"தமிழ் - சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின்
ஆராய்ச்சி நிறுவனத்தில் அருளி ஆற்றிய உரைகள் (தொகுதி-3) "
நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
சாடி
சொல் மூலம்:
அல்>அள் > (அள்+து) >அட்டு> அடு > ஆடு,
சாடு + இ>
சாடி.
சொற்பொருள்கள்:
சாடி =
மதுக்கலம், நீர்க்கலம், நீர்க்குடுவை.
"அல்" : கூடுதல் கருத்து மூலவேர்.
அல்>அல்+ கு > அல்கு = கூடு, செறி, பொருந்து, நெருங்கு
அல்கு> அல்குநர் = பொருந்தி வாழுநர், குடிகள்
“அல்குநர் போகிய
வூரோ ரன்னர்” (கலித்: 23)
அல்> அன் >(அல்+பு)> அன்பு = உள்ள நெருக்கம், உள்ளப்பிணைப்பு, பற்று.
அல்> அன்+அ > அன்ன = ஒத்த, போன்ற, இணைய
ஓர் உவம உருபு
(தொல். பொருள்: 287)
அன்னர்: ஒத்தவர் “அறைபறை யன்னர்''
(குறள்: 1076)
அன்னள் : “ஒப்பானவள்"
(குறள் : 1124)
அல் >அள் = நெருக்கம், செறிவு (திவாகரம்)
அள் = பற்றிரும்பு.
‘கற்பொறி “அள்”வலி “பற்றிரும்பு” ஆகும்' (பிங்கலம்:
1602)
அள் = காது. ''காதுகேள்வி
அள்ளே" (பிங்கலம்: 1052)
[ஒ.நோ: கது> கதுவு = பற்று.
கது>
காது = ஒலியைப் பற்றும் உறுப்பு அல்லது ஒலி சேருதற்கு இடனான உறுப்பு]
அள்+ அல்> அள்ளல் =
சேறு. (திவா)
=
நெருக்கம்.
('அள்ளற் பயலை யூர்கின்றது' (திவ். இயற். திருவிருத். 12)
அள் = பூட்டு (பிங்கலம்).
அள்+அடு > அள்ளடு > அள்ளாடு – செறி
“அள்ளாடிய கவசத்தவிர் மணியற்றன”
(கம்பரா.
முதற்போ : 177)
அள்> அள்ளு = செறி . அள்ளுதல் = செறிதல் (சீவக. 614)
அள் >அளை = சேர், கூடியிரு.
“ஆர்வமோடு அளை இச் சொல்லுறு பொருளினும்"
(தொல்.
பொரு: 146)
அள்+அவு> அளவு = கல, கூடு. அளவுதல்
= கலத்தல்
“அலமரல் உள்ளமொடு அளவிய இடத்தும்"
(தொல்.
பொரு: கற்பு:19)
அளவுதல் = கலப்புறுதல்
"புறத்திணைக்கண் இயற்பெயர் அளவி வரும்"
(தொல்.
பொரு: 55. உரை)
=
கலத்தல்
"கோற்றேனி லளவுந்
தீஞ்சொல்" (கூர்மபு.
கண்ணன்: 71)
அளவு > அளாவு = கூடு. ஒ.நோ:
உலவு > உலாவு
கலவு>
கலாவு
குலவு
> குலாவு.
அளவு + அளாவு > அளவளாவு = மனக்கலப்பு.
"அளவளாவில்லாதான் வாழ்க்கை " (குறள்: 523)
= கலந்து பேசு. “அளவளாய்
நட்டாலும் " (மூதுரை:4)
அள்> அண்
அண்+மை> அண்மை = நெருக்கம்
அண்> அணு +கு>அணுகு = நெருங்கு
அணுகுதல்
= கிட்டுதல்
அணுகு> அணுக்கு +அம்> அணுக்கம் = நெருக்கம்
“அணுக்க
வன்றொண்டர்" (பெரியபு. வெள்ளா: 3)
அண்> அண்ணு = கிட்டு, பற்று
அண்+ அவு> அணவு = அணுகுதல் (சூடா), புல்லுதல் (சூடா), ஒட்டுதல்
(பிங்)
அண்> அணை = சேர், சார், பொருந்து, புணர், படு, கட்டு, தழுவு.
அள்+து >அட்டு
அட்டு > அடு = சேர்,
நெருங்கு, சார், பொருந்து, ஒன்று, ஏற்றதாகு, பற்று
அடு + அர்> அடர் = சேர், செறி. அடர்+வு அடர்வு = செறிவு
அடர்+(த்) +தி> அடர்த்தி = செறிவு.
அடர்+(ப்)+பு> அடர்ப்பு+அம், அடர்ப்பம் = நெருக்கம் (யாழ். வழக்கு)
அடு = தீயிடு, சுடு, பற்றவை, எரி
தீயைக்
குறிக்கும் சொற்களில் பெரும்பான்மையன, செறிவுப் பொருளில் தோன்றியுள்ள
கருத்தொருமைப் போங்கு இங்குக் கருத வேண்டியதாகும்.
* தகு (பொருந்து, சேர்) தகு + அம் >தகம் = நெருப்பு.
* தேய் = (உரசு, பொருந்து)
(துய்>
தெய் >தேய்) தேய்> தீய்> தீ = நெருப்பு.
(ஒ.நோ:
தேன்>தேம்> தீம்)
* நெரு> நெருங்கு = இணை,செறி.
நெரு+(ப்)
+பு> நெருப்பு.
* தழு+வு > தழுவு = இணை
, அணை . தழு+அல்>தழல் = தீ.
* கன்> கனை = செறிவு.
“பெருந்துறை கனைத்த நெய்தல்" (அகம்: 150: 8)
கன்+அல்>
கனல் = நெருப்பு.
“பற்றிக்கொண்டது” என்ற அளவானே,தீப்பிடித்து எரிதலைக் குறித்தலை
இங்குக் கருதல் வேண்டும். தீப்பிடித்தல், நெருப்புப் பிடித்தல், தீப்பற்றல்,
நெருப்புப்பற்றல் என்பன போலும் தொடர் வழக்குகளினூடே, பற்றுகைக் கருத்துப்
(செறிவுக்கருத்து) பற்றிப் பிணைந்திருப்பதை நன்கு கண்டு தெளியலாகும்.
இவ்வகை
முறையிலேயே , ''அடு" என்னும் முதனிலையும் சுடு. தீயிடு, பற்றவை, எரி
என்றவாறான பொருள்களில் பற்றிப் படர்ந்தது.
அடு + தல் >அடுதல் =
சுடுதல், தீயிடல்
அடு+அல்> அடல் +ஐ> அடலை = சுடுகாடு (Cremation ground)
அடலை = சாம்பல், தீய்ந்த கரி
அடு+(ப்)+ பு >அடுப்பு
= தீயிட்டு எரித்தற்கு உதவும் மண்கூண்டு
(1.1)
“கோடுயர் அடுப்பில் ஆம்பி பூப்ப" (புறம்: 164: 1-2)
(1.2)
“உமண்சாத் திறந்த ஒழிகல் அடுப்பில்” (அகம்: 119:8)
(1-3) “கல்
அடுப்பேற்றி" (அகம்: 393:14)
அடு+களை >அடுக்களை =
சமைக்கும் இடம், சமையலறை.
(''அடுகளம்"
என்னும் சொல் போர் அடுங்களத்திற்கு வழங்கினமையின் இங்கு சொற்பொருள் தெளிவிற்கென,
"அடுக்களை" என வழக்கூன்றியுள்ளது.)
“வகையமை
அடுக்களை போல்" (மணி:
29:61)
அடு+கலம் >அடுகலம் = உணவு சமைக்கப் பயன் பெறும் கலம்.
''கடும்பின்
அடுகலம் நிறையாக'' (புறம்: 32:1)
அடு + தல்> அடுதல் = சமைத்தல், உருக்குதல், காய்ச்சுதல்.
(சமைத்தல்) : “அமுத மடைப் பள்ளி" (கல்லா :13)
(உருக்குதல்) : ''அட்டொளி யரத்தவாய்க் கணிகை'' (சீவக: 98)
(காய்ச்சுதல் : (1-1) “அடுபால்
அன்ன பசலை” (நற்: 175:9)
(1-2) “அட்டாலும் பால் சுவையில் குன்றாது'' (மூதுரை: 14)
அடு+சில் > அடுசில் = வெந்தவுணவு, வெந்தசோறு.
அடுசில் >அடிசில்-உயிரிசைவு
மாற்றம்
(Harmonic
sequence of Vowels)
(ஓ.நோ: குரு+சில் >
குருசில்> குரிசில்)
அடிசில்: ''அடிசிலும் பூவும் தொடுதற் கண்ணும்”
(தொல்.
பொரு. கற்: 4:5:14)
அடு+இல்> அட்டில் =
மடைப்பள்ளி, சமைக்கும் இடம்.
(1-1)
“கொடைக்கடன் என்ற கோடா நெஞ்சின்
உதியன் அட்டில்” (அகம்: 168:6-7)
(1-2) “புனிற்று நாய்
குரைக்கும் புல்லென் அட்டில்" (சிறுபாண்:
132)
அடு > அட்டு = சமைத்து அட்ட
= சமைத்த
“அட்ட குழிசி அழற் பயன் தாங்கு" (புறம்
: 237:7)
அட்டகுழிசி
= சமைக்கப்பெற்ற பானை.
அடு= சமை, காய்ச்சு.
அடு>அட்டு = வெல்லம்.
(பனை+ அட்டு> பனாட்டு=பனைவெல்லம்)
''பனையின் முன்னர் அட்டு வருகாலை
நிலை இன்று ஆகும், ஐ என்
உயிரே
ஆகாரம் வருதல் ஆவயி னான “ (தொல்.
எழுத். உயிர்மயங்: 82)
கரும்பினின்று
காய்ச்சப்பெறும் வெல்லம், “கருப்பட்டி" என்னப்பெறுவது இன்றும் பொது வழக்கு.
கரும்பு >கருப்பு கரும்பு+அட்டி > கருப்பட்டி.
ஒ.நோ: இரும்பு+ஆணி >
இருப்பாணி.
(கொச்)
(இலுப்பாணி)
அரியல், மது, தேன், பிரசம், பிழி, சேறு, சாறு, தேம், நறவு,
நறா, நனை, தேறல், தெளிவு, தணியல், சுரை, பொங்கல்,- என்பன கள்ளென்னும் ஒரு
பொருட்குறித்த பல சொற்களில் சில.
மகிழ், மறவி,
வெறி, வெடி என்பன,-அது விளைவிக்கும் தன்மைகள் பற்றிக், கள் ஏற்ற பிற பெயர்கள்.
இயற்கையாகப்
பெறும் விளை பொருள்களாகிய தென்னை, பனை, ஈந்து ஆகியவற்றின் கள், பலாப்பழத்தின்
பிழிவு, தேன் ஆகியன தவிர்த்து, சுள்ளென வெறியுணர்ச்சியைக் கிளர்விக்கும்
செயற்கைக்கள்ளும், பண்டைத் தமிழகத்தில் காய்ச்சப்பெற்றுக் குடிக்கப் பெற்றது.
அச் செயற்கைக்
கள்ளைக் காய்ச்சிய மகளிரை “கள் அடு மகளிர்" எனப் பெரும்பாணாற்றுப்படை பேசும்.
(329)
அதனை, காய்ச்சப்
பெற்ற மது என்னும் பொருளில், ''அடுநறா'' என வழங்கினர்.
''உண்டார்கண்
அல்லது அடுநறா (க்) காமம் போல்
கண்டார் மகிழ்
செய்தல் இன்று" (குறள்:1090)
அடுநறா என்பது,-
வெறிக்கிளர்ச்சியும் கடுங்களிப்பும் கொடுமயக்கமும் ஏற்படுத்தவல்ல, இக்கால் சாறாயம்
என்னப்பெறும் மதுவுக்கு இணையாகக் காய்ச்சப்பெற்ற மது ஆகும்.
காமவுணர்ச்சியுடன்
ஒப்புமைப் படுத்தித், திருவள்ளுவர் பெருமகனார் அடுநறாவைக்
குறித்திருப்பதினின்றும், அக்குறள் கொண்டிலங்கும் பொருள் சாறத்தினின்றும்,
'அடுநறா'' பொது மதுவகையினும் மிகுந்த வெறிக்கிளர்ச்சியை உண்டாக்கும் ஒன்று, என்பது
பலபடப் புலப்படுகின்றது.
[English: Arrack =
Alcoholic spirit (சாறாயம்)
Origin:Arabic: (Arak) Araq = Sweet alcoholic spirit from grapes
or dates.
அரபி மொழியில்,
''Araq" என்னும் சொல், “சாறு'' என்னும் பொதுப் பொருளிலேயே முதற்கண் வழங்கி
வந்தது.]
அடுநறா = காய்ச்சப்பெற்ற மது,
அட்டு
உருவாக்கும் சாறாயம்.
"அடுநறா மகிழ் தட்ப ஆடுவாள்” (பரிபாடல் : 21:20)
(காய்ச்சப் பெற்ற மது
"அடுகள் ” என்றும் குறிக்கப் பெற்றது)
“இல் அடு கள்ளின் சில்குடிச் சீறூர்'' (புறம்: 329:1)
(உரை:
இல்லங்களில் அடப்படும் கள்ளினையுடைய சிலவாகிய குடிகள் வாழும் சீறூர்....)
அட்ட - காய்ச்சிய (அட்டகள்
= காய்ச்சிய கள்)
''பேரூர் அட்ட கள்ளிற்கு
“ஓரில் கோயில் தேருமானின்னே '' (புறம்:
300:5-6)
(உரை: பெரிய
ஊரின்கண் காய்ச்சிய கள்ளைப்பெறும் பொருட்டு மனைக்குட் புகுந்து ஒரு கட்கலயத்தைத்
தேடுவது போல், நின்னைத் தேடா நின்றான்.)
அடு> ஆடு = சமைப்பு, காய்ச்சுகை.
ஒ.நோ: விடு >
வீடு படு> பாடு (துன்பம்)
இடு >ஈடு கொடு
> கோடு.
ஆடு = சமைக்கப் பெறுகை.
(1-1)
“ஆடு நனி மறந்த கோடுயர் அடுப்பில்
ஆம்பி பூப்ப………...” (புறம்:
164:1-2)
(1-2) "ஆடுறு குழிசி
பாடின்று தூக்கி '' (புறம்: 371:6)
(ஆடுறு
குழிசி = சமைத்தற்கமைந்த பானை)
[முற்காலத்தில்,
கள்ளைக் காய்ச்சுவதற்கென்றே தனிவகைக் கலம் ஒன்றனைப் பயன்படுத்தினர். அம் மண்கலம்
(ஆடு>சாடு +இ >சாடி) ''சாடி” என்னப் பெற்றது]
(ஒ.நோ: ''கள்
அடுகுழிசி" (மணி: 16:16)
ஆடு > சாடு
[உயிரொலியின்
மீது சகரமெய்யின் ஏற்றம் தமிழ். மொழியியன்மையில் ஒருபுடை வளர்ச்சி யாக்கம்.)
ஒ.நோ : அமம் >சமம். அமயம்> சமயம்.
அமர்>
சமர். அமை> சமை.
அந்தி
> சந்தி. அந்து >
சந்து
சாடு + இ >சாடி [''இ”
ஒரு சொல்லாக்கவீறு]
ஒ.நோ: மூடு >
மூடி. கோடு > கோடி
(கடு
> )காடு > காடி. (காண்க: “உப்பிற்கும்
காடிக்கும்
கூற்று”-குறள்)
ஆடு
(ஆடுகைக்கருத்து > ஆடி (கண்ணாடி)
சாடி:
(1-1) ''அறா நிலைச் சாடி யாடுறு தேறல்" (பு.வெ. மாலை : 1:2:1)
உரை: கள்ளறாத
நிலைத் தாழியில் காய்ச்சுதலுற்ற
மதுத்
தெளிவு...)
(''சாடியில் ஆடுறு தேறல்" என்பது ஓர் அரிய சான்றாகும்)
(1-2) “சாடி மட்டு அயின்று
'' (சீவக: 1614)
தொண்டைமான்
இளந்திரையனைப் பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணனார், அடுநறாக் காய்ச்சி அரியல்
செய்யும் அரிய முறையொன்றினை இப்படி நமக்குக் கற்றுத் தருகிறார்.
“அவையா அரிசி
யங்களித் துழவை
மலர்வாய்ப் பிழாவிற் புலர வாற்றிப்
பாம்புறை புற்றிற் குரும்பி யேய்க்கும்
பூம்புற நல்லடை
யளை இத் தேம்பட
வெல்லையு மிரவும் இருமுறை கழிப்பி
வல்வாய்ச் சாடியின் வழைச்சற விளைந்த
வெந்நீர் அரியல் விரலலை நறும்பிழி''
(பெரும்பாண்:
275-281)
அக்காலத்தில் சாறாயம் காய்ச்சப் பெற்ற முறையொன்றினை இன்று
நமக்கு விளக்கி நிற்கும் அரும்பெரும் செய்தியாகும், இது!
இதற்கு நச்சினார்க்கினியர் உரையாவது:
"குற்றாத
கொழியல் அரிசியை அழகினையுடைய களியாகத் துழாவி யட்ட கூழை, அகன்ற வாயையுடைய
தட்டுப்பிழாவிலே உலர ஆற்றி, பாம்பு கிடக்கின்ற புற்றின்கண் கிடக்கும் புற்றாம்
பழஞ்சோற்றையொக்கும் பொலிவு பெற்ற புறத்தினையுடைய நல்ல முளையை (இது (வெள்ளாம்பியை)
வெள்ளைக் காளானைக் குறிப்பதாகும்) இடித்துச், சேர அதனைக் கலந்து, இனிமை
பிறக்கும்படி இரண்டு பகலும் இரண்டு இரவும் அரியாமல் வைத்து, வலிய வாயினையுடைய
சாடியின் கண்ணே இளமையறும்படி முற்றின , விரலாலே அரிக்கும் தன்மையுடைத்தாகிய
வெவ்விய நீர்மையுடைய நறிய கள்"
சாடி : “சாடி'' என்ன, மட்கல வகையினுள் ஒன்றைக் குறிக்கும் இப்
பொருட் பெயர்ச் சொல், கழகக்கால இலக்கியங்கள் அனைத்திலும் அடங்க, ஏழு இடங்களிலேயே
குறிக்கப் பெறுகின்றது.
(1-1)
"முன்றில் இருந்த முதுவாய்ச் சாடி" (புறம்: 319)
(1-2)
“ நனை முதிர் சாடி" (அகம்: 166:1)
(உரை:
கள்ளிருந்து முதிர்ந்த சாடி)
(1-3) “யார்க்கும் தொடுதல்
ஓம்புமதி முதுகள் சாடி'' (புறம்: 258:9)
(1-4) “நனை முதிர் சாடி
நறவின் வாழ்த்தி “ (புறம் : 297:5-6)
(1-5) ''கலிமடைக் கள்ளின் சாடி" (புறம் : 295:7)
(1-6) “முற்றா நறுநறா மொய்
புனல் ஆடி
……………………………………………………………………
மூரிதவிர
முடுக்கும் முதுசாடி'' (பரிபாடல் :
20:52, 54)
(1-7) "வல்வாய்ச்
சாடியின் வாழைச்சற விளைந்த
வெந்நீர் அரியல்
விறலலை நறும்பிழி " (பெரும் :
280-281)
இவ்வாறு, கழக
இலக்கிய ஒட்டு மொத்தப் பரப்பிடத்தில்
இடங்களில் பயிலப் பெற்றுள்ள “சாடி" என்னும் மட்கலமானது, தன்
மாட்டே கள்ளைத் தாங்கி நிற்கின்ற காட்சியை ஆறு இடங்களில் புலப்படுத்துகின்றமையில்,
(ஆடு (காய்ச்சு) >சாடு+இ> சாடி) அதன் சொல் தோற்ற மூலவுண்மை புலப்படுகின்றமையையும்
நாம் காணலாம்.
இவ்வாறு, வலிந்த கழக இலக்கிய ஆட்சிகள்
படிந்திருந்தும், பேரா. இரா. பி. சேது அவர்கள், தாம் எழுதிய "சொற்களும்
அவற்றின் உட்பொருளும் " (words and their significance) என்னும் நூலுள்
(பக்கம்:43), ''Cādi” என்ற சொல், 'Jarra '' என்னும் போர்த்துக்கீசிய மொழிச் சொல்லி
- னின்றும் தமிழுக்கு வந்துள்ளதாக அறியாது குறித்துள்ளார்.
சாடி > (Hindi ) Chāti
(Hindi) Chāti) (English) Chatty = (India) Earthern ware, water
pot.
(ஆங்கில
மொழியியல்வாணர் முன்மை அறியாது, இந்தியையே மூலமாகக் காட்டுவர். காண்க :C. O.D. P. 168)
ஒலியியலில் டகரம் ரகரமாவது ஒரு பொது எளிய வழக்கு. (தமிழிலும்
அந்நிலை பேராளமாகவுளது.)
ஒ நோ: குடம்பை >
குரம்பை, கடி>
கரி
கடித்தல் >கறித்தல் அடுப்பங்கடை>அடுப்பங்கரை
(விதை> விரை)
இவ்வகை நிலையே, “சாடி"
என்னும் சொல்லைப் பலுக்கிப் பயன்படுத்திய அரபியர்க்கும் உற்றது.
சாடி >(Arabic) Jarra =a jar
(Arabic) Jarra > (Persian) Jurrah
(Arabic) Jarra> (Spanish) jarra, Jarro=a jar
>(Italy) giara,
giarra = a jar
>(Old
French) jare=a jar
> (English) Jār =
spoutless earthern ware, or glass vessel with or without handles,
usu. Cylindrical
சாடி > (Sanskrit) Jharika
தமிழ்ச்சொல்லுடன் 'Ka” என்ற ஈறு
பிணித்துச் சொல்லாக்கம் பெறும் ஒரு முறை, சமற்கிருதத்திற்கு வழக்கம்.
ஒ.நோ : கன்னி
> கன்யகா.
சகடம் >சகடிகா.
மாலை
>மாலிகா.
பிற வடபால் மொழிகளில் “சாடி”
என்னும் சொல்லின் திரிபுகளாவன:
Pali: Cādi=Vessel, Jar
Sindhi: Jhāri= Metal vessel,
with long neck.
(குறிப்பு:
'முன்றில் இருந்த முதுவாய்ச்சாடி” என்னும் புறநானூற்றுவரிக்கு (319) உரைக்
குறிப்பு வரைந்த உரைப் பேராசான் செந்தமிழ்த்திரு. ஔவை துரைசாமி ஐயா அவர்கள்,
உயர்ந்த வாயையுடைய தாயிருத்தலின் முதுவாய்ச்சாடி என்றார்”-என்பார்!)
Nepali: Jhari Hindi: Jhāri
Bengali: Jhari Maithili:
Jhāri
Bihari: Jhari Gujarati:
Jhari
Marathi: Jhari Assamese:
Zāri
[சாடி" என்னும் தூய தமிழ்ச்சொல்லை, “ஜாடி”
என்றவாறு வழங்குதல், ஒரு பிழைப் பலுக்கமாகும்]
மின்னெழுத்தில் வடித்தது,
பெஞ்சமின் பிராங்கிளின். பி
21 மடங்கல் 2051
[ ௨ ௧/० ௮ /௨०௫௧]
(06-09-2020)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக