புதன், 4 ஜூலை, 2012

இயற்கையை பாதுகாப்போம்

                   இந்த உலகம் நமக்கு மட்டும் சொந்தமல்ல . மாறாக நமக்கு பின்  வரும் தலைமுறைக்கும் சொந்தமானது . எப்படி  நம்  முன்னோர்கள் இயற்கை  அன்னையை பாதுகாத்து நம்  கையில் ஒப்படைத்தனரோ, அதுபோல்  நாமும்  நம்  வாழிடத்தை  பாதுகாத்து நமது அடுத்த தலைமுறைக்கு வழங்க வேண்டும். ஆனால் தமிழர்களாகிய  நாம் இது  குறித்த  சிந்தனை  ஏதுமின்றி வாழ்ந்து  வருகிறோம் . நமது அண்டை மாநிலமான கேரளாவை பார்த்தாவது நாம் திருந்த  வேண்டும் . அங்குள்ள ஒவ்வொரு கிராமத்திலும்  நீர்நிலைகளை பாசிபடியாமல் வைத்துள்ளனர். அங்கு ஆற்றிலிருந்து மணல் அள்ள முடியாது . மலை பாறைகளை உடைக்க முடியாது.. ஆனால்  நாம் இங்கிருந்து மணலையும் பாறைகளையும் கடத்தி கேரளாவுக்கு கொடுக்கிறோம். இதன் விளைவுகள் இப்பொழுதே தெரிய ஆரம்பித்துவிட்டது. நம் பருவநிலைகள் மாறி மழையை இழக்கிறோம். நிலத்தடிநீர் பாதாளத்திற்கு செல்ல ஆரம்பித்துவிட்டது. பணப்பயிர்களை வளர்க்கிறோம் என்று வயல்வெளிகளை அழிக்கிறோம். மரக்காடுகள் எல்லாம் கான்கிரீட் காடுகளாக மாறி வருகிறது. பசிக்கிறது என்றால் பணத்தை சாப்பிடமுடியாது, அரிசியைத்தான் தின்ன வேண்டும்.

                 நமது நாடு கார்பொரேட் முதலாளிகளின் சொர்க்க பூமியாக ஆகிவிட்டது. அவர்களுக்கு சாதகமாக நமது அரசும் சட்டங்களை இயற்றுகிறது. கார்பொரேட் முதலாளிகளின் கொள்ளைகளை .சட்டபூர்வமாக்கிவருகிறது. அவர்கள்தான் ஊடகங்களையும், அரசியல்வாதிகளையும், விஞ்ஞானிகளையும் வழிநடத்துகிறார்கள். இயற்கையாக கிடைக்கும் சூரியமின்சாரம் சாத்தியமில்லையாம் அனால் அணு மின்சாரம் சாத்தியமாம். ஊடகங்கள் இப்படித்தான் எழுதுகின்றன. இவர்கள் யாவருக்கும் மக்களை பற்றிய கவலை இல்லை. முதலாளிகளிடமும் அரசிடமும் அரசியல்வாதிகளிடமும் இருந்து பணம் வாங்கிகொண்டு நடத்தும் பத்திரிகைகளைவிட  இணைய பத்திரிகைகளை நம்பலாம். குறிப்பாக வினவு, கீற்று, சிறகு, பூவுலகின் நண்பர்கள் போன்ற தளங்கள் வெகுஜன ஊடகங்கள் சொல்லாத பல உண்மைகளை நமக்கு தருகின்றன.
                       மக்கள் எது நடந்தால் நமக்கென்ன என்று வாழாமல் சமூக விஷயங்களில் அக்கறை காட்டும் போது பல சமூக தீமைகளை ஒழிக்க முடியும். எந்த சமூகம் விழிப்புணர்வையும் போராடும் உணர்வையும் ஒற்றுமையையும் ஒருங்கே கொண்டுள்ளதோ அந்த சமூகம் விரைவில் முன்னேறும் என்பதில் வியப்பில்லை.

- வாய்மை

பி..கு:: என் வாழ்நாளில் நான் எழுதும் முதல் பதிவு இது. மனதில் நினைத்ததை எழுதியுள்ளேன். கோர்வையாக வார்தைகள் வராததற்கு .மன்னிக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக