பதால் அவ்வொலிக்கு தமிழில் எழுத்தே இல்லாமல் தவிர்த்து விட்டனர்.
(பி.கு: மேற்கூறியவை அனைத்தும் தமிழ்மொழி குறித்த எனது புரிதல் கொண்டு எழுதியவையே. மாற்றுப்பார்வை இருந்தால் அருள் கூர்ந்து தெரிவிக்கவும்)

இவண் ,
பெஞ்சமின் பிராங்கிளின். பி
24 சிலை 2021
(08-01-2022)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக