திங்கள், 13 நவம்பர், 2023

சிதைக்கப்படும் உடலில் வதைக்கப்படும் கடவுள்

                                                  புத்தகத் திறனாய்வு

நூல் : சிதைக்கப்படும் உடலில் வதைக்கப்படும் கடவுள்

   நூலாசிரியர் : அருட்பணி. பேசில் சேவியர்


  திறனாய்வாளர் : பெஞ்சமின் பிராங்ளின். பி (Benjamin Franklin F)

         இறையியல் பட்டயப் படிப்பு

         முதலாம் ஆண்டு (2022 - 2024)

          தூய இருதய இறையியல் கல்லூரி.
          பூவிருந்தமல்லி

 

 

முன்னுரை:

மனித இனம் சிந்திக்கத் துவங்கிய காலத்திலிருந்தே மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதைக் குறிக்கும் வகையில் பல்வேறு விதமான அறநெறி கோட்பாடுகள் உருவாகிக்கொண்டே வந்துள்ளன. அந்த வகையில் இரண்டு பெரும் பிரிவுகள் இந்த அறநெறி கோட்பாட்டில் உருவாகின. அவை இறையியல் மற்றும் மெய்யியல் ஆகும்.

நம்மைப் படைத்தது கடவுள் என்று நம்புவதும், அந்த கடவுள் கூறிய கட்டளைகளுக்கு ஏற்ப வாழ்வதன் வழியாக நாம் நமது இறப்பிற்கு பின்பு விண்ணரசில் நுழையலாம் அல்லது அடுத்த பிறவியில் நல்ல ஒரு மனிதனாகப் பிறக்க முடியும் என்று நம்புவது இறையில் கோட்பாடுகள் ஆகும். அதற்கு மாறாக நம் கண்களுக்குப் புலப்படும் இயற்கையை மட்டுமே நம்பி அந்த இயற்கை சார்ந்த அறிவியலை முதன்மைப்படுத்தி பேசுவது மெய்யியல் கோட்பாடு எனப்படும். இந்த இரண்டு கோட்பாடுகளும் ஒன்றுக்கொன்று தொடர்பற்று தனித்தனியே இருந்து வந்துள்ளன. அவ்வப்போது இந்த இரண்டு கோட்பாடுகளை இணைக்கும் அறிஞர்களும் உருவாகி வந்துள்ளனர். அந்த வகையில் அருட்பணி. பேசில் சேவியர் எழுதியுள்ள "சிதைக்கப்படும் உடலில் வதைக்கப்படும் கடவுள்" என்ற நூலானது இறையியல் கண்ணோட்டத்தில் இருந்து மெய்யியல் கோட்பாடுகளை ஆய்வு செய்யும் வகையில் அமைந்துள்ளது.

இறையியல் கோட்பாடு என்பது மனிதனின் உடலை முதன்மைப் படுத்தாது. மாறாக மனிதனின் ஆன்மாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும். அந்த ஆன்மாவின் தூய்மையே, மனிதனின் இறப்பிற்கு பின் விண்ணரசில் நுழையும் வழியை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று இறையியல் கோட்பாடு சொல்லிக் கொடுத்துள்ளது. அதே நேரத்தில் மெய்யியல் கோட்பாடு என்பது பொதுவில் ஆன்மா என்ற கருதுகோளை ஏற்பதில்லை. அது இந்த உலகம், இந்த இயற்கை, இந்த உடல், நாம் வாழும் போது நம்முடன் உள்ள மனிதர்கள் போன்ற நம் கண்ணுக்கு புலனாகும் அனைத்தையும் மனதில் கொண்டு, உலகம், இயற்கை, உடல், குமுகம் போன்ற பல கூறுகள் இசைவோடு வாழ்வதற்கு ஏற்ற வகையில் மனிதன் தனது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றே வலியுறுத்தும்.


இறையியல் கோட்பாட்டில் நம்பிக்கை உடைய அருட்பணியாளர் மற்றும் இந்த நூலின் ஆசிரியர் மெய்யியலும் இறையியலும் கலந்த பார்வையில் இந்த உலகத்தை காண்கிறார், மதிப்பீடு செய்கிறார்.

செல்வம்:
இன்றைய உலகில் முதலாளிகளிடம் பணம் பெருகிக்கொண்டே இருப்பதையும், நகைமுரணாக ஏழைகளிடம் பணம் குறைந்துகொண்டே செல்வதையும் சுட்டிக்காட்டுகிறார். ஏழைகள் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருந்தாலும் ஓட்டாண்டி ஆகின்றனர். அவர்களுக்கு உணவு, ஓய்வு,உறக்கம் போன்றவை தேவையான அளவுக்கு கிடைக்கவில்லை. அதே நேரத்தில் பணக்காரர்களுக்கு அளவுக்கு மீறிய உணவு, ஓய்வு,உறக்கம் போன்றவை கிடைக்கின்றது என்கிற முரண்பாட்டை எடுத்துக்காட்டுகிறார்.

இறையியல் பேசும் உலகின் சமையங்களெல்லாம் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் பொழுது, அவர்களின் பொது எதிரியான பொருள் முதல் வாதத்தின் வளர்ச்சியைக் கண்டு கொள்ளாமல் இருக்கின்றன என்பதையும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.

பொருள் முதல் வாதமாகிய மெய்யியல்கோட்பாட்டில் செல்வம் அல்லது பொருள் கடவுளாக்கப்பட்டு வழிபடப்படுகிறது. நுகர்வியம் இதன் சடங்காகிறது. மனிதர் பொருட்களை வாங்கவில்லை. மாறாக பொருட்கள் மனிதனை வாங்குகின்றன.மேலும் இன்றைய தகவல் தொடர்பு சாதனங்கள் நுகர்வு வெறியைத் தூண்டுகின்றன. இவ்வாறாக நம் படைப்பாற்றல் அழிக்கப்படுகிறது. பொருள் மட்டுமே முதன்மைப்படுத்தப்படுகிறது. இருப்பை (being) விட வைத்திருப்பதற்கு (having) முக்கியத்துவம் தரப்படுகிறது. மனிதர்களின் மதிப்பும் மரியாதையும் அவர் கொண்டுள்ள செல்வத்தால் தீர்மானிக்கப்படுகின்றது என்கிற கள நிலவரத்தை வேதனையுடன் சுட்டிக்காட்டுகிறார்.



இருத்தலுக்கும் வைத்திருத்தலுக்கும் உள்ள வேறுபாட்டையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். பொருளை நேசிக்கும் ஒருவர் வைத்திருத்தல் கோட்பாட்டுக்கு உட்பட்டவர். அவரைப் பொறுத்தவரை உலக மக்கள் அன்பு செய்யப்பட வேண்டியவர்கள் அல்லர். மாறாக பயன்படுத்தப்பட வேண்டியவர்கள். அதே நேரத்தில் இருத்தல் கோட்பாட்டிற்கு சார்பானவர்கள் பிறரோடு இணக்கமாகிப் போகிறவர்கள். ஏனென்றால் அவர்களுக்கு வைத்திருப்பது முக்கியமல்ல. மாறாக பிறரோடு இருக்க வேண்டும் என்கிற இணக்கமே அவர்களுக்கு முக்கியமாக உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளார்.

பொருள் முதல் வாதம் இதயத்தினை வயிற்றின் அடிமையாக மாற்றுகிறது என்கிற மாத்யூ அர்னால்டின் கூற்றையும் நினைவுபுடுத்துகின்றார். இன்றைய கலாச்சாரமானது மனிதரை அன்பு செய்வதை விட்டு விட்டு பொருட்களை அன்பு செய்ய தூண்டுகிறது. இது மனிதர்களை தனிமைச் சிறையில் தள்ளுகிறது. பொருட்செல்வம் கூடக்கூட அருட்செல்வம் குறைகிறது. சதையாலான இதயம் மண்ணாக இறுகுகிறது.


ஒரு கத்தோலிக்க இறையியல் கோட்பாட்டாளாரான ஆசிரியர் பொருட்செல்வம் குறித்து விவிலியம் கூறியுள்ளவற்றை அடிக்கோடிட்டு காட்டியுள்ளார்.

பழைய ஏற்பாட்டில் பொதுவாக செல்வமானது இறைவனின் கொடையாகப் பார்க்கப்பட்டாலும் சில பழைய ஏற்பாட்டு நூல்கள் செல்வம் விளைவிக்கும் கேட்டினைச் சுட்டிக்காட்டிள்ளன அதனையும் நூலாசிரியர் எடுத்தியம்புகின்றார். அதுபோலவே புதிய ஏற்பாட்டிலே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அதீத செல்வத்தின் தீமையைப் பல இடங்களில் சுட்டிக் காட்டுவதையும் குறிப்பிட்டுள்ளார்.

"
செல்வந்தர்களே ஐயோ உங்களுக்கு கேடு" (லூக்கா: 6:24) "நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது" ( மத்தேயு 6:24) "செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகக் கடினம்" (மாற்கு 10: 23) என்று இயேசு பல இடங்களில் செல்வம் குறித்த எச்சரிக்கையை மக்களிடம் கூறியுள்ளதை ஆசிரியர் சுட்டிக் காட்டி உள்ளார். அது போலவே நமது கத்தோலிக்கத் திருத்தந்தையினர் செல்வம் குறித்து மக்களிடம் எச்சரிக்கை செய்து உள்ளதையும் அவர் நூலில் குறித்துள்ளார். குறிப்பாக புனித பேசில், அகுஸ்தினார், கிறிசோஸ்தம் யோவான், ஹெர்மஸ் மேய்ப்பர், நிசா கிரகோரியார் போன்ற தொடக்காலத் திருத்தந்தையர்கள் செல்வம் குறித்து மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளதை ஆசிரியர் சான்றுகளுடன் நிறுவியுள்ளார்.


செல்வம் குறித்த தீமையினைக் கூறும் ஆசிரியர், தான் பொருளாதார வளர்ச்சிக்கு எதிரானவன் அல்லன் எனவும் கூறுகின்றார். அருள் இல்லார்க்கு விண்ணுலகு இல்லை என்று கூறும் திருவள்ளுவர், பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதையும் கூறுகிறார் அல்லவா? அது போலவே நூலாசிரியரும் பொருட்செல்வம் இவ்வுலகிற்கு தேவையே என்றே கூறவருகிறார். அதே நேரத்தில் சுரண்டல் வழி பெருக்கப்படும் செல்வம் 'தன்னிலே கெட்டது (intrinsically bad)' என்கிறார்.


மெய்யியல் கோட்பாடான பொருள் முதல் வாதத்தின் கோளாறு என்பது உடலை ஊதி பெருக்கச் செய்துவிட்டு ஆன்மாவை பட்டினி போடுவதாகும் என்பதை ஆசிரியர் சுட்டிக் காட்டியுள்ளார்

நாட்டார் சமையங்கள்:

நிறுவனச் சமயங்களில் பொதுவாகவே உடல் என்பது தீமை செய்வதற்கு தூண்டும் கருவி என்ற கருத்தினைக் கொண்டுள்ளன. ஆனால் விளிம்பு நிலை மக்களின் நாட்டார் சமையங்கள் மாந்த உடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பதை விளக்குகின்றார்.

நிறுவனப்படுத்தப்பட்ட சமயத்தில் ஆன்மா உயர்ந்தது, போற்றுதற்குரியது. ஆனால் உடலோ தாழ்வானது, இழிவானது என்று போதிக்கிறது. எனவே உடலை ஒடுக்கி, வருத்தி ஆன்மாவின் முக்திக்கான பக்தி முயற்சிகளில் மட்டும் ஈடுபடுகின்றது. அம்மதங்கள் உருவாக்கியுள்ள வழிபாடுகளிலும் உடலின் பங்கு என்பது மிகவும் குறைவு என்கிறார். கூடவே உடல் குறித்தான தீட்டு, தூய்மை என்கிற இரு கருத்து நிலைகள் நிறுவன சமயங்களில் ஆழமாக வேரூன்றி உள்ளன என்பதையும் ஆசிரியர் எழுதியுள்ளார்.

இதற்கு மாறாக நிறுவன சமயத்தில் இருந்து வேறுபடும் விளிம்பு நிலை மக்களின் நாட்டார் சமயங்களின் கூறுகளாக பல கடவுளர்கள், தெய்வங்கள், தேவதைகள் இருப்பதை ஆசிரியர் கூறுகிறார். இந்த மக்களிடையே எழுதப்படாத இறைவாக்கு உள்ளது. சாமியாட்டத்தின் போது தெய்வத்தோடு நேரடியாக தொடர்பு கொண்டு கால இட சூழலுக்கேற்ற இறைவாக்கு பெறப்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளான வரலாறு புவியியல் அமைப்பிலிருந்து எழுந்தவையே இந்த நாட்டார் சமயங்கள். இச்சமயங்கள் பொதுவாக இம்மைத் தேவைகளை நிறைவேற்றி துன்பங்களை துடைக்கின்றன. இன்றே, இங்கே வாழும்படி செய்கின்றன. குழுக்கள், பூசாரி, புனிதர் போன்ற இடைநிலையாளர் வழியாக அருள் கிட்டுகின்றன. உயிருள்ளவை- உயிரற்றவை, இயங்குவன- இயங்காதன ஆகியவற்றின் சக்திகளை மையமாகக் கொண்டு எழும் உணர்வு, உறவு, சடங்கு பற்றியவை. விளிம்புநிலை மக்களின் சமயத்தில் உணர்வு வெளிப்பாடு அதிகம். மேலும் சமயத் திருவிழாக்களில் வழக்கமான வாழ்வு உடைக்கப்படுகிறது. சுதந்திரமாகவும், குழுமமாகவும் மக்கள் செயல்பட இது ஒரு வாய்ப்பாக இருக்கின்றது. ஒடுக்குவோரின் ஆதிக்கத்திற்கு எதிராக ஒடுக்கப்படுவோர் மதத்தன்னாட்சியை விரும்புகின்றனர். எனவே தான் தங்களுக்கே உரிய தெய்வங்கள், சடங்குகளுடன் தனித்த மதத்தை உருவாக்குகின்றனர் என்ற ஓட்டோ மதுரோவின் கூற்றை ஆசிரியர் எழுதியுள்ளார். அது போலவே அந்தோனியோ கிராம்சியின் பார்வையில் ஒடுக்கப்பட்ட, விளிம்பிற்குத் தள்ளப்பட்ட, சுரண்டப்பட்ட வர்க்கங்களின், ஆதிக்க வர்க்கத்திற்கும் அதன் கூட்டாளிகளுக்கும் எதிரான செயல்பாட்டின் ஒரு வடிவம் தான் அடிநிலை மக்களின் சமயம் என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளார்.

நாட்டார் வழிபாட்டு மரபின் முக்கிய கூறு சாமியாட்டம். ஆண், பெண் மற்றும் சாதி வேறுபாடு போன்றவற்றைத் தாண்டி அனைத்து உடல்களுக்கும் நாட்டார் சமயம் தருகின்ற கொடை சாமியாடுதல். இந்நிகழ்வின் போது மனிதர் இறைவனை நேரடியாக அனுபவிக்கிறார்கள்.


தீ மிதித்ததில் குறிப்பாக உள்ளுக்குள் உறைந்து, உறங்கிக் கொண்டிருக்கும் அபரிதமான மனித ஆற்றல் உசுப்பி விடப்படுகின்றது. சாதாரணமாக மனித உடலால் சாதிக்க முடியாததை அந்த தற்கடப்பு நிலையில், பரவச நிலையில் மனிதர் சாதிக்கின்றனர்.

நாட்டார் சமய வழிபாடுகளைப் போன்று வெகுஜன கத்தோலிக்கத்திலும் இது மாதிரியான பக்தி முயற்சிகள் நடைபெறுகின்றன. தேவாலய வழிபாடு மறுமைக்கு அழுத்தம் கொடுக்கிறது. எதிர்காலம் குறித்த அச்சுறுத்தல்களையும் கனவுகளையும் வழங்குகின்றது. ஆனால் புனிதர் பக்தி முயற்சிகளில் ஈடுபடும் சராசரி மனிதர்கள், இம்மை தேவைகளுக்கு குரல் கொடுக்கும் இடங்களாக புனிதர் தளங்களைப் பார்க்கின்றனர். எட்டாத உயரத்திலிருக்கும் கடவுளை விட, ஒரு பலனைத் தந்து விட்டு அதற்கு மாற்றாக நேர்ச்சை என்ற பொருளில் உணவுப் பொருள்களையோ உடைகளையோ எண்ணெய் மற்றும் மெழுகுதிரிகளையோ பெற்றுக் கொள்ளும் புனிதர்களும் வேத சாட்சிகளும் மக்களுக்கு நெருக்கமாக இருக்கின்றனர்.

எடுத்துக்காட்டாக அம்மை நோயைத் தடுக்க செபஸ்தியாரை வழிபடுகின்றனர். நேர்ச்சையாக மொட்டை போடுதல், உயிர்ப் பலி போடுதல் போன்றவை தமிழ்நாட்டு கத்தோலிக்கர்களிடம் செல்வாக்கு பெற்றுள்ளன. அதுபோலவே பருக்கள் குணமாக தோமையாரிடம் மக்கள் வேண்டிக் கொள்கின்றனர். நேர்ச்சையாக உப்பு அல்லது துடைப்பம் காணிக்கையாக செலுத்துகின்றனர்.


உள்ளூர் இறையியலை உருவாக்குவதற்கு, வெகுஜன சமயத்தை உற்று நோக்கி, மக்களைப் பாதிப்பவை எவை என கண்டுணர வேண்டும் என்று கத்தோலிக்கர்களுக்கு ராபர்ட் ஷட்டர் அறிவுறுத்துவதை ஆசிரியர் எழுதியுள்ளார்.

அதே நேரத்தில் ஒரு எச்சரிக்கையும் ஆசிரியர் விடுக்கின்றார். நாட்டார் சமயங்களில் மக்களை விடுதலை செய்யும் பண்புகள் நிறைய இருப்பினும்,அடிமைப்படுத்தும் பண்புகளும் உள்ளன. குறிப்பாக நரபலி, மந்திர சக்தி, விதிக்கோட்பாடு போன்ற அடிமைப்படுத்தும் கூறுகள் பல உள்ளன. இவற்றை நாம் கணக்கில் கொள்ள வேண்டும் என்கிறார் ஆசிரியர்.

மெய்யியல்:

செல்வத்தையும் மனித உடலையும் பேசிய ஆசிரியர் அடுத்ததாக மெய்யியல் கோட்பாடுகளின் வரலாற்றினைப் பட்டியலிட்டுள்ளார். மனிதர் யார் என்ற கேள்வி மெய்யியலில் அடிப்படையானது. மனிதர்கள் வெறும் உடல்களா? இல்லை ஆன்மாக்களா? இல்லை இரண்டுமா? என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைத்த பாடில்லை. இவ்வகையில் ஆசிரியர் பல மெய்யலாளர்களின் மனிதர் குறித்த கருத்துக்களை எழுதியுள்ளார். பிளேட்டோ, அரிஸ்டாட்டில், பாஸ்கால், டேகார்ட், ஒரிஜன், மார்க்ஸ் நீட்சே, ஹார்வி காக்ஸ் போன்ற மெய்யலாளர்களின் கருத்துக்களை சுருக்கமாகவும் தந்துள்ளார். தற்கால மெய்யியலில் மனிதரை வரையறை செய்ய இயலாது என்பதனால் மனிதரை விவரிக்க ஆரம்பித்துள்ளனர் என்பதை சுட்டிக்காட்டி உள்ள ஆசிரியர் லெவினாஸ், கீர்ககார்டு போன்ற மேனாட்டு மெய்யியலாளர்களின் கருத்துக்களையும் தந்துள்ளார்.

மனித உடல் புறவயமானது மட்டுமல்ல மாறாக அகமயமானதும் கூட என்ற புதிய மெய்யியல் கண்ணோட்டத்தை எழுதியுள்ளார் ஆசிரியர்.

தமிழர் சித்தர் மரபில் பட்டினத்தார், பாம்பாட்டிச் சித்தர் போன்ற சித்தர்கள் பெண்கள் குறித்து இழிவான பார்வை கொண்டுள்ளதையும், இதற்கு மாறாக திருமூலர், சிவவாக்கியர் போன்ற சித்தர்கள் பெண்கள் குறித்து இழிவான பார்வை கொண்டிராதவர்கள் என்பதையும் அவர்களின் பாடல் வழியே எடுத்தியம்புகின்றார்.

 



பின் நவீனத்துவம்:

மேற்கத்திய மெய்யியல் வரலாற்றை பழங்கால தத்துவம், மத்திய காலத் தத்துவம், நவீன காலத் தத்துவம் மற்றும் தற்காலத் தத்துவம் என்று நான்காகப் பிரிக்கலாம். பழங்காலத் தத்துவம் மெய்ப்பொருளியல் (Metaphysics) பற்றிய கேள்விகளை எழுப்பி, விடை அளிக்க முனைந்தது. மத்திய காலத் தத்துவம் மதத்தின் வேலைக்காரியாகச் செயல்பட்டது. நவீன காலத் தத்துவம் அறிவறிவியல் (Epistemology) பற்றிய கேள்விகளுக்கு விடை தேடியது. இதனை அறிவொளிக் காலம் என்பர். இந்த அறிவொளி மரபையும் நவீன தத்துவத்தையும் விமர்சித்து கிளம்பிய தற்கால மரவே பின் நவீனத்துவம் எனப்படும்.


பின்நவீனத்துவம் பிறப்பதற்கு முன் மெய்யியலில் கோலோச்சியது ஒற்றைத்துவ மற்றும் இரட்டைத்துவ மெய்ப்பொருளியல் ஆகும். ஒற்றைத்துவ பார்வையில், அனைத்தும் ஏதாவது ஒன்றை அடிப்படையாகக் கொண்டிருக்கும். இது அந்த ஒன்றை விட்டுவிட்டு மற்ற அனைத்தையும் அழித்தொழிக்கும். இரட்டைத்துவ பார்வையில் மெய்மை இரு கூறுகளாக பிரிந்திருக்கும். உருவம் -பருட்பொருள், கடவுள் - உலகு, உடல்- ஆவி, ஆண்- பெண் புனிதம்- தீட்டு என்றெல்லாம் மெய்மை இரு கூறாக்கப்படுகிறது. ஒன்றைப் புனிதமாக்கி மற்றதன் இருப்பை இல்லாமல் செய்கிறது இந்த மெய்யியல்.

பின் நவீனத்துவோமோ பன்மைத்துவத்தைப் பறைசாற்றுகிறது. பலவற்றின் இருப்பை அங்கீகரிக்கின்றது. வேறுபாடுகளையும் பிறர்மையும் கொண்டாடுகிறது.

மற்றதை நோக்கி நீதியாய் இருப்பதே நீதி. மற்றதற்கு உண்மையாய் இருப்பதே உண்மை. மற்றதாக இருக்கும் உரிமையே அறம். இது தவிர எல்லோருக்கமான பெருநீதி, பேருண்மை, பேரறம் என ஏதுமில்லை என மற்றதன் இருப்பை கூவிப் பறைசாற்றுகிறது பின் நவீனத்துவம்.

மனிதர்களை பிறருக்கு பொறுப்பாக இருக்கும் உயிரி என்று வரையறுக்கிறது. இறைவனின் மற்றதை ஏற்றுக் கொள்வது பின்நவீனத்துவ இறையியல் கோட்பாடாக உருவெடுத்துள்ளது. நாம் வாழுகின்ற உலகிலேயே தன் இருப்பை- அடிப்படையான மற்றதாகக் காட்டுகின்ற இறைவனே பின் நவீனத்துவ இறையியல் கட்டுகிறது. பின் நவீனத்துவம் மையத்தை ஒதுக்கி விட்டு விளிம்பிற்கு முக்கியத்துவம் தருகிறது. அறிவிற்கு மாறாக அழகியல்/ உணர்ச்சியையும், தூய்மைக்குப் பதிலாக அழுக்கையும், ஆவிக்கு மாற்றாக உடலையும், வெள்ளைக்கு பதிலாக கருப்பையும் தூக்கிப் பிடிக்கிறது. அடுக்குகளைச் சிதைத்துப் புரட்டிப் போடுகிறது பின்நவீனத்துவம். புனிதங்கள் உடை படுகின்றன. உடலைப் போற்றுதல், கொண்டாடுதல் என்பது இங்கு முக்கிய கூறு.

இந்தப் பாணியிலேயே ஒடுக்கப்படுகின்ற நொறுக்கப்படுகின்ற சிதைக்கப்படுகின்ற விளிம்பு நிலை உடல்களாக கறுப்பர், தலித், திருநங்கைகள் போன்றோரின் உடல்நிலை அடையாளம் காட்டுகிறது பின் நவீனத்துவம்.


கத்தோலிக்க கிறித்தவத்தின் உடல் பற்றிய கண்ணோட்டத்தைப் பேச முற்படும் ஆசிரியர், இயேசு உடல் குறித்த ஆரோக்கியமான கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளதாகக் கூறகிறார். மனித உடலெடுத்த்த இறைவனின் வாக்குதானே இயேசு? இயேசுவின் மக்கள் பணிகளில் பெரும்பாலானவை உடல் நோய்களை குணப்படுத்துவதாக இருப்பதையும், லேவியர் சுட்டிக்காட்டும் உடல் தூய்மை விதிகளை இயேசு மீறுவதையும், இரத்தப்போக்குடைய பெண்ணை அவரின் நோயிலிருந்து விடுவிப்பதையும், பாவிகளோடு சேர்ந்து உண்பதையும், நோன்பு பற்றிய விதிகளை மீறுவதையும் பிறரால் இயேசு பெருந்தீனிக்காரன், குடிகாரன் என இகழப்பட்டதையும், சிறு பிள்ளைகளைத் தொட அனுமதிக்காத சீடர்களை அதட்டுவதையும் குழந்தைகளை அரவணைப்பதையும் மரணத்திற்கு பின் உடலோடு உயிர்த்தெழுந்த இயேசுவையும் சுட்டிக்காட்டிய ஆசிரியர் இயேசு உடல் குறித்த நல்ல கண்ணோட்டத்தையே கொண்டிருந்தார் என்று உறுதியாகக் கூறுகின்றார்.

கடவுளின் சாயலில் உடலும் பங்கு கொள்வதால் உடல் மதிக்கப்பட வேண்டியது, அன்பு செய்யப்பட வேண்டியது, கொண்டாடப்பட வேண்டியது. இயற்கையாக நிகழும் மாதவிடாய் நிகழ்வானது "இது உடைக்கப்பட்ட என் உடல், பிறருக்காக சிந்தப்படும் என் இரத்தம்" என்ற இயேசுவின் வார்த்தையின் கண்ணோட்டத்தில் புதிய பொருளை தருகிறது.‌
உடல்கள் அனைத்தும் அழகு என்பதால் கறுப்பு உடல், ஊனமுற்ற உடல், நோயற்ற உடல் அனைத்தையும் சமமாக மதித்து அன்பு செய்ய வேண்டும். நீதிக்கான விடுதலைப் போராட்டங்களில் ஈடுபடும்போது உடைபடும் உடல் மகிமை பெறுகிறது. உடலெடுப்பின், உடல் இருப்பின் நோக்கம் உண்டு கொழுப்பதற்கு அல்ல. மாறாக உழைப்பால் தொண்டால் தியாகத்தால் உடைக்கப்பட்டு சிதைக்கப்படும் உடல்களையும், சிதறண்ட சமுதாயங்களையும் புது படைப்பாக்கவே என்பதாகும் என்று கருதுவதே பின் நவீனத்துவ இறையியல் ஆகும் என்று முடிக்கிறார் ஆசிரியர்.
நம்பிக்கையும் பகுத்தறிவும்:

கடவுள் என்ற கோட்பாடே நம்பிக்கை என்பதன் அடிப்படையில் அமைந்ததே. அது போலவே மதங்களும் மக்களின் நம்பிக்கையால் எழுந்தவையே. நம்பிக்கை இல்லையேல் கடவுளும் இல்லை, மதங்களும் இல்லை. ஆனால் நம்பிக்கையும் பகுத்தறிவும் ஒன்றுக்கொன்று முரண்பட்டது. அதாவது இறையியலும் மெய்யியலும் ஒன்றுக்கொன்று முரண்பட்டது என்று நாம் கூறலாம். இந்த இரண்டு கூறுகளுக்கான இடைப்பட்ட முரண்பாட்டை விளக்க முனைந்துள்ளார் ஆசிரியர். முற்காலத்தில் மதங்கள் ஆட்சி பீடத்திலிருந்தபோது பகுத்தறிவு பேசியவர்களைக் கொன்றொழித்தது. பின்னர் பகுத்தறிவு வாதம் உலகில் தலை துவங்கிய பின்பு அது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பின்பு, இறை நம்பிக்கையாளர்கள் மீது தனது வன்முறையை ஏவியது‌. இதுவே வரலாறு. இரண்டுமே தவறுதான்.


இன்றைய சூழலில் பகுத்தறிவாளர்கள் மேட்டுக்குடி மக்களின் நம்பிக்கையை விமர்சிப்பதை விட, பெரும்பாலும் எளிய மக்களின் நம்பிக்கையையே அதிக அளவில் விமர்சித்துள்ளனர். அவர்களின் மரபு, வழிபாடு, சடங்கு போன்றவற்றை நசுக்கி உள்ளனர். ஆழ்ந்த அர்த்தம் தரும் விளிம்பு நிலை மக்களின் சடங்குகள் வழிபாடுகள் போன்றவற்றை நம் அறிவைக் கொண்டு மட்டுமே பார்ப்பது, அவற்றை மூடநம்பிக்கைகள் என ஒதுக்குவது நாம் மெத்தப் படித்த மேதாவிகள் என்று காட்டவா என கேள்வி கேட்கிறார் ஆசிரியர். தொன்மங்கள், புனைவுகள், பழமொழிகள் போன்ற எரணமற்ற கருத்துக்களால் கட்டமட்டுக்கப்பட்டுள்ள விளிம்பு நிலை மக்களின் எதார்த்தத்தை புரிந்து கொள்வது எப்படி? இவற்றை நம் மெய்யியல் மற்றும் இறையியல் போன்ற பெருங்கதையாடல்களைக் கொண்டு உடைக்க வேண்டுமா? இது அவர்களின் ஆன்மாவைச் சிதைப்பதாகாதா? என்பதையும் ஆசிரியர் கேட்டுள்ளார். அதே நேரத்தில் அச்சமயங்களில் உள்ள நரபலி கொடுப்பது போன்ற சடங்குகளை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமா? மூடநம்பிக்கை என்பதற்கு நாம் வைக்கும் அளவுகோல் எது? என்பதையும் கேட்கிறார் ஆசிரியர்.

திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்கள் "உண்மையாகிய காட்சித் தியானத்தில் உயரப் பறக்கும் மனித ஆன்மாவின் இரு சிறகுகள் நம்பிக்கையும் அறிவும்" என்ற கருத்தை முன்மொழிகிறார்

மற்றவற்றிற்கு இடமளித்தல், பன்மைத் தன்மையை ஏற்றல் மற்றும் போற்றுதல், கருத்து விலகல்களுக்கு மதிப்பளித்தல், தள அளவில் செயல்படுதல் போன்ற பின்நவீனத்துவக் கூறுகள் விளிம்பு நிலை மக்கள் சமயத்தில் காணக்கிடைக்கின்றன என்பதை கண்டுள்ளார் ஆசிரியர்.

"
மற்றதை நோக்கி நீதியாய் இருப்பதே நீதி, மற்றதுக்கு உண்மையாய் இருப்பதே உண்மை, மற்றதாக இருக்கும் உரிமையே அறம். இது தவிர எல்லோருக்குமான பெருநீதி, பேருண்மை, பேரறம் என ஏதுமில்லை" என மற்றதன் இருப்பைப் கூவிப் பறைசாற்றுகிறது பின் நவீனத்துவம். பின் நவீனத்துவ இறையியல் இறைவனின் மற்றதை ஏற்றுக் கொள்கிறது. முற்றிலும் இவ்வுலகைக் கடந்த கடவுள் நவீனத்துவ உலகின் கடவுள். நாம் வாழுகின்ற உலகிலேயே தன் இருப்பை அடிப்படையான மற்றதாக காட்டுகின்ற இறைவனே பின் நவீனத்துவை இறையியல் சுட்டுகிறது என மிக இரத்தினச் சுருக்கமாக இன்றைய நேர்மையான இறையியல் கோட்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை ஆசிரியர் எடுத்தியம்புகின்றார்

"
அதே நேரத்தில் அறிவில்லாத குருட்டு நம்பிக்கை மூடநம்பிக்கைக்கு வழி வகுக்கும். நம்பிக்கை இல்லாத வறட்டு அறிவு வறுமைக்கு விட்டுச்செல்லும்" என்கிற திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் கூற்றையும் ஆசிரியர் கவனத்தோடு குறிப்பிடுகின்றார்.

நிறுவன சமையத்தைச் சேர்ந்தவர்கள், விளிம்புநிலை மக்களின் சமையத்தை மூடநம்பிக்கையாகப் பார்க்காமல், அதனை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும், அதன் பன்மைத் தன்மையைப் போன்ற வேண்டும், நாட்டார் கலை வடிவங்களை வளர்த்தெடுக்க வேண்டும், மண்ணிற்கேற்ற சடங்குகள், விழாக்கள், வழிபாடுகளை கத்தோலிக்க மதத்தில் இணைக்க வேண்டும் போன்ற பல பரிந்துரைகளையும் செய்கிறார் ஆசிரியர்.

ஒடுக்குவோரின் ஆதிக்கத்திற்கு எதிராக ஒடுக்கப்படுவோர் மதத் தன்னாட்சியை விரும்புகின்றனர். எனவே தங்களுக்கே உரிய தெய்வங்கள், சடங்குகளுடன் தனித்த மதத்தை உருவாக்குகின்றனர். பெரும்பாலான நாட்டார் தெய்வங்கள் கொலையில் உதிர்த்த தெய்வங்களே. அருந்ததியர் தெய்வமான மதுரை வீரன் அவ்வாறு உருவானவரே. இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் தொடக்க காலக் கத்தோலிக்க திரு அவையும் ஒரு நாட்டார் சமையமாகவே இருந்தது. ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக நீதிக்காக போராடிய இயேசு அநீதியான முறையில் கொல்லப்பட, கொலையில் உதிர்ந்த தெய்வமாகவே தொடக்க கால திருஅவை அவரை வணங்கியது. நிறுவனமாகி இறுகிப்போகாமல் இளகிய தன்மையுடன் முழங்கிய கிறித்தவம் அது. உள்ளதைப் பகிர்ந்து உவப்புடன் விளங்கிய தோழர் குழுமம் அது. பின்னர் இயேசு இயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக நிறுவனமாக மாறியது.

கத்தோலிக்க கிறித்தவம் தனது இறுக்கமான மனநிலையைக் கைவிட்டு, நாட்டார் சமயங்களோடு உரையாடலை நடந்த வேண்டும், அவைகளில் உள்ள நல்ல கூறுகளை உள்வாங்க வேண்டும், ஆன்ம விடுதலையை மட்டுமே பேசாமல் முழு மனித விடுதலை குறித்து பேச வேண்டும், நீதிக்கு குரல் கொடுக்க வேண்டும், பெண்களுக்கு மதத்தில் வாய்ப்பு அளிக்க வேண்டும், நாட்டார் மதங்களின் எளிமைத் தன்மையை உள்வாங்க வேண்டும் போன்ற பரிந்துரைகளையும் ஆசிரியர் தருகின்றார்.


இயேசுவின் ஆன்மீகம்:


இயேசுவின் ஆன்மீகம் எப்படியான ஆன்மீகம் என்பதை ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளார் ஆசிரியர். இயேசு கும்ரான் குகைகளில் ஒதுங்கி வாழ்ந்த துறவி அல்லர், திருமுழுக்கு யோவான் போன்று மக்கள் தன்னிடம் வரட்டும் என்று காட்டில் வாழ்ந்தவரும் அல்லர், பரிசேயர்களைப் போல புறத்தூய்மை சடங்கு, சம்பிரதாயம் போன்றவற்றை முன்னிலைப்படுத்தியவரும் அல்லர், கலிலேயத் தீவிரவாதிகளை போன்ற தீவிரவாதியும் அல்லர். மாறாக இயேசுவின் வழி தனி வழி. அடுத்திருப்பவருக்கு அன்பு என்னும் புது வழி படைத்தவர். ஒடுக்கப்பட்டோர், ஏழைகள் இவர்களோடு பெரும்பாலான நேரத்தை செலவழித்தவர் இயேசு. இருப்பினும் தந்தையோடு தனிமையிலும் செபித்தார். இந்த சிறுது நேர தந்தையுடனான ஐக்கியம், மக்களோடு தன்னை மேலும் கரைக்க இயேசுவுக்கு உதவியது என்று கூறுகிறார் ஆசிரியர்.



கடவுளை அன்பு செய் என்பது இறையியல் கோட்பாடு. மனிதனை அன்பு செய் என்பது மெய்யியல் கோட்பாடு. கடவுளையும் மனிதனையும் அன்பு செய் என்பது மரபு வழி கிறித்தவ கோட்பாடு. ஆனால் அடுத்திருப்போரில் ஆண்டவனை அன்பு செய் என்பதே இயேசுவின் அன்பு கட்டளை என்று புதிய பார்வையைக் காட்டியுள்ளார் ஆசிரியர்.
இயேசுவின் ஆன்மீகத்தை சரியாக புரிந்து கொண்டவர் இஞ்ஞாசியார் அவர்களே. அவரது "பணியில் ஆன்மீகம்" என்கிற கோட்பாடே உண்மையில் இயேசுவின் கோட்பாடு என்பதை ஆசிரியர் கூற வருகிறார்.


உன்னையே நீ அறிவாய் என்பது பழங்கால கோட்பாடு. பிறரை அறிவதன் மூலமே உன்னை அறிய முடியும் என்பது இன்றைய கோட்பாடு. மனிதரை பிறருக்கு பொறுப்பாளி ஆக்குவதும் இதுவரை மறுக்கப்பட்ட பிறரை அக்கறையோடு அணுகுவதும் இறையியலுக்குத் தேவையான கோட்பாடு ஆகும். அடிபட்டவருக்கு அடுத்த இருப்பதே கிறித்தவ அறநெறி என்கிறார் ஆசிரியர். துயரத்தில் இருப்பவருக்கு பிறரன்புப் பணிகள் செய்வதும் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பதும் மக்களால் சுரண்டப்படும் இயற்கையைக் காப்பதும் சமூக மாற்றப் பணிகளில் ஈடுபடுவதும் இறையாட்சியின் கூறுகளே என்று முழங்குகிறார் ஆசிரியர்.


தமிழ்நாட்டுச் சூழலில் யாரெல்லாம் அடுத்து இருப்பவர் அல்லது அடிபட்டுள்ளவர் என்பதையும் ஆசிரியர் பட்டியலிட்டுள்ளார். தலித்துகள், அருந்ததியினர், பெண்கள், ஏழைகள், மனிதர்களால் சுரண்டப்படும் பூமி ஆகியவையே அடிபட்டுள்ளவர்கள் என்று ஆசிரியர் கூறுகிறார். இவர்களை ஆற்றுப்படுத்த நாம் எடுக்கும் முயற்சி அனைத்தையுமே இறையாட்சிக்கான முயற்சி என்று நாம் துணிவுடன் கூறலாம்.

ஒருவர் அடிபட்டு இருக்கிறார் என்பதை நாம் உணர்வதும், நாம் நடுநிலை வகிக்காமல் அடிபட்டவருக்கு பக்கமாக இருப்பதும், அடிபட்டவர் தலைமையை ஏற்றலும் இறையாட்சிப் பணியில் நமக்கான தடையை தாண்டும் வழிகள் என்பது ஆசிரியர் கூற்று.

விடுதலை இறையியல் குறித்து பேச வருகின்ற ஆசிரியர் குட்டியரஸ் மற்றும் அம்பேத்கர் இருவர் குறித்தும் ஒப்பாய்வு செய்துள்ளார். மேலும் இந்த ஒட்டுமொத்த உலகிற்கும் அநீதியான சமூக அமைப்புகளில் இருந்து விடுதலை, பொருளாதார மற்றும் அரசியல் விடுதலை, சமூக கலாச்சார விடுதலை, விதியின் அதிகாரத்திலிருந்து விடுதலை, ஒருங்கிணைந்த விடுதலை ஆகியவை வேண்டும் என்றும் கூறுகின்றார்

ஒற்றுமை குறித்த புதிய கண்ணோட்டத்தை தருகிறார் ஆசிரியர். பொதுவில் ஒற்றுமையும் சீரான தன்மையும் இரு வேறு துருவங்கள். சீரான தன்மை பன்மைதுவத்திற்கு எதிரி. அது வேறுபாடுகளை சகித்துக் கொள்ளாது. ஒற்றுமை நல்லது போன்று தெரியலாம். ஆனால் இதுவும் சீரான தன்மைக்கு நெருக்கமாகவே இருக்கிறது. சீரான தன்மை வேறுபாடுகளை நிராகரிக்கும். ஆனால் ஒற்றுமை வேறுபாடுகளை சகித்துக் கொண்டு அதில் ஒற்றுமையை வலியுறுத்தும். எனவே ஒற்றுமையும் கூட "ஒத்தமை, ஒரே, நாம்" போன்றவற்றின் மீது கவனத்தைக் குறிக்கும். "வேறுபாடுகள், அவர்கள், பிறர்" போன்றவற்றைத் தவிர்க்கும்.

இதற்கு மாறாக நல்லிணக்கம் என்னும் போதே அங்கு பன்மைத் தன்மை வந்து விடுகிறது. நல்லிணக்கம் பன்மையை ஏற்றுக் கொள்வதோடு அதனைக் கொண்டாடுகிறது. பிறரை வித்தியாசமாக இருக்க அனுமதிக்கிறது. நாம், அவர்கள் இருவரும் இணைந்து வாழ முடியும் என்கிறது என முத்தாய்ப்பாய் கூறுகிறாய் ஆசிரியர்.


பிறரை பற்றிய அச்ச உணர்வே அவர்களைப் பற்றி அவதூறுகளை பரப்புகிறது. இது உண்மையான தரவுகளை சார்ந்தது அல்ல. அச்சங்களை போக்க ஐயங்களை தெளிவுபடுத்த அதிகாரப்பூர்வ குரல்கள் இன்று தேவைப்படுகின்றன. பழைய காயங்கள், பிறர் பற்றிய ஐயங்கள், முன் தீர்மானங்கள், அறியாமை போன்றவையே நல்லிணக்கத்திற்கானத் தடைகள். பிறர் குறித்த ஆழ்ந்த அறிவு அவர் குறித்த அறியாமையை அகற்றும். அவர்களோடு வாழ்வதும், உரையாடுவதும் அவர் குறித்த முன் தீர்மானங்களை நீக்கும். பிறருடைய உள்ளக் குகைகளிலிருந்து சிந்திப்பதும், அவர்களுடைய பார்வையிலிருந்து உலகைப் பார்ப்பதும் அவர்கள் பற்றிய தவறான புரிதல்களை வெகுவாக குறைக்கும். மறப்போம், மன்னிப்போம் என்ற மனநிலையே பழைய காயங்களைக் குணப்படுத்தும். நல்லிணக்கத்தை சாத்தியப்படுத்தும் சரியான வழி உரையாடலே. இவ்வாறாக நம்மைக் கடந்து எல்லைகளைத் தாண்டி பிறரை சென்றடைய முடியும் என்கிறார் ஆசிரியர்


"
நீ இருப்பதாலேயே நான் இருக்கிறேன்" என்பதே நமது கோட்பாடாக இருக்க வேண்டும் என்று முடிக்கிறார் ஆசிரியர்.